Thursday, September 6, 2018

Destroyed cage.




துயர் பெருக்கும் இறுதிப் போர்க்காலம்... தமிழ் மக்கள் குடியிருப்புகளின் மேல், சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்துகொண்டிருந்தன.

நீண்ட தூரம் இடம் பெயர்ந்து அலைந்தவர்கள் செறிவாகத் தங்கியிருந்த இரணைப்பாலை என்ற இடத்திலே, தற்காலிகக் கொட்டகை ஒன்றின் மேலேயே எறிகணை ஒன்று விழுந்து வெடித்தது. அந்த இடத்தில், தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடக்கக் கூடும் என்று அஞ்சிய பலரும் ஆங்காங்கே ஓடிப் பதுங்கிக்கொண்டார்கள்.

அயலவர் சிலருடன், எறிகணை வெடித்த திசையினை நோக்கி உடனடியாகவே விரைந்தேன். (பல தடவைகள் நான் இடம்பெயர்ந்து, இரணைப்பாலை என்ற இடத்தை அடைந்திருந்தேன். அங்கு நான் தற்காலிகமாக வசித்த கொட்டகைக்கு மிக அருகில், கிட்டத்தட்ட 50 மீற்றர் தூரத்திலேயே அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.)

புழுதியும், புகையும், மரண நெடியும் படிந்த சிதிலங்களிடையே அதிர்ச்சியில் உறைந்து எதையோ தேடிக்கொண்டிருந்தார் அவர். மகனும் மனைவியும் பெரு வெடிப்பில் உருக்குலைந்து போயிருந்த விபரீதத்தை அப்போது தான் உணரத்தொடங்கியிருந்தார். ஒரு குடும்பத்தைக் கொண்டிருந்த அவர் மட்டுமே மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தார் அப்போது. அந்த விபரீத நிலையில், அவர் என்ன நினைத்தாரோ...? யாரை நினைத்தாரோ...? அவரே, சிதைந்த உடல்களின் பாகங்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தார். இதயத்தின் குமுறலை, விரல்களில் தாங்கிக்கொண்டிருந்தவரின் தோற்றம், என்னை வியப்பிலும் வேதனையிலும் ஆழ்த்திக்கொண்டிருந்தது. அயலவர் சிலரும் அவருடன் இணைந்து, இரண்டு சடலங்களின் சிதைவுகளையும் தேடிக்கொண்டிருந்தார்கள்.

கொல்லப்பட்டிருந்தவர்களின் உருவப்படங்களைக் கண்டெடுத்தேன். அந்தப் பதின்பருவத்துப் பையனின் முகத்தை, இனி எப்போதும் அவனால் பயன்படுத்த முடியாத 'பயண அனுமதி அட்டை' ஒன்றிலே அப்போது தான் பார்த்தேன். (அந்தப் 'பயண அனுமதி அட்டை', 'தமிழீழம்' என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டமைத்திருந்த 'நிழல் அரசாங்க' அடையாளங்களில் ஒன்று.)

உருக்குலைந்து சிதறிக் கிடந்த சடலங்களின் பாகங்கள், இரண்டு பொதிகளில் அடுக்கப்பட்டன. அருகில் இருந்த ஒரு பற்றைக்கிடையில் புதைப்பதற்காக, அவற்றை எடுத்துச் சென்றார்கள் அயலவர்கள்.

அவர் கடைசியாக நடந்தார். 'நடைப்பிணம்' என்னும் மொழிவழக்கின் காட்சிப்படிமம் என் கண்களின் முன்னே... கடைசியாக அவர் நடந்தார். அவரை நான் பின்தொடர்ந்தேன்.

பயண வழியில், கிளைகளை இழந்திருந்த ஒரு அடிமரத்தின் விளிம்பில், தனித்திருந்து விசும்பிக்கொண்டிருந்தது சிறு குருவி.

ஒரே குழியில், மகனையும் மனைவியையும் இரண்டு பொதிகளாய் இறக்கிவைத்தார். பிறகு, தன் தீனக்குரலை உருவியிழுத்துக் கைகளில் ஏந்தி என்னவோ சொன்னார். அப்போது என்னவோ சொன்னார்....என்ன சொன்னாரோ...?

அவர் இனி என்ன செய்வார்...? எங்கு செல்வார்...? தன்னிச்சையாகத் தோன்றிக்கொண்டேயிருந்தன கேள்விகள். யுத்தத்தில் கொல்லப்பட்டோரினதும் காணாமல் ஆக்கப்பட்டோரினதும் உறவினர்கள் பெறும் பெருவலியை, எழுத்தில் இறக்கிவிட முடியுமா...? சுயாதீன ஊடகராயிருந்து, என் சனங்களின் அவலங்களைப் பதிவாக்கிய அனுபவங்கள் அதீதமானவை.

அன்றைய காலையின் ஒளியிலே படர்ந்த அவலத்தின் கோடுகள், என் கமெராவில் பதிவாகிக்கொண்டிருந்தன. கலங்கிக்கொண்டிருந்த என் கண்களால் குவியப்படுத்தலை (focus) மேற்கொள்ளச் சிரமாயிருந்தது.

அவலத்தில் விடிந்த அந்த நாளின் பின்னர், அவரை எங்கும் நான் காணவேயில்லை. போர் முடிந்த பிறகு, மீள்குடியேறி, மனநோயில் உழன்று, அவரும் அநாதரவாக இறந்து போனாராம். ஆக, அந்தக் குடும்பத்தில் யாருமே இன்றில்லை.

என் படங்களின் கோடுகளில் படர்ந்துகொண்டேயிருக்கின்றன, சந்ததியின்றி அழிந்துபோய்விட்ட அந்தக் குடும்பத்தின் நினைவுகள்.

2018-09-06
அமரதாஸ்