Sunday, June 16, 2013

மணிவண்ணன்



இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று அதிகாலையில் முகநூலைத் திறந்தபோது அதிர்ச்சியடைந்தேன். திரு. மணிவண்ணன், நேற்று சாவடைந்துவிட்ட செய்தியை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். இழப்பின் தாக்கத்திலிருந்து மீளமுடியவில்லை. மணிவண்ணன் கடைசியாக இயக்கி நடித்து அண்மையில் வெளியான திரைப்படத்தை (நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ) அவருக்காகவே தான் நேற்றுமுன்தினம் பார்த்திருந்தேன்.

அநாயாசமாக, எள்ளல் ததும்ப, அங்கதம் தொனிக்க, மிகவும் தனித்துவமான குரல் வெளிப்பாட்டுடன் பாத்திரத்தன்மை அறிந்து நடிக்கக்கூடிய ஒரு நல்ல நடிகராக அவரை நீண்டகாலமாகப் பிடித்திருந்தது. மிகையுணர்ச்சி சார்ந்த அவரது சில நடவடிக்கைகளுடன் உடன்படமுடியாமலிருந்தது. அவரை நேரில் சந்தித்த பிறகு, அவருடன் நிறைய விடயங்களைப் பகிர்ந்துகொண்ட பிறகு, அவர் மீதான நேசம் அதிகரித்திருந்தது. 50 வரையான படங்களை இயக்கியும் 400 இற்கும் அதிகமான படங்களில் நடித்தும் இருக்கிறார். எனினும், தான் விரும்பியபடியாக, தமிழ் சினமாவில் அவரால் ஈடுபடமுடியவில்லை. அவரைத் தமிழ் சினமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை.

சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணன் நடித்த, மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் என்று தொடங்கும், ஈர்ப்பான இசையும் அழுத்தமான வரிகளும் கொண்ட பாடல் இப்போது என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.


உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த போதும் தனது வழக்கமான செயற்பாடுகளை அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரை வீட்டில் நான் சந்தித்தபோது உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, நான் சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நின்றபோது ஒரு உதவியாளரின் கைத்தாங்கலில் கைத்தடியூன்றியபடி அங்கு வந்தார். என்னைக் கட்டியணைத்து உரையாடினார். ஒரு நூல் வெளியீட்டில் கலந்துகொள்ளவும் சில நூல்களை வாங்கவும் வந்ததாகக் கூறினார். அவர் எனக்கு அன்பளிப்பாகத் தந்த ஒளிப்பட நூலில், அன்போடு அவரது அரசியல், சமூக அக்கறையும் வெளிப்பட்டது. 

அரசியல் நையண்டித்தனமும் அரசியல், சமூக விடயங்களை வெளிப்படையாகப் பேசும் துணிச்சலும் அவரது இயல்பில் கலந்திருந்தது. சமூகத்தை, மோசமாகப் பாதிக்கும் அரசியல் அதிகார மையங்களுக்குத் துணைபோகாமல் தமிழ் மக்களின் நலன் சார்ந்து சளைக்காமல் செயற்பட்ட, அற நிலைப்பட்ட, உண்மையான கலைஞர் மணிவண்ணன் அவர்களின் இழப்பானது, தமிழினத்திற்குப் பேரிழப்பாகிவிட்டது. தமிழ்ச் சூழலில் அண்மைக்காலத்தில் திரைத்துறை சார்ந்த, ஆளுமை மிக்க கலைஞர்களின் மறைவு அடுத்தடுத்து நிகழ்ந்துவிட்டிருக்கிறது. பாடகர்களான திரு. சிறீநிவாஸ், திரு. சௌந்தரராஜன் ஆகியோருக்குப் பிறகு, மணிவண்ணன் தனது தடயங்களை முடிந்த அளவிற்கு அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். 

அவரைச் சந்தித்தபோது அவரைச் சில ஒளிப்படங்கள் எடுத்திருந்தேன். இன்னும் அதிகமாக எடுத்திருக்கலாமென்று இப்போது மனம் அங்கலாய்க்கிறது. 

2013-06-16
அமரதாஸ்











Friday, May 31, 2013

'ஒளி ஓவியம்' தங்கர் பச்சான்


 இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான தங்கர் பச்சானுடன் அமரதாஸ்

அமரதாஸ் 

 என் கையிலுள்ள ஆயுதம் கலை என்று சொல்வதுடன் மட்டுமில்லாமல் நம்பிச் செயற்படுகிறவர், நண்பர் தங்கர் பச்சான். தமிழின் பல்துறை ஆளுமை மிக்க கலைஞர் அவர். ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், எழுத்தாளர்…. அவரது, சன் தொலைக்காட்சி நேர்காணலை இணையத்தில் தற்செயலாகப் பார்த்தபோது இப் பதிவினைச் செய்யவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அவரது சில திரைப்படச் செயற்பாடுகளில் எனக்கு முழுமையான உடன்பாடுகள் இருப்பதில்லை  என்றாலும் அவரது செயற்பாடுகளில் வெளிப்படும் தீவிரமும் சமூக அக்கறையும் ஈடுபாடும் உள்ளார்ந்த விவாதத்தைத் தோற்றுவித்து விடுகின்றன.


  நீண்ட காலத்திற்குப் பிறகு, அவரை அவரது இல்லத்தில் (செம்புலம்) சந்தித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனார். உண்மையான அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பற்றியும் தன்னால் உருவாக்க முடியாமல் போய்விட்ட தனது 'இலட்சியத் திரைப்படம்' பற்றியும் அதிகம் பேசினார். 

அவருடன் நேரடிப் பரிச்சயம் இல்லாத காலத்தில் ஒளிப்பதிவுச் செயற்பாடுகளால் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தவர். 'ஒளி ஓவியம்' தங்கர் பச்சான் என்ற பதிவுகளோடு வந்த படங்கள் ஈர்ப்புக்குரியவையாய் இருந்தன. பாலுமகேந்திராவைப் போல, ஒளிப்பதிவை ஒளி ஓவியமாக, காண்பிய மொழியாக வெளிப்படுத்த முயல்பவர். காதல் கோட்டை, பாரதி, பெரியார், மோக முள் போன்ற, தமிழின் குறிப்பிடத்தகுந்த பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர். அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி போன்ற திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.

 புகழ் பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான நண்பர் தங்கர் பச்சான், தமிழின் முக்கியமான இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான  பாலுமகேந்திராவிடம், என்னைப் பெருமைக்குரிய முறையில் அறிமுகப்படுத்தி வைத்தார். நண்பர் தங்கர் பற்றி, அவருடனான சந்திப்புகள் பற்றி, அவரது படைப்புகள் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்யலாம்.










Thursday, May 30, 2013

தென்மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை

இயக்குநர் சீனு ராமசாமியுடன் அமரதாஸ் (Woodlands Symphony Theatre)

அமரதாஸ்
    
       நேற்றுத்தான், நண்பர் சீனு ராமசாமியின் 'நீர்ப்பறவை' திரைப்படம் பார்க்க முடிந்தது. தியேட்டரில் தான் பார்க்க முடியவில்லை. நல்ல டி வி டி கிடைக்கட்டுமென்று காத்திருந்தேன். தமிழின் குறிப்பிடத்தகுந்த படம் தான் நீர்ப்பறவை. அது பற்றிய விமர்சனம் தனியாக எழுதப்பட வேண்டியது.

http://www.youtube.com/watch?v=HSKDMUDI0rY
http://www.youtube.com/watch?v=Rn5zFbR8PkI
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GLnfLdiJ4Hw
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=w5yqQl0K3g4

 நல்ல திரைப்பட இயக்குநராக, 'தென்மேற்குப் பருவக்காற்று' திரைப்படம் மூலம், தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் நண்பர் சீனு ராமசாமி. அத் திரைப்படம் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் கொழும்பில் நின்றபோது அங்குள்ள திரையரங்கொன்றில் அது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதனைப் பார்த்துவிடுமாறும், அண்மையில் வந்த தமிழ்ப்படங்களில் 'தென்மேற்குப் பருவக்காற்று' திரைப்படமும் சற்குணம் இயக்கிய 'வாகை சூட வா' திரைப்படமும் தன்னைக் கவர்ந்திருப்பதாகவும், நண்பரான இயக்குநர் பிரசன்ன விதானகே கூறியிருந்தார். 

தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தை உடனடியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் பார்க்க ஆர்வம் கொண்டிருந்தேன். அத் திரைப்படக் கலைஞர்களுடன் சென்னை திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் அதனைப் பார்க்க முடிந்தது. அதன் இயக்குநர் சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோரையும் நடிகர்களான விஜய் சேதுபதி, சரண்யா பொன்வண்ணன் போன்றவர்களையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாட முடிந்தது. இவர்கள் எல்லோரும் சமகாலத் தமிழ் சினமாவின் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகள்.

விஜய் சேதுபதி நல்ல நடிகராக இனங்காணப்படுகிறார். தென்மேற்குப் பருவக் காற்று, பரதேசி உட்படப் பல திரைப்படங்களினூடாக சமகாலத் தமிழ் சினமாவின் நல்ல ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் செழியன். நாயகன் என்ற, தமிழின் குறிப்பிடத்தகுந்த திரைப்படத்தில் இயக்குநர் மணிரத்தினம் மூலம் அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். இவரை, நல்ல முறையில் தனது திரைப்படங்களில் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. 'தென்மேற்குப் பருவக்காற்று' திரைப்படம் மூலம் சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டவர் சரண்யா பொன்வண்ணன். அத் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zUHG0uVYDCA
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-VBZQnEzppA

இயக்குநர் சீனு ராமசாமியுடன் (Sathyam Theatre)


 'தென்மேற்குப் பருவக்காற்று' திரைப்பட நடிகை சரண்யா பொன்வண்ணனுடன் (South Indian Film Chamber Theatre)
'தென்மேற்குப் பருவக்காற்று' திரைப்பட நடிகர் விஜய் சேதுபதியுடன்  (South Indian Film Chamber Theatre)

'தென்மேற்குப் பருவக்காற்று' திரைப்பட நடிகர் ஒருவருடன்  (South Indian Film Chamber Theatre)
'தென்மேற்குப் பருவக்காற்று' திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியனுடன் (இயக்குநர் பாலாவின் செயலகம்)
சென்னை திரைப்பட விழாவில், தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படக் குழுவினர்  (South Indian Film Chamber Theatre)






Tuesday, May 28, 2013

இயக்குநர் மகேந்திரனும் நானும்




 
 - அமரதாஸ் 

இயக்குநர் மகேந்திரன் அவர்கள், தமிழின் மிக முக்கியமான சினமா ஆளுமை. அவரைத் தவிர்த்து விட்டுத் தமிழ் சினமாவின் ஆரோக்கியமான முயற்சிகள் பற்றியோ, தமிழ் சினமாவின் வரலாற்றையோ பதிவு செய்துவிட முடியாது. அவரது எல்லாச் சினமா முயற்சிகளும் அவருக்குத் திருப்திகரமாக அமைந்து விடவில்லை. தனது படைப்புகளின் போதாமைகள் பற்றிய புரிதலை அவர் கொண்டிருந்தார். அவை பற்றி, நேரடியாகவே என்னுடன் உரையாடியிருக்கிறார்.
இயன்றவரையில், நல்ல படைப்புகளைத் தர முயன்றவர். சத்யஜித் ரே, இங்மர் பெர்க்மன், பிரசன்ன விதானகே போன்ற இயக்குநர்கள் தமது படைப்புகளில் பெண் பாத்திரங்களை நுணுக்கமாகச் சித்தரித்திருப்பார்கள். இத்தகைய பண்பை  இயக்குநர் மகேந்திரனின் படைப்புகளில் அவதானிக்கலாம். தனது படைப்புகளில் இசையை நல்லபடியாகக் கையாளவேண்டுமென்ற அக்கறை கொண்டவர். நல்ல இசை கொண்ட பல பாடல்களைத் தனது  படைப்புகளில் பயன்படுத்தியவர்.

http://www.youtube.com/watch?v=LYcwhJ55TZs
http://www.youtube.com/watch?v=Bwzf8h_3sVY
http://www.youtube.com/watch?v=27WmXqtvtV0
http://www.youtube.com/watch?v=8e17naoTrmE
http://www.youtube.com/watch?v=O1zVcjLIElE
http://www.youtube.com/watch?v=yFX7Jc8y5Ac
http://www.youtube.com/watch?v=25p9EQA4Hsc
http://www.youtube.com/watch?v=BZJtQ5zTPaE
http://www.youtube.com/watch?v=yeBs2V0C4f0
http://www.youtube.com/watch?v=LWDs53Zm4-M
http://www.youtube.com/watch?v=fcDGwqQkEYE


அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும், அவரது ஜானி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, 'ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்…' என்ற பாடலைக் கேட்டிருக்கிறேன்.
இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்ட காலத்தில், ஏராளமான 'ஈழத்து இலக்கியங்களை' என்னிடமிருந்து வாங்கிப் படித்தார்.  அவர் இயக்கிய 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் தெளிவான டி வி டி பிரதி என்னிடமிருப்பதை அறிந்து வியந்து, அது தன்னிடமே இல்லையென்றும் தமிழகத்திலே பெறமுடியவில்லையென்றும் சொல்லிப் பிரதி செய்து பெற்றுக்கொண்டார். அவரைச் சந்திக்க முன்னரேயே அவரது சில திரைப்படப் பிரதிகளையும் அவர் எழுதிய சில நூல்களையும் எனது தனிப்பட்ட பெருந்தொகையான ஆவணச் சேகரிப்புகளுடன் வைத்திருந்தேன்.

'உதிரிப் பூக்கள்' முக்கியமான, குறிப்பிடத்தகுந்த திரைப்படம். அது, வந்த காலத்தில் அதன் முக்கியத்துவம் பெரிது. எனினும், சில குறைகள் கொண்டிருப்பதாக விமர்சன நோக்கில் உணர முடிகிறது. 

'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தில், சுந்தரவடிவேலுவால் மைத்துனி துகிலுரியப்படும்போது, அவளை மணம் முடிக்க இருக்கும் இளைஞன் வேறு ஒரு இடத்தில் ஒருசெடியின் இலைகளை ஒடித்துக் கொண்டிருப்பது போல அமைந்திருக்கும் காட்சி செயற்கைத்தனமானது தான்.வலிந்து புகுத்தப்பட்டது போலவே இருக்கும். லட்சுமி என்னும் பாத்திரம் ( நடிகை அஸ்வினி) வானத்தைப் பார்க்கும் போது, அவளது மன நிலையினைப் பிரதிபலிக்கும் வகையில் கருமுகில்கள் காட்சிப்படுத்தப்படும் விதம் இயல்பானது. இந்தக் காட்சியில் வரும் காட்சித்துண்டுகள் (shots) வெவ்வேறு தருணங்களில் படமாக்கப்பட்டவை. கருமுகில்களின் காட்சித்துண்டுகள் இரண்டு முறை வரும். இரண்டாவது முறை வரவேண்டிய அவசியமே இல்லை. அதைத் தவிர்த்திருக்கலாம். அந்த இலைகளும், கருமுகில்களும் சம்மந்தப்பட்ட காட்சிகள் பற்றி, இயக்குநர் மகேந்திரனுடன் உரையாடியிருக்கிறேன். தன் படைப்புக்களின் குறை நிறைகளை அறிந்தவர் அவர். 'தமிழ் சினமா' அவரை இன்னமும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

வன்னியில் '1996' திரைப்படத்தினை மகேந்திரன் உருவாக்கியபோது கூடவே இருந்திருக்கிறேன். அவர் வன்னியில் தங்கியிருந்தபோது, 'நடிப்பு என்பது...' என்ற பெயரில் ஒரு நூலை எழுதினர்.  அதுவும் அவரது முக்கியமான பங்களிப்புக்களில் ஒன்றாகும். கிளிநொச்சியில் நீண்ட காலம் தங்கியிருந்து அவர் செய்த 'நல்ல காரியங்களை' நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். தமிழ் சினமாவின் மிக முக்கியமான ஆளுமையான மகேந்திரன், தொடர்ந்து இயங்க வேண்டும். 

இயக்குநர் மகேந்திரன், இலக்கியத்திலிருந்து சினமாவை உருவாக்கும் நுட்பம் அறிந்தவர். தீவிர இலக்கிய வாசகர். திரைக்கதை மற்றும் திரைப்பட இயக்கம் குறித்த தனது செறிவான அனுபவங்களைப் பல்வேறு அமர்வுகளில், பல சந்தர்ப்பங்களில் என்னுடன் அவர் பகிர்ந்துகொண்டார். தொழில் ரீதியாகப் பார்த்தால், திரைப்படம் எடுப்பது தான் உலகிலேயே மிகவும் கடினமான தொழில் என்று என்னிடம் அவர் சொல்லியிருக்கிறார். இதனை அனுபவபூர்வமாகவும் உணர்ந்திருக்கிறேன். உடல், உள ரீதியான முழு ஈடுபாட்டுடன் கூடிய, கடின உழைப்பினை நல்லதொரு திரைப்படத்திற்காக ஒரு இயக்குநர் வழங்கவேண்டியிருக்கும். திரைப்பட உருவாக்கத்தைப் பொறுத்தவரையில், அது தனிநபரோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை ஒரு நல்ல திரைப்படம் கடந்து வரவேண்டியிருக்கும். 

அவர் முதலில் இயக்கிய 'முள்ளும் மலரும்' திரைப்படம், உமா சந்திரனின் 'முள்ளும் மலரும்' என்ற தொடர் கதையில் இருந்து உருவாக்கப்பட்டது. அத் திரைப்படத்தில் தான் தமிழில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். தான் நடித்த படங்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த படமாக, இயக்குநர் மகேந்திரனின் முள்ளும் மலரும் என்ற படத்தையே ரஜினிகாந்த் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். இயக்குநர் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தி சில பாத்திரங்களில் நடித்திருந்த ரஜினி, முதல் முறையாக மையப் பாத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டது, தோன்றியது முள்ளும் மலரும் என்ற படத்தில் தான். ரஜினிக்கு நல்ல நடிகரென்ற பெயரையும் பிற்காலத்தில் நிறைய வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்ததும் அது தான்.

இயக்குநர் மகேந்திரன், பல சமயங்களில் பேசும் போது நடிகர் திரு.ரஜினிகாந்த் போல இருக்கும். ரஜினிக்கும் உங்களுக்கும் பேச்சிலும் சில உடல் மொழிகளிலும் ஒற்றுமைகள் இருக்கிறது என்று சொல்லி, ரஜினியும் நீங்களும் சில  படங்களில் இணைந்து பணியாற்றியிருப்பதாலும் ரஜினியின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் அவரைச் சில படங்களில் இயக்கியிருப்பதாலும் ரஜினிக்கு நீங்கள் நெருக்கமான நண்பர் என்பதாலும் உங்களின் சில உடல் மொழியும் உரையாடலின் பண்புகளும் ரஜினிக்கு தொற்றிவிட்டதா என்று ஒருமுறை கேட்டபோது பலமாகச் சிரித்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் விட்டுவிட்டார். சில சமயங்களில் சில கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல மாட்டார்.  இயக்குநர் மகேந்திரனால் போசிக்கப்பட்டிருந்தும், முள்ளும் மலரும் பிடித்த படமாக இருந்தும் பிற்காலத்தில் ரஜினி 'வேறுமாதிரி' வளர்ச்சியடைந்தது ஆச்சரியம் தான். ரஜினியின் இத்தகைய வளர்ச்சியை, என்னைப் போலவே  இயக்குநர் மகேந்திரனும் விரும்பியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. நடிகராகவும் தமிழக முதலமைச்சராகவும் இருந்த திரு.எம்.ஜி.ராமச்சந்திரனால், பத்திரிகையாளராக இருந்த காலத்தில் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மகேந்திரனின் பிற்கால சுயாதீன வளர்ச்சி, திரையுலகை ஆரோக்கியமான திசையில் வளப்படுத்தியிருக்கிறது.


நீண்ட காலத்திற்குப் பிறகு, சென்னையில் இருந்தபோது அவரது வீட்டுக்கு வரப்போவதாகச் சொன்னேன். வீட்டு முகவரி தந்து, உடனே வரச்சொன்னார். அவரது வீடு நோக்கிய பயணத்தின் போது கைத்தொலைபேசியில் வழி சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்வது போல், பல இனிய நினைவுகள் எனை  அழைத்துச் சென்றன. பள்ளிக்கரணையில் உள்ள குடியிருப்பும் அங்கிருந்த அவரது வீடும் அவரைப் போலவே அமைதியும் கம்பீரமும் நிறைந்ததாயிருந்தன.

பள்ளிக்கரணையில் இயக்குநர் மகேந்திரனின் வீடு அமைந்துள்ள குடியிருப்பு

நீண்ட காலம் கடந்து, நீண்ட தூரம் கடந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த என்னை ஆச்சரியத்துடன் வரவேற்றார். உண்மையான அன்பை வெளிப்படுத்தினார். இலங்கை, இந்திய, சர்வதேச அரசியல் நிலைமைகள் பற்றி, முன்னர் எப்போதும் இல்லாத வகையில் விரிவாகப் பேசினார். அவர் அரசியல் பற்றி அதிகம் பேசுவதில்லை என்று நினைக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த இன்னல்கள் குறித்து மிகவும் வருந்தினார். அப்போது, அவரது உடல்மொழியும் பேச்சும் அதீதமான 'வருத்தத்தை' வெளிப்படுத்துவதாயிருந்தன. ஒளி மங்கித் துயர் கவிந்த அந்த மாலை நேரம், மறக்கவே முடியாதது.

இயக்குநர் மகேந்திரனுடன் பழகவும், அவருடன் இணைந்து பணியாற்றவும் கிடைத்த வாய்ப்புக்கள் எனது சினமா சார் வாழ்வில் இனிமையானவை, மறக்க முடியாதவை. அவரைப் போன்ற, ஆளுமை மிக்க கலைஞர்களுடன் பழகிய  காலங்கள் பெறுமதியானவை.

இயக்குநர் மகேந்திரன் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் அவருடனான எனது அனுபவங்கள் பற்றியும் அவர் சார்ந்த இனிய நினைவுகளையும் விரிவாகப் பதிவு செய்யவேண்டுமென்று தோன்றுகிறது. 

இயக்குநர் மகேந்திரனுடன் அறிமுகம் ஏற்பட்ட காலத்தில்....

   

இயக்குநர் மகேந்திரனுடன் பள்ளிக்கரணை வீட்டில்... 


முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள், சாசனம் போன்றவை இயக்குநர் மகேந்திரனின் குறிப்பிடத்தகுந்த திரைப்படங்கள். சாசனம் தவிர, ஏனையவை இணையம் மூலம் (You Tube) பார்க்கக்கூடியதாக உள்ளன. பேசாமொழி என்ற இணைய இதழ், முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வந்துள்ளது. http://pesaamoli.com/index_content_6.html





இயக்குநர் மகேந்திரன் பற்றிய, நண்பர் சீனு ராமசாமியின் பதிவு

1992 ம் வருடம் மதுரை அமெரிக்கன் கல்லூரி திரைப்படக்கழகம் திரையிட்ட முள்ளும் மலரும் என்ற திரைப்படம் என் வாழ்வில் ஒரு புதிய திசையை திறந்தது. அதுவரை இலக்கியம் படிப்பவனாக இருந்த என்னுள் ஒரு முழுநீள திரைப்படம் ,நீக்கமறக் கவிதை நூலாக நிறைந்தது. படம் முடிந்து மதுரையிலிருந்து 7 கி.மீ நடந்தே பனியிரவில் வீடு வந்து சேர்ந்தேன்.

என் இரண்டு தங்கைகள் மீதும் என்னையறியாமல் அவர்களுக்காக உள்ளார்ந்த கண்ணீர் என்னுள் சுரக்கத் தொடங்கியது. மென்மேலும் அவர்களை படிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மோலோங்கியது. ஒரு அண்ணனாக முழுமையாக உணர்ந்த தருணமது. பெண்மையின் பேச்சற்ற கணத்தின் பின்னனியில் இருக்கும் மெளனத்தின் அர்த்தம் புரியத்தொடங்கியது. பின்பு அவரின் அத்தனை படங்களும் உதிரிப்பூக்களாக என்னுள் நிறைந்தது.

ஏகலைவத் தவம் தொடங்கியது, ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றும் , அதன் மூலமே அறிமகமாக வேண்டும் என்ற தவிப்பு இருந்தது. ஜானி மாதிரி ஏன் முயலக்கூடாதென கூடல்நகர் திரைப்படத்தை முயன்றேன். ஆயினும், அவரை சந்திக்கும் துணிவு வரவில்லை.

தென்மேற்கு பருவகாற்று அத்திசையின் கதவுகளை திறந்தது. படத்தை அவர் பார்த்துவிட்டார் என்பதை அறியாமலே, என் படத்தை பார்க்குமாறு தொலைபேசியில் அவரை கேட்டுக்கொண்டேன். அவரோமிஸ்டர் ராமசாமி, உங்க படம் பார்த்தேன், நல்லாயிருக்கு, எனக்கு புடிச்சிருக்குஎன்றார்.
மலைச்சரிவில் ஓடும் சிறுவனைப் போல பரவசம் தொற்றிக்கொண்டது.

கூடல்நகர் திரைப்படத்துக்கு பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சஞ்சலத்தில் என் உறுதி சரியத் தொடங்கி மசாலா கதைகளை உற்பத்தி செய்யலாமா என்ற எண்ணமும் வந்தது உண்மை. ஒரு வயது பெண்குழந்தையுடன் மாநகரம் அன்றாட வாழ்வுக்கு திசை விரட்டிய கலை வாழ்வில், அமைதியற்ற நேரத்தில், கைகளை கட்டிக்கொண்டு அவரின் முள்ளும் மலரும் `காளி` எனக்கு நம்பிக்கையூட்டினான்.

சென்னை பள்ளிக்கரனை நோக்கி எனது காரில் அவரை சந்திக்க சென்றேன். புறநகர் குடியிருப்பொன்றில் செட்டிநாடு வீடு வகைகளை நினைவுறுத்தும் பேரமைதியான இல்லத்தின் முன் ஜப்பானிய மொழியில் அவரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. ”வாங்க, மிஸ்டர் ராமசாமிஎன்னை அழைத்தவர் இயக்குனர் மகேந்திரன். வெள்ளுடையில் இருந்தார். புருவம் சுருக்கி பேசினார் . தென்மேற்கு பருவகாற்றில் சில காட்சிகளைக் குறிப்பிட்டார். பட விழா, விருதுகளுக்கு இதை அனுப்ப சொன்னார். சினிமா பற்றிய எனது அபிப்பிராயங்களை கூர்ந்து கவனித்தார். அவரது அபிப்பிராயங்கள் எனக்கு இணக்கமாகவும் , நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது.

இயக்குனர் சீனு ராமசாமி என கையழுத்திட்டு அவரின் புத்தகங்களை தந்தார். அப்பெரிய வீட்டிலிருந்து வெளிவந்து யாருமற்ற அத்தெருவில் வெயிலில் நின்று வழியனுப்பினார். என் தந்தையை அறிந்த மன நெகிழ்வில் நெஞ்சில் கைவைத்து நன்றி சொல்லி விடை பெற்றேன்.


வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன். நதிக்கரையில் ஓடும் உதிரிப்பூக்கள் குழந்தைகளும். ஷோபாவின் பொட்டு வைத்த சிரிப்பும், சுடு தண்ணீரை தூக்கச் சொன்ன தங்கையின் முன் கையிழந்த அண்ணனின் முகமும், பூட்டாத பூட்டுகளாக திறந்த கார்க் கதவின் வழியாக மனக்கண்ணில் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.



இயக்குநர் மகேந்திரன் பற்றிய, நண்பர் அருணின் (அருண் தமிழ் ஸ்ரூடியோ) பதிவு

முகநூல், மின்னஞ்சல், இணையம் என எங்குமே தொடர்பில் இல்லாத ஒரு நண்பர் புதிய தலைமுறையில் இதழில் வெளிவந்த என்னுடைய நேர்காணலை கண்டதும், சில வருடங்களுக்கு பின்னர் தொலைப்பேசியில் அழைத்து, எனக்கு மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படம் எங்காவது கிடைக்குமா என்று கேட்டார். ஐந்து வருடமாக தேடிக் கொண்டிருக்கிறேன், நண்பர்களிடம் சொல்லி, இணையத்திலும் தேட சொன்னேன், தமிழ்நாடு முழுவதும் தேடி அலைந்தேன் எங்குமே கிடைக்கவில்லை. நீங்களாவது எங்காவது இருந்தால் எனக்கு வாங்கித் தரமுடியுமா என்றார். அவர் பேச்சில் இருந்த வாஞ்சையும், விரக்தியும் என்னை ஏதோ செய்தது. வாஞ்சியூர் அல்லது வழஞ்சியூர் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கிராமத்தின் பெயரை சொன்னார். நான் அப்போதும் மகேந்திரனிடம் பேசி, இந்த நண்பரின் தேடல், வெறி பற்றி சொன்னேன். அவர் எப்போதும் போல் என்னிடம் இல்லை என்று கூறிவிட்டார். 

ஆனால் அந்த நண்பரின் கோரிக்கையை என்னால் நிராகரிக்க முடியவில்லை. என்னக் காரணத்திற்காக அந்த நண்பர் இந்தப் படத்தை பார்க்க இத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும். எல்லாமே சினிமாவின் மேல் உள்ள காதலால்தானே. எப்படியாவது அவருக்கு இந்த படத்தை தேடிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நானும் இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. இன்று நண்பர் அமரதாசிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்த படத்திற்கான இணைப்பை கொடுத்தார். ஆச்சர்யம், நான் தேடி கிடைக்காத அதே இணையத்தில்தான் இருக்கிறது. ஆனால் அந்த நண்பர் இப்போது தொடர்பில்லை. அவரது எண்ணும் என்னுடைய பழைய அலைப்பேசியோடு போய்விட்டது. அந்த சினிமா காதலனுக்கு நான் எப்படி இந்த திரைப்படத்தை காணக்கொடுப்பேன். தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவரைப் போல் சில பேராவது தீராத வெறியுடன் மகேந்திரனின் சில படங்களை காண காத்திருக்க கூடும். அவர்களுக்காக மகேந்திரனின் இந்த திரைப்படங்களை காணக் கொடுக்கிறேன். இணையத்தில்தான் இருக்கிறது. ஆனால் அவசியம் பதிவிறக்கம் செய்து பாருங்கள்

நீங்கள் பார்ப்பதோடு நின்றுவிடாமல், அல்லது நீங்கள் பார்க்காவிட்டாலும், குறைந்தது சேர் (Share) செய்யுங்கள். அந்த நண்பர் மாதிரியான பல நண்பர்களுக்கு இந்த படங்கள் போய் சேரட்டும்.

நெஞ்சத்தைக் கிள்ளாதேhttp://www.youtube.com/watch?v=yWw55P7liyc

நண்டுhttp://www.youtube.com/watch?v=F060AvXMhb4

மெட்டிhttp://www.youtube.com/watch?v=ivLMoVUkceE

பூட்டாத பூட்டுக்கள்http://www.youtube.com/watch?v=dG8yQl3qDBE

முள்ளும் மலரும்http://www.youtube.com/watch?v=yV7b76khr7A