Sunday, November 19, 2017

வா காதலே...




'யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே...
நாம் சென்று வாழ்வோமா
வா காதலே...'
என்று தொடங்கும் பாடலின் பல்லவி, காதலியைக் காதலாகவே உருவகிக்கும் காதலனுடைய அழைப்பின் குழைவினால் ஈர்ப்புக்குரியதாக மாறிவிடுகிறது. அந்தக் காதலின் அழைப்பிற்கு, ஆரம்பத்தில் இழையும் கம்பீரமான வீணையிசை வழி சமைத்துக் கொடுக்கிறது.

இமானின் இசையில், குமரேஸ் கமலக்கண்ணன் மற்றும் நளினி கிருஷ்ணன் ஆகியோர் இனிமையாக, லாவகமாகப் பாடியிருக்கிறார்கள். மதன் கார்க்கியின் செயற்கையான சில வரிகளுக்கு இடையிலும் இயல்பான, இனிமையான வரிகள் காதலின் இசையில் குழைகின்றன.
சரணங்கள் இரண்டும் ஒரேமாதிரியான மெட்டில் இல்லாமல் வேறு வேறாக அமைக்கப்பட்டிருப்பது இந்தப் பாடலில் இருக்கிற சிறப்புக்களில் ஒன்றாகும். முதலாவது சரணம், பல்லவியின் சாயலிலேயே உள்ளது. மகிழ்ச்சிகரமான இசையுடன், ஒருவித துள்ளலுடன், 'குலேபாவா...' என்று தொடங்கித் திரும்பத்திரும்ப வரும் அனுபல்லவி அமைந்திருக்கிறது. அது, 'அஸ்கு லஸ்க ஐமோ ஐமோ...' என்ற பாடலை நினைவுபடுத்துகிறது. இதுபோலக் கலவையான தினுசில் வேறு சில பாடல்களும் உள்ளன. பொதுவாக, திரையிசைப் பாடல்களின் சரணங்கள் பலவாக இருந்தாலும் அவற்றின் மெட்டுக்கள் ஒன்றாகவே இருக்கும்.

மஞ்சிமா மோகன், காதல் உணர்வை அநாயாசமாக முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அளவிற்கு உதயநிதி யின் உணர்வு வெளிப்பாடு இல்லை. பல இடங்களில், கண்ணாடி அவரைக் காப்பாற்றி விடுகிறது போல...

பாடலை, ஓரளவுக்கு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிற இயக்குநர் கௌரவ் நாராயணன், மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சார்ட் எம். நாதன், படத்தொகுப்பாளர் பிரவீன் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். பாடலுக்கான படப்பிடிப்பிற்காக, 'ஓமான்' சென்று சிரமப்பட்டது பற்றி இயக்குநர் சொல்லியிருந்தார். அந்தச் சிரமங்கள் இல்லாமல் இந்தியாவிலேயே படப்பிடிப்பைச் செய்திருக்க முடியுமே...

ஒரு 'வீடியோ இசை அல்பமாக' தனியாகப் பார்க்கும்போது, இந்தப் பாடல் ரசனைக்குரியதாக இருக்கிறது. அண்மைக்காலத்தில் நான் அடிக்கடி கேட்ட பாடல்களில் ஒன்று இது.

ஒட்டுமொத்தமாக ஒப்பிட்டுப் பார்த்து, இசையாலேயே இந்தப் பாடல் அதிகம் வசீகரிப்பதாக உணர்கிறேன்.

https://youtu.be/KuwNfob7Q8U

2017-11-19
அமரதாஸ்