Sunday, May 20, 2018

நீயா பேசியது...


'நீயா பேசியது...' என்று தொடங்கும் திரையிசைப் பாடலின் இசையமைப்பை நுட்பமாகவே வித்யாசாகர் கையாண்டிருக்கிறார். காதலும் கோபமும் ஏக்கமும் கலந்த கலவையான தொனியில் பாடப்பட்டிருக்கும் விதம் நன்றாக இருக்கும்.

'நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது...'என்று இருக்கும் சாதாரண வரிகள், பாடப்படும் போது கொள்ளும் பரிமாணங்களும் உணர்வுப் படிமங்களும் அலாதியானவை. 'நீயா பேசியது' என்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் திரும்பத்திரும்ப வெவ்வேறு தொனிகளில் சங்கர் மகாதேவன் பாடுவது அல்லது பிரயோகிப்பது நுட்பமான ரசனைக்குரியது. (நானும் அப்படிப் பாடிப் பார்க்கிறேன்.) ஈர்ப்பான சில வரிகள் உண்டெனினும் 'காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்...' என்ற வரியினை நடைமுறை அர்த்தத்தில், பொதுவில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது, 'தன் கூற்றாக' தனியொருவரின் நம்பிக்கையாக இருப்பதையும் காண முடிகிறது. பெரும்பாலான திரையிசைப் பாடல்களை நான் வரிகளுக்காக விரும்புவதில்லை என்பது வேறு விடையம்.

மிகவும் இலகுவாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கக் கூடிய சுழ்நிலை (situation) தான் இது. பாவம்...ஜோதிகாவை வெருட்டுவது போலவே விஜயின் நடிப்பு பல இடங்களில் அமைந்திருக்கிறது. இதில் விஜய் நடித்திருக்கும் ஒரு இடம் 'மெச்சத்தக்கதாக' உள்ளது. பாடலுக்கு வாய் அசைப்பதைத் தவிர்த்திருக்கலாம். இன்னும் சிறப்பாகவே நடிப்பையும் காட்சியமைப்புக்களையும் இயக்குநர் கையாண்டிருக்க முடியும். (இது ஒரு 'மொக்கைப் படத்தின்' பாடல் என்பது கவனிக்கத்தக்கது.) இந்த இசையினை, 'உள்மனக் குமுறலின் காட்சிப் படிமங்களாக மிகவும் சிறப்பாகவே நகர்த்தியிருக்க முடியும்.


https://youtu.be/KrnwKDvn6dc
அமரதாஸ் 

2017-05-31

நினைத்தேன் வந்தாய்...




'உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்...' போன்ற சொல்முறைகளும் இசையும் குரல்களும் இசைந்தெழுப்பும் படிமங்கள் இனிமையானவை, மகிழ்ச்சிகரமானவை, உள்ளுறையும் 'காதல்' உணர்வைப் பெருக்குபவை.

'நினைத்தேன் வந்தாய்...' என்று தொடரும் திரையிசைப் பாடலை, எத்தனையோ தடவைகள் பார்த்தாயிற்று, கேட்டாயிற்று. இசையமைத்த எம். எஸ்.விஸ்வநாதனும் பாடியிருக்கும் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் மகிழ்ச்சியின் படிமங்களை ஒலியலைகளில் விரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமைகளும் இடையிடையே செய்யும் 'உடற்பயிற்சி'களைச் சகித்துக்கொண்டுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

திரையில் தோன்றும் இருவருமே இப்போது இல்லையென்ற நினைவு சடுதியாக வந்து உறுத்துகிறது. வாழ்க்கை நிரந்தரமில்லாதது தானே. இல்லாமல் போனவர்களையும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது காட்சியூடகம். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இதில் அழகாயிருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் 'காதல்' இருந்திருக்கும். இருந்தாலென்ன...யார் மீதும் யாருக்கும் எப்போதும் காதல் வருமென்பதுதானே நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.


https://youtu.be/0HnEPVGGA4w

அமரதாஸ்
2017-05-31

மிருதங்க நாதமும் ஒரு காதலும்



ஒரு நாள், எனது மடிக் கணினியை யாழ்ப்பாணத்தில் உள்ள கடையொன்றில் திருத்தக் கொடுத்துவிட்டு, அதனைத் திரும்பப் பெறுவதற்காகக் காத்திருந்தேன். அப்போது ஒரு இசை, வார்த்தைகள் இல்லாமல் இசையாக மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. பல்வேறு இரைச்சல்களுக்கு மத்தியிலும் அந்த இசை நெஞ்சைக் கவர்வதாக இருந்தது. அது எனக்கு இப்போதும் நல்ல நினைவிருக்கிறது. 

அந்த இசை, 'எங்கேயேயும் காதல்' என்றஒரு சாதாரணமான தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெற்ற ''நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ...'' என்ற பாடலுக்கானதென்று நீண்ட காலத்துக்குப் பிறகு அறியமுடிந்தது. அதன் பிறகு இசையின் துல்லியத்தன்மை விளங்கும் வகையில் அந்தப் படத்தின் பாடல்களைத் தனியாக உற்றுக் கேட்டேன். ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருக்கும் பாடல்களுக்கான இசை கவனத்திற்குரியதாகவே இருந்தது. அவர், 'மஜ்னு' என்ற திரைப்படத்தின் பாடல்களுக்கு வழங்கியிருந்த இசையால் என்னைக் கவர்ந்திருந்தார். அதில் இடம்பெற்ற ''முதல் கனவே...'' பாடல் எனக்குப் பிடித்திருந்தது, ஜெயஸ்ரீ மற்றும் ஹாரிஸ் ராகவேந்திரா ஆகியோரின் குரல்களுக்காக மட்டுமல்ல. அவ்வப்போது ஏனைய வாத்தியங்களின் ஒலிப்பையும் மீறி, மிருதங்க நாதம் அதில் தனித்துவமாக இசைந்து வரும்.

அதை விட நுட்பமாக ''நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ...'' பாடலில் மிருதங்க இசை கலந்திருக்கும். பாடலின் ஒட்டு மொத்தமான 'காதலின் மகிழ்வை' அந்த மிருதங்க நாதம் பிரதிபலிக்கும். சுழித்துச் சுழித்து வருகிற மிருதங்க நாதம், இந்தப்பாடலின் தனித்துவத்துக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாகிறது. தமிழின் சிறந்த பாடல் இசை வரிசையில் இது இருக்கிறது. இப் பாடலின் சில வரிகள் காதலில் குழைந்து வரும். ஹாரிஸ் ராகவேந்திரா மற்றும் சின்மயி ஆகியோரின் குரல்களில் அந்த வரிகளுக்கான உணர்வோட்டம் அதீதமாகும். பாடலுக்கான காட்சிப்படுத்தல் பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. அது அவசியமில்லை என்றாலும் கூட, அந்த நாட்டின் சூழல் அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாடலுக்கான காட்சியமைப்புக்களில் நீலத்தைப் படரவிட்டு இசையோடு நகரும் ஒளிப்பதிவு கவனிப்பிற்குரியது. வேகமான நடன அசைவுகளால் பிரபலமாகியிருக்கும் பிரபுதேவா, இயல்பான காட்சிகளோடும் லாவகமான இலகு நடன அசைவுகளோடும் இந்தப் பாடலை இயக்கியிருக்கிறார்.

''கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ...'' என்று திரும்பத் திரும்ப வரும் இடங்களில் ஜெயம் ரவி யும் ஹன்சிகா வும் கைகளை மேல் நோக்கி அசைக்கும் லாவகமானது, பறத்தலின் பரவச அனுபவத்தைப் பார்வையாளரில் நிகழ்த்தக்கூடியது. (பாடல், நடனம் போன்ற தனித்துவமான கலைகள் திரைப்படங்களில் பிரயோகிக்கப்படுதலின் 'பொருத்தப்பாடுகள்' அல்லது 'தேவைகள்' தனியான 'பார்வைக்கு' உரியன. படத்தோடு சம்மந்தமில்லாத, காட்சிப்படுத்தப்பட்ட இசைத் தொகுப்புக்களாக - music video album - பல திரைப்படங்களின் பாடல்கள் இருப்பதனைப் பார்க்க முடியும்.) இந்தப் பாடலுக்கான படத்தொகுப்பு, இன்னமும் கவனமாகக் கையாளப்பட்டிருக்க முடியும். பாடலின் லயத்தோடு படத்தொகுப்பு இயைவதாகத் தோன்றினாலும் ஒருவித செயற்கைத்தனம் அல்லது 'வேண்டாத வேகம்' சில இடங்களில் துருத்தலிடுகிறது. பாடலின் முடிவில், காதலர்களின் பிரிவை மிருதங்க நாதத்துடன் கலங்கலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், (shallow) காதலின் துலக்கமற்ற 'புதிரான' தன்மையைக் கோடி காட்டுவதாகக் கொள்ளவும் முடியும்.

மிருதங்க இசையானது, தமிழ் சினமாப் பாடல்கள் பலவற்றில் நுட்பமாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் ஒன்றுதான் ''மானே தேனே கட்டிப்பிடி...'' என்ற 'சாதாரணமான' பாடலும். அந்தப் பாடலை, நான் மிருதங்க இசைக்காக மட்டுமே பலமுறை கேட்டிருக்கிறேன். 



https://youtu.be/l98b32yBiQg

அமரதாஸ் 
2017-07-13