Sunday, June 16, 2013

மணிவண்ணன்



இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று அதிகாலையில் முகநூலைத் திறந்தபோது அதிர்ச்சியடைந்தேன். திரு. மணிவண்ணன், நேற்று சாவடைந்துவிட்ட செய்தியை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். இழப்பின் தாக்கத்திலிருந்து மீளமுடியவில்லை. மணிவண்ணன் கடைசியாக இயக்கி நடித்து அண்மையில் வெளியான திரைப்படத்தை (நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ) அவருக்காகவே தான் நேற்றுமுன்தினம் பார்த்திருந்தேன்.

அநாயாசமாக, எள்ளல் ததும்ப, அங்கதம் தொனிக்க, மிகவும் தனித்துவமான குரல் வெளிப்பாட்டுடன் பாத்திரத்தன்மை அறிந்து நடிக்கக்கூடிய ஒரு நல்ல நடிகராக அவரை நீண்டகாலமாகப் பிடித்திருந்தது. மிகையுணர்ச்சி சார்ந்த அவரது சில நடவடிக்கைகளுடன் உடன்படமுடியாமலிருந்தது. அவரை நேரில் சந்தித்த பிறகு, அவருடன் நிறைய விடயங்களைப் பகிர்ந்துகொண்ட பிறகு, அவர் மீதான நேசம் அதிகரித்திருந்தது. 50 வரையான படங்களை இயக்கியும் 400 இற்கும் அதிகமான படங்களில் நடித்தும் இருக்கிறார். எனினும், தான் விரும்பியபடியாக, தமிழ் சினமாவில் அவரால் ஈடுபடமுடியவில்லை. அவரைத் தமிழ் சினமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை.

சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணன் நடித்த, மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் என்று தொடங்கும், ஈர்ப்பான இசையும் அழுத்தமான வரிகளும் கொண்ட பாடல் இப்போது என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.


உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த போதும் தனது வழக்கமான செயற்பாடுகளை அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரை வீட்டில் நான் சந்தித்தபோது உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, நான் சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நின்றபோது ஒரு உதவியாளரின் கைத்தாங்கலில் கைத்தடியூன்றியபடி அங்கு வந்தார். என்னைக் கட்டியணைத்து உரையாடினார். ஒரு நூல் வெளியீட்டில் கலந்துகொள்ளவும் சில நூல்களை வாங்கவும் வந்ததாகக் கூறினார். அவர் எனக்கு அன்பளிப்பாகத் தந்த ஒளிப்பட நூலில், அன்போடு அவரது அரசியல், சமூக அக்கறையும் வெளிப்பட்டது. 

அரசியல் நையண்டித்தனமும் அரசியல், சமூக விடயங்களை வெளிப்படையாகப் பேசும் துணிச்சலும் அவரது இயல்பில் கலந்திருந்தது. சமூகத்தை, மோசமாகப் பாதிக்கும் அரசியல் அதிகார மையங்களுக்குத் துணைபோகாமல் தமிழ் மக்களின் நலன் சார்ந்து சளைக்காமல் செயற்பட்ட, அற நிலைப்பட்ட, உண்மையான கலைஞர் மணிவண்ணன் அவர்களின் இழப்பானது, தமிழினத்திற்குப் பேரிழப்பாகிவிட்டது. தமிழ்ச் சூழலில் அண்மைக்காலத்தில் திரைத்துறை சார்ந்த, ஆளுமை மிக்க கலைஞர்களின் மறைவு அடுத்தடுத்து நிகழ்ந்துவிட்டிருக்கிறது. பாடகர்களான திரு. சிறீநிவாஸ், திரு. சௌந்தரராஜன் ஆகியோருக்குப் பிறகு, மணிவண்ணன் தனது தடயங்களை முடிந்த அளவிற்கு அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். 

அவரைச் சந்தித்தபோது அவரைச் சில ஒளிப்படங்கள் எடுத்திருந்தேன். இன்னும் அதிகமாக எடுத்திருக்கலாமென்று இப்போது மனம் அங்கலாய்க்கிறது. 

2013-06-16
அமரதாஸ்