Saturday, September 16, 2017

திலீபன் - நிகழ்ந்திருக்கக் கூடாத நிகழ்வுகளின் நினைவுகள்.


அமரதாஸ்
2017-09-15

தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்து திரு. திலீபன் வகித்த பங்கு தனித்துவமானதாக நோக்கப்படுகிறது. உலகின் விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் தனித்துவமாக இடம்பெறும் போராளியாக அவர் அறியப்படுகிறார். 5 கோரிக்கைகளோடு முன்னெடுத்த உண்ணா நிலைப் போராட்டத்தில் உணவை மட்டுமல்ல, நீரையும் மருத்துவத்தையும் முற்றாகப் புறக்கணித்திருந்தார். சாகும் வரையான அவரது உண்ணா நிலைப் போராட்டத்தின் காலகட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில ஒளிப்படங்களின் பின்னணியில் இருக்கும் திரு.தேவர் மற்றும் திரு.ராஜன் போன்றவர்கள் எனக்கு இன்றுவரை நெருக்கமானவர்கள். அவர்கள் இப்போது வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் அவர்களோடு பேசுகிறபோது, திலீபனின் நினைவுகள் எழுவது வழக்கம். திலீபனின் தியாகச்சாவுக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஒளிப்படங்கள், என்னுள் பல நினைவுகளையும் கேள்விகளையும் கிளர்த்திக்கொண்டிருப்பவை. பெரும் சோகத்தையும் மறக்க முடியாத வரலாற்றையும் தாங்கியிருப்பவை அவை.



அப்போதிருந்த அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து, உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்வதென்று முடிவெடுத்த திலீபன், அதைத் தனக்கு நெருக்கமாக இருந்த ஒரு அரசியல் ஆய்வாளருக்கு முதலில்  சொல்லியிருக்கிறார். திலீபன் மேல் மிகுந்த அன்பும் நட்பும் கொண்டிருந்த அந்த அரசியல் ஆய்வாளர் அதை ஏற்கவில்லை. 'உன்னை எல்லோரும் சாகவிடுவார்கள், உனது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும், இந்த விசப்பரீட்சையைக் கைவிடு' என்று அப்போது திலீபனிடம் சொல்லியிருந்தார். (அவர் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் எனது  நீண்டகால நண்பர்களில் ஒருவர்.) 

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரனிடம் தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அனுமதிபெற்று உண்ணாநிலைப் போராட்டத்தைத் திலீபன் தொடர்ந்தார். தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதிருந்தால், மயக்கமுற்றிருந்தாலும் தனக்கு வைத்திய உதவிகள் எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லியிருந்தார்.



விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில், இந்திய இராணுவ காலகட்டமானது மிகுந்த நெருக்கடிக்குரியதாக இருந்தது. அன்றைய காலத்தின் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக திலீபனின் உண்ணா நிலைப் போராட்டத்தை விளங்கிக்கொள்ள முடியும். அது, இந்திய வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் அப்போது ஏற்பட்டிருந்த பலவீனமான நிலையினைச் சரிசெய்வதற்குமான முயற்சியாகவும் பார்க்கப்படலாம். எது எப்படியிருந்தாலும், திலீபனின் உண்ணா நிலைப் போராட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாது என்று தெரிந்துகொண்ட பின்னரும், அவரது இறப்பை யாராலும் தடுக்க முடியாமல் போனது ஒரு வரலாற்று அவலமாகவே எனக்குத் தெரிகிறது. தனக்கு நீரோ உணவோ வைத்தியமோ வழங்கக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லியிருந்தாலும், நீர் கூட அருந்தாமல் வதங்கிப்போய் மயங்கிக் கிடந்த கடைசி நேரத்திலாவது அவரை யாரும் சாவிலிருந்து காப்பாற்றியிருக்கக் கூடாதா...? இது எனது தனிப்பட்ட ஆதங்கமாகும். அவர் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும், காப்பாற்றப்பட்டிருக்க முடியும். 

'இங்கு ஓர் மலர் வாடுகின்றதே
இதய நாடிகள் ஒடுங்குகின்றதே 
தங்க மேனியை சாவு தின்னுதே 
தழலிலாடிய மேனி சோருதே 
பொங்கி நின்றவன் பேச்சடங்குதே 
பொழுது சாயுதே பொழுது சாயுதே 
வந்து பாரடா வந்து பாரடா 
வாடமுன்னொரு செய்தி கூறடா...' 
என்று திரு. புதுவை இரத்தினதுரையும்  
'ஐயா திலீபன்...எங்கைய்யா  போகின்றாய்...' என்று திரு. காசி ஆனந்தனும் தமது உணர்வுகளின் வரிகளை ஒலிபெருக்கிகளில் வழியவிட்டுக்கொண்டிருந்தார்கள். திரு. பிரபாகரன் வந்து, திலீபனின்  தலையைக் கோதிக்கொண்டிருந்தார். திலீபன் நினைவிழந்து போனதை மக்கள் பலரும் போராளிகள் சிலரும் விழிகள் கசியப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் சூழ்நிலையின் கைதிகளாக இருந்திருக்கக் கூடும். (அப்போது திலீபனின் பக்கத்தில் போராளிகளாய் இருந்த சிலர், திலீபனின் கனத்த நினைவுகளுடன் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.)    

இருந்த இடத்திலேயே அணுவணுவாய் இறந்துகொண்டிருந்த திலீபனைச் சுற்றிக் காத்திருந்தவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இறப்பை உறுதிசெய்து கொண்டே நினைவிழந்த திலீபனின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? இயலாமையின் விளைவான ராஜதந்திரத்தில் அந்தத் தியாகச் சாவு நிச்சயிக்கப்பட்டதா?  எது எப்படியிருந்தாலும், அதுவொரு மானுடப் பேரவலம். அது நடந்திருக்கவே கூடாத துன்பியல் நிகழ்வாகும். மானுட நேசர்களாலும் விடுதலை விரும்பிகளாலும் 'திலீபனின் தியாகம்' புரிந்துகொள்ளப்பட முடிந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.



திலீபனின் வேண்டுகோளுக்கு அமைவாக, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தனது உடல், கல்வித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பது அவரது விருப்பமாக இருந்தது. அங்கு அவரது உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தபோது நான் பார்த்திருக்கிறேன். கறுத்துப்போயிருந்த வெற்று உடலின் உட்புறம் தெரியும் நிலையில், சில இடங்கள் வெட்டப்பட்டிருந்தன. அவருக்கு இயல்பாகவே துருத்தலாக இருக்கும் பற்கள், மேலதிகமாகத் துருத்திக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அப்போது எனக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் பற்றி, இப்போது எழுத்தில் விபரிப்பது கடினம். அது இப்போது அவசியமுமில்லை. 

யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திலிருந்த திலீபனின் உடலானது, 'யாழ்ப்பாண இடப்பெயர்வுக் காலத்தில்' விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினரால் பெறப்பட்டு, வன்னிக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அது பாதுகாக்கப்பட்டு வந்தது. திலீபனின் உடல் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம், 'கிபிர்' தாக்குதலுக்கு உள்ளான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் 'பேழை' சேதமாகவில்லை. பின்னர் 'இறுதி யுத்த காலத்தில்', இடப்பெயர்வில் தொடர்ந்தும் காவிச்சென்று பாதுகாக்க முடியாதிருந்த நிலையில், அந்த உடல் புதைக்கப்பட்டுவிட்டது.

இதை அறிந்த, விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்த ஒரு நண்பனுடன் அண்மையில் இது பற்றி உரையாடினேன். யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திலேயேயே திலீபனின் உடலை விட்டு வைத்திருந்தால், அது இப்போதும் எப்படியோ பாதுகாப்பாக இருந்திருக்கக் கூடுமென்று அந்த நண்பனுக்குச் சொன்னேன். ஆனால், சிறிலங்கா அரசினால் அது பின்னர் அழிக்கப்பட்டிருக்கவும் கூடும்.



இறுதி யுத்த காலத்தின் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, நல்லூரில் திலீபனின் 'நினைவுக்கல்' வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று ஒளிப்படங்களை எடுத்திருக்கிறேன். அப்போது, பெரிதாக அமைக்கப்பட்டிருந்த திலீபனின் 'நினைவுத் தூபி' அழிக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் 'நினைவுக்கல்' அப்படியே இருந்தது. (அப்போது, அது யாராலும் கவனிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.) இதுவும் விட்டுவைக்கப்படாதென்று அப்போதே நினைத்திருந்தேன். நான் ஒளிப்படங்களை எடுத்த பிறகு, பின்னொரு காலத்தில் அந்த 'நினைவுக்கல்' சிறிலங்கா அரசினால் அழிக்கப்பட்டுவிட்டது. 


திலீபனின் உயிரை அவரது 'விருப்பத்திற்கு' மாறாகக் காக்க முடியவில்லை என்பது ஒருபக்க வரலாற்று அவலம். அவரது உடலை அவரது 'விருப்பத்திற்கு' அமைவாக, தொடர்ந்தும் காக்க முடியவில்லை என்பது இன்னொருபக்க வரலாற்று அவலமாகும். தமிழின விடுதலையை அவாவி, அதற்காக உழைத்த போராளி திலீபன் பற்றிய நினைவுகளும் வரலாறும் பேணப்பட  வேண்டியவை.  

பிற்குறிப்பு -  திலீபனின் வரலாற்றினைத் திரைப்படமாக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், உண்ணா நிலைப் போராட்டக் காட்சிகள் இன்னமும் படமாக்கப்படவில்லை என்று அறிய முடிந்தது. 'திலீபன்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட அத் திரைப்பட முயற்சியில், திலீபன் பாத்திரத்தில் நடித்த நடிகர் நந்தா மற்றும் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி ஆகியோருடன் அண்மையில் உரையாடியிருந்தேன். திரைப்படத்தைப் பூர்த்திசெய்து, இன்னமும் வெளிக்கொண்டுவர முடியாத நிலை தொடர்வதில், 'பண நெருக்கடி' முக்கிய காரணியாக இருக்கிறது என்று தெரிய வருகிறது. அத் திரைப்படத்தின் 'தரம்' எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. உண்மையான வரலாற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற அக்கறையோடு தான் அந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்று கருதுகிறேன். அதன் படப்பிடிப்பு  நடந்துகொண்டிருந்த காலத்தில், சென்னையில் நடிகர் நந்தாவை சந்தித்திருந்தேன். வன்னிப்பகுதியில் உருவாக்கப்பட்ட 'ஆணிவேர்' என்ற திரைப்படத்தில் ஒளிப்படக் கலைஞராக நான் பணியாற்றியபோது, அதில் நடித்த நந்தாவுடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டிருந்தது. 'திலீபன்' என்ற திரைப்பட முயற்சியில் சம்மந்தப்பட்டிருந்தவர்கள், ஆர்வமுள்ளவர்கள் அதனை நேர்த்தியுடன் வெளிக்கொண்டுவர முயற்சிப்பது நல்லது.