Saturday, September 15, 2018

தமிழர் அழுத கண்ணீர் வீணானதா?



ஓவியர், ஊடகர், கவிஞர், எழுத்தாளர், ஒளிப்படக் கலைஞர் எனப் பன்முகப் பாரம்பரியம் கொண்ட அமரதாஸினால் இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் கண்காட்சி அண்மையில் சுவிஸ் நாட்டின் வர்த்தகத் தலைநகரான சூரிச் மாநகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. “தமிழர்களின் கண்ணீர்’ என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட இந்தக் கண்காட்சியை பல்கலைக் கழக மாணவர்களும், ஆர்வலர்களும் பார்வையிட்டிருந்தனர்.

ஓவியங்களே அமரதாஸின் விருப்புக்குரிய துறையாக இருந்த போதிலும், காலச் சூழல் அவரை ஒரு ஒளிப்படக் கலைஞனாக மாற்றியிருந்தது. தனது மனச்சாட்சியை ஏமாற்றாமல் முடிந்த அளவில் தனது பணியை, சமூக அக்கறையோடு அவர் நிறைவேற்றி உள்ளார் என்பதை அவரது ஒளிப்படங்களைப் பார்வையிடும் அனைவரும் புரிந்து கொள்வர்.

ஒரு ஊடகவியலாளனைப் பொறுத்தவரை அவன் எடுக்கின்ற ஒளிப்படங்களைப் பிரசுரம் செய்வதோடு அவனது பணி நிறைவுக்கு வந்து விடுகின்றது. அதையும் தாண்டி தன்னால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி, அவை தொடர்பான ஒரு பரப்புரையை மேற்கொள்ளும் போது அவனது பாத்திரம் ஊடகவியலாளன் என்பதற்கும் அப்பால் பரந்து விரிந்து பயணிக்கத் தொடங்குகின்றது. ஊடகங்களில் காட்சிப் படுத்தப்பட்ட ஒளிப்படங்கள் சொல்லிய சேதியை விடவும் ஒளிப்படக் கண்காட்சிகள் சொல்லுகின்ற சேதிகள் ஆழமானவை, அகலமானவை.

அந்த வகையில், “தமிழரின் கண்ணீர்’ தனது பணியைச் செவ்வனே செய்திருக்கின்றது எனத் துணிந்து கூறலாம்.

ஈழத் தமிழரின் கண்ணீர் பல கதைகளைக் கூறும் வகையினது. பல சரித்திரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐரோப்பிய ஜனநாயகக் கூறுகளை மாத்திரம் அளவீடாகக் கொண்டு நோக்குபவர்களால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாதது. “பாவத்தின் சம்பளம் மரணம்’ எனப் பழங்கதை பேசுபவர்களின் பட்டியலில் அடங்காதது. “போரில் மனித இழப்பு தவிர்க்க முடியாதது’ என வரட்டுத் தத்துவம் பேசுபவர்களால் அறிந்து கொள்ள முடியாதது. இரத்தமும், சதையும், கண்ணீரும் என வாழ்ந்து, போரின் துயர்களுக்கு முகங் கொடுத்து, “பறிகொடுக்கக் கூடாத’ அத்தனையையும் பறிகொடுத்து, உயிர் தப்பி, நடைப் பிணங்கள் போன்று வாழ்ந்து கொண்டு, “எங்களை இரட்சிக்க மேய்ப்பன் ஒருவர் வர மாட்டாரா?’ என ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களால் மாத்திரமே ஈழத் தமிழரின் கண்ணீரை முழுவதுமாக விளங்கிக் கொள்ளவும், புரிந்து கொள்ளம் முடியும்.

அத்தகைய ஒரு விளக்கத்தை, புரிதலை ஏனையோரிடத்தில் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சியை நோக்க வேண்டும். அமரதாஸ் குறிப்பிடுவதைப் போன்று ஒளிப்படங்கள் மிகவும் காத்திரமான ஊடகங்கள். அவற்றில் பொய்மை இருக்க முடியாது. உள்ளதை உள்ள படியே பதிவு செய்யும் அவை கறுப்பு வெள்ளை நிறங்களில் காட்சிப் படுத்தப்படும் போது, தாம் கொண்டிருக்கும் கருத்தை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. அவரது கருத்தை ஒட்டியே, அவர் காட்சிப் படுத்திய ஒளிப்படங்கள் யாவும் கறுப்பு வெள்ளையிலேயே வைக்கப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது.

இது மே மாதம். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த மாதம். தமிழர்களின் வீரத்தையும், வேதனைகளையும் நினைவு கூர்வதற்கான மாதம். இழப்புக்களின் நினைவு கூரலில் எதிர்கால செயற்பாடுகளுக்கு வழிகோலும் தருணம். இந்தக் காலகட்டத்தில் குறிப்பறிந்து இந்த ஒளிப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது அதிலும் சுவிஸ் நாட்டவர்களை இலக்கு வைத்துச் செய்யப் பட்டிருப்பது சாலப் பொருத்தமானது.

வெறுமனே துயரங்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போரின் வடுக்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போர்க் காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் சம்பவங்களையும் காட்சிப் படுத்தியதன் ஊடாக, தான் ஒரு பரப்புரையாளன் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்பதை அமரதாஸ் நிரூபித்து நிற்கிறார்.
அது மாத்திரமன்றி, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள் தாயகத்திலே பெரிதாக எதுவும் சாதித்து விடாமல், புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்த பின்னரே புகழைத் தேடிக் கொண்டார்கள் என “அப்பாவித் தனமாக(?)’ நினைக்கும் ஒருசிலரின் எண்ணங்களையும் அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சி உடைத்திருக்கிறது.

இத்தகைய கண்காட்சியை அமரதாஸ் அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடாத்தி இருக்கிறார். தற்போது சூரிச் மாநகரில் நடைபெறும் கண்காட்சியைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற கண்காட்சியைத் தொடர இருக்கிறார். அது மாத்திரமன்றி, ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைச் சபையிலும் நேரில் தோன்றி சாட்சியம் வழங்கி இருக்கிறார்.

ஒரு ஊடகவியலாளனாய், போர்க் காலத்திலே பணியாற்றிய ஒருவனாய் தனது பணியை அவர் தொடர்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமான ஒரு செய்தி அல்ல. ஊடகவியலாளர்களாகப் புலம்பெயர்ந்த பின்னர் “பொதுமக்களாகிப்’ போன தமிழ் ஊடகர்களுக்குமான அழுத்தமான செய்தியே.

“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்’ என்பது தமிழில் உள்ள ஒரு சொல்வகை. அதன் அர்த்தம் ஏழையின் கண்ணீரில் இருந்து உருவாகும் செயற்பாடு ஒரு மாற்றத்தை, புரட்சியை நோக்கிச் செல்லும் என்பதே. தமிழர்கள் சிந்திய கண்ணீருக்கு அளவே இல்லை. கடந்த காலத்தில் மட்டுமன்றி நிகழ்காலத்தில் கூட தினம் தினம் தமிழர்கள் கண்ணீர் சிந்திய வண்ணமே உள்ளார்கள். ஆனால், அந்தக் கண்ணீர் ” மழுங்கிய கத்திகளாகவே’ வீணாகிப் போகின்றன.

இத்தகைய அவல நிலைக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஈழத் தமிழர் அரசியலை நகர்த்திச் சென்றவர்கள். இன்றும் நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். பதில் சொல்வார்களா?

சுவிசில் இருந்து சண் தவராஜா
நன்றி-தினக்குரல் 2018-05-21
http://thinakkural.lk/article/10283