Thursday, July 27, 2017

பார்வை நாடகம் அல்லது 'ஜூலி ஐ லவ் யூ'



''விழிகள் மேடையாம்...'' என்று தொடங்கும் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசையில் இடம்பெறுவது. இதை அவ்வப்போது கேட்க நேரும் சமயங்களில் அதுபற்றி ஏதாவது எழுதவேண்டும் என்று நினைப்பதுண்டு. (பிடித்த பல பாடல்களைக் கேட்கும் போதும் அப்படித் தோன்றும். பிறகு வேறு சோலிகளாலும் 'சோம்பேறித்தனத்தாலும்' ஆர்வம் நீர்த்துவிடும்.)


கவிஞர் மகுடேசுவரன் எழுதிய பதிவொன்றை இப்போது படித்தபோது உடனடியாகவே எழுதும் உந்துதல் ஏற்பட்டது.


'பசி' என்னும் திரைப்படத்தை இயக்கிய துரை, 'கிளிஞ்சல்கள்' என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். அப் படத்தில், ''விழிகள் மேடையாம்..'' என்ற இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது, இயல்பாகவே இந்தப் பாடல் மனதில் தங்கிவிட்டிருந்தது. பிறகு, பாடலை எழுதி இசையமைத்தவர் டி.ராஜேந்தர் என்று அறிய முடிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. திரைத்துறையில் நுழைந்த புதிதில் இதுபோலக் கவனம் பெறத்தக்க வேறு சில பாடல்களையும் உருவாக்கியிருக்கிறார் ராஜேந்தர். 


''விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்...'' என்ற பல்லவியின் தொடக்கமே காதலர்கள் இருவரின் காதலைக் காட்சிப் படிமமாக உருப்பிக்கும் அழகியல் தன்மை கொண்டது. (இந்தப் பாடல், 'கிளிஞ்சல்கள்' திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் ரசனைக்குரியதல்ல. இந்தப் பாடலிலும் 'கிளிஞ்சல்கள்' திரைப்படத்திலும் நடித்த பூர்ணிமாவையும் மோகனையும் ஐந்து வருடங்களுக்கு முன்னர், சென்னையில் ஒரு நிகழ்வில் சந்தித்த போது, ஒளிப்படங்கள் எடுத்திருக்கிறேன்.) 


''மைதடவும் விழியோரம் மோகனமாய் தினமாடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்...'' என்று சரணத்தில் தொடரும் நயமான வரிகளைப் போல வேறுசில பாடல்களின் வரிகளையும் ஆரம்ப காலத்தில் நயம்பட எழுதியவர் ராஜேந்தர். பிற்காலத்தில் அவர் எழுதிய பல பாடல்களும் இயக்கிய திரைப்படங்களும் நல்லவையல்ல என்பது வேறு விடையம். 


இந்தப் பாடலில் அங்கங்கே வீணை பயன்பட்டிருக்கிறது. பல்லவி முடிந்து திரும்பவும் சரணம் தொடங்குவதற்கு இடையில் சுழித்து வரும் வீணையிசை ரசனைக்குரியது. 


இந்தப் பாடலில் அதிகம் ஈர்ப்புக்குரியதாக இருப்பது பாடலின் மெட்டும் ஜானகியின் குரலும் சில வரிகளுமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பாடலை நினைத்ததும் கூடவே நினைவுக்கு வருவது, இடையிடையே வெவ்வேறு தொனிகளில் 'ஜூலி ஐ லவ் யூ' என்று திரும்பத் திரும்ப ஒலிக்கின்ற ஆண் குரல். 'ஜூலி ஐ லவ் யூ' என்று அவர் திரும்பத் திரும்ப நயமாக எடுத்துரைக்கும் போது, இடையில் கலக்கும் ஜானகியின் 'சிணுங்கல்களும்' (humming) ரசனைக்குரியவை. முழுப்பாடலையும் பாடுகிறவர் ஜானகி. ஆனால் இடையிடையே கொடுக்கும் 'ஹம்மிங்' தவிர 'ஜூலி ஐ லவ் யூ' என்று மட்டும் நயமாக எடுத்துரைத்து, அழுத்தமாக இப் பாடலில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிறது ஆண் குரல். குறிப்பிட்ட 'ஜூலி ஐ லவ் யூ' பகுதியானது, பாடலின் அனுபல்லவியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அதனை அனுபல்லவியாகத் தான் உணர முடிகிறது. (அந்த ஆண் குரலுக்கு உரியவர் ஜூலி ஆப்ரஹாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் அந்தக் குரலுக்கு உரியவர் Dr. கல்யாண் என்பவர் என்று இப்போது அறிகிறேன்.) 


- அமரதாஸ்

Monday, July 24, 2017

பிரசன்ன விதானகேயும் அவரது திரைப்படைப்புகளும் நானும் - நட்பு ரீதியில் ஒரு பதிவு



-அமரதாஸ்
Prasanna Vithanage - Amarathaas

நண்பர் பிரசன்ன விதானகே, உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். அவரது வாழ்க்கையும் படைப்புகளுமே இதற்கு ஆதாரம். எங்கிருந்தோ ஒரு புள்ளியில் இருந்து அவரும் நானும் பழகத்தொடங்கினோம். அடிக்கடி சந்திக்கவோ பேசவோ வாய்ப்புகள் இல்லாதிருந்தும், அவருக்குத் தமிழோ எனக்குச் சிங்களமோ சரியாகத் தெரியாதிருந்தும், அவரை விட வயதில் இளையவனாக நான் இருந்தும், இன்றுவரை நல்ல நண்பராகவே அவர் இருக்கிறார் என்பது சந்தோசமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது. உண்மையான, வாழ்க்கைக்கான சினமா பற்றிய தேடலும் அன்பும் இருவருக்குமான இணைப்பை அல்லது உறவை  தொடரச் செய்யக்கூடும்.

உலக அளவிலும் இலங்கையிலும் நன்கு அறியப்பட்ட கலைஞராக இருந்தும், அவர் விரும்பியபடியாக கலைப்பணியாற்றுவதில் பல நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார். யுத்த காலத்தில் இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த 'புரஹந்த களுவர' (Death on a full moon day) என்ற பிரசன்ன விதானகே யின் திரைப்படமே அவரை உற்று நோக்க வைத்தது. தடை நீக்கத்திற்காகவும், அத் திரைப்படத்தைப் பல்வேறு தளங்களுக்குக் கொண்டுசெல்லவும் அவர் பட்ட பாடுகள், ஒரு அறநிலைப்பட்ட கலைஞராக அவரை வெளிப்படுத்தின. உலகின் சிறந்த திரைப்படங்கள் சிலவற்றைத் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது, அவற்றுள் நான் பிரசன்னவின்  'புரஹந்த களுவர' (Death on a full moon day) திரைப்படத்தையும் உள்ளடக்குவேன். பிரசன்ன, எனது நண்பர் என்பதற்காக அல்ல. அத் திரைப்படம் தொடர்பில் சில ‘திருப்தியீனங்கள்’ எனக்கு உண்டென்றபோதும் அது உலகின் சிறந்த படங்களில் ஒன்றுதான். (எனக்குப் பிடித்த பல உலகத் திரைப்படங்களில், சில திருப்தியீனங்கள் இருக்கும். அது எனது பார்வை, தேடல், ரசனை சம்மந்தப்பட்டது.)
Prasanna Vithanage - Photograph of Amarathaas

பிரசன்ன விதானகே, 'ஆகாச குசும்' என்ற  தனது ஆறாவது  திரைப்படத்தின் திரைக்கதையினைத் தமிழ் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருந்தார். அதனை எனக்கு அனுப்பியிருந்தார். (அத் திரைப்படமும் பின்னர் மொழி மாற்றம் செய்யப்பட்டது.) 


அதன் முகவுரையில் - '' யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த போது எனது திரைப்படங்களுடன் வடக்கிற்குச் சென்ற நான், சினமாவைத் தமது உணர்வுகளின் வெளிப்பாட்டு (Self expression) ஊடகமாகத் தெரிவுசெய்ய ஆர்வம் கொண்டிருந்த அநேகமான இளைஞர்களைச் சந்தித்தேன். எனது 'புரஹந்த களுவர' ( முழு நிலவு நாளின் மரணம்) திரைப்படத்தின் ரசிகர்களாகிய அவர்கள், நானும் அசோக ஹந்தகமவும் செல்லும் பாதையில் பயணித்து, இலங்கைத் தமிழருக்கு உரித்தான தமிழ் சினிமாவை உருவாக்கக் கனவு கண்டுகொண்டிருந்தனர். யுத்த நிறுத்தம் முறிந்ததன் பின் ஏற்பட்ட பயங்கர யுத்தத்தின் போது, அவர்கள் எங்கு இருக்கின்றார்களோ என்ற எண்ணம் என்னுள் எழுந்து உறுத்தியது. ஆனால் அண்மையில் அகதி முகாம்களிலிருந்து தமது வீடுகளுக்குத் திரும்பிய அவர்கள் தொலைபேசி மூலம் என்னுடன் பேசினார்கள். எதிர்காலத்தில் அவர்களின் உணர்வுக்குரல் சினிமாவில் ஒலிக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாக உள்ளது. வெளிப்படுத்தத் துடிக்கும் ஆயிரமாயிரம் கதைகள் அவர்களினுள் தேங்கிக் கிடப்பதை நான் அறிவேன்.'' - என்று பிரசன்ன விதானகே எழுதியிருக்கிறார்.

இலங்கையில் யுத்தம் முடிந்த பிறகு, திரைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடாத்தவென, பிரசன்ன விதானகேயும் அவரது பெரும்பாலான திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய, இலங்கையின் மிக முக்கியமான  ஒளிப்பதிவாளரான  மகிந்தபாலவும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். 

Prasanna Vithanage - Amarathaas - Mahindapala
அப்போது, நீண்ட காலத்துக்குப் பின்னரான பிரசன்னவுடனான சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது. 'ஆகாச குசும்' படத்தின் திரைக்கதையின் தமிழ் மொழியாக்க நூலில் உங்களையும் பற்றித்தான் எழுதியிருக்கிறேனென்று சொன்னார். (யுத்தம் முடிந்த பிறகு, அகதி முகாமிலிருந்து விடுதலையான பின்னர், பிரசன்னவுடன் தொலைபேசி மூலம் பேசியிருந்தேன். இப்போது என்ன செய்கிறீர்களென்றும் இனி என்ன செய்யப் போகிறீர்களென்றும் அவர் கேட்டபோது, சீரோ வில் - 0 - இருந்துதான் வாழ்க்கையினை ஆரம்பித்திருக்கிறேனென்றும் வாய்ப்புக் கிடைத்தால் சினமாவில் ஈடுபடுவேனென்றும் சொன்னேன்.) என் வசமிருந்த அவரது திரைப்படங்கள், ஏனைய பல ஆவணச்சேகரிப்புக்களுடன் யுத்தத்தில் அழிவடைந்து விட்டதினால் அவரது திரைப்படங்களின் பிரதிகள் வேண்டுமென்று கேட்டேன். (இலங்கையின் நல்ல திரைப்படங்கள் இலங்கையில் கிடைப்பது அரிது.) DVD வடிவில் தன் வசமிருந்த தனது எல்லாத் திரைப்படங்களையும் பிரதி செய்து தந்தார்.




யுத்தத்தின் விளைவுகளை முன்னிட்டு, ‘அதிரும் காற்று’ என்று ஒரு தமிழ்த் திரைப்படத்தையும் ஒரு விவரணப்படத்தையும் உருவாக்கத் திட்டமிடுவதுபற்றியும் அவற்றின் செல்நெறி பற்றியும் உரையாடினார். அவற்றின் உருவாக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டு, என்னை இணைத்துக்கொண்டார். அவற்றின் முற்தயாரிப்புப் பணிகளின் போது யுத்தம் தொடர்பான பல விளக்கங்களைக் கேட்டுக்கொள்வார். தனது படைப்புச் செயற்பாடுகள், நொந்துபோயிருக்கும் தமிழர் மனங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்று சொல்லித் திரைக்கதையின் முக்கியமான தருணங்கள் பற்றி நுணுக்கமாகக் கலந்துரையாடினார். பல்வேறு காரணங்களால், அந்த இரண்டு முக்கியமான 'படைப்புகள்' அடுத்த கட்டத்தை எட்டமுடியாமல் போய் விட்டன. பிறகு தான், இலங்கையின் வடபகுதியிலிருந்து யுத்தத்தால் இடம் பெயர்ந்து மலையகத்தில் வசிக்கும் தமிழ்ப் பெண் பற்றிய சிங்களத் திரைப்படம் ('ஒப நதுவ ஒப எக்க' -With You Without You- பிறகு ) உருவாக்கப்பட்டது. அத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பித்தபோது தமிழகத்திலிருந்த நான், எனது ஊருக்குத் திரும்பி, பின்னர் பிரசன்னவிடம் சென்றேன். படப்பிடிப்பில், ஒளிப்படங்களை எடுக்கும் முக்கியமான பணியினை நட்பு ரீதியில் தந்ததோடு, படப்பிடிப்பின் போதான எல்லா நடவடிக்கைகளிலும் ஊடாடக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார். 





படத்தின் பிரதான பாத்திரத்தில் நடிக்கவென்று, பாத்திரப் பொருத்தம் கருதி, வட இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டிருந்த அஞ்சலி பட்டேலிடம், பெருமையுடன் என்னை அறிமுகப்படுத்தும் போது, 'நீங்கள் நடிக்கும் பாத்திரத்தின் சொந்த ஊரிலிருந்து இவர் வந்திருக்கிறார்' என்று அழுத்தமாகச் சொன்னார்.





பல்வேறு துறைகள் சார்ந்து திரைப்படத்தில் பணியாற்றிய சிங்களக் கலைஞர்கள் மத்தியில் பெருமைக்குரிய வகையில் அறிமுகப்படுத்தினார். பல புதிய நண்பர்கள் உருவாகக் காரணமாக இருந்தார். ஒருநாள் படப்பிடிப்புக் களத்திற்கு வந்த தயாரிப்பாளர்களில் ஒருவரிடம், 'ஆகாச குசும்' படம் தொடர்பாக நான் எழுதி, ஒரு சஞ்சிகையில் வந்திருந்த எனது விமர்சனக் கட்டுரையினைக் காட்டிப் பெருமையுடன் என்னை அறிமுகப்படுத்தினார்.


திரைப்பட உருவாக்கத்தின் போது பல்வேறு இயக்குநர்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். குறை நிறைகளோடு ஒவ்வொருத்தருக்கும் வேலை செய்யும் பாணி (Working style) வேறுபட்டிருக்கும். பிரசன்னவின் படப்பிடிப்புக் களச்செயற்பாடுகள் எப்போதும் அமைதியாகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். உணர்வு பூர்வமான முக்கிய காட்சிகள் சிலவற்றைப் படமாக்கும் போது, என்னை அழைத்து அருகிலேயே வைத்துக்கொண்டார். பாலியல் சார்ந்த நெருக்கமான காட்சிகள் சிலவற்றைப் படமாக்கும் போது, ஒளிப்பதிவாளர் உட்பட மிகச் சிலரையே பக்கத்தில் வைத்துக்கொண்டார். நடிகர்களையும் உதவியாளர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் சூழலையும் அவர் கையாளும் விதம் மிகவும் ஆரோக்கியமானது.


பிரசன்ன விதானகே, தனது திரைப்படங்களுக்கான ஒலியமைப்பு, படத்தொகுப்பு போன்ற பிற்தயாரிப்பு வேலைகளைப் பெரும்பாலும் தென்னிந்தியாவில் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திற்கு நான் மீளவும் சென்றிருந்தபோது, பிரசன்னவின் 'ஒப நதுவ ஒப எக்க' (With You Without You) படத்தினதும் மணிரத்தினத்தின் 'கடல்' படத்தினதும் படத்தொகுப்புப் பணிகளை, சிறீகர் பிரசாத் சமகாலத்தில் மேற்கொண்டிருந்தார். பிரசன்னவை தமிழகத்தில் சந்தித்து, அதுபற்றி அப்போது உரையாட முடிந்தது.

கொழும்பில் ஒரு பிரபலமான திரைப்பட ஸ்ரூடியோவினுள் ஒரு வீட்டின் உட்புறப் பகுதி, பலகைகளால் நிர்மாணிக்கப்பட்டு (Set disign) 'ஒப நதுவ ஒப எக்க' (With You Without You) திரைப்படத்தின் பெரும்பாலான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அருகில் வேறு ஒரு சிங்களத் திரைப்படப் பிடிப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய ஒருவர், பிரசன்ன மிகவும் நல்ல இயக்குநரென்றும் அவரது படங்கள் மரியாதைக்குரியவையென்றும் கூறினார். பிரசன்னவைப் போல், தரமான படங்களை இலங்கையில் பலராலும் உருவாக்க முடியாமலிருப்பதாக ஆதங்கப்பட்டார்.


இலங்கையில் தமிழ் சினமாவின் நிலை பற்றியும் அது நலிவடைந்து போனமைக்கான காரணங்களைத் தேடியும் அதனை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் குறித்த அக்கறைகளுடனும் தமிழ்ச் சூழலில் திரையரங்குகளின் நிலை பற்றி ஆராய்வதாகவும் ஒரு புனைவு சாராப் பட முயற்சி (Documentary film) மேற்கொள்ளப்பட்டது. அதில் பிரசன்னவின் பங்களிப்பு இருந்தது. அவரது 'ஆகாயப் பூக்கள்' (சிங்களத்தில் 'ஆகாச குசும்') என்ற தமிழாக்கப் படம், யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட சமயம், அவருடன் வந்த இரண்டு நண்பர்கள், அப் புனைவு சாராப் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகளைச் செய்தனர். அதற்காக எனது நேர்காணலையும் பதிவு செய்தனர். அக் காலத்தில் பிரசன்னவைச் சந்தித்து, அவரை அறிமுகப்படுத்தும் விதமான நேர்காணல் ஒன்றினைப் பதிவு செய்திருந்தேன்.

சிங்கள சினமாவின் தரத்தை மேம்படுத்த முனைவதுடன், தனது படங்களை, திரைக்கதைகளைத் தமிழாக்குவது, தமிழ் இளைஞர்களுக்குத் திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளை நடாத்துவது என்று ஈழத் தமிழ்ச் சூழலில் ஈழத் தமிழ் சினமாவிற்கான அடித்தளத்தைப் பலப்படுத்தவும் முனைகிறவராக பிரசன்ன விதானகே இருக்கிறார். ஈழத்தமிழர் சார்ந்த, போர் சார்ந்த  விடையங்களை சிங்களக் கலைஞர்கள் திரைப்படங்களில் கையாளும் அளவிற்கு, உலகளாவிய ரீதியில் தமிழ்க் கலைஞர்கள் அழுத்தமாகக் கையாளாமலிருப்பது ஈழத்தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் பாரிய பின்னடைவாகும்.



முன்னாள் போராளி ஒருவரை மையப்பாத்திரமாகக் கொண்ட 'இனி அவன்' என்ற தமிழ்த் திரைப்படத்தின் பிரிவியூ நிகழ்விற்கு, அத் திரைப்படத்தின் இயக்குநரான அசோக ஹந்தகம வினால் நட்பு ரீதியில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அசோக ஹந்தகம பிரபலமான முக்கியமான சிங்கள இயக்குநர்களில்  ஒருவர். அத் திரைப்படமானது, இலங்கையில் போருக்குப்  பின்னரான சிங்களக் கலை உலகிலிருந்து வெளிவந்த ஒரு முக்கியமான முயற்சியாகத் தெரிந்தது. இருந்தாலும் அதன் திரைக்கதையமைப்பிலும் அரசியல் வெளிப்பாட்டிலும் தெளிவற்ற அல்லது முறையற்ற தன்மைகளைக் காண முடிந்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த எனது நண்பரும் பிரபலமான முக்கியமான  சிங்கள இயக்குநருமான  ஒருவர், அத் திரைப்படம் தொடர்பிலான அதிருப்தியை நிகழ்வின் முடிவில் என்னிடம் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தினார். உங்களைப்  போன்ற ஈழத்தவர்களால் தான், சரியான முறையில் மிகவும் அழுத்தமாக ஈழத்தமிழர் சார்ந்த திரைப்படங்களை முன்வைக்கமுடியுமென்றும் அதற்காக முயலுமாறும் அவர் என்னிடம் கூறினார்.

பிரசன்ன விதானகே இலங்கையின் முக்கியமான அரசியல் திரைப்பட இயக்குனராக அதிகம் அறியப்படுகிறார். 'புரஹந்த களுவர', 'இர மதியம', 'ஒப நதுவ ஒப எக்க' போன்ற அவரது திரைப்படங்கள் இலங்கையின் சிங்கள தமிழ் இன  முரண்பாட்டின், போரின்  விளைவுகளைப் பிரதானமாகவும்   வெவ்வேறு தொனிகளிலும் வெளிப்படுத்துபவை. அவை, பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த சமூகங்களில் சிக்குண்டு உழலும் மனிதர்கள் குறித்த கலையாக்கங்களாகத் திகழ்பவை.


 பிரசன்னவின் படைப்புலகமானது, பெரும்பாலும் மக்கள் விரோத அதிகார மையங்களுக்கு எதிரானதாகவோ, பாதிக்கப்படுகின்ற சாதாரண மக்களை வெளிப்படுத்துவதாகவோ காணப்படுகிறது. அவரது திரைப்படங்கள், இலங்கையில் தொடர்ச்சியாக  அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றன.  தனது திரைப்படங்களை முன்னிறுத்துவதில், அரசியல் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வருபவர் பிரசன்ன விதானகே. தனது படைப்புகள் தனது சொந்த நாட்டில் தடை செய்யப்படுகிறபோது அதற்கு எதிராகப்  போராடி, தனது படைப்புகளை நிலைநாட்ட முயல்பவர் அவர்.


 'புரஹந்த களுவர' திரைப்படத்தைத் தொடர்ந்து, 'ஒப நதுவ ஒப எக்க' திரைப்படம் கூட இலங்கையில் வெளியிடப்படுவதில் ஆரம்பத்தில் அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்தது. அதற்காக அவர் அதிகம் போராடவேண்டியிருந்தது. அதன்  பின்னராக இலங்கையின்   நீதித்துறையைக்  கேள்விக்குட்படுத்தும் வகையில் அவர் உருவாக்கிய Silence in the Courts (உசாவிய நிகண்டய்) என்ற புனைவு சாராப்படம் கூட அண்மையில் சட்ட ரீதியில் நெருக்கடிக்குள்ளானது. அதற்காக அவர் சட்ட ரீதியில் போராட நேர்ந்தது.

பிரசன்னவின் 'ஒப நதுவ ஒப எக்க' (With You Without You - பிறகு) திரைப்படம் குறித்து, சுருக்கமாகவும் சற்று ஆழமாகவும் இனிப் பார்க்கலாம்.    

'ஒப நதுவ ஒப எக்க' (With You Without You - பிறகு) என்ற பிரசன்னவின் அண்மைக்காலத் திரைப்படமானது, அவரது ஏனைய சில படங்களைப் போல, உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு, சில விருதுகளையும் பெற்றுவிட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளும் சிக்குண்டது. இத் திரைப்படத்துடனான பிரசன்னவின் பயணம் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தாஸ்தயேவ்ஸ்கியின் ஒரு கதையினை (A Gentle Creature) அடிப்படையாகக் கொண்டு, போருக்குப் பின்னரான இலங்கையின் சமகாலத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இதன் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இலங்கையில், முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்திற்குப் பின்னராக வெளிவந்துள்ள படைப்புக்களில் மிகவும் முக்கியமான, கவனிக்கப்படவேண்டிய, விவாதிக்கப்படவேண்டிய படைப்பாக இது இருக்கிறது.


பிரதான கதாபாத்திரமான செல்வி, போரினால் பாதிக்கப்பட்ட  தமிழ்ப் பிரதேசத்தைச் சேர்ந்தவராகவும், அவளது கணவனான சரத்சிறி, முன்னாள் சிங்களப் படையினனாகவும்  திரைக்கதையில் இடம்பெறுவது, அதன் பிரதான முரண்பாட்டுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது. இந்த இரண்டு பாத்திர வார்ப்புக்களின் தன்மைகளும், தமிழ் மற்றும் சிங்களக் கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண்களின் விளைவாக தமிழ் கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்வது போல அமைவதும், இத் திரைப்படம் குறித்த எதிர்மறையான சில விமர்சனங்களுக்குக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இந்தத் திரைப்படம் குறித்து, பல்வேறு கருத்தியல் நிலைகள் சார்ந்து, பலதரப்பட்ட கேள்விகளை முன்வைக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. இத் திரைப்படத்தின் திரைக்கதையமைப்பும் பாத்திர உருவாக்கங்களும் யதார்த்த தளத்தில், போருக்குப் பின்னரான சமகாலப் பின்னணியுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. யதார்த்த தளத்திலான உருவாக்கமானது எப்போதும் பல்வேறு நிலைகளிலும்  துல்லியத்  தன்மையினைக் கோரி நிற்கும். அதுமட்டுமல்ல, அத்தகைய யதார்த்த தளத்திலான உருவாக்கமானது நேரடியான அல்லது மேலோட்டமான அர்த்த பரிமாணத்தில் புரிந்துகொள்ளப்படக்கூடிய சாத்தியங்களை அதிகம் கொண்டிருக்கும். இத்தகைய பின்னணியுடன் நோக்கும் போது, செல்வி என்கிற கதாபாத்திர உருவாக்கத்தில் போதாமைகள், தெளிவற்ற தன்மைகள் இருப்பதாக உணரப்பட்டிருக்கிறது. தனக்குக் கணவனாக வாய்த்தவன், முன்னர் சிறீலங்கா இராணுவத்தில் இருந்தவன் என்பதை அறிந்த பிறகு, செல்வி அடையும் துயரும் வெளிப்படுத்தும் எதிர்ப்பும் இயல்பானவையாக பொருத்தமானவையாக இருந்தாலும், அவள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்வது, துருத்தலாகவே உணரப்பட்டிருக்கிறது. வலிந்து புனையப்பட்ட முடிவாகவே இதனை அணுக முடிகிறது. செல்வி என்கிற கதாபாத்திரம் கொல்லப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லை. இணங்கி வாழ்வது சாத்தியமில்லை என்ற நிலையில், பிரிந்து செல்வதாகவோ கூட அமைக்கப்பட்டிருக்க முடியும். அந்தக் கதாபாத்திரமானது, கூடிய  அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு கொண்டதாகக் காட்டப்படவில்லை என்பதுவும் இந்த இடத்தில் கவனத்திற்குரியது. செல்வி, புறச்சூழ்நிலைகளின் நெருக்கடியினால் தான் சரத்சிறியை திருமணம் செய்துகொள்ள நேர்கிறது. ஆரம்பத்தில் அவன் சிங்கள இனத்தவனாக இருப்பது அவளுக்குப் பிரச்சினையாக இருப்பதில்லை. அவன், சிறீலங்கா இராணுவத்தில் இருந்தவன் என்பதை அறிந்த பிறகுதான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முரண்பாடுகளோடும் மனக்குழப்பத்தோடும் குற்ற உணர்வோடும்  தனிமையில் உழலும் செல்வியின் முதிர்ச்சியற்ற முடிவாகவே அவளது தற்கொலையினைப் புரிந்துகொள்ள முடிகிறது.     


சிங்களக் கலப்பற்ற தமிழ் சூழலில் இருந்து வந்த செல்வி, மிகவும் குறுகிய காலத்தில் சரளமாக சிங்களம் பேசுவது போல, சிங்களத்திலேயே  விவாதிக்கக் கூடியதாக இருப்பது, சமகால யதார்த்த மீறலாகத் தோன்றுகிறது. அவளுக்கு கணவனோடு ஏற்படுகின்ற முரண்களோடு, மொழி ரீதியில் இருந்திருக்கக் கூடிய முரண்களை மிகவும் நுட்பமாக இத் திரைப்படத்தில் கையாண்டிருக்க முடியும். அத்தகைய வாய்ப்புக்களை இயக்குநர் தவற விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. செல்வியும் அவளது வீட்டில் வேலை செய்யும் தமிழரான லட்சுமியும் ஊடாடக் கூடிய, உரையாடக் கூடிய  வாய்ப்புக்கள்  அதிகம் இருந்தும் அத்தகைய வாய்ப்புக்கள் பயன்படுத்தப்படவில்லை. காமினியும் சரத்சிறியும் உரையாடும் ஒரு  காட்சியில், 'கொட்டி' என்று சிங்களத்தில் காமினி  சொல்லும்போது  Tamil Tiger terrorist என்று ஆங்கில உப தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, சரத்சிறியும் செல்வியும் உரையாடும் ஒரு  காட்சியில் 'கொட்டி' என்று சிங்களத்தில் சரத்சிறி சொல்லும்போதும், திரும்பவும் செல்வி அப்படிச் சொல்லும்போதும் terrorist என்றே  ஆங்கில உப தலைப்புக்கள்  கொடுக்கப்பட்டிருக்கின்றன. (சிங்களத்தில் 'ரஸ்தவாதி' என்று குறிப்பிடப்பட்டிருந்தால் 'டெரரிஸ்ட்' என்கிற ஆங்கில மொழியாக்கம் பொருத்தமாக இருந்திருக்கும். 'கொட்டி' என்று வரும் இடங்களில் Tiger அல்லது Tigers அல்லது L.T.T.E என்றுதான் வந்திருக்க வேண்டும்.) இத்தகைய நுட்பமான தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை, ஆபத்தானவை.

இலங்கையின் இன முரண்பாட்டு அரசியல்  மற்றும் சமூக வரலாற்றுப் பின்னணியில் பார்க்கும்போது, இத் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களின் உருவாக்கத்தில் (செல்வி, சரத்சிறி) துல்லியத்தன்மை குறைந்திருப்பதாகவோ அல்லது போதாமைகள் கொண்டிருப்பதாகவோ உணரமுடிகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அந்த இரு பாத்திரங்களினதும்  அசைவியக்கமானது நெகிழ்வானதாகவும் இயல்பானதாகவும் கூடி, இத் திரைப்படத்தின் கலையாக்கத்துக்குப் பெரிதும் துணை நிற்கின்றன. துயர் படர்த்தும் உள்ளார்ந்த நேசமும் இரண்டு பிராதன பாத்திரங்களினதும் குற்ற உணர்வுகளும் முரண்களுமே இத் திரைப்படத்தின் அடிநாதமாக உள்ளோடுகின்றன.



இத் திரைப்படமானது  நுட்பமான காட்சியமைப்புக்களையும் உரையாடல்களையும் கொண்டிருக்கிறது. திரைக்கதையமைப்பில் இருண்மையான பகுதிகள், அல்லது  மேலும் துலக்கம் பெற்றிருக்கவேண்டிய இடங்கள் உள்ளன. தமிழ், சிங்கள சமூகத்தினர் மத்தியில், சர்வதேச ரீதியிலான பார்வையாளர்கள் மத்தியில் குழப்பமற்ற புரிதலையும் தெளிவையும் ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையினை மேலும் செம்மைப்படுத்தியிருக்க முடியும். முக்கியமாக, ஒளிப்பதிவாளரான மகிந்தபாலவும் படத்தொகுப்பாளரான சிறீகர் பிரசாத்தும் தமது சிறப்பான பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவில் சில இடங்களில், சட்டக ஒருங்கிணைப்புக்களில் (Frame Composition) மேலும் கவனம் செலுத்தியிருக்கக்கூடிய இடங்களை இனங்காண முடிகிறது. எது எப்படியிருந்தாலும் இப்போதிருக்கும் நிலையில், இது மிகவும் முக்கியமானதொரு படைப்பு முயற்சியாகும்.

கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தும் ஒரு திரைப்படத்தில் கதாபாத்திரங்களை புரிந்து கொள்வதுதான்  எல்லாவகையான புரிதல்களினதும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது. இத் திரைப்படமானது, தமிழர்கள்  மற்றும் சிங்களவர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கும் வேற்று இனத்தவர்களால் அல்லது வேற்று மொழி சார்ந்தவர்களால்  சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கும் உதவும் வகையிலான நிலவியல் சார்ந்த, ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்ட அரசியல் சார்ந்த, இலங்கை இன முரண்பாட்டின் அடிப்படைகள் சார்ந்த, தெளிவான கோடி காட்டல்களை  வலுவாகக் கொண்டிருக்கவில்லையென்று படுகிறது. இத் திரைப்படம் இலங்கையின் இன முரண்பாட்டின், போரின் கதையாடலாகத் தன்னை இனங்காட்டிக்கொள்வதால் அவை சார்ந்து நோக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாதது. ஒட்டுமொத்தமாக, இத்திரைப்படத்தில் உள்ளோடும் கருத்தியல் மற்றும் அழகியல் சார்  தொனிப்புக்கள்  குறித்தும், இதன் பின் இயங்கியிருக்கக்கூடிய நுண்ணரசியல் சார் விடையங்கள் குறித்தும் ஆழமாக, விரிவாக, மிகுந்த பொறுப்புணர்வோடு  உரையாட வேண்டியது அவசியமாகும். முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில் வெற்றிபெற்றதாக மமதைப்படும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பிரதிநிதியாக இயக்குநரை அடையாளப்படுத்திக்கொண்டு இத் திரைப்படத்தினை  அணுக முயல்வது விபரீதமானது. சரத்சிறி கதாபாத்திரமானது, சிங்கள பௌத்த சமூகத்தவர்கள் மத்தியில் குற்ற உணர்வினைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக உணர முடிகிறது. புத்தரை வழிபடும் சரத்சிறி, தனது கடந்தகால இராணுவ வாழ்வின் விபரீதங்களை உணர்ந்து குற்ற உணர்வில் உழல்கிறான். கடந்தகால வாழ்விலிருந்து மீள முயன்றாலும் கூட, ஒரு கைத்துப்பாக்கியை ஒளித்து வைத்திருக்கிறான். இத் திரைப்படத்தில் உலவும் கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள விழைவதனூடாகவே, இதிலிருந்து வெளிப்படக்கூடிய கருத்தியல் முரண்களையும் நுண்ணரசியலையும் அழகியலையும் கண்டடைய முடியுமென்று தோன்றுகிறது.

கருத்துச் சுதந்திரத்துக்கு இலங்கையில் தொடர்ந்தும் நிலவுகிற மட்டுப்பாடுகளுக்குள்ளிருந்து இத் திரைப்படத்தினை இயக்குநர் சாத்தியப்படுத்தியிருப்பது, பாராட்டுக்குரியதும் வரவேற்புக்குரியதுமாகும். ஒரு வகையில் இதுவொரு சவாலான முயற்சியே. நெருக்கடிகளும் முரண்களும் நிறைந்த சிங்கள சமூகத்தின் மத்தியில், ஒரு சிங்களக் கலைஞராக இருந்துகொண்டு, தமிழர்கள் மீது சிங்களத்தரப்பால் நிகழ்த்தப்பட்ட அநீதிகள் குறித்த பிரக்ஞை பூர்வமான பதிவினை, With You Without You திரைப்படம் மூலமாக, இயன்றவரை தன்னளவில் நேர்மையாக, நண்பர்  பிரசன்ன விதானகே நிகழ்த்தியிருக்கிறார் என்பதுதான் முக்கியமான சமகால முன்மாதிரியாகிறது.

2016-12-04 அன்று, சுவிற்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடைபெற்ற 'திரையிடலும் உரையாடலும்' நிகழ்வில்  With You Without You ('ஒப நதுவ ஒப எக்க' - 'பிறகு') திரைப்படம் திரையிடப்பட்ட போது, நிகழ்த்தப்பட்ட உரை இது.

 'கரவொலி ' என்னும் சினமாவிற்கான இணைய இதழில் பதிவானது.

Making of 'With You Without You'

https://youtu.be/TqjAlffAEVA

Thursday, July 6, 2017

முத்தம் + கொண்டாட்டம்.

இன்று (July 6) சர்வதேச முத்த தினமாம். (International Kissing Day) காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற பல தினங்கள் நடைமுறையில் உள்ளன. பெரும்பாலும் உலக மக்கள் 'எல்லாவற்றுக்கும்' அடையாள தினங்கள் வைத்துவிடுகிறார்கள். அவற்றைக் கொண்டாடியும் முடிக்கிறார்கள். (சரி, பிழை, தேவை, தேவையில்லை என்பவற்றுக்கும் அப்பால்)

இத்தகைய தினங்கள், மனித வாழ்வின் அடிப்படையான அன்றாடத் தேவைகளை, வெகுஜன மட்டத்தில் செயற்கையான அல்லது போலியான அணுகுமுறைகளுக்கு உட்படுத்தி விடுகின்றனவா என்கிற அவதானிப்பு அவசியமானது. வருடத்தில் ஒரு நாள்தான் 'காதலிக்க' வேண்டுமா?

தமிழ்ச் சூழலில் 'முத்தம்', 'பாலியல் உறவு' போன்றவை பெரும்பாலும் பகிரங்கமாகப் பேசப்படுவதில்லை, புரிந்துணர்வோடு அணுகப்படுவதுமில்லை. சந்தர்ப்பங்களுக்கு அமைவாக, பண்பாட்டு வரையறைகள் மற்றும் சரி பிழைகளுக்கு அப்பால், 'பாலியல் வேட்கை' சார்ந்த உள் நோக்கம் முத்தத்துக்கு இருக்கவும் கூடும். 'பாலியல் வேட்கை' இயற்கையின் ஆதார சக்திகளில் ஒன்று. அதை முறைப்படுத்துவதும் புரிந்துகொள்வதும் மானுடத் தேவைகளின் அவசியங்களாகும்.

'அன்பை', 'காதலை' கொடுப்பதிலும் கொள்ளலிலும் பலவீனமான நிலையில் நம் சமூகம் இருக்கிறதா? கட்டியணைத்தல், கை குலுக்குதல், முத்தமிடுதல் போன்ற 'இணக்கத்தின்' உடல்வழிச் 'சமிக்ஞைகள்' நம் சமூகத்தில் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன? அவை எத்தகைய 'நோக்கங்களுடன்' பிரயோகிக்கப்படுகின்றன?

முத்தம் பற்றிய சில பதிவுகளைப் பார்க்க, ஏகப்பட்ட முத்த அனுபவங்கள் மின்னிக்கொண்டு முன்னுக்கு வருகின்றன. முத்தங்களில் பல வகை இருக்கு. யாரால், யாருக்கு, எச்சந்தர்ப்பத்தில் முத்தமிடப்படுகிறது என்பது அவதானிக்கப்படுகையில், முத்தத்தின் 'வேறுபாடுகளும்' 'வீரியமும்' 'தேவையும்' புலப்படக்கூடும்.

உண்மையில், முத்தம் கொண்டாட்டத்துக்குரியது தான். முத்தமானது, ஆரம்ப நிலையில் அல்லது முதல் நிலையில் எப்போதும் அன்பின் திறவுகோலாகவே இருந்துவருகிறது. சர்வதேச திரைப்படங்களில், நேரில் பார்த்த முத்தங்கள் பற்றி விரிவாகப் பதிவு செய்ய வேண்டும்.


தமிழ் சினமாவில் பார்க்கப் போனால், கவனப்படுத்தக் கூடிய 'கமலஹாசனின் முத்தக் காட்சிகள்' அதிகம் உள்ளதை அவதானிக்க முடியும். 'மகாநதி' படத்தில், நெருக்கடியான ஒரு தருணத்தில் சுகன்யா வின் இதழ்களில் கமலஹாசன் பதிக்கும் 'திடீர் முத்தம்' உடனடியாக நினைவுக்கு வருகிறது...

என்னோடு 'முரண்படுபவர்கள்' யாராக இருந்தாலும், அவர்களை அப்படியே இழுத்து வைத்து 'கிஸ்' அடித்துவிடலாமா என்று இப்போது தோன்றுகிறது...😉
2017-07-06