Friday, May 31, 2013

'ஒளி ஓவியம்' தங்கர் பச்சான்


 இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான தங்கர் பச்சானுடன் அமரதாஸ்

அமரதாஸ் 

 என் கையிலுள்ள ஆயுதம் கலை என்று சொல்வதுடன் மட்டுமில்லாமல் நம்பிச் செயற்படுகிறவர், நண்பர் தங்கர் பச்சான். தமிழின் பல்துறை ஆளுமை மிக்க கலைஞர் அவர். ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், எழுத்தாளர்…. அவரது, சன் தொலைக்காட்சி நேர்காணலை இணையத்தில் தற்செயலாகப் பார்த்தபோது இப் பதிவினைச் செய்யவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அவரது சில திரைப்படச் செயற்பாடுகளில் எனக்கு முழுமையான உடன்பாடுகள் இருப்பதில்லை  என்றாலும் அவரது செயற்பாடுகளில் வெளிப்படும் தீவிரமும் சமூக அக்கறையும் ஈடுபாடும் உள்ளார்ந்த விவாதத்தைத் தோற்றுவித்து விடுகின்றன.


  நீண்ட காலத்திற்குப் பிறகு, அவரை அவரது இல்லத்தில் (செம்புலம்) சந்தித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனார். உண்மையான அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பற்றியும் தன்னால் உருவாக்க முடியாமல் போய்விட்ட தனது 'இலட்சியத் திரைப்படம்' பற்றியும் அதிகம் பேசினார். 

அவருடன் நேரடிப் பரிச்சயம் இல்லாத காலத்தில் ஒளிப்பதிவுச் செயற்பாடுகளால் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தவர். 'ஒளி ஓவியம்' தங்கர் பச்சான் என்ற பதிவுகளோடு வந்த படங்கள் ஈர்ப்புக்குரியவையாய் இருந்தன. பாலுமகேந்திராவைப் போல, ஒளிப்பதிவை ஒளி ஓவியமாக, காண்பிய மொழியாக வெளிப்படுத்த முயல்பவர். காதல் கோட்டை, பாரதி, பெரியார், மோக முள் போன்ற, தமிழின் குறிப்பிடத்தகுந்த பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர். அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி போன்ற திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.

 புகழ் பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான நண்பர் தங்கர் பச்சான், தமிழின் முக்கியமான இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான  பாலுமகேந்திராவிடம், என்னைப் பெருமைக்குரிய முறையில் அறிமுகப்படுத்தி வைத்தார். நண்பர் தங்கர் பற்றி, அவருடனான சந்திப்புகள் பற்றி, அவரது படைப்புகள் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்யலாம்.