Thursday, July 27, 2017

பார்வை நாடகம் அல்லது 'ஜூலி ஐ லவ் யூ'



''விழிகள் மேடையாம்...'' என்று தொடங்கும் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசையில் இடம்பெறுவது. இதை அவ்வப்போது கேட்க நேரும் சமயங்களில் அதுபற்றி ஏதாவது எழுதவேண்டும் என்று நினைப்பதுண்டு. (பிடித்த பல பாடல்களைக் கேட்கும் போதும் அப்படித் தோன்றும். பிறகு வேறு சோலிகளாலும் 'சோம்பேறித்தனத்தாலும்' ஆர்வம் நீர்த்துவிடும்.)


கவிஞர் மகுடேசுவரன் எழுதிய பதிவொன்றை இப்போது படித்தபோது உடனடியாகவே எழுதும் உந்துதல் ஏற்பட்டது.


'பசி' என்னும் திரைப்படத்தை இயக்கிய துரை, 'கிளிஞ்சல்கள்' என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். அப் படத்தில், ''விழிகள் மேடையாம்..'' என்ற இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது, இயல்பாகவே இந்தப் பாடல் மனதில் தங்கிவிட்டிருந்தது. பிறகு, பாடலை எழுதி இசையமைத்தவர் டி.ராஜேந்தர் என்று அறிய முடிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. திரைத்துறையில் நுழைந்த புதிதில் இதுபோலக் கவனம் பெறத்தக்க வேறு சில பாடல்களையும் உருவாக்கியிருக்கிறார் ராஜேந்தர். 


''விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்...'' என்ற பல்லவியின் தொடக்கமே காதலர்கள் இருவரின் காதலைக் காட்சிப் படிமமாக உருப்பிக்கும் அழகியல் தன்மை கொண்டது. (இந்தப் பாடல், 'கிளிஞ்சல்கள்' திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் ரசனைக்குரியதல்ல. இந்தப் பாடலிலும் 'கிளிஞ்சல்கள்' திரைப்படத்திலும் நடித்த பூர்ணிமாவையும் மோகனையும் ஐந்து வருடங்களுக்கு முன்னர், சென்னையில் ஒரு நிகழ்வில் சந்தித்த போது, ஒளிப்படங்கள் எடுத்திருக்கிறேன்.) 


''மைதடவும் விழியோரம் மோகனமாய் தினமாடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்...'' என்று சரணத்தில் தொடரும் நயமான வரிகளைப் போல வேறுசில பாடல்களின் வரிகளையும் ஆரம்ப காலத்தில் நயம்பட எழுதியவர் ராஜேந்தர். பிற்காலத்தில் அவர் எழுதிய பல பாடல்களும் இயக்கிய திரைப்படங்களும் நல்லவையல்ல என்பது வேறு விடையம். 


இந்தப் பாடலில் அங்கங்கே வீணை பயன்பட்டிருக்கிறது. பல்லவி முடிந்து திரும்பவும் சரணம் தொடங்குவதற்கு இடையில் சுழித்து வரும் வீணையிசை ரசனைக்குரியது. 


இந்தப் பாடலில் அதிகம் ஈர்ப்புக்குரியதாக இருப்பது பாடலின் மெட்டும் ஜானகியின் குரலும் சில வரிகளுமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பாடலை நினைத்ததும் கூடவே நினைவுக்கு வருவது, இடையிடையே வெவ்வேறு தொனிகளில் 'ஜூலி ஐ லவ் யூ' என்று திரும்பத் திரும்ப ஒலிக்கின்ற ஆண் குரல். 'ஜூலி ஐ லவ் யூ' என்று அவர் திரும்பத் திரும்ப நயமாக எடுத்துரைக்கும் போது, இடையில் கலக்கும் ஜானகியின் 'சிணுங்கல்களும்' (humming) ரசனைக்குரியவை. முழுப்பாடலையும் பாடுகிறவர் ஜானகி. ஆனால் இடையிடையே கொடுக்கும் 'ஹம்மிங்' தவிர 'ஜூலி ஐ லவ் யூ' என்று மட்டும் நயமாக எடுத்துரைத்து, அழுத்தமாக இப் பாடலில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிறது ஆண் குரல். குறிப்பிட்ட 'ஜூலி ஐ லவ் யூ' பகுதியானது, பாடலின் அனுபல்லவியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அதனை அனுபல்லவியாகத் தான் உணர முடிகிறது. (அந்த ஆண் குரலுக்கு உரியவர் ஜூலி ஆப்ரஹாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் அந்தக் குரலுக்கு உரியவர் Dr. கல்யாண் என்பவர் என்று இப்போது அறிகிறேன்.) 


- அமரதாஸ்