Monday, April 30, 2018

அவலச் சாவுகளும் கேள்விகள் சிலவும்.



விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 'முன்னாள் போராளிகள்' சிலர், புற்றுநோயினாலும் வேறு சில காரணங்களாலும் சாவடைவதாக அவ்வப்போது அறியப்படுகிறது. மிக அண்மையிலும் அத்தகைய ஒருவர் புற்றுநோயினால் சாவடைந்திருப்பதாகத் தெரியவருகிறது. இத்தகைய சாவுகளும் அவை தொடர்பிலான செய்திகளும் தமிழ்ச் சமுகத்தின் மத்தியில் அவலங்களையும் அச்சங்களையும் விதைத்து வருகின்றன. தமிழ் அரசியலாளர்கள் உட்பட யாருமே அத்தகைய சாவுகளுக்கான காரணங்களை, மருத்துவ விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து 'உண்மைகளை' வெளிப்படுத்த முன்வருகிறார்களில்லை என்பது தமிழினத் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் பின்னடைவே.


புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த பலரும் சிறிலங்கா அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு 'மெல்லக் கொல்லும்' விச மருந்து ஏற்றப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் பரவலாகி வருகிறது. புலிகள் இயக்கத்தவர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடயங்களில் சிறிலங்கா அரசு மோசமாக நடந்துவந்திருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியக் கூடிய நிலையில், தமிழ் தேசிய அரசியலாளர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களால் ஆரோக்கியமான எதிர்வினைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது எதனால்? தமிழ் தேசிய அரசியல் எனப்படுவது பதவிகளை அடையப் பயன்படுகிற ஏணி போன்ற ஒரு பொருளா?

சிறீலங்கா அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 'முன்னாள் போராளிகள்' அனைவருமே முன்னாள் அரசியல் கைதிகளாகப் பார்க்கப்பட வேண்டியவர்களே. அவர்களது வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் சிறிலங்கா அரசு போதிய அளவிலான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை. யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் 'நீதி' உறுதிசெய்யப்படவில்லை. முன்னாள் அரசியல் கைதிகள் பற்றிய விடயங்களில், 'புனர்வாழ்வு' என்ற பொருத்தமற்ற பிரயோகத்தை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். 'புனர்வாழ்வு அளிக்கப்பட்ட...' அல்லது 'புனர்வாழ்வின் பின்னர்...' போன்ற மொழிப் பிரயோகங்கள், கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியில் தவறானவை.

'தீவிர தமிழ் தேசிய வாதிகளும்' விடுதலைப் புலிகளின் 'தீவிர ஆதரவாளர்களும்' முன்னாள் அரசியல் கைதிகளின் சாவுகள் தொடர்பில் சிறிலங்கா அரசைக் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய்த்தாக்கம் இருப்பதாக அறியப்படவில்லை என்றாலும், அத்தகையவர்களுக்கு இனி எதுவும் நடந்துவிடாது என்பதற்கான உத்தரவாதமில்லை. நோய்த்தாக்கத்தினால் அவ்வப்போது நிகழும் அவலச் சாவுகளில் சிறிலங்கா அரசின் நேரடியான, மறைமுகமான காரணங்கள் மட்டுமில்லாமல், வேறு சில காரணங்களும் இருக்கக் கூடும். எதையும் முறையாக ஆய்வு செய்தால் தானே எதையும் உறுதிப்படுத்த முடியும். இந்த விவகாரமானது முன்னாள் அரசியல் கைதிகள் மத்தியில் மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியிலும் அச்சங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வலுவாக சந்தேகிக்கப்படுகிற எதுவும் உறுதிப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும் வெறுமனே 'வதந்தி' ஆக்கப்படுவதும் ஊழல் அரசியலாகும்.

இலங்கையில் தற்போது நிகழும் தமிழ் அரசியலானது மிகவும் பலவீனமானது. தமிழ் தேசிய இனத்தின் பாதுகாப்பை, கண்ணியத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான 'போராட்ட வழிமுறையாக', தேசியக் கவசமாகத் தமிழ் அரசியல் அமைந்திருக்க வேண்டும். கட்சி அரசியல் அல்லது ஓட்டு அரசியல் வழிமுறைகளுக்கு வெளியே, ஜனநாயக வழிமுறைகளுடன் கூடிய 'இயக்க' அரசியலாகத் தமிழ் தேசிய அரசியலை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கக் கூடிய அர்ப்பணிப்புணர்வு மிக்க 'தமிழ் தேசிய அரசியல் போராளிகள்' உருவாக வேண்டும்.

பின் இணைப்பு - முன்னாள் அரசியல் கைதியாக இருந்தவரும், தற்போது புற்று நோய்ப் பாதிப்பில் சாவடைந்து விட்டவருமான இந்த இளைஞரின் படம் என்னைப் பலவகையில் பாதித்தது. உண்மையில், எனது இந்தப் பதிவுடன் இந்தப் படத்தைப் பயன்படுத்துவதற்கு விரும்பியிருக்கவில்லை. முதலில், பலமுறை பல கோணத்தில் யோசித்தேன். பிறகு, இதுவே பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதனை இணைத்துக்கொண்டேன். இந்தப் படத்தில் தொனிக்கும் 'பார்வையும்' உடல்மொழியும் தீவிரமானவை, தீராக் கேள்விகளைக் கிளர்த்துபவை.

2018-04-30
அமரதாஸ்