Sunday, April 1, 2018

தமிழ் மொழியின் பிரயோகத் திரிபு.



'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகம், தமிழ்ச் சூழலில் இப்போது பரவலாகியிருக்கிறது. அது, இலங்கையில் திரு.மைத்திரிபால சிறிசேன வின் அரசாங்க ஆட்சியைக் குறிக்கும் விதத்திலேயே பயன்பாட்டிலுள்ளது. பல்வேறு இடங்களிலும் இத்தகைய மொழிப் பிரயோகங்களைப் பார்க்க முடிகிறது. இத்தகைய மொழிப் பிரயோகங்கள், பொருள் வெளிப்பாட்டின் அடிப்படையில் பொருத்தமற்றவை. மட்டுமல்ல, 'பக்கச் சார்பான' அல்லது 'உண்மைக்கு' எதிரான தன்மையினை வெளிப்படுத்தக் கூடியவை.

'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகமானது, ஒருவகை உளவியல் திணிப்பை நாசூக்காக மேற்கொள்ளக் கூடியது. 'உடன்பாடான' உளவியல் நிலைப்பாட்டை ஏற்படுத்தி, அதை நிலைநிறுத்தும் உள் நோக்கத்துடன் அப் பிரயோகம் உருவாக்கப்பட்டிருக்கக் கூடும். ஒரு அரசாங்கத்தின் ஆட்சியானது உண்மையிலேயே நல்ல ஆட்சியாக அமைந்திருக்கும் தருணத்தில், அல்லது ஒரு அரசாங்கத்தின் ஆட்சியை நல்ல ஆட்சியாக ஒருவர் கருதுவதாக இருந்தால் மட்டுமே 'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகத்தினை மேற்கொள்ள முடியும். (அல்லது, 'நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகிற...' என்பது போன்ற மொழிக் கையாள்கையே நியாயமானதாக இருக்கும். ஆங்கிலத்தில் இத்தகைய 'புறவயப்பட்ட பிரயோகத்திற்கான' தேவை ஏற்படும் போது, ‘so called’ என்ற பிரயோகம் கையாளப்படுவது கவனிக்கப்படவேண்டியது.)

உண்மையில், இப்போது இலங்கையில் 'நல்லாட்சி' நடக்கவில்லை என்பதும், யுத்தத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர் நலன்களில் உண்மையான கரிசனம் கொண்ட அரசாங்கமாக மைத்திரியின் அரசாங்கம் இல்லை என்பதும் எனது தனிப்பட்ட அவதானிப்பாகும். மைத்திரி அரசாங்கத்தை அர்த்தப்படுத்தும் வகையில், 'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகத்தினை யாராவது தொடர்ந்தும் இனிக் கையாண்டால், அவர் மைத்திரி அரசாங்கத்தை நல்லாட்சி செய்யும் நல்ல அரசாங்கமாக நம்பியிருக்கிறார் என்றோ, மைத்திரி அரசின் சார்பாளர் என்றோ புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது.

'இறுதிப் போருக்குப்' பின்னர், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களை 'சிறைப்படுத்தி' வைத்திருந்த இடங்களை, 'புனர்வாழ்வு முகாம்' என்று சிறீலங்கா அரசு பொதுவெளியில் அடையாளப்படுத்தியிருந்ததும், அதையே பல்வேறு ஊடகங்கள் பிரயோகித்து வந்ததும் இவ்விடத்தில் பதிவுசெய்யக் கூடியது. சிறீலங்கா இராணுவத்தினரால் மோசமாக நிர்வகிக்கப்பட்டு, திறந்த வெளிச் சிறைச்சாலைகளாகக் காணப்பட்ட தமிழ் அகதிகள் முகாம்களை, 'நலன்புரி நிலையம்' என்ற பெயரில் சிறீலங்கா அரசு அடையாளப்படுத்தியிருந்தது
குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சூழலில் பல சொற்பதங்கள், பொருத்தமற்ற பிரயோகங்களால் கருத்துத் திரிபை அல்லது அர்த்தத் திரிபை அடைந்திருக்கின்றன.

கலைஞர் என்ற சொல்லானது பொதுவாகக் கலைத்துறை சார்ந்தவர்களுக்கானது. அது, தனக்கெனப் பிரத்தியேகமான அர்த்த பரிமாணத்தையும் நீண்டகால இருப்பையும் கொண்டது. கலைஞர் என்ற பொதுச் சொல்லானது, கருணாநிதியின் தனியுடமையாகக் கட்டமைவது தான் கேள்விக்குரியது. கருணாநிதி என்னும் பெயரை மறைத்து, 'கலைஞர்' என்ற சொல்லை மட்டும் பெயருக்குப் பதிலாகப் பிரயோகிப்பது நியாயமாகுமா? அவரை விடவும் காத்திரமாகக் கலைப்பணியாற்றிய பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பெயர் குறிப்பிட்டு அழைக்காமல், 'கலைஞர்' என்று பொதுவாக அழைத்தால் எப்படியிருக்கும்?

அம்மா, பெரியார், மகாத்மா, கற்பு, கற்பழிப்பு, மாவீரர், வீரச்சாவு, வீரவணக்கம், நாட்டுப்பற்றாளர், மாமனிதர், உணர்வாளர், தோழர், விமர்சனம், துரோகம், துரோகி, போராளி, கூத்தாடி, இனவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம்... இப்படியான பல சொற்களின் பயன்பாடுகளும் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட வேண்டும். வெறுமனே சம்பிரதாயபூர்வமாகவோ 'பாசாங்குத்தனமாகவோ' பல சொற்கள் பிரயோகிக்கப்படுவதும் இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டியது. (உ+ம் - உண்மை, அன்பு, நன்றி, நீதி, ஜனநாயகம்...)

ஒரு காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 'செல்வாக்கினால்' சில சொற்களின், சொற்றொடர்களின் 'நடைமுறை அர்த்தம்' திரிபடைந்திருக்கிறது. இன்றுவரை அத்தகைய 'திரிபார்ந்த' சொற்களின், சொற்றொடர்களின் பிரயோகம் நடைமுறையில் உள்ளது. சில புதிய சொற்களினதும் சொற்றொடர்களினதும் பிரயோகம் நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடப்பட வேண்டியது.

நீண்டகாலமாக நிலவிவந்த சில சொற்களின் 'கசடுத்தனங்கள்' கண்டறியப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மாற்றுச் சொற்களின் பயன்பாடு தொடரப்படுவது அவதானிப்பிற்குரியது, வரவேற்புக்குரியது. (உ+ம் - கற்பழிப்பு > பாலியல் வல்லுறவு...)

பொதுப் புழக்கத்தில் நிலைபெற்றுவிட்ட சொற்களை அல்லது சொற்றொடர்களை, திட்டவட்டமான காரணங்களுக்காக வரையறைப்படுத்தியோ 'புனிதப்படுத்தியோ' அல்லது 'இழிவுபடுத்தியோ' பயன்படுத்தும் போது, காலப்போக்கில் பல குழப்பங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஒரு மொழியின் 'திரிபை', மொழிசார் சமூக வாழ்வியலின் சரிவை இத்தகைய போக்குகள் குறிகாட்டுவன. இடையில் நேர்கிற 'திரிபார்ந்த' பிரயோகத்தின் தாக்கத்தினால், சில சொற்களையோ சொற்றொடர்களையோ அவற்றின் காலாதிகால உணர்த்து பொருளின் அடிப்படையில் தொடர்ந்தும் பிரயோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

பொது வழக்கில் இருக்கும் பல நல்ல தமிழ்ச் சொற்கள் முறையற்ற பிரயோகங்களால் 'திரிபு' அடைவது, தமிழுக்கும் தமிழ்ச் சூழலுக்கும் ஆரோக்கியமானதல்ல. சொற்களின் பொருளறிந்து, அவற்றை நிதானமாகவும் செம்மையாகவும் விழிப்புணர்வோடும் பிரயோகிக்க வேண்டும்.

ஒரு மொழியின் 'போதாமை' உணரப்படுகிற போது, புதிய சொற்களும் புதிய சொற்றொடர்களும் உருவாக்கப்படலாம். அது அவசியமானது, வளர்ச்சிக்குரியது. ஒருவர் எதையும் சொல்ல முற்படும் போது, கருத்தியல் மற்றும் உணர்வு வெளிப்பாட்டிற்கு உரிய முறையிலும் மரபார்ந்த வளத்தின் செழுமை குன்றாமலும் மொழியைக் கையாள வேண்டியது அவசியமாகும். வளர்ச்சியடைந்த மொழியானது, அடிப்படையில் பெருமளவுக்கு விஞ்ஞான பூர்வமானதாகவே இருக்கும். மரபிலே குமைந்த 'கசடுத்தனங்கள்', மயக்கங்கள் நீங்கிச் செழுமையடைவதாகவும் ஒரு மொழி இருக்க வேண்டும்.


அமரதாஸ்
2018-03-28