Tuesday, October 1, 2019

எப்போதும் தரையில் இருப்பவன்


ஈரோஸ் (EROS) இயக்கத்தின் தலைவராக இருந்து, பின்னர் விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் செயற்பாட்டாளராகிய க.வே.பாலகுமாரன் அவர்கள், சிங்கள அரச படையினரிடம் கைதாகியிருந்த அவலமான சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள், மிகுந்த துயரையும் பல நினைவுகளையும் கிளர்த்துகின்றன. பாலகுமாரனும், அவருடன் கைது செய்யப்பட்ட அவரது மகனும், பாலகுமாரனின் உதவியாளராக இனங்காணப்படுகிற ஒருவரும், இரண்டு இராணுவத்தினருக்கு இடையில் குந்தியிருக்கும் காட்சி, 'வரலாற்றுத் துயர்' நிறைந்தது.

பாலகுமாரன் ஈரோஸ் (EROS) இயக்கத்தின் தலைவராக இருந்த காலத்தில், எண்பதுகளின் நடுப்பகுதியில் ஏனைய இயக்கத் தலைவர்களான திரு.சிறி சபாரத்தினம் (TELO), திரு.பத்ம நாபா (EPRLF), திரு.பிரபாகரன் (LTTE) ஆகியோருடன் சேர்ந்து நிற்கும்போது எடுக்கப்பட்ட ஒரு ஒளிப்படம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் படத்தில் சமாந்தர வரிசையிலே நிற்பவர்கள், பக்கத்திலிருப்பவர்களின் கைகளைக் கோர்த்திருப்பார்கள். முகங்களில் 'ஒருவித இறுக்கம்' தெரியும். ஒருவரது முகத்தில் மட்டும் (சிறி சபாரத்தினம்) ஒருவித 'செயற்கைச் சிரிப்பு' இருக்கும். பிரபாகரனின் பக்கத்தில் நின்று அவரது கையைக் கோர்த்திருப்பார் பாலகுமாரன். 

ஒரு விசேட தேவைக்காக, பாலகுமாரனைப் பல ஒளிப்படங்களிலே பதிவுசெய்திருந்தேன். அந்த ஒளிப்படங்களைப் பார்த்து, 'இதுபோல இயல்பாகவும் அழகாகவும் உங்களை இனி யாரும் ஒளிப்படங்களிலே பதிவாக்க முடியாது' என்ற கருத்தை, பாலகுமாரனிடம் திரு. புதுவை இரத்தினதுரை வெளிப்படுத்தியிருக்கிறார். அது பற்றிப் பின்னர் என்னிடம் சொல்லியிருந்தார் பாலகுமாரன். நான் உருவாக்கிய பாலகுமாரனின் 'அழகிய' படங்களும் இன்றில்லை. அவரையும் இப்போது 'காணவில்லை'. சிறீலங்கா அரச பயங்கரவாத நடவடிக்கை ஒன்றினைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தும் விதத்தில், காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் பாலகுமாரன். 

ஈரோஸ் இயக்கத்தின் தலைவராக இருந்து, அந்த இயக்கத்தை மிகவும் 'நெருக்கடியான காலத்தில்' கலைத்துவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்துகொண்டவர் பாலகுமாரன். (பாலகுமாரனுடன் வேறு பல ஈரோஸ் இயக்க உறுப்பினர்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டனர்.) அவரைப் பொறுத்தவரையில், விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி முக்கியமானதாக இருந்தது. ஈரோஸ் இயக்கம் சார்ந்த அவரது விடுதலைப் போராட்டப் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அது பற்றிய விரிவான பதிவுகள் இன்னமும் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். 

ஈரோஸ் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அவர் இணைந்து செயற்பட முன்வந்தமையினை, ஒருவகையில் அவரது 'ராஜதந்திரச் செயற்பாடாக' அவதானிக்க முடிகிறது. அவருக்கு அப்போது, வேறு 'நியாயமான தெரிவுகள்' இருந்திருக்க வாய்ப்பில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் சிலவற்றில், அவருக்கு முழுமையான உடன்பாடு இருக்கவில்லை என்பதை அவரோடு நெருங்கிப் பழகிய சிலர் அறிவார்கள். அவரது ஆளுமைக்குப் பொருத்தமான பணி, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர், 'உள்ளே' இருந்தாலும், ஒதுங்கியே இருந்தார் என்று சொல்ல முடியும். விடுதலைப் புலிகளின் 'முக்கிய உறுப்பினர்' என்று அந்த இயக்கத்தவர்களால் பாலகுமாரன் அடையாளப்படுத்தப்பட்டார், அல்லது அழைக்கப்பட்டார். (விடுதலை அவாவி, விடுதலைப் புலிகள் இயக்கத்திலே சுயவிருப்புடன் இணைந்து கொண்ட எல்லோருமே அந்த இயக்கத்தின் 'முக்கிய உறுப்பினர்கள்' தான்.)  

'நான் எப்போதும் தரையில் இருப்பவன், என்னை யாரும் கீழே விழுத்த முடியாது' என்ற கருத்தை, நீண்டகாலத்தின் முன்னரான ஒரு உரையாடலின்போது என்னிடம் சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். என்னையும் யாரும் 'கீழே விழுத்த' முடியாது என்று அவருக்கு அப்போது சொல்லியிருந்தேன். ஆடம்பர வாழ்வையும் பதவிகளையும் விரும்பியிராதவர் அவர். 

பாலகுமாரன், 'இறுதிப் போர்க்காலத்தில்' என்னுடன் தொடர்பில் இருந்தார். அக் காலத்தில் அவருக்கும் எனக்கும் இடையிலிருந்த ஊடாட்டம், மிகவும் அந்தரங்கமானது.

அவரது 'பாதுகாப்பு' தொடர்பில், அவருக்கு அதிகம் எடுத்துரைத்திருக்கிறேன். பல்வேறு விடயங்களை அவரும் நானும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிகைகள் தொடர்பில், அவரைப் போலவே எனக்கும் கடுமையான 'ஆட்சேபனைகள்' இருந்தன. அந்தரங்கமாக அவரால் சொல்லப்பட்டவை அதிகம் உள்ளன.

போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலத்தில், சுதந்திரபுரம் என்ற இடத்தில் நான் அமைத்திருந்த கொட்டகைக்குப் பக்கத்தில், அவருக்கும் கொட்டகை அமைக்க ஏற்பாடு செய்தேன்.(அப்போது, அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள் பக்கத்தில் இருந்தார்.) என்னுடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு, 'இவன் கனக்க கதைக்கிறான், இவனைக் கவனமாப் பாத்துக்கொள்ளுங்கோ' என்று எனது உறவினர்களிடம் கூறிவிட்டுச் சென்றிருந்த ஒரு நாளில், எறிகணைத் தாக்குதலில் காயமடைந்திருந்தார் பாலகுமாரன்.

அவர் காயப்பட்டிருந்த போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து ஏற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. (அவரது கையில் சிறிய எலும்பு உடைந்திருந்தது.) அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தமையால் மயக்க மருந்தை ஏற்றுவதில் பலத்த சிரமம் ஏற்பட்டிருந்தது. மயக்க மருந்தானது, ஏற்கெனவே அதிக இரத்த அழுத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு, மேலதிக இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி உயிர்க்கொல்லியாக மாறிவிடக் கூடும். அப்போது, மயக்க மருந்து மிகவும் அரிதாகவே இருந்தது. அதைத் தனக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டாமென்றும், முதுமையடைந்திருக்கும் தன்னால் இனி யாருக்கும் பயனில்லை என்றும், தனக்காகப் பயன்படவிருந்த மயக்க மருந்தைக் காயமடைந்த சின்னப் பிள்ளைகளுக்குப் பயன்படுத்துமாறும் எனது நண்பர் ஒருவருக்கு அப்போது சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்து பாலகுமாரனுக்குச் சிகிச்சை செய்தவர்களில் ஒருவரான அந்த நண்பர், அண்மையில் இதனை என்னிடம் கூறியிருந்தார்.

சிறீலங்கா இராணுவத்தினரின் நிர்ப்பந்தங்களின் நிமித்தம் அவர்களிடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட திரு.பாலகுமாரன், திரு.புதுவை இரத்தினதுரை, திரு.யோகரட்ணம் யோகி போன்ற பலரின் நிலைமை இன்றுவரை தெரியாமலிருப்பது மிகப்பெரும் மனித அவலங்களில் ஒன்றாகும்.(விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராகவும் 'விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' யின் தலைவராகவும் திரு. மகேந்திரராசா - மாத்தையா - இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் நிகழ்ந்த 'உள் முரண்பாடுகளால்' மிகவும் பாதிக்கப்பட்டிருந்தும், அந்த இயக்கத்துடன் இணைந்திருந்து, தொடர்ந்து இயங்கியவர் யோகரட்ணம் யோகி. அவர், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி யின் செயலாளராக இருந்தவர். புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகளில்,  'பேச்சு வார்த்தை' நடவடிக்கைகள் பலவற்றில் முன்னின்று செயற்பட்டவர்.)

கைது செய்யப்பட்ட பாலகுமாரன் உள்ளிட்ட பலரையும் சிறீலங்கா அரசு உயிரோடு வைத்திருக்கிறதா அல்லது படுகொலை செய்துவிட்டதா என்பது, அவர்களைச் சார்ந்த யாருக்கும் தெரியாது.   சிறீலங்கா அரசின் போர்க்குற்றச் செயல்களும் இன அழிப்புக் குற்றச்செயல்களும் காணாமலாக்கப்பட்டவர்களால் அம்பலமாகின்றன.காணாமலாக்கப்பட்டவர்களின் நிலைமைகளை அறியும் முயற்சிகள், பல்வேறு தரப்பினராலும் தீவிரமாக்கப்பட வேண்டும்.

2017-08-09
அமரதாஸ்

Wednesday, May 29, 2019

இங்கிலாந்தில் ஒளிப்படக்காட்சிகள்


Photograph © Amarathaas - In Sri Lankan civil war. (last war)

2019 மே மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை, இங்கிலாந்து நாட்டின் SOAS பல்கலைக்கழகத்தில் WAR ON CIVILIANS என்ற மகுடத்தில் நிகழ்த்தப்பட்ட ஒளிப்படக்காட்சியில் எனது போர்க்கால ஒளிப்படங்கள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறீலங்கா இராணுவத்தினரும் பெயர் குறிப்பிட முடியாத வேறு சிலரும் பதிவுசெய்திருந்த படங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. பாரிய அனர்த்தங்களுடன் 'இறுதிப்போர்' முடிவிற்குவந்து பத்து வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், சர்வதேச சமூகங்களின் மத்தியில் போர்க்குற்றங்கள் குறித்த கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில், சுயாதீன ஊடகரான பிரான்சிஸ் ஹாரிசன் மற்றும் மனித உரிமையாளரான யாஸ்மின் சூக்கா போன்றவர்களால் ITJP அமைப்பின் சார்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிகழ்வின் பிரதான அம்சமாகவே ஒளிப்படக்காட்சி அமைந்திருந்தது. நிகழ்வில் கலந்துகொள்ள நான் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டிருந்தும், சில காரணங்களால் செல்லமுடியாமல் ஆகிவிட்டது.   

SOAS பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படங்கள், TIC அமைப்பினரால் மே மாதத்தின் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த TAMILS OF LANKA - A TIMELESS HERITAGE EXHIBITION நிகழ்விலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. TIC இயக்குநராக இருந்த  மறைந்த திரு. வரதகுமார் விரும்பியிருந்தபடி, நானும் அவரும் திட்டமிட்டிருந்தபடி, பெரிய அளவிலான எனது ஒளிப்படக்காட்சியைச் சில காரணங்களால் நிகழ்த்தமுடியவில்லை. 

ஏற்கெனவே, திரு. கிருஸ்ணராஜாவின் முயற்சியில் 'விம்பம்' அமைப்பின் நிகழ்வென்றில் 2018 ஆம் ஆண்டில் எனது ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை, பின் போர்க்கால ஒளிப்படங்களாகும். (போர் முடிந்த பின்னர், போர் நடந்த இடங்களில் எடுக்கப்பட்டவை.)   

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒளிப்படக்காட்சியில் கலந்துகொள்ளத் திட்டமிட்ட பயணத்திற்கான விசா விற்கு, தாமதமாக விண்ணப்பிக்க நேர்ந்தது. உரியகாலத்தில் விசா கிடைக்காமல் தாமதமாகவே கிடைத்தது. அது காலாவதியாவதற்குள் இங்கிலாந்துக்குப் பயணிக்க நினைத்திருக்கிறேன். இன்னொரு ஒளிப்படக்காட்சியையோ ஒளிப்படங்களின் திரையிடலையோ அங்கு நேரில் நின்று நிகழ்த்தும் விருப்பம் இருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் நண்பர்கள் உதவினால், அங்கு இன்னொரு ஆக்கபூர்வமான ஒளிப்படக்காட்சியை நிகழ்த்த முடியும். இங்கிலாந்தில் எனது ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி உதவிய அனைவருக்கும் நன்றிகள். 

அமரதாஸ் 
2019-05-29 

Wednesday, May 22, 2019

நீதிகோரலை வீரியமாகத் தொடர்தல்

Photograph © Amarathaas - In Sri Lankan civil war (last war).

இலங்கையில், மிக நீண்டகாலம் தொடர்ந்த உள்நாட்டுப் போரானது, பேரழிவுகளோடு 2009 இல் முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் முடிவிற்கு வந்தது.

இறுதி யுத்தத்தில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் பலவற்றிற்கான ஆதாரங்கள் இருந்தும், எதுவும் 'முறையாக' இன்னமும் விசாரிக்கப்படவில்லை.

இலங்கையில் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட, போரிலே பலவகைகளிலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான 'பரிகார நீதி' இதுவரை கிடைக்கவில்லை.

ஒரு கொடிய போரின் மூலம் ஆயுதப் போராட்டம் இல்லாமலாக்கப்பட்டு, பத்து வருடங்களாகி விட்டன. பத்து வருட கால ஈழத்தமிழரின் ஒட்டுமொத்த வாழ்வியலில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஆரோக்கியமான முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த வருடத்தில் (2019), அப்பாவி மக்களைக் குறிவைத்துப் பயங்கரவாதக் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த இலங்கையின் நிலைமை மேலும் சீரழிந்திருக்கிறது. இத்தகைய மோசமான நிலைமை, இலங்கையினுள்ளே தொழிற்படக்கூடிய பேரினவாத அதிகார சக்திகளுக்கும் இலங்கையை முன்வைத்துச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சர்வதேச சக்திகளுக்கும் சாதகமானதாகவே இருக்கும். மத ரீதியான மற்றும் இன ரீதியான முரண்பாடுகள் மேலும் கூர்மைப்படுத்தப்படக் கூடும். இலங்கை அரசின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள்', இலங்கையின் சிறுபான்மை இனங்களை மோசமாகப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படக் கூடும்.

எது எப்படியிருந்தாலும், விழிப்புணர்வுடனும் ஒற்றுமையுடனும் சாத்தியமான ராஜதந்திர அணுகுமுறைகளுடனும் நீதிக்கான போராட்டங்களைத் தொடரவேண்டியவர்களாக ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.

பேரினவாதம், மதவாதம், தேசிய அடிப்படைவாதம் போன்றவற்றின் நிழல்களிலே தொழிற்படக்கூடிய அடிப்படைவாத சக்திகளிடம் இருந்து விலகியிருக்கும் கண்ணியத்தை ஈழத்தமிழினம் கொண்டிருக்க வேண்டும். மட்டுமல்ல, அத்தகைய தீய சக்திகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் ஓர்மத்தையும் ஈழத்தமிழினம் கொண்டிருக்க வேண்டும்.

நிகழ்ந்திருக்கும் அநீதிகள் குறித்த உரையாடல்களை அறிவுபூர்வமாகத் தொடர்வதும், நீதிக்கான போராட்டங்களைப் பல்வேறு தளங்களில் வீரியமாக முன்னெடுப்பதும் அவசியமாகும். வேண்டிய தருணங்களில் போராடிக்கொண்டிருப்பது மட்டுமல்ல, 'வேண்டாத இடங்களில்' விலகியிருப்பதும் விடுதலை அரசியல் செல்நெறிக்கு வேண்டியதாகும்.

2019-05-06
அமரதாஸ்

Wednesday, May 8, 2019

ஓர்மத்தின் மூன்றாம் கண் - அமரதாஸ் நேர்காணல்



ஓவியம், ஒளிப்படம், சினமா போன்ற காட்சிக்கலைகளிலும் இலக்கியம் மற்றும் ஊடகத் தளங்களிலும் உங்களது ஈடுபாடுகள் பற்றிச் சொல்ல முடியுமா? 

சிறுவனாக இருந்த காலத்தில், ஓவியக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். ஓரங்க நாடகம் உள்ளிட்ட நாடக முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். பாடசாலையின் மாணவர் மன்ற நிகழ்வுகளில் ஒரு பாடகராகவும் இருந்திருக்கிறேன். ஓவியராகவும் நடிகராகவும் பாடகராகவும் தான் எனது கலைப்பயணம் ஆரம்பித்திருக்கிறது.

எனது பதின்ம வயதுக் காலத்தில், ஓவியர் மாற்கு அவர்களின் தொடர்பு கிடைத்தது. ஓவியக்கலை சார்ந்து, மிக முக்கியமான வழிகாட்டியாக அவர் இருந்திருக்கிறார். தொடர்ந்து, பல்வேறு ஓவியர்களுடனான தொடர்புகள் கிடைத்திருக்கின்றன. ஓவிய ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவே எனது ஒளிப்பட ஈடுபாடு அமைந்திருக்கிறது. பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் நிறைந்திருந்த போர்க்காலத்தில், ஒளிப்படக் கலைசார் செயற்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறேன். போர்க்காலத்திலேயே, 350 பக்கங்கள் வரை கொண்ட ஒரு ஒளிப்பட நூலை வெளியிட்டேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிழல் அரசு இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில், போர்மேகங்கள் சூழ்ந்திருந்த கிளிநொச்சியில், 2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அது நடந்தது. 'வாழும் கணங்கள்- அமரதாஸ் ஒளிப்படங்கள் : Living Moments - Photographs of Amarathaas' என்ற பெயரில், தமிழிலும் ஆங்கிலத்திலும் அந்த ஒளிப்பட நூல் அமைந்திருந்தது. அந்த நூல் வெளியீட்டைத் தொடர்ந்து, 'வாழும் கணங்கள்' (Living Moments) என்ற பெயரில், கிளிநொச்சியில் எனது ஒளிப்படக் காட்சி நிகழ்த்தப்பட்டது.



போர்க்காலத்தில், வன்னிப்பகுதியில் வாழ்ந்த காலத்தில், கலைகள் சார்ந்தும் ஊடகவியல் சார்ந்தும் இயங்கிக்கொண்டிருந்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புகளிலும் சினமா சார்ந்த முயற்சிகளிலும் விவரணப்பட முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்.பல்வேறு கவிதைகளை, சிறுகதைகளை, கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அச்சுத் தாள்கள் மற்றும் அச்சு வசதிகள் அரிதாக இருந்த அக் காலத்தில், 'இயல்பினை அவாவுதல்' என்ற பெயரில், எனது கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறேன்.




காட்சிக் கலைகள் சார்ந்து அதிகமதிகம் இயங்கி வந்திருக்கிறேன். போர்க்கால வாழ்வியல் அனுபவங்கள், முறைசாராக் கல்வி முயற்சிகள், காலத்தின் தேவைகள் போன்ற காரணிகள், என்னைக் கலைஞராக மட்டுமல்லாமல் சுயாதீன ஊடகராகவும் பரிமாணம்கொள்ளச் செய்தன என்று நினைக்கிறேன்.    

யுத்தச் சூழ்நிலைகளாலும் அலைச்சல் மிகுந்த வாழ்வின் நெருக்கடிகளாலும் ஓவியக்கலையில் திருப்திகரமாக ஈடுபட முடியாமற் போயிருந்தாலும், தேவைகள் நிமித்தம் ஓவிய முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டிருக்கிறேன். இலக்கியம் உள்ளிட்ட கலை சார் முயற்சிகளில், இயன்றவரை ஈடுபட்டு  வந்திருக்கிறேன். ஒளிப்பட ஊடகவியல் சார்ந்து, இறுதிப் போர்க்காலத்தில் தீவிரமாக இயங்க நேர்ந்திருக்கிறது. அந்தத் தீவிரத்தை, இப்போது நினைத்துப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கிறது. எனது சக்திக்கு மீறிய அளவில் அது நிகழ்ந்திருப்பதாக உணர்கிறேன்.


     
ஊடகவியல் மற்றும் கலைகள் சார்ந்த உங்களது தேடல்கள், பணிகள், அனுபவங்கள் 
போன்றவை போர்க்காலத்தில் எப்படியிருந்தன?

ஊடகவியல் சார்ந்து, சுயமாகவும் பல்வேறு வழிமுறைகளிலும்  கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. யாழ் பல்கலைக்கழக வளாகத்தில், 'யாழ் பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகு' இயங்கிய காலத்தில், ஊடகவியல் சார்ந்த கற்கைநெறியில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். அதைத் தொடர்ந்து, அங்கு 'உளவளத்துணை' மற்றும் 'ஒளிப்படக்கலை' சார்ந்த கற்கைநெறிகளிலும் ஈடுபட முடிந்திருக்கிறது. நீண்ட காலமாக, 'சாளரம்' என்னும் சஞ்சிகை சார்ந்து இயங்கியிருக்கிறேன். சில ஊடகங்களில், சுயாதீன அடிப்படைகளில் எனது பங்களிப்புகள் தொடர்ந்திருக்கின்றன. பல்வேறு அச்சு ஊடகங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றிலே பெரும்பாலானவை இலக்கிய வகைமைக்குள் வரக் கூடியவை. சஞ்சிகைகள் மற்றும் புத்தகங்கள் பலவற்றில் எனது ஒளிப்படங்கள் பலவும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்திற்கு முன்னரான 'சமாதான காலத்தில்', யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நிலையம் இயங்கிய போது, அங்கு சினமா ரசனை சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடாத்தியிருக்கிறேன். 

விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தின் முயற்சியில், 'மானுடத்தின் தமிழ்க் கூடல்' என்ற மகுடத்தின் கீழ், ஒரு மாநாடு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. அங்கு இடம்பெற்ற ஊடகவியல் அமர்வில், காட்சி ஊடகங்கள் குறித்துக் கட்டுரை வாசித்திருக்கிறேன். அதில், தென்னிலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்டிருந்த சிங்களக் கலைஞர்களும் சிங்கள ஊடகர்களும் கலந்துகொண்டனர். பின்னர், தென்னிலங்கைச் சிங்கள ஊடகர்களின் முயற்சியில், 'சிங்கள- தமிழ்க் கலைக்கூடல்' என்ற மகுடத்தின் கீழ் கொழும்பில் நடாத்தப்பட்ட மாநாட்டிலும் சினமா அமர்வில் கட்டுரை வாசித்தேன். கிளிநொச்சியில் 'ஊடக அறிவியற் கல்லூரி' இயங்கியபோது, அக் கல்லூரி சார்ந்த சில முன்னெடுப்புகளில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். சினமா சார்ந்தும் ஒளிப்படக்கலை மற்றும் ஒளிப்பட ஊடகவியல் சார்ந்தும் வன்னியிலே பயிற்சிப்பட்டறைகளை நடாத்தியிருக்கிறேன். ஊடகவியலையும் ஏனைய கலைசார் விடயங்களையும்  நடைமுறை அனுபவங்களின் வழியாகவோ சுயாதீனமாகவோ தான் அதிகமதிகம் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.

இறுதி யுத்தகாலத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கிலான ஒளிப்படங்களை எடுத்திருக்கிறேன். அந்தக் கொடிய காலத்தின் பல்வேறு மோசமான  அனுபவங்களும் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த அப்பாவி மக்களின் அவலங்களைப் பதிவுசெய்து வெளிக்கொண்டுவரவேண்டியிருந்த தேவைகளும், சுயாதீன ஊடகராக என்னை ஓர்மத்துடன் இயங்கச் செய்தன என்று நினைக்கிறேன்.


போர்க்காலத்தில், சுயாதீன ஊடகராகச் செயற்பட்டிருக்கிறீர்கள். பல ஒளிப்படங்களை எடுத்தது மட்டுமல்லாமல், பல்வேறு தளங்களில் அவற்றை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அவை சார்ந்த அனுபவங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

சிறீலங்கா அரசு, தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டிருந்த அராஜகங்களை, படுகொலைகளை ஒளிப்படங்களாக்கிய அனுபவங்களை, வார்த்தைகளால் சுருக்கமாக வெளிப்படுத்துவது மிகவும் சிரமமாகும். வாழ்விடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட மக்களின் துயர் மிகுந்த வாழ்வியலை, போர்க்குற்றங்களின் விளைவுகளை, 'கண்ணியம்' (dignity) சிதைக்கப்பட்ட நிலையில் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் அவலங்களை, ஒளிப்படங்களிலே தொடர்ச்சியாகப் பதிவுசெய்திருக்கிறேன். 

'சர்வதேசப் பொது நிறுவனங்கள்' வெளியேற்றப்பட்டிருந்த போர்க்காலத்தில், வெளியிலிருந்து வன்னிக்குள் எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படாதிருந்த நிலையில், விடுதலைப் புலிகள் சார்ந்த சில ஊடகங்கள் மட்டுமே வன்னிக்குள் இயங்கிக்கொண்டிருந்தன. நெருக்கடிகள் பலவும் நிறைந்திருந்த அந்த இறுதி யுத்த காலத்தில், எனது ஒளிப்பட ஊடகவியல் சார் நடவடிக்கைகள் அனைத்துமே சுயாதீனமானவையாக இருந்தன. அக் காலத்தில், எந்த  நிறுவனத்திடமிருந்தும் யாரிடமிருந்தும் சம்பளம் பெறும் ஊழியராக நான் இருக்கவில்லை. எந்தத் தரப்பாலும் யாராலும் நிறுத்தப்பட முடியாதிருந்த கோர யுத்தத்தின் அவலங்களைப் பதிவுசெய்து, வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற ஓர்மத்துடன் சுயாதீனமாகவும் தீவிரமாகவும் செயற்பட்டேன். யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த போதே, பெருந்தொகையான ஒளிப்படங்களை 'வெளியில்' அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒளிப்படங்களைத் தெரிவுசெய்து 'வெளியில்' அனுப்பும் பணியில் எனக்கு உதவிய ஒரு மூத்த ஊடகர், என்னைப்போல் யுத்தத்திலிருந்து தப்பிப்பிழைத்து இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். மிக நெருக்கடியான தருணங்களில், எனது ஊடகச் செயற்பாடுகள்  சிலவற்றுக்கு உதவிய நண்பர்கள் சிலரை யுத்தம் விட்டுவைக்கவில்லை.    


போர்க்காலத்தின் எல்லாத் துயரங்களையும் என் மக்களோடு சேர்ந்திருந்து அனுபவித்துக்கொண்டே, இடம்பெயர்ந்து அலைந்துகொண்டிருந்தேன். எனது தனிப்பட்ட இழப்புகள் ஏராளமானவை. எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரை இழந்திருக்கிறேன். முக்கிய ஆவணங்கள், படைப்புகள், பல்லாயிரக் கணக்கிலான புத்தகங்கள், திரைப்படங்கள், நீண்டகாலமாக நான் எடுத்திருந்த ஒளிப்படங்களின்  மூலப்பிரதிகள் உட்பட, எனது 'சொத்துகள்' பலவற்றையும் இழந்திருக்கிறேன். 



யுத்தகாலத்தில் பல்வேறு வகையான இழப்புகளையும் துயரங்களையும் சந்திக்காத மனிதர்களே இருந்திருக்க முடியாது. யுத்தத்தில் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மனிதர்கள் சார்ந்த அனைத்து ஜீவராசிகளும் இயற்கையும் நிலமும் சூழலும் யுத்தத்திலே பெரும் பாதிப்புகளுக்குள்ளாகும். அத்தகைய பாதிப்புகளை அருகிலேயே இருந்து பார்க்க நேர்ந்திருக்கிறது. நிர்க்கதியாக அலைக்கழிந்து, அவலங்களையெல்லாம் பதிவுசெய்ய நேர்ந்த அனுபவத்துயர்கள், என் ஆயுள் முழுமைக்கும் நீடிக்கக்கூடியவை.





போருக்குப் பின்னரான உங்களது பணிகள் பற்றிக் குறிப்பிட முடியுமா? 

ஒளிப்படக் காட்சி நிகழ்வுகள் பலவற்றிலும் ஊடகங்கள் பலவற்றிலும்  எனது போர்க்கால ஒளிப்படங்களை வெளிப்படுத்தியிருக்கிறேன். பல்வேறு நாடுகளில் ஒளிப்படக் காட்சி நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபடுகிறேன். இந்தியாவில் கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் சுவிற்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலும் எனது ஒளிப்படங்கள் 
காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்ன. நெருக்கடிகள் தொடரும் வாழ்க்கைச் சூழலில் எழுத்து முயற்சிகள் குறைந்து போய்விட்டன. எனினும், எனது வலைத்தளத்திலும் முகநூலிலும் அவ்வப்போது எழுதி வருகிறேன். 2019 ஆம் ஆண்டின் மே மாதத்தில், இங்கிலாந்து நாட்டில் இரண்டு இடங்களில் எனது ஒளிப்படக் காட்சி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. வேறு சில நாடுகளில் ஒளிப்படக் காட்சிகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. எனது போர்க்கால ஒளிப்படங்களையும் அனுபவங்களையும் அடிப்படைகளாகக் கொண்டு, போருக்குப் பின்னரான எனது பணிகளின் காட்சிப் பதிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரு விவரணத் திரைப்படத்தினை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.   

சர்வதேச மட்டங்களில் இயங்குகின்ற ஊடகர்கள், மனித உரிமையாளர்கள் போன்றவர்களுடன் இணைந்து சில வேலைத்திட்டங்களில் ஈடுபடுகிறேன். 
ஐ நா அரங்கில் (பக்க அமர்வில்), எனது ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி உரையாற்றியிருக்கிறேன். ஐ நா நடவடிக்கைகளின் மீது ஓரளவு செல்வாக்குச்  செலுத்தக் கூடியவர்களைச் சந்தித்து உரையாடி, எனது ஒளிப்படங்கள் பலவற்றை வழங்கியிருக்கிறேன். போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நடவடிக்கைகள் போன்றவற்றை வெளிக்கொணரும் வகையில் செயற்படுகிறேன். 

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பாரபட்சமற்ற சாட்சியாக இருக்க விழைகிறேன். இலங்கையில் போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கும் மிக நீண்ட கால வரலாறு இருக்கிறது. அவை, இறுதி யுத்தகாலத்தில் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

எனது முக்கியமான பதிவுகள் பலவற்றை யுத்த காலத்திலேயே இழக்க நேர்ந்திருந்தாலும், பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து பல பதிவுகளைப் பாதுகாக்க முடிந்திருக்கிறது. அவற்றைத் தொடர்ச்சியாக வெளிக்கொண்டுவந்திருக்கிறேன். ஒளிப்பட ஊடகவியல் சார்ந்த எனது பயணத்தில், பேரனுபவங்களையும் பெருந்துயரங்களையும் கண்டடைய நேர்ந்திருக்கிறது. அவற்றையெல்லாம் இயன்றவரை பதிவுசெய்ய வேண்டும். முக்கியமாக, எனது ஒளிப்படங்களைத் தெரிவுசெய்து, நூல்களாக்கி வெளியிட வேண்டும். இன்னமும் வெளிவராத ஒளிப்படங்கள் பல என்னிடம் இருக்கின்றன.






போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சார்ந்த உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில், போர்க்குற்றங்கள் ஏராளமாக நடந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, சிங்கள அரச தரப்பினரால், ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவை, விரிவாக ஆராயப்பட வேண்டியவை. அவை பற்றிப் பல்வேறு தளங்களில், அவ்வப்போது எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். 

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் சரியான முறையில் விசாரிக்கப்பட வேண்டியவை.

இனவெறியின் அடிப்படையில் திட்டமிட்ட முறையில், மேற்கொள்ளப்படுகின்ற கூட்டுப் படுகொலைகள் மாத்திரமல்ல, ஒரு இனத்தின் கண்ணியம் (dignity) சிதைக்கப்படுகிற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டமிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இனப்படுகொலை என்னும் பொறிமுறைக்குள் வரக்கூடியவை. இனப்படுகொலை (genocide) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்திய 'ரபேல் லெம்ப்கின்' என்பவரின் பதிவுகள், நுட்பமாகக் கவனிக்கப்படவேண்டியவை. வெறும் கொலைச்சம்பவங்களை அல்லது போர்க்குற்றங்களை மட்டும் முன்வைத்து, அவற்றை இனப்படுகொலை என்று வரையறுக்க முடியாது. 

இப்போது இருக்கும் சர்வதேச சமூகங்களின் நம்பிக்கைகள் அல்லது சட்ட  நியமங்களின்படி, இன அழிப்பு அல்லது  இனப்படுகொலை (genocide) என்னும் பொறிமுறையின் உள்நோக்கம் (motivation) கண்டறியப்பட்டு நிரூபிக்கப்படவேண்டியது மிக மிக அவசியமாகும். அதைச் சாத்தியப்படுத்துவது சாதாரணமான விடயமல்ல. மிகவும் தெளிவான ஆதாரங்களுடன் கூட்டுப் பலத்துடன் எதிர்கொள்ளவேண்டிய பெரும் சவால் அது.

இலங்கையில், துல்லியமான ஆதாரங்களைக் கொண்டிருக்கிற போர்க்குற்றங்களே இன்னமும் சரியாக விசாரிக்கப்படாதிருக்கும் நிலையில், இனப்படுகொலை சார்ந்த விசாரணைகளை சாத்தியப்படுத்திவிடுவது எளிதாக இருக்காது.     

கண்ணியமான வாழ்வியல் சிதைக்கப்பட்டு, கொடிய யுத்தத்தில் எல்லா வகையிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட  ஈழத்தமிழினத்திற்கு, நியாயமான நிரந்தரத் தீர்வு அவசியமாகும். 

ஈழத்தமிழினத்திற்கான நிரந்தரத் தீர்வை நோக்கிய போராட்ட வழிமுறைகளுக்கான வலிமையான கருவிகளாக இருக்கக் கூடியவை, போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் சார்ந்த ஆதாரங்களே. அத்தகைய வலிமையான கருவிகளின் பலத்துடன், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் போன்றோர் 
செயற்பட வேண்டும். அரசியல் தீர்வு சார்ந்த விவகாரங்களில், 
சட்ட ரீதியிலும் புலமைத்துவ ரீதியிலும் ராஜதந்திர ரீதியிலும் ஈழத்தமிழினம் வழங்கவேண்டிய 'கூட்டு உழைப்பு' அதிகமானதாகும்.

இலங்கையில் ஆயுதப் போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகளாகிவிட்டன. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இலங்கை அரச தரப்பினரால் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்ந்து, ஆக்கபூர்வமான  விசாரணைகளோ கண்ணியமான பொறுப்புக்கூறல்களோ மேற்கொள்ளப்படவில்லை.  அரச பயங்கரவாதக் குற்றங்களும் அதிகார துஸ்பிரயோகங்களும் நிகழக் காரணமாக இருக்கும் 'பயங்கரவாதத் தடைச் சட்டம்' நீக்கப்படவில்லை. ஆம், இலங்கையில் ஒரு சட்டமே இனரீதியிலான ஒடுக்குமுறைகளை நிகழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சில திருத்தங்களுடன் அது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கிறது. இலங்கையில், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இன்னமும் மேற்கொள்ளப்
படுவதாக நம்பப்படுகிறது.  

ஒரு போராட்டக் களமாக, ராஜதந்திரக் களமாக ஐ நா பயன்படுத்தப்படலாமே ஒழிய, கொடிய போரிலும் இனப்படுகொலையிலும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான கண்ணியமான நீதியை, ஐ நா வழியாக எதிர்பார்க்க முடியாது. பல்வேறு திசைகளில் தமிழர் தரப்பினரது முயற்சிகள் தொடரப்பட வேண்டும். இலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டத்திலும் சர்வதேச நாடுகளின் அரசியல் நீரோட்டங்களிலும் பெருஞ்சலனங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில், நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்' நோக்கிய  ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளில் ஈடுபடுகிறவர்கள் முன், பாரிய கடமைகள் காத்திருக்கின்றன. அவற்றை நிறைவேற்றும் பக்குவமும் ஓர்மமும் அத்தகையவர்களுக்கு வாய்க்க வேண்டும். 'அவர் வருவார், இவர் வருவார்' என்று காத்திருக்காமல், ஈழத்தமிழர்கள் எல்லோரும் அவரவருக்கான 'பொறுப்பை' உணர்ந்து, 
விழிப்புணர்வுடன் செயற்பட முன்வரவேண்டும்.

போர் என்பதே மனித குலத்துக்கு எதிரான பாரிய குற்றம் என்பதே போர் பற்றிய எனது பார்வையாகும். 'போர்' ஒன்று நிகழ்த்தப்படுகிறபோது, முன் நிபந்தனை இன்றியே 'போர்க்குற்றங்கள்' நிகழ்ந்துவிடக் கூடியவை. வலிந்து திணிக்கப்படுகிற போரை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும் போராட்டமும் போரும் ஒன்றல்ல என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், ஒரு போராட்டத்தில் போருக்குரிய நாசகாரப் பண்புகள் தலையெடுக்கக் கூடும். ஆக, போராட்டத்திலும் போர்க்குற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. போரை எதிர்ப்பது போராட்டத்தை எதிர்ப்பதாகாது. ஒரு போராட்டத்தில் தலையெடுக்கக்கூடிய போருக்குரிய நாசகாரப் பண்புகளை எதிர்ப்பதுவும் போராட்டத்தை எதிர்ப்பதாகாது. இது நீளமாக விவாதிக்கப்படவேண்டிய விடயமாகும்.



சுயாதீன ஊடகராக, கலைஞராக உங்கள் ஒளிப்படங்களுடன் 
தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள். 
இலகுவானதாகவோ திருப்திகரமானதாகவோ இந்தப் பயணம்  அமைந்திருக்கிறதா?  

போர்க்கால ஒளிப்படங்களுடன் பயணித்துக்கொண்டிருப்பது, எந்த வகையிலும் இலகுவானதாக இருப்பதில்லை. இதனால், எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்மைகளோ மகிழ்ச்சியோ ஏற்படுவதில்லை. மாறாக, மன உளைச்சல்களும் பலவாறான நெருக்கடிகளும் வந்து வாய்த்துவிடுகின்றன. சிலதை இழந்து தான், சிலதை 'அடைய' வேண்டியிருக்கிறது.

அவலங்களைப் படங்களாகப் பதிவுசெய்த நினைவுகள், மீள மீள மேற்கிளம்பிப் பாரிய மன உளைச்சல்களை ஏற்படுத்தக் கூடியவை. துயர் செறிந்த அனுபவங்களையும் காட்சிப்பதிவுகளையும் காவிக்கொண்டு தொடர்ந்தும் பயணிக்கவேண்டியிருப்பது, சமகாலத்தின் தவிர்க்க முடியாத தேவையாக நினைக்கிறேன். நான் பதிவாக்கிய அவலங்களை, வெவ்வேறு தேவைகள் சார்ந்து நானே திரும்பத்திரும்பக் கையாள நேர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் செயல் முறையானது, 
உள நெருக்கீட்டில் என்னை மீள மீளத் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறது. எது எப்படியிருந்தாலும், இயன்றவரை என்னை ஒழுங்குபடுத்திக்கொண்டு பயணிக்கிறேன்.புலம்பெயர்ந்து வாழும் எனக்குப் பல்வேறு தேவைகள், தனிப்பட்ட விருப்பங்கள் போன்வை இல்லாமலில்லை. அவற்றை, என்னால் திருப்திகரமாக நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை.  


ஆரம்பத்தில், சில காரணங்களுக்காக எனது பெயர் குறிப்பிடாமலேயே எனது போர்க்கால ஒளிப்படங்களை வெளியிட்டு வந்தேன். பின்னர், சில புனைபெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். பல நெருக்கடிகளைத் தொடர்ந்து, நான் புலம்பெயர நேர்ந்தது. பின்னர், சர்வதேச அரசியல் சார் மட்டங்களில், ஐ நா போன்ற தளங்களில், மனித உரிமைகள் சார்ந்த முன்னெடுப்புகளில், போர்க்குற்றங்கள் மற்றும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நடவடிக்கைகளை ஆதாரபூர்வமாக எடுத்துரைக்க வேண்டியிருக்கும் சந்தர்ப்பங்களில் எனது பெயரை முன்வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 



இப்போது, ஒளிப்படக் காட்சி நிகழ்வுகள் மற்றும்  ஊடகங்கள் வாயிலாக, எனது ஒளிப்படங்களை எனது பெயருடன் வெளியிட்டு வருகிறேன். இடையிலே சிலர், பொதுவெளியில் 'அநாமதேயமாக' உலவிய எனது ஒளிப்படங்களைத் திருடி எடுத்துத்  தங்களுடையதாக உரிமைகோரியிருக்கிறார்கள் என்பது வேறு கதை. மோசமான உள் நோக்கங்களுடன் நாசகார நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவர்கள், எங்கும் இருப்பார்கள். என் பெயரோடு நான் வெளியிடும் அத்தனை படங்களும் என்னுடையவை என்பதைத் துல்லியமாக உறுதிப்படுத்தக் கூடிய எல்லா வகையான ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. அதனால், என்னசெய்யவேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அதை உறுதியோடு செய்துகொண்டிருக்கிறேன். 


ஒளிப்பட ஊடகவியல் சார் நோக்கில், எனது போர்க்கால ஒளிப்படங்கள் பலவும் குற்றங்களை ஆதாரபூர்வமாக இனங்காட்டக் கூடியவை. ஆக, குற்றங்களுக்குக் காரணமாக இருந்தவர்கள், குற்றங்களை நிகழ்த்தியவர்கள், குற்றங்களுக்குத் துணைபோனவர்கள் என்று எனக்கு எதிராக ஒரு நீண்ட வரிசை உருவாக வாய்ப்பிருக்கிறது. அநீதி இழைக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட தரப்பினைச் சார்ந்தவனாக இருந்துகொண்டு நீதிக்காகக் குரல் கொடுக்கிறேன். மோசமான அதிகார மையங்களுக்கும், அமைப்பு ரீதியான மக்கள் விரோத வன்முறை நடவடிக்கைகளுக்கும் எதிரானவனாக இருக்க விழைகிறேன். இதனால், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பலவாறான நெருக்கடிகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

போர்க்கால ஒளிப்படங்களுடனான எனது பயணத்தை, ஈழத்தமிழினத்தின் நலன் சார்ந்த பொதுப் பணியாகவே கருதுகிறேன். இதுவும் ஒருவகையான 'போராட்டம்' தான். என்னளவில் பெருமைக்குரியதான, அர்ப்பணிப்புகள் நிறைந்த ஒரு வாழ்க்கை முறையினைத் தொடர்ந்து வந்திருக்கிறேன். வியர்வையும் குருதியும் கண்ணீரும் சிந்திய என் கடந்த காலப் பயணத்தைப் பற்றி விரிவாகப் பேசவேண்டிய அவசியம் இப்போது இல்லையென்று கருதுகிறேன். சுயசிந்தனையுடன் கூடிய சுயாதீன நிலைப்பாடுகளுடன் என் பயணத்தைத் தொடர்கிறேன். விடுதலை அரசியலில் நான் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன். தேவைகள் பொறுத்து, ஈழத்தமிழர் நலன்களில் அக்கறை கொண்ட  நண்பர்களின் ஒத்துழைப்பைப் பெற முடிந்திருக்கிறது. யாருடைய நிழல்களிலும் நான் ஒதுங்கிக்கொள்வதில்லை. எத்தகைய நீரோட்டங்களிலும் கரைந்துபோய்விடுவதில்லை. ஒரு ஊடகராகவும் இருக்கும் என்னால், மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியிலும் கூட, ஊடகரீதியான தேவைகளின் அடிப்படையிலே ஊடாட்டம் கொள்ள முடியும்.

சுயாதீன ஊடகராக நான் பயணிக்க நேர்ந்த இறுதி யுத்த காலத்தில், அதிர்ச்சிகரமான, கசப்பான பல அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன. துயரங்களோடு காமெராக்களையும் காவிக்கொண்டு ஒரு பெரும் சாகசப் பயணத்தை மேற்கொண்டிருந்தேன் என்பது அதீதமான கூற்றல்ல. யுத்த காலத்தில், என்ன செய்கிறேன் என்பதையும் என்ன செய்யவேண்டுமென்பதையும் நன்கு உணர்ந்திருந்தேன். எப்போதும் எனக்குத் 'தாழ்வுச்சிக்கல்' இருந்ததில்லை. என்னை நானே 'மதிப்பீடு' செய்துகொள்ளத் தயங்குவதில்லை. சாகசங்களால், பேரனுபவங்களால்துயரங்களால் எனது வாழ்வின் பெரும்பகுதி நிறைந்திருக்கிறது.




நெருக்கடிகளும் ஆபத்துகளும் நிறைந்த யுத்த சூழ்நிலைகளில், ஆவணத்தன்மைகள் கொண்ட தரமான ஒளிப்படங்களை எப்படி உங்களால் எடுக்க முடிந்தது?



போர்க்காலத்தில், எப்போதும் என் கையிலோ அருகிலோ கமெராவை வைத்திருப்பேன். எனது மூன்றாவது கண், எனது கமெராவாகும். மிக மோசமான போர்ச் சூழலில், தொழில் நுட்ப வசதிகள் குறைவாயிருந்த காமெராக்களையும் கமெரா உபகரணங்களையும் கொண்டு, விரைவாகவும் தரமாகவும் ஒளிப்படங்களைப் பதிவுசெய்யக் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. என்னுடைய சில கமெரா உபகரணங்கள் எறிகணைத் தாக்குதல்களில் சேதமடைந்திருக்கின்றன.   


பிலிம் காமெராக்களோடு  எனக்கிருந்த பரிச்சயம், எத்தகைய கமெராக்களிலும் ஒளிப்படங்களை எடுக்கக்கூடிய வல்லமையினை எனக்கு வழங்கியிருந்தது என்று கருதுகிறேன். பல்வேறு ஒளி நிலைகளிலும் சவால்கள் நிறைந்த சூழ்நிலைகளிலும் காமெராக்களை வேகமாகச் செயற்படுத்தும்போது வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்க, அனுபவபூர்வமாக நான் அறிந்திருந்த தந்திரங்களை மேற்கொள்வேன்.

ஒளிப்படக் கலை சார்ந்த எனது சுய தேடல்கள் மற்றும்  ஊடகவியல் சார் அனுபவங்கள் போன்ற காரணிகள், யுத்தகால ஒளிப்படங்களை நேர்த்தியாகப் பதிவுசெய்ய எனக்கு உதவியிருக்கின்றன என்று நினைக்கிறேன்.



ஒளிப்பட ஊடகவியல் சார் பயிற்சிப் பட்டறைகளில் நான் அடிக்கடி வலியுறுத்துகின்ற இரண்டு விடயங்கள், ஒளிப்பட ஊடகவியலைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. ஒன்று, செய்தி மதிப்பு (News value). இன்னொன்று, தொழில்நுட்பத் தரம் (Technical quality). மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய இவற்றினுள்ளே, ஒளிப்படக் கலையின் அடிப்படையானதும் முக்கியமானதுமான அம்சங்கள் பலவற்றையும் அடங்கிவிட முடியும். இவை, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. எனினும், தேவை கருதிப் பகுப்பாய்வு செய்து பார்க்கப்படக் கூடியவை. 



டிஜிரல் கமெராக்களின் வருகைக்குப் பின்னர், தமிழ்ச் சூழலில் பலரும் டிஜிரல் குப்பைகளையே  உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள். காட்சிகளைத் துஸ்பிரயோகம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒளிப்படங்களைப் பொறுத்த வரையில் கணங்கள், காலங்கள் மிக முக்கியமானவை. கணங்கள் மாறிக்கொண்டேயிருக்க, காட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு நல்ல ஒளிப்படமானது, உரிய கணத்தில் சரியான முறையில் பதிவுசெய்யப்பட வேண்டியது. ஒரு சிறந்த கணத்தை அடைய, நீண்ட நேரக் காத்திருப்போ அதிவேக இயக்கமோ  அவசியப்படக் கூடும். கடந்த காலம் திரும்ப வராது. ஒரு படத்தைத் தவறாக எடுத்துவிட்டதாக உணர்ந்தால், திரும்பவும் அதே படத்தை அதே கணத்தில் எடுத்துவிடவே முடியாது. கமெராவில், அடுத்தடுத்தோ அழித்தழித்தோ  பதிவுசெய்யும் வசதிகள் இருந்தாலும், கடந்த காலத்தை மீளப் பதிவுசெய்யவே முடியாது. 


தர நிர்ணயங்களுக்கு அப்பால், அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சாதாரணப் பதிவு கூட, ஆவண முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடும். (சாதாரண கைத்தொலைபேசிக் காமெராக்களினால் பதிவுசெய்யப்பட்ட படங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.) நிலையற்ற காலம் பற்றிய பிரக்ஞையுடனும் ஒளிப்பட ஊடகவியல் சார் நோக்கு நிலையுடனும் ஒவ்வொரு படங்களையும் பொறுப்புணர்வுடன் எடுக்க முயற்சிக்க வேண்டும். ஒரு கணத்தில் எடுக்கப்பட்ட படமானது, நிலையற்ற காலத்தைப் பதிவு செய்திருப்பதாகும். இறுதி யுத்தம் தீவிரமடைவதற்கு முன்னர், கிளிநொச்சியில் வெளியிட்ட எனது  ஒளிப்பட நூலுக்கு, 'வாழும் கணங்கள்' என்று பெயர் வைத்திருந்தேன். அப்போது நிகழ்த்தப்பட்ட  எனது ஒளிப்படக் காட்சியின் பெயரும் அதுதான்.




சமகால ஈழத்தமிழ் தேசியம் சார் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன?


ஈழத்தமிழ் தேசியம் சார் முன்னெடுப்புகள் ஈழத்திலும் புலம்பெயர் தமிழ்ச் சூழல்களிலும் தமிழகத்திலும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. (தமிழக தமிழ் தேசியம் வேறு வகையானது. அதுவும் ஆரோக்கியமான நிலையில் இல்லை.) வெறுப்பரசியல் சார் வெளிப்பாடுகளும் அடிப்படைவாத நிலைப்பாடுகளும் தமிழ் தேசியவாத நடத்தைகளின் பகுதிகளாகப் பெரும்பாலோரால் புரிந்துகொள்ளப்படுகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் செல்நெறியில் கண்மூடித்தனமான நம்பிக்கைகளும் துதிபாடல்களும் அடிப்படைவாதப் பண்புகளும் வழக்கமாகியிருக்கின்றன. ஈழத்தமிழரின் 'பலம்', சர்வதேச அளவில் சிதறுண்ட நிலையிலேயே இன்னமும் காணப்படுகிறது. 

உலகெங்கும் பரந்து வாழும் தமிழினத்தின் பலத்தைக் கூட்டி வளர்த்தெடுக்கும் நோக்கில், தேவைகள் மற்றும் உண்மைகள் சார்ந்த  உரையாடல்களை முன்னெடுக்கும் வகையில் தமிழ் தேசிய நடவடிக்கைகள் அமைந்திருக்க வேண்டும். தமிழ் தேசியத்தில் சனநாயக உள்ளடக்கம் அவசியமானது. 

தமிழ் தேசியம் எனப்படுவது, தமிழினத்தின் பாதுகாப்புக் கவசமாகும். கண்ணியமும் பாதுகாப்பும் கொண்ட கூட்டுப்பலம் மிக்க வாழ்விற்கான உத்தரவாதத்தை, அதன் தளத்திலிருந்தே கோர முடியும். விடுதலை அரசியல் சார் முன்னெடுப்புகளை  ஒருங்கிணைக்கவும் வழிப்படுத்தவும் உதவும் தத்துவார்த்த இயக்கமாக, தமிழ் தேசியம் அமைந்திருக்க வேண்டும். தமிழ் தேசியமானது, ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மற்றும்  அரசியல் கட்சிகள் போன்றவற்றின் ஏகபோக உரிமையாகவோ பிழைப்புவாதக் கோசமாகவோ 'பார்க்கப்படுவது' ஆபத்தானது.

தேசியவாதம் எனப்படுவது, ஒரு இனத்தின் அடிப்படையான உரிமைகள் மற்றும் தேவைகள் சார்ந்து கட்டமைவதோடு, சனநாயகப் பண்புகளின் அடிப்படைகளில் இருந்து முன் நகர்வதாக இருக்க வேண்டும். அத்தகைய முன் நகர்வே, முற்போக்குத் தேசியமாக இருக்க முடியும்.       

சமகாலத் தமிழ் ஊடகச் செயற்பாடுகள் எப்படியிருக்கின்றன?

அச்சு ஊடகங்களின் வீச்செல்லையைத் தாண்டி, இலத்திரனியல் ஊடகங்களின் வீச்செல்லை விரிவடைந்திருக்கிறது. ஆனால், தமிழ்ச் சூழலில் ஊடகங்கள் பலவற்றினதும் இயங்குநிலை, பெருமளவிற்கு ஆரோக்கியமானதாக இல்லை. ஊடகவியலைக் கொச்சைப்படுத்துகிறவையாகவும் அடிப்படைவாதப் பண்புகள் நிறைந்தவையாகவும் உண்மைகளைத் துஸ்பிரயோகம் செய்கிறவையாகவும் பல இணைய தளங்கள் காட்சியளிக்கின்றன. ஊடகவியலானது, சனநாயகத்தின் நான்காவது தூண் என்று நம்பப்படுவது நடைமுறை உண்மையாக வேண்டும். ஒரு நாட்டையோ இனத்தையோ வழிப்படுத்தக்கூடிய சனநாயகத்தின் ஏனைய மூன்று தூண்களையும், நெறிப்படுத்தக்கூடிய வல்லமையும் பொறுப்புணர்வும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.

துல்லியமானதும் பாரபட்சமற்றதுமான தகவல்களை வழங்குவது, சமூக அறிவு மட்டத்தை விருத்தி செய்யும் வகையிலான கற்பித்தல் செயற்பாடுகளைத் தொடர்வது, சமூக ஆரோக்கியத்துடன் கூடிய மகிழ்ச்சிப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்ற மிக அடிப்படையான, முக்கியமான நோக்கங்கள் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.

போர்கள், விடுதலைப் போராட்டங்கள், விடுதலை இயக்கங்கள், விடுதலையின் பெயராலான தியாக மரணங்கள் போன்றவை சார்ந்த, துல்லியமானதும் பாரபட்சமற்றதுமான பதிவுகளே, ஈழத்தமிழினத்திற்கு எப்போதும் பயன்படக்கூடியவை. உண்மைகள் சார்ந்த உரையாடல்கள், ஆரோக்கியமான முன் நகர்விற்கு அவசியமானவை. உண்மைகள் கசப்பானவையாக அல்லது விரும்பத்தகாதவையாக இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய படிப்பினைகள் அவசியமானவை. தொழில் நுட்ப அறிவியல் நன்மைகளை உள்வாங்கி வளர்ச்சிப் பாதையிலே பயணிக்கக்கூடிய ஊடக உலகம், மிகவும் அடிப்படைத் தேவையாக இருக்கக் கூடிய ஊடக அறநெறிகளையும் கூடவே எடுத்துசெல்ல வேண்டும். புலனாய்வு ஊடகவியல், தமிழ்ச் சூழலில் ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுக்கப்பட  வேண்டும்.    

சமூக உறவுநிலைகளிலும் ஊடக உலகிலும் சமூக வலைத்தளங்கள் சாதகமான தாக்கங்களை, மாற்றங்களை  ஏற்படுத்தியிருக்கின்றன. குறுங்குழுவாதம், இன அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம், வெறுப்பரசியல், போலிச் செய்திகள், வதந்திகள் போன்றவற்றைத் தமிழ்ச் சுழலில் விதைப்பதற்கான களங்களாகவும் சமூக வலைத்தளங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.  

பெரும்பாலும், சமூக வலைத்தளங்கள் வழியாகவே 'போலிச் செய்திகள்' பரப்பப்படுகின்றன. அவை பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். ஊடக அறங்கள், சமூக வலைத்தளங்களுக்கும் உரியவை தான். ஊடகத்துறைகளில் ஏற்படக்கூடிய புதிய மாற்றங்களை, வளர்ச்சிகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே நேரம், 'ஊடக அறங்கள்' குறித்த உறுதிப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டியுமிருக்கிறது. நிகழ்காலத்தில் கண்மூடித்தனமாகப் பகிரப்படுகிற ஒரு போலிச் செய்தி, எக்காலத்திலும் பல்வேறு 'குழப்பங்களை' நிகழ்த்திவிடக் கூடும். எது எப்படியிருந்தாலும், ஊடகங்களை எதிர்கொள்வதற்கான 'பக்குவம்' எல்லோருக்கும் வாய்க்க வேண்டும். 

போலிச் செய்திகளின் பெருக்கத்திற்கான முக்கிய  உந்துசக்திகளில் ஒன்றாக தேசிய அடிப்படைவாதம் அமைந்திருக்கிறது. மத அடிப்படைவாதம், இன அடிப்படைவாதம் போன்றவற்றின் பெயராலும் போலிச் செய்திகள் பரவுவதை அவதானிக்க முடியும். போலிச் செய்திகள் என்னும் பரப்பிற்குள் 'வதந்திகள்' உள்ளடங்கக் கூடியவை. உண்மைத் தன்மையை அறிய முற்படாமல், தேசிய அடிப்படைவாதம் சார்ந்த போலிச் செய்திகளைப் பரப்புகிற செயலைத் தேசியக் கடமையாகப் பலர் நினைக்கிறார்கள். இதற்குள் தொழிற்படுகிற உளவியல் விரிவாக ஆராயப்படவேண்டியது. எல்லோருக்கும் எல்லாமும் தெரியட்டும் என்ற ஒருவகை சனநாயக உணர்வும் போலிச் செய்திகளின் பரவலாக்கத்துக்குக் காரணமாகிறது.

வெளிப்படையாக இயங்கும் ஊடக நிறுவனங்களின் செய்திகளைச் சரிபார்க்க வேண்டும் என்ற நல்லெண்ணம் மக்கள் மத்தியில் இருந்தாலும் கூட, தனிப்பட்ட வலைப்பின்னல்களில் போலிச் செய்திகள் பரவலாக்கப்பட்டு விடுகின்றன. முகநூல், ருவிட்டர், வட்சப், வைபர் போன்ற சமூக வலைத்தளங்கள் இத்தகைய விபரீதமான பரவலாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தியா, கென்யா, நைஜீரியா போன்ற நாடுகளில், போலிச் செய்திகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஊடகவியலில் ஆர்வமுள்ளவர்கள், அத்தகைய ஆய்வுகளைத் தேடிப்படித்துப் பல்வேறு விடயங்களையும் அறிந்துகொள்ள முன்வர வேண்டும்.

கனடா வில் இருந்து வெளியாகும் 'தாய்வீடு' பத்திரிகையின் வடிவமைப்பாளராகவும்  ஆலோசகராகவும் இருந்த, மறைந்த ஓவியர் கருணா அவர்களால், 2019 பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்.


நன்றி - 'தாய்வீடு', மே 2019  

  
பல்துறைக் கலைஞர் கருணா வின்சென்ற் அவர்கள், 2019 பெப்ரவரி மாதத்தில் என்னுடன் உரையாடி இந்த நேர்காணலைப் பதிவுசெய்திருந்தார். 'தாய்வீடு' பத்திரிகையின் மே மாத சிறப்பிதழில், எனது இறுதிப் போர்க்கால ஒளிப்படங்களுடன் இந்த நேர்காணல் பிரசுரமாகவேண்டும் என்று விரும்பியிருந்தார். இது பிரசுரமாவதற்கு முன்னர், அவரை இழக்க நேர்ந்துவிட்டது. தமிழ்ச் சூழலில் அது ஒரு பேரிழப்பு. இனிய நண்பர் கருணாவை எப்போதும் நன்றியுடன் நினைவுகூர்வேன். அவரது மறைவின் பின்னர், அவரது விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்த நண்பர்களுக்கு நன்றி. இந்த நேர்காணலில் உள்ளடக்கப்படாத பல கேள்விகளும் முழுமையாகப் பதிவுசெய்யப்படாத பதில்களும் வேறாக உள்ளன. அவை, பெரும்பாலும் ஒளிப்படங்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் பற்றியவை.

-அமரதாஸ்










Monday, April 1, 2019

நண்பர் தி.தவபாலன் குறித்து...


ஊடகத் துறையில் அதிகமதிகம் இயங்கி, ஊடகராக அறியப்பட்ட  திரு.தவபாலன் எனது நெருங்கிய நண்பர். சிறந்த ஒளிப்படக்கலைஞர். காட்சிக் கலைகளில் அதிக ஈடுபாடுகள் கொண்டவர். வன்னிப்பகுதியில் சினமா, ஒளிப்படம் தொடர்பிலான எனது  பல்வேறு முயற்சிகளுக்கு ஊக்கசக்தியாக இருந்தவர்.

ஒளிப்படங்களுக்கான இணையத்தளம் ஒன்றை உருவாக்க விரும்பினோம். அதை உருவாக்கி, அவரும் நானும் இணைந்து செயற்படுவது பற்றிப் பலமுறை உரையாடியிருக்கிறோம். போர்க்காலத்துக்கேயான பல சிரமங்களுக்கு மத்தியிலும், 'ஈழ விசன்' என்ற பெயரிலே ஒளிப்படங்களுக்கான இணையத்தளம் தொடங்கப்பட்டு, ‘இறுதி யுத்த காலத்துக்கு’ முன்னர் காத்திரமாக இயக்கப்பட்டது. அதில், அவருடன் சேர்ந்து இயங்கியிருக்கிறேன். அதில், பிலிம் கமெராக்களால் உருவாக்கப்பட்ட எனது ஒளிப்படங்கள் பலவும் வெளியாகின. பிற்காலத்தில், அது முடக்கப்பட்டுவிட்டது. 

நண்பர் பாலகணேசனுடன் இணைந்து, எனது  விரிவான நேர்காணலைப் பதிவு செய்திருக்கிறார். அது, இறுதி யுத்தகாலத்துக்கு முன்னர், 'எரிமலை' என்னும் இதழில் வெளியாகியிருந்தது. தவபாலன், தனது விமர்சனங்களையும் கருத்துக்களையும் தயக்கமில்லாமல் நண்பர்கள் மத்தியில் முன்வைக்கக் கூடியவர். அறிவியல் சார் விடயங்களில் அதீத தேடல் கொண்டவர். எதையும் அறிவியல் ரீதியில் அணுகும் இயல்பைக் கொண்டிருந்தாலும், எளிதில் உணர்ச்சிவசப்படக்  கூடியவராகவும் இருந்தார்.


அரசியல் மற்றும் கலை இலக்கிய ரீதியிலான  சில கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும், மிக நீண்டகாலமாக நட்பில் தொடர்ந்தவர். 'முள்ளிவாய்க்கால்' வரை தொடர்பில் இருந்தவர். 'புலிகளின் குரல்' வானொலியின் செயற்பாடுகளோடு முடங்கிக்கிடக்கவேண்டியிருப்பதால், தன்னால் ஒளிப்படங்களை எடுக்கமுடியாதிருப்பதாகவும் என்னை ஒளிப்படங்களை எடுத்துத்தருமாறும் சொல்லிக்கொண்டிருந்தார். எனது, இறுதிப் போர்க்கால ஒளிப்படங்கள் பலவற்றை உடனுக்குடன்  வெளியுலகுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். போர் சார்ந்த 'அவலங்களை' கமெராவில் பதிவு செய்வதில், தனிப்பட்ட  முறையில் அவருக்கு அதிகம் உடன்பாடு இருந்ததில்லை. இருந்தாலும், போர்க்காலத்தில்  அவசியமாயிருந்த  அத்தகைய எனது பதிவுகள் பலவற்றையும் 'தேவை' கருதிப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். இறுதிப் போர்க்காலத்தில், இணைய வசதிகளைப் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்த மிகச் சிலரில் தவபாலனும்  ஒருவர்.



எதையும் அறிவியல் ரீதியில் ஆராயும் ‘பக்குவம்’ கொண்டிருந்தாலும், 'சில விடயங்களில்' உணர்ச்சிவசப்பட்ட நிலையில் முடிவெடுத்துவிடுவார். இதுபற்றிப் பலமுறை அவருக்கே சொல்லியிருக்கிறேன். இறுதி யுத்தகாலத்தில், விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ‘பொதுவெளியில்’ நியாயப்படுத்துபவராக, பிரச்சாரப்படுத்துபவராக  இருந்தார். தனிப்பட்ட முறையில் அதுபற்றிய விவாதங்கள் நமக்குள் நடந்திருக்கின்றன.   

இறுதி யுத்த காலத்தில், தவபாலன் போன்ற நண்பர்கள் பலரை இழக்க நேர்ந்துவிட்டது. அவர்களையெல்லாம் நினைக்கும் போது, துயரம் மேலிடுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை. 'நினைவுகளை' இலகுவில் கடந்து போய்விட முடியாது.



அவரும் நானும் இணைந்து  இயங்கிய கணங்களும் சேர்ந்து திரிந்த நாட்களும் பெறுமதியானவை, நினைவில் நிலைத்திருப்பவை. ஒரு காலத்தில் அடிக்கடி என்னை சந்திக்கிறவராக இருந்தார். வீட்டுக்கு வந்து அதிகநேரம் உரையாடும் சில நண்பர்களில் அவர் முக்கியமானவர். அவரது ஊடகப் பங்களிப்புகள் விமர்சனபூர்வமாக, உரிய முறையில் பதிவுசெய்யப்பட வேண்டும். வாழும் காலம் முழுதும் மறக்க முடியாத நண்பர்களில் ஒருவர் தவபாலன்.

அமரதாஸ்  2016-05-05

Friday, March 15, 2019

தமிழ்ச் சமூகத்தில், ஒரு பேரிழப்பு...


தமிழ்ச் சமூகத்தில், ஒரு பேரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து, 'தமிழ் தகவல் நடுவம்' (Tamil Information Centre - TIC) என்ற அமைப்பின் சார்பில் செயற்பட்டு வந்த வரதகுமார் அவர்கள், நேற்று (2019-03-13) மறைந்துவிட்ட செய்தியை, இன்று அதிகாலையில் அறிய நேர்ந்தது. பெருந்துயர்... கலை, இலக்கியம், அரசியல், ஊடகம் போன்ற செயற்பாட்டுத் தளங்களில், பல்வேறு நிலைகளில் அரிதாகக் கிடைத்த உறவுகளை இழக்க நேர்வது பெரும் துயரம்...

நீண்டகாலமாக, ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த அக்கறைகளோடு செயற்பட்டு வந்த வரதகுமார் அவர்களுடன் அவ்வப்போது பேசி வந்திருக்கிறேன். இன்னமும் விரிவாகப் பேசுவதற்கான தேவைகள் அதிகம் இருந்தன. அவருடன் இணைந்து, தமிழ்ச் சமூக நலன்சார்ந்த சில பணிகளில் ஈடுபடவேண்டியிருந்தது.

பல்வேறு திட்டங்களை முன்வைத்து, தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். அதிக வேலைகள் இருக்கும் போது, தனது செயலகத்திலேயே அவர் தங்கிவிடுவாரென்று, அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடன் உரையாடும்போது சொல்லியிருந்தார்.

தனது, அடுத்த கட்ட வேலைத்திட்ட வரைபை அண்மையில் எனக்கு அனுப்பியிருந்தார். முதுமைக் காலத்திலும் அயராத அவரது பணிகளை அறிந்து ஆச்சரியப்பட்டேன். என்னை அவர் இங்கிலாந்து நாட்டிற்கு வருமாறு அழைத்திருந்தார். இங்கிலாந்து நாட்டில், எனது போர்க்கால ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அண்மைக்காலத்தில், அவருடன் பேச நினைத்துக்கொண்டிருந்தேன். பல்வேறு காரணங்களால், பேசமுடியாமலே போய்விட்டது.

அவரது செயற்பாடுகள், தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து கவனிக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டியவை. மிக நீண்ட காலமாக, தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். வெறுமனே அவரைப் புகழ்ந்து பேசிவிட்டுக் கடந்துசென்றுவிடாமல், அவரை அறிந்தவர்களும் அவரது நண்பர்களும் அவரது நற்காரியங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதுவே அவருக்கான மதிப்பார்ந்த அஞ்சலியாக அமையும்.

வரதகுமார் அவர்கள், என்னைப் பற்றி அறிந்த காலத்தில், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதையும், அதற்கான எனது பதில் மின்னஞ்சலையும் இன்று தேடி எடுத்துப் பார்த்தேன். அவற்றை, அவரது நினைவுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன். அவரை அறிந்திராதவர்கள், அவற்றிலிருந்து அவரைக் கொஞ்சமாவது அறிந்துகொள்ள முடியும்.

// அன்புள்ள அமரதாஸ் அறிவது,
நேற்று உங்களுடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ் தேசியம் பற்றிய உணர்வும், உங்கள் உறுதிப்பாடு மற்றும் ஆர்வமும் மிகவும் பாராட்டத்தக்கது.
முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை அமைத்து, நீங்கள் செய்துவரும் பணி ஒரு முக்கியமானது.
2019 மே மாதம், 10 வது ஆண்டு நிறைவையொட்டி முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் வகையில், மே 18இல் இருந்து 24ஆம் திகதிவரை இலங்கைத் தமிழர் அடையாளம், அவர்கள் வரலாறு, மேலும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார போராட்டங்கள், இழப்புகள் போன்றவற்றினை வெளிக்கொணர்வும் வகையில் ஒரு பரந்த கண்காட்சியை லண்டன் தலைநகரில் மக்களை முன்வைத்து, சர்வதேச மனித உரிமைகள் சமுதாயத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். .
இதில் முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பிலான புகைப்பட கண்காட்சி ஒரு முக்கிய கூறாக அமையும்.
இதை அமைப்பதில், எமது நேரகாலங்களைச் செலுத்தாமல் தற்போது உங்களால் மிகத்திறமையான வழியில், சரியான பொருளடக்கத்துடன் அமைந்துள்ள புகைப்படக் கண்காட்சியை பயன்படுத்துவது மிகவும் பொருத்தம் என்பது எமது விருப்பமும் நோக்கமும் ஆகும். இது பற்றிய உங்கள் முடிவை விரைவில் அறிய ஆவலாக உள்ளோம்.
இத்துடன், எங்கள் திட்டத்தின் தகவல்களை இணைத்துள்ளேன். இவற்றினை, தயவுசெய்து இப்போதைக்கு உங்கள் பார்வைக்கு மட்டும் பயன்படுத்தவும். இது பற்றிய உங்கள் கருத்தினை அறியத்தரவும்.
மேலும், எங்களால் பிரசுரிக்கப்பட்ட இனப்படுகொலை அறிக்கையை மற்றுமொரு மின்னஞ்சல் ஊடாக உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்
நன்றி
இப்படிக்கு
வரதகுமார் //

// அன்புள்ள வரதகுமார் அவர்களுக்கு,
மிக்க நன்றி. உங்களுடன் உரையாடியது மகிழ்ச்சிக்குரியது.
நல்ல நோக்கமும் புரிந்துணர்வும் கொண்டவர்களின் ஆதரவுடன் கலை, இலக்கிய, ஊடகவியல் நடவடிக்கைகளை ஈழத்தமிழர் நலன்கள் சார்ந்து இயன்றவரை சுயாதீனமாக மேற்கொண்டு வருகிறேன். உங்கள் தொடர்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. உங்களின் ஆதரவுடன் லண்டனில் ஒளிப்படக் காட்சியினை சிறப்பாக நடத்தமுடியும் என்று நம்புகிறேன். வேண்டிய ஒளிப்படங்கள் தாராளமாக இருக்கின்றன. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை, அவல நிலையை ஒளிப்படங்கள் வாயிலாக சர்வதேச சமூகங்களின் கவனத்திற்கு உணர்வுபூர்வத் தாக்கத்துடன் கொண்டுசெல்ல முடியும். லண்டனில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு ஒளிப்படக் காட்சியினை முன்னெடுப்பது தொடர்பாக, நாம் தொடர்ந்து பேசுவோம். லண்டனிலும் வேறு சில இடங்களிலும் தொடர்ந்து ஒளிப்படக் காட்சிகளை நடத்துவதற்கு வேறு சில நண்பர்கள் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆதரவுடன் வேறு திகதிகளில் வேறு ஒளிப்படக் காட்சிகளை நடத்தலாம் என்று நினைக்கிறேன். என்னைத் தேடிக் கண்டுபிடித்து, தொடர்புகொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
அமரதாஸ் //

2019-03-14
அமரதாஸ்