Tuesday, April 3, 2018

புலம்பெயர் வாழ்வியலில் ஒரு ஓவியர்.


ஒரு கலை முயற்சியானது, அதில் ஈடுபடுகிறவரின் ஆளுமை விருத்தியில் ஆரோக்கியமான 'வினைத்திறன்' ஆற்றக்கூடியதாகும். ஆளுமை விருத்தி மற்றும் சமூகப்பயன்பாடு சார்ந்து, கலை முயற்சிகள் ஆற்றும் வினைத்திறன்கள் எப்போதும் 'மதிப்பீடு' செய்யப்பட வேண்டியவை. நெருக்கடிகள் பலவும் நிறைந்திருக்கும் புலம்பெயர் வாழ்வியலில், கலைசார் முயற்சிகள் எப்போதும் அவசியமானவை.   

தன்னார்வத்தில், தன்னிச்சையாக பெருமளவுக்கு ஒரு 'பிரதிமை' (Portrait) ஓவியராகத் தன்னை உருவாக்கிக் கொண்டு சுவிற்சர்லாந்து நாட்டில் வசித்துவரும் திரு. பாலேந்திரன் பரமேஸ்வரன் என்பவரைப் பற்றிய இந்தக் காட்சிப்பதிவானது, தமிழ்ச் சூழலில் முக்கியமாக புலம்பெயர் தமிழ்ச் சூழலில் கவனப்படுத்தப்பட வேண்டியது. இவரைப் போன்ற பல ஓவியர்களை நான் பல்வேறு இடங்களில் சந்தித்திருக்கிறேன். இத்தகையவர்களின் 'ஓவியத் திறன்' குறித்த மதிப்பீடுகள் எனக்குச் சுயமாக இருந்தாலும், இத்தகையவர்களது முயற்சிகளில் 'கலையாக்கம்' எந்த வகையில் பரிணமிக்கிறது என்ற தேடலை நிகழ்த்தி வந்திருக்கிறேன்.

ஒரு படத்தை அல்லது காட்சியைப் பார்த்து அப்படியே 'பிரதிசெய்வது' அல்லது 'அதேமாதிரியே' வரைவது நல்ல கலையாகுமா? அத்தகைய முயற்சிகள், எக் காலத்திலும் அல்லது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவசியம் தானா? ஒளிப்படக் கமெராக்களின் வருகைக்குப் பின்னர், 'பிரதிமை' ஓவியங்களின் இருப்பு அல்லது தேவை எப்படியாக இருக்க முடியும்? கலையின் சமூக மற்றும் தனிமனிதப் பயன்பாடுகள் எப்படிப்பட்டவை?...இது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு, தமிழ்ச் சூழலில் ஆரோக்கியமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஓவியர் ரவிவர்மா போன்றவர்களது தாக்கம், இந்தியா முழுதும் இலங்கையிலும் இன்றுவரை உணரப்படுகிறது. மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் 'பிரதிமை' ஓவிய முயற்சிகள் பல்வேறு வகைகளில் நடந்திருக்கின்றன. அவற்றுக்கான தேவைகள் பலவகைப்பட்டவையாக இருந்து வருகின்றன. பிரக்ஞை குன்றிய நிலையில் அல்லது 'இயந்திரத்தனமாக' முன்னெடுக்கப்படும் கணனி அல்லது 'மென்பொருள் ஓவிய' முயற்சிகள், பிரதிமை ஓவிய முயற்சியாளர்களுக்குச் சவாலாகவே தொடர்ந்து வருவது நிகழ்கால யதார்த்தமாகும்.

தனிப்பட்ட வேலைப்பழுக்கள் உள்ளிட்ட நெருக்கடிகள் நிறைந்திருக்கும் புலம்பெயர் வாழ்வியலில், சுய வளர்ச்சி சார்ந்தோ ஆளுமை விருத்தி சார்ந்தோ சமூக முன்னேற்றம் சார்ந்தோ இயங்குவது சவாலானதாவே உள்ள நிலையில், ஆரோக்கியமான கலை முயற்சிகள் இனங்காணப்படவும் வரவேற்கப்படவும் பரவலாக்கப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டியவையாகின்றன.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் நெருக்கடிகளுக்குப் பின்னர் புங்குடுதீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து, பிறகு சுவிற்சர்லாந்து நாட்டிற்குப் புலம்பெயர்ந்து இப்போது சூரிச் நகர்ப்பகுதியில் வசித்து வரும் பாலேந்திரன் பரமேஸ்வரன் என்னும் ஓவியரை அறிமுகப்படுத்தும் வகையில், இந்தக் காட்சி ஆவணத்தை மிகவும் குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள திரு.ஜெயந்தன் நடராஜா வின் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சிகள் தொடர்பாகவும் பல்வேறு கலை, இலக்கிய முயற்சிகள் தொடர்பாகவும் என்னுடன் அடிக்கடி உரையாடுகிறவர் நண்பர் ஜெயந்தன். இன்னும் கொஞ்சம் நேரத்தை அதிகப்படுத்தி, 'மேலதிக நுணுக்கங்களுடன்' அவர் இதை உருவாக்கியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

அமரதாஸ்
2018-04-03