Thursday, September 7, 2017

பாலியல் தொழிலும் தமிழ்ச் சூழலும் - ஒரு திரைப்படத்தினை முன்வைத்து...


பாலியல் தொழிலும் தமிழ்ச் சூழலும் - ஒரு திரைப்படத்தினை முன்வைத்து...

- அமரதாஸ்
2017-09-07




'சிவப்பு எனக்குப் பிடிக்கும்' என்ற தமிழ்த் திரைப்படத்தினை நேற்றுப் பார்க்க முடிந்தது. பாலியல் தொழிலாளர்கள் பற்றிய ஒரு பதிவினை அண்மையில் எழுதியிருந்தேன். அதற்கு முன்னர் இத் திரைப்படத்தினைப்  பார்த்திருந்தால், இது பற்றியும் சேர்த்து எழுதியிருக்க முடியும். சரி, இப்போது தனியாகவே இத் திரைப்படம் குறித்து சுருக்கமாக எழுத முனைகிறேன்.


'சிவப்பு எனக்குப் பிடிக்கும்' என்ற தமிழ்த் திரைப்படமானது, தமிழ்ச் சமூகத்தின் பாலியல் சார் பிரச்சினைகளை வெளிப்படையாகவும் புரிந்துணர்வோடும் அணுகவேண்டும் என்னும் அக்கறையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு  மாணவன், ஒரு பாதிரியார், காவல் துறைக்கும் அரசுக்கும் 'தீவிரவாதியாக' தெரியும் ஒருவர், 'அரவாணி' ஒருவர், மனநல வைத்தியர் ஒருவர், உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆகியோருடனான  அனுபவங்களை எழுத்தாளர் முன்னே  வெளிப்படுத்தும்
பெண் பாலியல் தொழிலாளியை மையப்பாத்திரமாகக் கொண்டிருக்கிறது. அந்த எழுத்தாளர், பாலியல் ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிறுமியை  மகளாகக் கொண்டவர் என்பது படத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையினர் மற்றும் வேறு சில பாலியல் தொழிலாளர்கள் போன்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையின் தேவைக்கேற்ப கையாளப்பட்டுள்ளன.



பாலியல் குற்றங்களைக்  குறைக்கும் நோக்கில், சென்னைக்கு 'முறைப்படுத்தப்பட்ட'  'சிவப்பு விளக்கு பகுதி' அல்லது பாலியல் தொழில் தேவை என்பதுவும், 'பாலியல் கல்வி' முறைப்படி வழங்கப்பட வேண்டும் என்பதும், இத் திரைப்படத்தின் பிரதானமான வேண்டுதல்களாக உள்ளன. 'முறைப்படுத்தப்பட்ட'  பாலியல் தொழிலை  ஒரு 'தீர்வாக' வலியுறுத்துவது, தமிழ்ச் சூழலைப் பொறுத்த வரையில்  'சர்ச்சைகளுக்குரியதாக' இருந்து வருகிறது.  இருந்தாலும் 'பரிசீலனைக்குரியதாக' முன்வைக்கப்படுகிறது. 



ஆண்களின் பாலியல் 'தேவைகள்' பற்றிய கரிசனத்தைக் கொண்டிருக்கும் இத் திரைப்படமானது, பெண்களின் பாலியல் 'தேவைகள்' பற்றிய கவனப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் இது ஆண் நோக்கு நிலையில் அமைந்த மேலோட்டமான  திரைப்படமாகும். பல்வேறு சமூக  நிர்ப்பந்தங்களால் உந்தப்படுகின்ற ஆண்களின் பாலியல் 'தேவைகளுக்கு' 'வடிகாலாக' பெண் பாலியல் தொழிலாளர்கள் 'தேவை' என்பதே இத் திரைப்படத்தின் அடிப்படையான 'விவாதத்துக்குரிய' கோரிக்கை. 


பாலியல் தொழிலாளிகளின் உருவாக்கத்துக்கும் பெருக்கத்துக்கும் பல்வேறு சமூக, உளவியல் காரணங்கள் இருக்கும் நிலையில் பாலியல் கல்வி, மற்றும் 'முறைப்படுத்தப்பட்ட'  பாலியல் தொழில் போன்ற முன்னெடுப்புகள் ஓரளவுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பாலியல் வறட்சியும் பாலியல் குற்றங்களும் பாலியல் சார் பிரச்சினைகளும் மலிந்துபோயுள்ள தமிழ்ச் சூழலில், அவற்றை விளங்கிக்கொண்டு, அவற்றைக் குறைப்பதற்கான ஆரோக்கியமான மாற்று வழிமுறைகளை  ஆராயவேண்டிய அவசியம் உள்ளது. பல்வேறு  நாடுகளில் பாலியல் தொழில் மற்றும் பாலியல் கல்வி ஆகியவை 'முறைப்படுத்தப்பட்ட' நிலையில் மேற்கொள்ளப்படுவது அவதானிப்பிற்குரியது.


'முறைப்படுத்தப்பட்ட'  பாலியல் தொழில் மூலம் பாலியல் குற்றங்கள் குறைக்கப்படுமென்பதும் பாலியல் தொழிலாளர்களின் பல்வேறு சிரமங்கள் குறைக்கப்படுமென்பதும் இந்தத் திரைப்படத்தின் இயக்குநரது  நம்பிக்கையாகும். இதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில், நேர்காணல்களில்  குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் இருந்து திரைப்பட இயக்குநர் ஆனவர் அவர். 'மதுரை சம்பவம்' என்ற திரைப்படத்தினை அவர்  ஏற்கெனவே  இயக்கியிருக்கிறார்.


எழுத்தாளரின் பாத்திரத்தில் (யுரேகா) நடித்திருப்பவர், இத் திரைப்படத்தின் இயக்குநரான யுரேகா. அவருக்குத் தனது அனுபவங்களைச் சொல்லும் பாலியல் தொழிலாளியின் பாத்திரத்தில் (மகிமா) நடித்திருப்பவர் சாண்ட்ரா எமி என்னும் சின்னத்திரை நடிகை. இருவரது 'வெளிப்பாடுகளும்' பல இடங்களில் செயற்கைத்தனமானவையாக உள்ளன. வலிந்து புகுத்தப்பட்டதாக சில காட்சியமைப்புகளும் வசனங்களும் தென்படுகின்றன. திரைக்கதையில் நம்பகத்தன்மையை, 'இயல்பை' மீறிய சில இடங்கள் உள்ளன. தர்க்க ரீதியில் பொருந்திவராத சில காட்சியமைப்புகள்  உள்ளன. எனினும்,  திரைக்கதைக்குத்  'தேவையான' அழுத்தமான வசனங்கள் ஆங்காங்கே கவனிப்புக்குரியதாக உள்ளன.

பாலியல் ரீதியிலான  காட்சிகளை இடம்பெறச் செய்யத்தக்க சந்தர்ப்பங்கள் அதிகமிருந்தும் அத்தகைய காட்சிகளைத் தவிர்த்திருக்கிறது திரைக்கதை. பல்வேறு நிலையில் 'பாலியல் வக்கிரத்தை' ஆங்காங்கே கொண்டிருக்கும் பல்வேறு தமிழ்த்  திரைப்படங்களின் மத்தியில், இத் திரைப்படமானது தன்னளவிலான  தனித்துவத்தையும்  கண்ணியத்தையும் கொண்டுள்ளது. ஒரு திரைப்படத்தில், பாலியல் சார் காட்சிகள் 'தேவைப்படும்'  இடங்களில் 'தேவைக்கேற்ப' இடம்பெறுவது இயல்பானது என்பது வேறு விடையம். 

இத் திரைப்படத்தின்  பேசுபொருள்  முக்கியமானது, கவனிப்புக்குரியது. ஆனால் பேசியிருக்கும் விதம் 'கலாபூர்வமானதாக' இல்லை. ஒரு திரைப்படமாக, கலை வெளிப்பாடாக இதனை அணுகும் நிலையில், பல குறைபாடுகளைக் காண முடியும். பாலியல் 'விழிப்புணர்வு' கோரும் வகையில்  கட்டமைக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தின் 'சொல்முறை' மிகவும் பலவீனமானது, செயற்கைத் தன்மைகள் நிறைந்தது. இருப்பினும், ஒரு அனுபவமுள்ள திரைப்பட பார்வையாளரால் இதன் குறைகளை,போதாமைகளை இட்டுநிரப்பி இதனை அணுக முடியும் என்று தோன்றுகிறது.  இதை ஒரு சிறந்த திரைப்படமாக எடுத்திருக்க முடியும். 'மாற்றுச் சிந்தனைகள்' கொண்ட   ஒரு  திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இயக்குநர், அது நல்ல கலையாக்கமாக அமைந்திருக்க வேண்டும் என்று அக்கறைப்பட்டிருக்கலாம்.


உண்மையில், பாலியல் தொழிலாளர்களின் நிலைமையானது, இந்தப் படத்தில் உள்ளது போலக் குறைந்த பட்ச அளவில் கூடப் பாதுகாப்பானதாகவோ  சமூகக் கரிசனத்துக்குரியதாகவோ  ஆரோக்கியமானதாகவோ  இல்லை. தமிழ்ச்  சமூகத்தின் பாலியல் சார் பிரச்சினைகள்,  'இருண்ட'  அவலங்களாகப் பரந்து   கிடக்கின்றன. பல்வேறு சமூக, உளவியல் காரணங்களால் உருவாக்கப்பட்டு 'கவனிப்பாரற்று' அலைக்கழியும் பாலியல் தொழிலாளர்கள் பற்றியும், சமூகத்தின் பாலியல் சிக்கல்கள் பற்றியும்  சமூக, உளவியல் நிலைப்பட்ட  'ஆய்வுகள்' மேற்கொள்ளப்பட  வேண்டும்.


எது எப்படியிருந்தாலும் இத் திரைப்படமானது,  கவனிப்பிற்குரியதாக இருக்கிறது. இத்தகைய சமூகப் பிரச்சினைகள் பல்பரிமாணத்தன்மையுடன் அணுகப்படுவதும், கலாபூர்வமாக வெளிப்படுத்தப்படுவதும், சமூக மட்டத்தில் ஆரோக்கியமான நிலையில் முன்னெடுக்கப்படுவதும் அவசியமாகும்.