Tuesday, October 1, 2019

எப்போதும் தரையில் இருப்பவன்


ஈரோஸ் (EROS) இயக்கத்தின் தலைவராக இருந்து, பின்னர் விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் செயற்பாட்டாளராகிய க.வே.பாலகுமாரன் அவர்கள், சிங்கள அரச படையினரிடம் கைதாகியிருந்த அவலமான சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள், மிகுந்த துயரையும் பல நினைவுகளையும் கிளர்த்துகின்றன. பாலகுமாரனும், அவருடன் கைது செய்யப்பட்ட அவரது மகனும், பாலகுமாரனின் உதவியாளராக இனங்காணப்படுகிற ஒருவரும், இரண்டு இராணுவத்தினருக்கு இடையில் குந்தியிருக்கும் காட்சி, 'வரலாற்றுத் துயர்' நிறைந்தது.

பாலகுமாரன் ஈரோஸ் (EROS) இயக்கத்தின் தலைவராக இருந்த காலத்தில், எண்பதுகளின் நடுப்பகுதியில் ஏனைய இயக்கத் தலைவர்களான திரு.சிறி சபாரத்தினம் (TELO), திரு.பத்ம நாபா (EPRLF), திரு.பிரபாகரன் (LTTE) ஆகியோருடன் சேர்ந்து நிற்கும்போது எடுக்கப்பட்ட ஒரு ஒளிப்படம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் படத்தில் சமாந்தர வரிசையிலே நிற்பவர்கள், பக்கத்திலிருப்பவர்களின் கைகளைக் கோர்த்திருப்பார்கள். முகங்களில் 'ஒருவித இறுக்கம்' தெரியும். ஒருவரது முகத்தில் மட்டும் (சிறி சபாரத்தினம்) ஒருவித 'செயற்கைச் சிரிப்பு' இருக்கும். பிரபாகரனின் பக்கத்தில் நின்று அவரது கையைக் கோர்த்திருப்பார் பாலகுமாரன். 

ஒரு விசேட தேவைக்காக, பாலகுமாரனைப் பல ஒளிப்படங்களிலே பதிவுசெய்திருந்தேன். அந்த ஒளிப்படங்களைப் பார்த்து, 'இதுபோல இயல்பாகவும் அழகாகவும் உங்களை இனி யாரும் ஒளிப்படங்களிலே பதிவாக்க முடியாது' என்ற கருத்தை, பாலகுமாரனிடம் திரு. புதுவை இரத்தினதுரை வெளிப்படுத்தியிருக்கிறார். அது பற்றிப் பின்னர் என்னிடம் சொல்லியிருந்தார் பாலகுமாரன். நான் உருவாக்கிய பாலகுமாரனின் 'அழகிய' படங்களும் இன்றில்லை. அவரையும் இப்போது 'காணவில்லை'. சிறீலங்கா அரச பயங்கரவாத நடவடிக்கை ஒன்றினைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தும் விதத்தில், காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் பாலகுமாரன். 

ஈரோஸ் இயக்கத்தின் தலைவராக இருந்து, அந்த இயக்கத்தை மிகவும் 'நெருக்கடியான காலத்தில்' கலைத்துவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்துகொண்டவர் பாலகுமாரன். (பாலகுமாரனுடன் வேறு பல ஈரோஸ் இயக்க உறுப்பினர்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டனர்.) அவரைப் பொறுத்தவரையில், விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி முக்கியமானதாக இருந்தது. ஈரோஸ் இயக்கம் சார்ந்த அவரது விடுதலைப் போராட்டப் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அது பற்றிய விரிவான பதிவுகள் இன்னமும் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். 

ஈரோஸ் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அவர் இணைந்து செயற்பட முன்வந்தமையினை, ஒருவகையில் அவரது 'ராஜதந்திரச் செயற்பாடாக' அவதானிக்க முடிகிறது. அவருக்கு அப்போது, வேறு 'நியாயமான தெரிவுகள்' இருந்திருக்க வாய்ப்பில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் சிலவற்றில், அவருக்கு முழுமையான உடன்பாடு இருக்கவில்லை என்பதை அவரோடு நெருங்கிப் பழகிய சிலர் அறிவார்கள். அவரது ஆளுமைக்குப் பொருத்தமான பணி, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர், 'உள்ளே' இருந்தாலும், ஒதுங்கியே இருந்தார் என்று சொல்ல முடியும். விடுதலைப் புலிகளின் 'முக்கிய உறுப்பினர்' என்று அந்த இயக்கத்தவர்களால் பாலகுமாரன் அடையாளப்படுத்தப்பட்டார், அல்லது அழைக்கப்பட்டார். (விடுதலை அவாவி, விடுதலைப் புலிகள் இயக்கத்திலே சுயவிருப்புடன் இணைந்து கொண்ட எல்லோருமே அந்த இயக்கத்தின் 'முக்கிய உறுப்பினர்கள்' தான்.)  

'நான் எப்போதும் தரையில் இருப்பவன், என்னை யாரும் கீழே விழுத்த முடியாது' என்ற கருத்தை, நீண்டகாலத்தின் முன்னரான ஒரு உரையாடலின்போது என்னிடம் சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். என்னையும் யாரும் 'கீழே விழுத்த' முடியாது என்று அவருக்கு அப்போது சொல்லியிருந்தேன். ஆடம்பர வாழ்வையும் பதவிகளையும் விரும்பியிராதவர் அவர். 

பாலகுமாரன், 'இறுதிப் போர்க்காலத்தில்' என்னுடன் தொடர்பில் இருந்தார். அக் காலத்தில் அவருக்கும் எனக்கும் இடையிலிருந்த ஊடாட்டம், மிகவும் அந்தரங்கமானது.

அவரது 'பாதுகாப்பு' தொடர்பில், அவருக்கு அதிகம் எடுத்துரைத்திருக்கிறேன். பல்வேறு விடயங்களை அவரும் நானும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிகைகள் தொடர்பில், அவரைப் போலவே எனக்கும் கடுமையான 'ஆட்சேபனைகள்' இருந்தன. அந்தரங்கமாக அவரால் சொல்லப்பட்டவை அதிகம் உள்ளன.

போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலத்தில், சுதந்திரபுரம் என்ற இடத்தில் நான் அமைத்திருந்த கொட்டகைக்குப் பக்கத்தில், அவருக்கும் கொட்டகை அமைக்க ஏற்பாடு செய்தேன்.(அப்போது, அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள் பக்கத்தில் இருந்தார்.) என்னுடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு, 'இவன் கனக்க கதைக்கிறான், இவனைக் கவனமாப் பாத்துக்கொள்ளுங்கோ' என்று எனது உறவினர்களிடம் கூறிவிட்டுச் சென்றிருந்த ஒரு நாளில், எறிகணைத் தாக்குதலில் காயமடைந்திருந்தார் பாலகுமாரன்.

அவர் காயப்பட்டிருந்த போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து ஏற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. (அவரது கையில் சிறிய எலும்பு உடைந்திருந்தது.) அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தமையால் மயக்க மருந்தை ஏற்றுவதில் பலத்த சிரமம் ஏற்பட்டிருந்தது. மயக்க மருந்தானது, ஏற்கெனவே அதிக இரத்த அழுத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு, மேலதிக இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி உயிர்க்கொல்லியாக மாறிவிடக் கூடும். அப்போது, மயக்க மருந்து மிகவும் அரிதாகவே இருந்தது. அதைத் தனக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டாமென்றும், முதுமையடைந்திருக்கும் தன்னால் இனி யாருக்கும் பயனில்லை என்றும், தனக்காகப் பயன்படவிருந்த மயக்க மருந்தைக் காயமடைந்த சின்னப் பிள்ளைகளுக்குப் பயன்படுத்துமாறும் எனது நண்பர் ஒருவருக்கு அப்போது சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்து பாலகுமாரனுக்குச் சிகிச்சை செய்தவர்களில் ஒருவரான அந்த நண்பர், அண்மையில் இதனை என்னிடம் கூறியிருந்தார்.

சிறீலங்கா இராணுவத்தினரின் நிர்ப்பந்தங்களின் நிமித்தம் அவர்களிடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட திரு.பாலகுமாரன், திரு.புதுவை இரத்தினதுரை, திரு.யோகரட்ணம் யோகி போன்ற பலரின் நிலைமை இன்றுவரை தெரியாமலிருப்பது மிகப்பெரும் மனித அவலங்களில் ஒன்றாகும்.(விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராகவும் 'விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' யின் தலைவராகவும் திரு. மகேந்திரராசா - மாத்தையா - இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் நிகழ்ந்த 'உள் முரண்பாடுகளால்' மிகவும் பாதிக்கப்பட்டிருந்தும், அந்த இயக்கத்துடன் இணைந்திருந்து, தொடர்ந்து இயங்கியவர் யோகரட்ணம் யோகி. அவர், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி யின் செயலாளராக இருந்தவர். புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகளில்,  'பேச்சு வார்த்தை' நடவடிக்கைகள் பலவற்றில் முன்னின்று செயற்பட்டவர்.)

கைது செய்யப்பட்ட பாலகுமாரன் உள்ளிட்ட பலரையும் சிறீலங்கா அரசு உயிரோடு வைத்திருக்கிறதா அல்லது படுகொலை செய்துவிட்டதா என்பது, அவர்களைச் சார்ந்த யாருக்கும் தெரியாது.   சிறீலங்கா அரசின் போர்க்குற்றச் செயல்களும் இன அழிப்புக் குற்றச்செயல்களும் காணாமலாக்கப்பட்டவர்களால் அம்பலமாகின்றன.காணாமலாக்கப்பட்டவர்களின் நிலைமைகளை அறியும் முயற்சிகள், பல்வேறு தரப்பினராலும் தீவிரமாக்கப்பட வேண்டும்.

2017-08-09
அமரதாஸ்