Sunday, March 18, 2018

நூல்கள் மீதான காதல், தீராக்காதல் - Endless love, over books


சென்னையில், புத்தகக் காட்சி நிகழ்வில் பல்வேறு வகைப்பட்ட புத்தகங்களை வாங்கியிருந்தேன். அவற்றை, அங்கிருந்து எனது முகவரிக்கு, தபால் மூலம் அனுப்ப ஒழுங்கு செய்திருந்தேன். அந்தப் புத்தகங்களின் ஒரு தொகுதி இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அனுப்புவதில் உதவிய நண்பர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.


கேரளாவில் இருந்து கொண்டுவந்திருக்கும் திரைப்படங்களையெல்லாம் இன்னும் பார்த்து முடிக்க முடியாதபடி எப்படியெப்படியோ காலம் கடந்து போகிறது. ஏற்கெனவே இருக்கும் புத்தகங்களில் சிலவற்றை இன்னமும் படித்து முடிக்கவில்லை. இப்போது புதிதாக வந்திருக்கும் இந்தப் புத்தகங்களையும் இனி வரவிருக்கும் புத்தகங்களையும் படிக்கவென நேரம் ஒதுக்குவதுதான் சிக்கலான காரியம்.

பழைய புத்தகக் கடைகளுக்கெல்லாம் சென்று, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பல நல்ல புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அப்படித்தான் பல்வேறு ரஸ்ய இலக்கியப் புத்தகங்களை வாங்கிப் படிக்க முடிந்திருக்கிறது. எனது கருத்தியல்களுக்கு, நம்பிக்கைகளுக்கு எதிரான உள்ளடக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் எப்போதும் வைத்திருப்பேன். அந்த வகையில் பகவத் கீதை, குர் ஆன், பைபிள் போன்றவை கூட எனது தனிப்பட்ட நூலகத்தில் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. எது எப்படியிருந்தாலும் எனக்கான தேவை, தேடல், ரசனை, கருத்தியல் போன்றவற்றில் தெளிவாகவே இருக்கிறேன்.

ஒரு காலத்தில், எனது வீட்டுக்கு பல எழுத்தாளர்களும் நண்பர்களும் வந்து ஆய்வு நோக்கத்திற்காகவும் வேறு பல தேவைகளுக்காகவும் புத்தகங்களை வாங்கிச்செல்வார்கள். பல புத்தகங்கள் அப்படியே காணாமல் போயுமிருக்கின்றன. எழுத்தாளரும் நண்பருமான திரு. அ.யோசுராசா கிராஞ்சியில் வசித்த காலத்தில் (இடப்பெயர்வுக் காலம்), நீண்ட தூரம் சைக்கிளில் பிரயாணித்து எனது வீட்டுக்கு அடிக்கடி வருவார். பல்வேறு புத்தகங்களையும் வாங்கிச்சென்று படித்துவிட்டு, பத்திரமாகத் திருப்பித் தந்திருக்கிறார். அதுபற்றி அவரது புத்தகம் ஒன்றில் ('நினைவுக் குறிப்புகள்') குறிப்பிட்டும் இருக்கிறார்.

யுத்த காலத்தில், நான் இழந்த பல்லாயிரக்கணக்கிலான புத்தகங்கள் குறித்த வலிமிகுந்த நினைவுகள் நிரந்தரமானவை. இடப்பெயர்வின் போது, கிளிநொச்சியில் இருந்த பெருந்தொகையான புத்தகங்களையும் வேறு பல ஆவணங்களையும் புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்த ஒரு நண்பனின் வீட்டிற்கு மாற்றியிருந்தேன். அந்த நண்பனே ஒரு பெரிய வாகனத்தை ஓட்டிவந்து எல்லாவற்றையும் ஏற்றிப்பறித்து எனக்காக உதவினான். அவனும் அவனது மனைவியும் அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கணினிப் பிரிவில் இருந்து செயற்பட்டவர்கள். (போர் நெருக்கடிகளில் இருந்து தப்பித்து, இப்போதும் அவர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.) அவர்களுடைய வீட்டின் ஒரு பெரிய அறை முழுக்க என்னுடைய புத்தகங்களே நிறைந்திருந்தன. பிறகு யுத்தம் தீவிரமடைந்த நிலையில் அங்கிருந்து எங்குமே கொண்டுசெல்ல முடியவில்லை. எல்லாம் அங்கேயே கைவிடப்பட்டன.

புத்தகங்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு மிகவும் அந்தரங்கமானது, அலாதியானது. 'இயல்பினை அவாவுதல்' என்ற பெயரிலமைந்த கவிதைத் தொகுதி ஒன்றும் 'வாழும் கணங்கள்' என்ற பெயரிலமைந்த ஒளிப்படத் தொகுதி ஒன்றுமாக இதுவரையில் இரண்டு புத்தகங்கள், யுத்தகால நெருக்கடிகளுக்குள்ளிருந்து என்னால் படைக்கப்பட்டிருக்கின்றன என்பது பெருமைக்குரியது தான். எனது ஒளிப்படத் தொகுதி ஒன்றுகூட இப்போது இல்லையென்பது மிகுந்த வேதனைக்குரியது. (யுத்தகாலத்தில் அழிவடைந்து விட்டன.) சில புதிய புத்தகங்களை உருவாக்கும் கனவுகளோடும் அத்தகைய புத்தகங்களுக்கான உள்ளடக்கங்களோடும் தான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ இழப்புக்களை அனுபவித்து, 'வாழ்வின் நிலையாமை' குறித்த சிந்தனைகளால் அலைக்கழிந்தாலும், புதிது புதிதாக புத்தகங்களைத் தேடுகிறது மனசு. ஒரு 'நாடோடி' போலவோ 'கொரில்லாப் போராளி' போலவோ வாழ நேர்ந்துவிடுகிற எனக்கு, தவிர்க்க முடியாத மேலதிகமான 'சுமைகளாக' சேர்ந்து விடுவதுடன் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. போர் முடிந்த பிறகு நான் சேகரித்த பெருந்தொகையான புத்தகங்கள் இன்னமும் எனது ஊரில் கிடக்கின்றன. நானோ அகதியாகி ஐரோப்பாவில்... நூல்கள் மீதான நினைவுகள் ஏராளமானவை. நூல்கள் மீதான காதல் இனிமையானது, அது தீராக்காதல்.

- அமரதாஸ்
2018-03-17