Wednesday, May 22, 2019

நீதிகோரலை வீரியமாகத் தொடர்தல்

Photograph © Amarathaas - In Sri Lankan civil war (last war).

இலங்கையில், மிக நீண்டகாலம் தொடர்ந்த உள்நாட்டுப் போரானது, பேரழிவுகளோடு 2009 இல் முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் முடிவிற்கு வந்தது.

இறுதி யுத்தத்தில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் பலவற்றிற்கான ஆதாரங்கள் இருந்தும், எதுவும் 'முறையாக' இன்னமும் விசாரிக்கப்படவில்லை.

இலங்கையில் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட, போரிலே பலவகைகளிலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான 'பரிகார நீதி' இதுவரை கிடைக்கவில்லை.

ஒரு கொடிய போரின் மூலம் ஆயுதப் போராட்டம் இல்லாமலாக்கப்பட்டு, பத்து வருடங்களாகி விட்டன. பத்து வருட கால ஈழத்தமிழரின் ஒட்டுமொத்த வாழ்வியலில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஆரோக்கியமான முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த வருடத்தில் (2019), அப்பாவி மக்களைக் குறிவைத்துப் பயங்கரவாதக் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த இலங்கையின் நிலைமை மேலும் சீரழிந்திருக்கிறது. இத்தகைய மோசமான நிலைமை, இலங்கையினுள்ளே தொழிற்படக்கூடிய பேரினவாத அதிகார சக்திகளுக்கும் இலங்கையை முன்வைத்துச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சர்வதேச சக்திகளுக்கும் சாதகமானதாகவே இருக்கும். மத ரீதியான மற்றும் இன ரீதியான முரண்பாடுகள் மேலும் கூர்மைப்படுத்தப்படக் கூடும். இலங்கை அரசின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள்', இலங்கையின் சிறுபான்மை இனங்களை மோசமாகப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படக் கூடும்.

எது எப்படியிருந்தாலும், விழிப்புணர்வுடனும் ஒற்றுமையுடனும் சாத்தியமான ராஜதந்திர அணுகுமுறைகளுடனும் நீதிக்கான போராட்டங்களைத் தொடரவேண்டியவர்களாக ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.

பேரினவாதம், மதவாதம், தேசிய அடிப்படைவாதம் போன்றவற்றின் நிழல்களிலே தொழிற்படக்கூடிய அடிப்படைவாத சக்திகளிடம் இருந்து விலகியிருக்கும் கண்ணியத்தை ஈழத்தமிழினம் கொண்டிருக்க வேண்டும். மட்டுமல்ல, அத்தகைய தீய சக்திகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் ஓர்மத்தையும் ஈழத்தமிழினம் கொண்டிருக்க வேண்டும்.

நிகழ்ந்திருக்கும் அநீதிகள் குறித்த உரையாடல்களை அறிவுபூர்வமாகத் தொடர்வதும், நீதிக்கான போராட்டங்களைப் பல்வேறு தளங்களில் வீரியமாக முன்னெடுப்பதும் அவசியமாகும். வேண்டிய தருணங்களில் போராடிக்கொண்டிருப்பது மட்டுமல்ல, 'வேண்டாத இடங்களில்' விலகியிருப்பதும் விடுதலை அரசியல் செல்நெறிக்கு வேண்டியதாகும்.

2019-05-06
அமரதாஸ்