Saturday, September 16, 2017

திலீபன் - நிகழ்ந்திருக்கக் கூடாத நிகழ்வுகளின் நினைவுகள்.


அமரதாஸ்
2017-09-15

தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்து திரு. திலீபன் வகித்த பங்கு தனித்துவமானதாக நோக்கப்படுகிறது. உலகின் விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் தனித்துவமாக இடம்பெறும் போராளியாக அவர் அறியப்படுகிறார். 5 கோரிக்கைகளோடு முன்னெடுத்த உண்ணா நிலைப் போராட்டத்தில் உணவை மட்டுமல்ல, நீரையும் மருத்துவத்தையும் முற்றாகப் புறக்கணித்திருந்தார். சாகும் வரையான அவரது உண்ணா நிலைப் போராட்டத்தின் காலகட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில ஒளிப்படங்களின் பின்னணியில் இருக்கும் திரு.தேவர் மற்றும் திரு.ராஜன் போன்றவர்கள் எனக்கு இன்றுவரை நெருக்கமானவர்கள். அவர்கள் இப்போது வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் அவர்களோடு பேசுகிறபோது, திலீபனின் நினைவுகள் எழுவது வழக்கம். திலீபனின் தியாகச்சாவுக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஒளிப்படங்கள், என்னுள் பல நினைவுகளையும் கேள்விகளையும் கிளர்த்திக்கொண்டிருப்பவை. பெரும் சோகத்தையும் மறக்க முடியாத வரலாற்றையும் தாங்கியிருப்பவை அவை.



அப்போதிருந்த அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து, உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்வதென்று முடிவெடுத்த திலீபன், அதைத் தனக்கு நெருக்கமாக இருந்த ஒரு அரசியல் ஆய்வாளருக்கு முதலில்  சொல்லியிருக்கிறார். திலீபன் மேல் மிகுந்த அன்பும் நட்பும் கொண்டிருந்த அந்த அரசியல் ஆய்வாளர் அதை ஏற்கவில்லை. 'உன்னை எல்லோரும் சாகவிடுவார்கள், உனது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும், இந்த விசப்பரீட்சையைக் கைவிடு' என்று அப்போது திலீபனிடம் சொல்லியிருந்தார். (அவர் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் எனது  நீண்டகால நண்பர்களில் ஒருவர்.) 

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரனிடம் தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அனுமதிபெற்று உண்ணாநிலைப் போராட்டத்தைத் திலீபன் தொடர்ந்தார். தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதிருந்தால், மயக்கமுற்றிருந்தாலும் தனக்கு வைத்திய உதவிகள் எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லியிருந்தார்.



விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில், இந்திய இராணுவ காலகட்டமானது மிகுந்த நெருக்கடிக்குரியதாக இருந்தது. அன்றைய காலத்தின் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக திலீபனின் உண்ணா நிலைப் போராட்டத்தை விளங்கிக்கொள்ள முடியும். அது, இந்திய வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் அப்போது ஏற்பட்டிருந்த பலவீனமான நிலையினைச் சரிசெய்வதற்குமான முயற்சியாகவும் பார்க்கப்படலாம். எது எப்படியிருந்தாலும், திலீபனின் உண்ணா நிலைப் போராட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாது என்று தெரிந்துகொண்ட பின்னரும், அவரது இறப்பை யாராலும் தடுக்க முடியாமல் போனது ஒரு வரலாற்று அவலமாகவே எனக்குத் தெரிகிறது. தனக்கு நீரோ உணவோ வைத்தியமோ வழங்கக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லியிருந்தாலும், நீர் கூட அருந்தாமல் வதங்கிப்போய் மயங்கிக் கிடந்த கடைசி நேரத்திலாவது அவரை யாரும் சாவிலிருந்து காப்பாற்றியிருக்கக் கூடாதா...? இது எனது தனிப்பட்ட ஆதங்கமாகும். அவர் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும், காப்பாற்றப்பட்டிருக்க முடியும். 

'இங்கு ஓர் மலர் வாடுகின்றதே
இதய நாடிகள் ஒடுங்குகின்றதே 
தங்க மேனியை சாவு தின்னுதே 
தழலிலாடிய மேனி சோருதே 
பொங்கி நின்றவன் பேச்சடங்குதே 
பொழுது சாயுதே பொழுது சாயுதே 
வந்து பாரடா வந்து பாரடா 
வாடமுன்னொரு செய்தி கூறடா...' 
என்று திரு. புதுவை இரத்தினதுரையும்  
'ஐயா திலீபன்...எங்கைய்யா  போகின்றாய்...' என்று திரு. காசி ஆனந்தனும் தமது உணர்வுகளின் வரிகளை ஒலிபெருக்கிகளில் வழியவிட்டுக்கொண்டிருந்தார்கள். திரு. பிரபாகரன் வந்து, திலீபனின்  தலையைக் கோதிக்கொண்டிருந்தார். திலீபன் நினைவிழந்து போனதை மக்கள் பலரும் போராளிகள் சிலரும் விழிகள் கசியப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் சூழ்நிலையின் கைதிகளாக இருந்திருக்கக் கூடும். (அப்போது திலீபனின் பக்கத்தில் போராளிகளாய் இருந்த சிலர், திலீபனின் கனத்த நினைவுகளுடன் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.)    

இருந்த இடத்திலேயே அணுவணுவாய் இறந்துகொண்டிருந்த திலீபனைச் சுற்றிக் காத்திருந்தவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இறப்பை உறுதிசெய்து கொண்டே நினைவிழந்த திலீபனின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? இயலாமையின் விளைவான ராஜதந்திரத்தில் அந்தத் தியாகச் சாவு நிச்சயிக்கப்பட்டதா?  எது எப்படியிருந்தாலும், அதுவொரு மானுடப் பேரவலம். அது நடந்திருக்கவே கூடாத துன்பியல் நிகழ்வாகும். மானுட நேசர்களாலும் விடுதலை விரும்பிகளாலும் 'திலீபனின் தியாகம்' புரிந்துகொள்ளப்பட முடிந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.



திலீபனின் வேண்டுகோளுக்கு அமைவாக, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தனது உடல், கல்வித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பது அவரது விருப்பமாக இருந்தது. அங்கு அவரது உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தபோது நான் பார்த்திருக்கிறேன். கறுத்துப்போயிருந்த வெற்று உடலின் உட்புறம் தெரியும் நிலையில், சில இடங்கள் வெட்டப்பட்டிருந்தன. அவருக்கு இயல்பாகவே துருத்தலாக இருக்கும் பற்கள், மேலதிகமாகத் துருத்திக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அப்போது எனக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் பற்றி, இப்போது எழுத்தில் விபரிப்பது கடினம். அது இப்போது அவசியமுமில்லை. 

யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திலிருந்த திலீபனின் உடலானது, 'யாழ்ப்பாண இடப்பெயர்வுக் காலத்தில்' விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினரால் பெறப்பட்டு, வன்னிக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அது பாதுகாக்கப்பட்டு வந்தது. திலீபனின் உடல் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம், 'கிபிர்' தாக்குதலுக்கு உள்ளான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் 'பேழை' சேதமாகவில்லை. பின்னர் 'இறுதி யுத்த காலத்தில்', இடப்பெயர்வில் தொடர்ந்தும் காவிச்சென்று பாதுகாக்க முடியாதிருந்த நிலையில், அந்த உடல் புதைக்கப்பட்டுவிட்டது.

இதை அறிந்த, விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்த ஒரு நண்பனுடன் அண்மையில் இது பற்றி உரையாடினேன். யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திலேயேயே திலீபனின் உடலை விட்டு வைத்திருந்தால், அது இப்போதும் எப்படியோ பாதுகாப்பாக இருந்திருக்கக் கூடுமென்று அந்த நண்பனுக்குச் சொன்னேன். ஆனால், சிறிலங்கா அரசினால் அது பின்னர் அழிக்கப்பட்டிருக்கவும் கூடும்.



இறுதி யுத்த காலத்தின் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, நல்லூரில் திலீபனின் 'நினைவுக்கல்' வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று ஒளிப்படங்களை எடுத்திருக்கிறேன். அப்போது, பெரிதாக அமைக்கப்பட்டிருந்த திலீபனின் 'நினைவுத் தூபி' அழிக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் 'நினைவுக்கல்' அப்படியே இருந்தது. (அப்போது, அது யாராலும் கவனிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.) இதுவும் விட்டுவைக்கப்படாதென்று அப்போதே நினைத்திருந்தேன். நான் ஒளிப்படங்களை எடுத்த பிறகு, பின்னொரு காலத்தில் அந்த 'நினைவுக்கல்' சிறிலங்கா அரசினால் அழிக்கப்பட்டுவிட்டது. 


திலீபனின் உயிரை அவரது 'விருப்பத்திற்கு' மாறாகக் காக்க முடியவில்லை என்பது ஒருபக்க வரலாற்று அவலம். அவரது உடலை அவரது 'விருப்பத்திற்கு' அமைவாக, தொடர்ந்தும் காக்க முடியவில்லை என்பது இன்னொருபக்க வரலாற்று அவலமாகும். தமிழின விடுதலையை அவாவி, அதற்காக உழைத்த போராளி திலீபன் பற்றிய நினைவுகளும் வரலாறும் பேணப்பட  வேண்டியவை.  

பிற்குறிப்பு -  திலீபனின் வரலாற்றினைத் திரைப்படமாக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், உண்ணா நிலைப் போராட்டக் காட்சிகள் இன்னமும் படமாக்கப்படவில்லை என்று அறிய முடிந்தது. 'திலீபன்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட அத் திரைப்பட முயற்சியில், திலீபன் பாத்திரத்தில் நடித்த நடிகர் நந்தா மற்றும் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி ஆகியோருடன் அண்மையில் உரையாடியிருந்தேன். திரைப்படத்தைப் பூர்த்திசெய்து, இன்னமும் வெளிக்கொண்டுவர முடியாத நிலை தொடர்வதில், 'பண நெருக்கடி' முக்கிய காரணியாக இருக்கிறது என்று தெரிய வருகிறது. அத் திரைப்படத்தின் 'தரம்' எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. உண்மையான வரலாற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற அக்கறையோடு தான் அந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்று கருதுகிறேன். அதன் படப்பிடிப்பு  நடந்துகொண்டிருந்த காலத்தில், சென்னையில் நடிகர் நந்தாவை சந்தித்திருந்தேன். வன்னிப்பகுதியில் உருவாக்கப்பட்ட 'ஆணிவேர்' என்ற திரைப்படத்தில் ஒளிப்படக் கலைஞராக நான் பணியாற்றியபோது, அதில் நடித்த நந்தாவுடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டிருந்தது. 'திலீபன்' என்ற திரைப்பட முயற்சியில் சம்மந்தப்பட்டிருந்தவர்கள், ஆர்வமுள்ளவர்கள் அதனை நேர்த்தியுடன் வெளிக்கொண்டுவர முயற்சிப்பது நல்லது.


Friday, September 8, 2017

'பொங்கியதே காதல் வெள்ளம்' அல்லது 'கண்ணுக்குள் நூறு நிலவா'...

'பொங்கியதே காதல் வெள்ளம்' அல்லது 'கண்ணுக்குள் நூறு நிலவா'...

- அமரதாஸ்
2017-09-08



'மண்ணுக்குள் வைரம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதில் இடம்பெற்ற ''பொங்கியதே காதல் வெள்ளம்...'', ''இதழோடு இதழ் சேரும் நேரம்...'' போன்ற பாடல்களால் கவனம் பெற்றவர் இசையமைப்பாளர் திரு. தேவேந்திரன். பின்னர், இயக்குநர் திரு. பாரதிராஜாவின் குறிப்பிடத்தகுந்த திரைப் பங்களிப்புகளில் ஒன்றான 'வேதம் புதிது' என்ற திரைப்படத்தில் தேவேந்திரனின் இசைப் பங்களிப்பு கவனிப்பிற்குரியதாக இருந்தது. அதில் இடம்பெற்றிருந்த ''கண்ணுக்குள் நூறு நிலவா...'' என்ற பாடல், அது வெளிவந்திருந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது.


''பொங்கியதே காதல் வெள்ளம்...'' மற்றும் ''கண்ணுக்குள் நூறு நிலவா...''ஆகிய பாடல்களுக்கிடையே இரண்டு முக்கியமான ஒற்றுமைகள் இருக்கும். முதலாவது காதல், இரண்டாவது மிருதங்கம். இரண்டு பாடல்களிலும் மகிழ்ச்சிகரமான மிருதங்க இசையை அனுபவிக்க முடியும். காதலின் மகிழ்ச்சியை, உக்கிரத்தை, புத்துணர்ச்சியை மிருதங்கத்தில் ஏற்றியிருக்கிறார் தேவேந்திரன். மிருதங்கத்தால் எனக்குப் பிடித்த பாடல்களில் இவையிரண்டும் முக்கியமானவை.


தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில், என்றைக்கும் நினைவுகூரத்தக்க சில பாடல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். ''பொங்கியதே காதல் வெள்ளம்...'', ''கண்ணுக்குள் நூறு நிலவா...'', ''இதழோடு இதழ் சேரும் நேரம்...'', ' போன்ற பாடல்களில் அவர் தனது இசை ஆளுமையைப் பதிவுசெய்திருக்கிறார். நல்லதொரு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்த தேவேந்திரனுக்கு நல்லபடியான வாய்ப்புகள் அதிகம் அமையவில்லை என்பதும், அவர் அதிகம் 'கவனிக்கப்படவில்லை' என்பதும் வருத்தத்துக்குரியது.


''கண்ணுக்குள் நூறு நிலவா...''
https://youtu.be/o_umXE7vB_w

''பொங்கியதே காதல் வெள்ளம்...''
https://youtu.be/QojxewDQFmk

''இதழோடு இதழ் சேரும் நேரம்...''
https://youtu.be/QCcHXXDPkgc


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக ஆரம்ப காலத்தில் பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவேந்திரன். அப் பாடல்கள், ஈழத்தில் இந்திய ராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டவை. அத்தகைய சில பாடல்கள் இசையால் வளம்பெற்றவை, இசையாலேயே வசீகரிப்பவை, பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் கொண்டவை. (அவை, தனியான பதிவுக்குரியவை.) தேவேந்திரனுடனான இசை சார் அனுபவங்கள் பற்றி, அவருடன் இணைந்து பல பாடல்களை உருவாக்கிய கவிஞர் திரு. புதுவை இரத்தினதுரை என்னிடம் சொல்லியிருக்கிறார்.


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான பாடல்களின் உருவாக்கத்தில், தேவேந்திரனுக்குப் பிறகு இசையமைப்பாளர் திரு. கண்ணன் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.



Thursday, September 7, 2017

பாலியல் தொழிலும் தமிழ்ச் சூழலும் - ஒரு திரைப்படத்தினை முன்வைத்து...


பாலியல் தொழிலும் தமிழ்ச் சூழலும் - ஒரு திரைப்படத்தினை முன்வைத்து...

- அமரதாஸ்
2017-09-07




'சிவப்பு எனக்குப் பிடிக்கும்' என்ற தமிழ்த் திரைப்படத்தினை நேற்றுப் பார்க்க முடிந்தது. பாலியல் தொழிலாளர்கள் பற்றிய ஒரு பதிவினை அண்மையில் எழுதியிருந்தேன். அதற்கு முன்னர் இத் திரைப்படத்தினைப்  பார்த்திருந்தால், இது பற்றியும் சேர்த்து எழுதியிருக்க முடியும். சரி, இப்போது தனியாகவே இத் திரைப்படம் குறித்து சுருக்கமாக எழுத முனைகிறேன்.


'சிவப்பு எனக்குப் பிடிக்கும்' என்ற தமிழ்த் திரைப்படமானது, தமிழ்ச் சமூகத்தின் பாலியல் சார் பிரச்சினைகளை வெளிப்படையாகவும் புரிந்துணர்வோடும் அணுகவேண்டும் என்னும் அக்கறையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு  மாணவன், ஒரு பாதிரியார், காவல் துறைக்கும் அரசுக்கும் 'தீவிரவாதியாக' தெரியும் ஒருவர், 'அரவாணி' ஒருவர், மனநல வைத்தியர் ஒருவர், உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆகியோருடனான  அனுபவங்களை எழுத்தாளர் முன்னே  வெளிப்படுத்தும்
பெண் பாலியல் தொழிலாளியை மையப்பாத்திரமாகக் கொண்டிருக்கிறது. அந்த எழுத்தாளர், பாலியல் ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிறுமியை  மகளாகக் கொண்டவர் என்பது படத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையினர் மற்றும் வேறு சில பாலியல் தொழிலாளர்கள் போன்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையின் தேவைக்கேற்ப கையாளப்பட்டுள்ளன.



பாலியல் குற்றங்களைக்  குறைக்கும் நோக்கில், சென்னைக்கு 'முறைப்படுத்தப்பட்ட'  'சிவப்பு விளக்கு பகுதி' அல்லது பாலியல் தொழில் தேவை என்பதுவும், 'பாலியல் கல்வி' முறைப்படி வழங்கப்பட வேண்டும் என்பதும், இத் திரைப்படத்தின் பிரதானமான வேண்டுதல்களாக உள்ளன. 'முறைப்படுத்தப்பட்ட'  பாலியல் தொழிலை  ஒரு 'தீர்வாக' வலியுறுத்துவது, தமிழ்ச் சூழலைப் பொறுத்த வரையில்  'சர்ச்சைகளுக்குரியதாக' இருந்து வருகிறது.  இருந்தாலும் 'பரிசீலனைக்குரியதாக' முன்வைக்கப்படுகிறது. 



ஆண்களின் பாலியல் 'தேவைகள்' பற்றிய கரிசனத்தைக் கொண்டிருக்கும் இத் திரைப்படமானது, பெண்களின் பாலியல் 'தேவைகள்' பற்றிய கவனப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் இது ஆண் நோக்கு நிலையில் அமைந்த மேலோட்டமான  திரைப்படமாகும். பல்வேறு சமூக  நிர்ப்பந்தங்களால் உந்தப்படுகின்ற ஆண்களின் பாலியல் 'தேவைகளுக்கு' 'வடிகாலாக' பெண் பாலியல் தொழிலாளர்கள் 'தேவை' என்பதே இத் திரைப்படத்தின் அடிப்படையான 'விவாதத்துக்குரிய' கோரிக்கை. 


பாலியல் தொழிலாளிகளின் உருவாக்கத்துக்கும் பெருக்கத்துக்கும் பல்வேறு சமூக, உளவியல் காரணங்கள் இருக்கும் நிலையில் பாலியல் கல்வி, மற்றும் 'முறைப்படுத்தப்பட்ட'  பாலியல் தொழில் போன்ற முன்னெடுப்புகள் ஓரளவுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பாலியல் வறட்சியும் பாலியல் குற்றங்களும் பாலியல் சார் பிரச்சினைகளும் மலிந்துபோயுள்ள தமிழ்ச் சூழலில், அவற்றை விளங்கிக்கொண்டு, அவற்றைக் குறைப்பதற்கான ஆரோக்கியமான மாற்று வழிமுறைகளை  ஆராயவேண்டிய அவசியம் உள்ளது. பல்வேறு  நாடுகளில் பாலியல் தொழில் மற்றும் பாலியல் கல்வி ஆகியவை 'முறைப்படுத்தப்பட்ட' நிலையில் மேற்கொள்ளப்படுவது அவதானிப்பிற்குரியது.


'முறைப்படுத்தப்பட்ட'  பாலியல் தொழில் மூலம் பாலியல் குற்றங்கள் குறைக்கப்படுமென்பதும் பாலியல் தொழிலாளர்களின் பல்வேறு சிரமங்கள் குறைக்கப்படுமென்பதும் இந்தத் திரைப்படத்தின் இயக்குநரது  நம்பிக்கையாகும். இதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில், நேர்காணல்களில்  குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் இருந்து திரைப்பட இயக்குநர் ஆனவர் அவர். 'மதுரை சம்பவம்' என்ற திரைப்படத்தினை அவர்  ஏற்கெனவே  இயக்கியிருக்கிறார்.


எழுத்தாளரின் பாத்திரத்தில் (யுரேகா) நடித்திருப்பவர், இத் திரைப்படத்தின் இயக்குநரான யுரேகா. அவருக்குத் தனது அனுபவங்களைச் சொல்லும் பாலியல் தொழிலாளியின் பாத்திரத்தில் (மகிமா) நடித்திருப்பவர் சாண்ட்ரா எமி என்னும் சின்னத்திரை நடிகை. இருவரது 'வெளிப்பாடுகளும்' பல இடங்களில் செயற்கைத்தனமானவையாக உள்ளன. வலிந்து புகுத்தப்பட்டதாக சில காட்சியமைப்புகளும் வசனங்களும் தென்படுகின்றன. திரைக்கதையில் நம்பகத்தன்மையை, 'இயல்பை' மீறிய சில இடங்கள் உள்ளன. தர்க்க ரீதியில் பொருந்திவராத சில காட்சியமைப்புகள்  உள்ளன. எனினும்,  திரைக்கதைக்குத்  'தேவையான' அழுத்தமான வசனங்கள் ஆங்காங்கே கவனிப்புக்குரியதாக உள்ளன.

பாலியல் ரீதியிலான  காட்சிகளை இடம்பெறச் செய்யத்தக்க சந்தர்ப்பங்கள் அதிகமிருந்தும் அத்தகைய காட்சிகளைத் தவிர்த்திருக்கிறது திரைக்கதை. பல்வேறு நிலையில் 'பாலியல் வக்கிரத்தை' ஆங்காங்கே கொண்டிருக்கும் பல்வேறு தமிழ்த்  திரைப்படங்களின் மத்தியில், இத் திரைப்படமானது தன்னளவிலான  தனித்துவத்தையும்  கண்ணியத்தையும் கொண்டுள்ளது. ஒரு திரைப்படத்தில், பாலியல் சார் காட்சிகள் 'தேவைப்படும்'  இடங்களில் 'தேவைக்கேற்ப' இடம்பெறுவது இயல்பானது என்பது வேறு விடையம். 

இத் திரைப்படத்தின்  பேசுபொருள்  முக்கியமானது, கவனிப்புக்குரியது. ஆனால் பேசியிருக்கும் விதம் 'கலாபூர்வமானதாக' இல்லை. ஒரு திரைப்படமாக, கலை வெளிப்பாடாக இதனை அணுகும் நிலையில், பல குறைபாடுகளைக் காண முடியும். பாலியல் 'விழிப்புணர்வு' கோரும் வகையில்  கட்டமைக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தின் 'சொல்முறை' மிகவும் பலவீனமானது, செயற்கைத் தன்மைகள் நிறைந்தது. இருப்பினும், ஒரு அனுபவமுள்ள திரைப்பட பார்வையாளரால் இதன் குறைகளை,போதாமைகளை இட்டுநிரப்பி இதனை அணுக முடியும் என்று தோன்றுகிறது.  இதை ஒரு சிறந்த திரைப்படமாக எடுத்திருக்க முடியும். 'மாற்றுச் சிந்தனைகள்' கொண்ட   ஒரு  திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இயக்குநர், அது நல்ல கலையாக்கமாக அமைந்திருக்க வேண்டும் என்று அக்கறைப்பட்டிருக்கலாம்.


உண்மையில், பாலியல் தொழிலாளர்களின் நிலைமையானது, இந்தப் படத்தில் உள்ளது போலக் குறைந்த பட்ச அளவில் கூடப் பாதுகாப்பானதாகவோ  சமூகக் கரிசனத்துக்குரியதாகவோ  ஆரோக்கியமானதாகவோ  இல்லை. தமிழ்ச்  சமூகத்தின் பாலியல் சார் பிரச்சினைகள்,  'இருண்ட'  அவலங்களாகப் பரந்து   கிடக்கின்றன. பல்வேறு சமூக, உளவியல் காரணங்களால் உருவாக்கப்பட்டு 'கவனிப்பாரற்று' அலைக்கழியும் பாலியல் தொழிலாளர்கள் பற்றியும், சமூகத்தின் பாலியல் சிக்கல்கள் பற்றியும்  சமூக, உளவியல் நிலைப்பட்ட  'ஆய்வுகள்' மேற்கொள்ளப்பட  வேண்டும்.


எது எப்படியிருந்தாலும் இத் திரைப்படமானது,  கவனிப்பிற்குரியதாக இருக்கிறது. இத்தகைய சமூகப் பிரச்சினைகள் பல்பரிமாணத்தன்மையுடன் அணுகப்படுவதும், கலாபூர்வமாக வெளிப்படுத்தப்படுவதும், சமூக மட்டத்தில் ஆரோக்கியமான நிலையில் முன்னெடுக்கப்படுவதும் அவசியமாகும்.

Tuesday, September 5, 2017

பாலியல் தொழிலாளர்கள்...


யாழ் நகரின் ஒரு பகுதி  (ஒளிப்படம் - அமரதாஸ்)



யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் பற்றிய சிறு பதிவை, முக நூல் வழியாகப் பார்க்க நேர்ந்தது. அது பலவகையில் முக்கியமானதொரு பதிவாக இருந்தது. அதைத் தொடர்ந்து இலக்கிய இதழ் ஒன்றின் 'பாலியல் நலம்' சார்ந்த கட்டுரையினைப் படிக்க முடிந்தது. அவையே, இப்போது என்னை இப் பதிவினை உடனடியாக எழுதத் தூண்டியிருக்கின்றன.


நீண்ட காலத்துக்கு முன்னர் (கிட்டத்தட்ட 'அறுபதுகள்', 'எழுபதுகள்' காலப்பகுதி), யாழ் நகர்ப்பகுதிகளில் 'உலாத்திய' பெண் பாலியல் தொழிலாளி, 'சோடாமூடி' என்ற பெயரால் நன்கு அறியப்பட்டிருந்தார். அந்தப் பெயருக்குப் பின்னே ஒரு 'வஞ்சகமான' கதை இருந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் 'கதையை' நான் முன்னரே அறிந்திருந்தேன். 'விளிம்புநிலை' மனிதர்களுடனேயே அவரது சகவாசம் பெரும்பாலும் இருந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவர், அக் காலத்தில் பலருக்கு வேடிக்கைக்குரியவராகவும் வெறுப்புக்குரியவராகவும் இருந்திருக்கிறார்.


தனிமைப்பட்டு பாலியல் தொழில் செய்ய முடியாத நிலையில் தளர்ந்துபோய் வைத்தியசாலை முன்பாகக் கடலை வியாபாரம் செய்து வந்த அந்த மனிதப் பிறவியை, 'ஆயுததாரிகள்' (ஏதோ ஒரு 'இயக்கம்' சார்ந்தவர்கள்.) சுட்டுக் கொன்றது, சமூக அவலங்களில் ஒன்றாகும்.


பல்வேறு சமூக, உளவியல் காரணங்களால் உருவாக்கப்பட்டு அலைக்கழியும் பாலியல் தொழிலாளர்களின் கதைகள், சமூக ஆய்வுகளுக்குரியவை. 'சோடாமூடி' எனப்படும் பெண்ணின் கதையானது, பலவகையான சிந்தனைகளையும் கேள்விகளையும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் எழுப்பக் கூடியது. அது, ஒரு திரைப்படம் ஆக்கப்படக்கூடியது. சந்தர்ப்பம் சரியாக அமைந்தால், அக் 'கதையை' 'ஆராய்ந்து', ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துவிடலாம் என்று தோன்றுகிறது. அதன் மூலம், தமிழ்ச் சமூகத்தின் பாலியல் சார் சிக்கல்களும் உள் முரண்களும் கசடுத்தனங்களும் கலாபூர்வமாகப் பேசப்படக்கூடும். பாலியல் தொழிலாளர்கள் சார்ந்த தமிழ்ப் படைப்புகள் (கதைகள்), ஜி.நாகராஜன் மற்றும் ஜெயகாந்தன் போன்றோரால் முன்வைக்கப்பட்டு தமிழ்ச் சூழலில் கவனிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன.


சர்வதேச ரீதியில் பாலியல் தொழிலாளர்களைப் பல வகையினராகப் பார்க்க முடியும். பெரும்பாலும் அவர்கள் பல்வேறு சமூக 'நிர்ப்பந்தங்களால்', மனப்பிறழ்வால் உருவாகியவர்களாகவே இருப்பார்கள். 'பகட்டான' வாழ்க்கைக்காகவும் உடல் இன்பத்துக்காகவும் ஒருவித சாகச மனோபாவத்திலும் சுய விருப்போடு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் கூட இருக்கக்கூடும்.


பல்வேறு சமூகக் காரணங்களால் உருவாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் இப்படியான மனிதர்களைப் பற்றி, பல இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறேன். இலங்கையில் இருந்து ஐரோப்பா வரையில் அறியக் கிடைத்த பாலியல் தொழிலாளர்கள் பற்றிய 'சித்திரங்கள்' விசித்திரமானவை.


போருக்குப் பிறகு, இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களின் மத்தியில் பாலியல் தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களால் 'உருவாக்கப்படுகிறார்கள்' என்று ஒரு கருத்து இருக்கிறது. உண்மையில், இது பரிசீலிக்கப்படவேண்டியதும் ஆய்வுசெய்யப்பட வேண்டியதுமாகும்.


பாலியல் சார்ந்த விழிப்புணர்வும் புரிந்துணர்வும் குறைவாக உள்ள தமிழ்ச் சூழலில் இத்தகைய விடையங்கள் பேசப்படுவது அரிது. பாலியல் வறுமையும் பாலியல் வன்முறைகளும் பாலியல் சார் பிரச்சினைகளும் அதிகரிக்கும் சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறுவதை விரும்புகிறவர்கள், சமூகவிரோதிகளாகவே இருக்க முடியும். மனித குலத்தின் ஆதார சக்திகளில் ஒன்றாகிய 'பாலியல்' பற்றிய விழிப்புணர்வும் புரிந்துணர்வும் அதிக அளவில் கொண்ட சமூகம் பெருமளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

- அமரதாஸ்
2017-09-05