Friday, March 15, 2019

தமிழ்ச் சமூகத்தில், ஒரு பேரிழப்பு...


தமிழ்ச் சமூகத்தில், ஒரு பேரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து, 'தமிழ் தகவல் நடுவம்' (Tamil Information Centre - TIC) என்ற அமைப்பின் சார்பில் செயற்பட்டு வந்த வரதகுமார் அவர்கள், நேற்று (2019-03-13) மறைந்துவிட்ட செய்தியை, இன்று அதிகாலையில் அறிய நேர்ந்தது. பெருந்துயர்... கலை, இலக்கியம், அரசியல், ஊடகம் போன்ற செயற்பாட்டுத் தளங்களில், பல்வேறு நிலைகளில் அரிதாகக் கிடைத்த உறவுகளை இழக்க நேர்வது பெரும் துயரம்...

நீண்டகாலமாக, ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த அக்கறைகளோடு செயற்பட்டு வந்த வரதகுமார் அவர்களுடன் அவ்வப்போது பேசி வந்திருக்கிறேன். இன்னமும் விரிவாகப் பேசுவதற்கான தேவைகள் அதிகம் இருந்தன. அவருடன் இணைந்து, தமிழ்ச் சமூக நலன்சார்ந்த சில பணிகளில் ஈடுபடவேண்டியிருந்தது.

பல்வேறு திட்டங்களை முன்வைத்து, தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். அதிக வேலைகள் இருக்கும் போது, தனது செயலகத்திலேயே அவர் தங்கிவிடுவாரென்று, அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடன் உரையாடும்போது சொல்லியிருந்தார்.

தனது, அடுத்த கட்ட வேலைத்திட்ட வரைபை அண்மையில் எனக்கு அனுப்பியிருந்தார். முதுமைக் காலத்திலும் அயராத அவரது பணிகளை அறிந்து ஆச்சரியப்பட்டேன். என்னை அவர் இங்கிலாந்து நாட்டிற்கு வருமாறு அழைத்திருந்தார். இங்கிலாந்து நாட்டில், எனது போர்க்கால ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அண்மைக்காலத்தில், அவருடன் பேச நினைத்துக்கொண்டிருந்தேன். பல்வேறு காரணங்களால், பேசமுடியாமலே போய்விட்டது.

அவரது செயற்பாடுகள், தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து கவனிக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டியவை. மிக நீண்ட காலமாக, தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். வெறுமனே அவரைப் புகழ்ந்து பேசிவிட்டுக் கடந்துசென்றுவிடாமல், அவரை அறிந்தவர்களும் அவரது நண்பர்களும் அவரது நற்காரியங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதுவே அவருக்கான மதிப்பார்ந்த அஞ்சலியாக அமையும்.

வரதகுமார் அவர்கள், என்னைப் பற்றி அறிந்த காலத்தில், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதையும், அதற்கான எனது பதில் மின்னஞ்சலையும் இன்று தேடி எடுத்துப் பார்த்தேன். அவற்றை, அவரது நினைவுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன். அவரை அறிந்திராதவர்கள், அவற்றிலிருந்து அவரைக் கொஞ்சமாவது அறிந்துகொள்ள முடியும்.

// அன்புள்ள அமரதாஸ் அறிவது,
நேற்று உங்களுடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ் தேசியம் பற்றிய உணர்வும், உங்கள் உறுதிப்பாடு மற்றும் ஆர்வமும் மிகவும் பாராட்டத்தக்கது.
முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை அமைத்து, நீங்கள் செய்துவரும் பணி ஒரு முக்கியமானது.
2019 மே மாதம், 10 வது ஆண்டு நிறைவையொட்டி முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் வகையில், மே 18இல் இருந்து 24ஆம் திகதிவரை இலங்கைத் தமிழர் அடையாளம், அவர்கள் வரலாறு, மேலும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார போராட்டங்கள், இழப்புகள் போன்றவற்றினை வெளிக்கொணர்வும் வகையில் ஒரு பரந்த கண்காட்சியை லண்டன் தலைநகரில் மக்களை முன்வைத்து, சர்வதேச மனித உரிமைகள் சமுதாயத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். .
இதில் முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பிலான புகைப்பட கண்காட்சி ஒரு முக்கிய கூறாக அமையும்.
இதை அமைப்பதில், எமது நேரகாலங்களைச் செலுத்தாமல் தற்போது உங்களால் மிகத்திறமையான வழியில், சரியான பொருளடக்கத்துடன் அமைந்துள்ள புகைப்படக் கண்காட்சியை பயன்படுத்துவது மிகவும் பொருத்தம் என்பது எமது விருப்பமும் நோக்கமும் ஆகும். இது பற்றிய உங்கள் முடிவை விரைவில் அறிய ஆவலாக உள்ளோம்.
இத்துடன், எங்கள் திட்டத்தின் தகவல்களை இணைத்துள்ளேன். இவற்றினை, தயவுசெய்து இப்போதைக்கு உங்கள் பார்வைக்கு மட்டும் பயன்படுத்தவும். இது பற்றிய உங்கள் கருத்தினை அறியத்தரவும்.
மேலும், எங்களால் பிரசுரிக்கப்பட்ட இனப்படுகொலை அறிக்கையை மற்றுமொரு மின்னஞ்சல் ஊடாக உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்
நன்றி
இப்படிக்கு
வரதகுமார் //

// அன்புள்ள வரதகுமார் அவர்களுக்கு,
மிக்க நன்றி. உங்களுடன் உரையாடியது மகிழ்ச்சிக்குரியது.
நல்ல நோக்கமும் புரிந்துணர்வும் கொண்டவர்களின் ஆதரவுடன் கலை, இலக்கிய, ஊடகவியல் நடவடிக்கைகளை ஈழத்தமிழர் நலன்கள் சார்ந்து இயன்றவரை சுயாதீனமாக மேற்கொண்டு வருகிறேன். உங்கள் தொடர்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. உங்களின் ஆதரவுடன் லண்டனில் ஒளிப்படக் காட்சியினை சிறப்பாக நடத்தமுடியும் என்று நம்புகிறேன். வேண்டிய ஒளிப்படங்கள் தாராளமாக இருக்கின்றன. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை, அவல நிலையை ஒளிப்படங்கள் வாயிலாக சர்வதேச சமூகங்களின் கவனத்திற்கு உணர்வுபூர்வத் தாக்கத்துடன் கொண்டுசெல்ல முடியும். லண்டனில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு ஒளிப்படக் காட்சியினை முன்னெடுப்பது தொடர்பாக, நாம் தொடர்ந்து பேசுவோம். லண்டனிலும் வேறு சில இடங்களிலும் தொடர்ந்து ஒளிப்படக் காட்சிகளை நடத்துவதற்கு வேறு சில நண்பர்கள் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆதரவுடன் வேறு திகதிகளில் வேறு ஒளிப்படக் காட்சிகளை நடத்தலாம் என்று நினைக்கிறேன். என்னைத் தேடிக் கண்டுபிடித்து, தொடர்புகொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
அமரதாஸ் //

2019-03-14
அமரதாஸ்

No comments:

Post a Comment