Monday, April 1, 2019

நண்பர் தி.தவபாலன் குறித்து...


ஊடகத் துறையில் அதிகமதிகம் இயங்கி, ஊடகராக அறியப்பட்ட  திரு.தவபாலன் எனது நெருங்கிய நண்பர். சிறந்த ஒளிப்படக்கலைஞர். காட்சிக் கலைகளில் அதிக ஈடுபாடுகள் கொண்டவர். வன்னிப்பகுதியில் சினமா, ஒளிப்படம் தொடர்பிலான எனது  பல்வேறு முயற்சிகளுக்கு ஊக்கசக்தியாக இருந்தவர்.

ஒளிப்படங்களுக்கான இணையத்தளம் ஒன்றை உருவாக்க விரும்பினோம். அதை உருவாக்கி, அவரும் நானும் இணைந்து செயற்படுவது பற்றிப் பலமுறை உரையாடியிருக்கிறோம். போர்க்காலத்துக்கேயான பல சிரமங்களுக்கு மத்தியிலும், 'ஈழ விசன்' என்ற பெயரிலே ஒளிப்படங்களுக்கான இணையத்தளம் தொடங்கப்பட்டு, ‘இறுதி யுத்த காலத்துக்கு’ முன்னர் காத்திரமாக இயக்கப்பட்டது. அதில், அவருடன் சேர்ந்து இயங்கியிருக்கிறேன். அதில், பிலிம் கமெராக்களால் உருவாக்கப்பட்ட எனது ஒளிப்படங்கள் பலவும் வெளியாகின. பிற்காலத்தில், அது முடக்கப்பட்டுவிட்டது. 

நண்பர் பாலகணேசனுடன் இணைந்து, எனது  விரிவான நேர்காணலைப் பதிவு செய்திருக்கிறார். அது, இறுதி யுத்தகாலத்துக்கு முன்னர், 'எரிமலை' என்னும் இதழில் வெளியாகியிருந்தது. தவபாலன், தனது விமர்சனங்களையும் கருத்துக்களையும் தயக்கமில்லாமல் நண்பர்கள் மத்தியில் முன்வைக்கக் கூடியவர். அறிவியல் சார் விடயங்களில் அதீத தேடல் கொண்டவர். எதையும் அறிவியல் ரீதியில் அணுகும் இயல்பைக் கொண்டிருந்தாலும், எளிதில் உணர்ச்சிவசப்படக்  கூடியவராகவும் இருந்தார்.


அரசியல் மற்றும் கலை இலக்கிய ரீதியிலான  சில கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும், மிக நீண்டகாலமாக நட்பில் தொடர்ந்தவர். 'முள்ளிவாய்க்கால்' வரை தொடர்பில் இருந்தவர். 'புலிகளின் குரல்' வானொலியின் செயற்பாடுகளோடு முடங்கிக்கிடக்கவேண்டியிருப்பதால், தன்னால் ஒளிப்படங்களை எடுக்கமுடியாதிருப்பதாகவும் என்னை ஒளிப்படங்களை எடுத்துத்தருமாறும் சொல்லிக்கொண்டிருந்தார். எனது, இறுதிப் போர்க்கால ஒளிப்படங்கள் பலவற்றை உடனுக்குடன்  வெளியுலகுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். போர் சார்ந்த 'அவலங்களை' கமெராவில் பதிவு செய்வதில், தனிப்பட்ட  முறையில் அவருக்கு அதிகம் உடன்பாடு இருந்ததில்லை. இருந்தாலும், போர்க்காலத்தில்  அவசியமாயிருந்த  அத்தகைய எனது பதிவுகள் பலவற்றையும் 'தேவை' கருதிப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். இறுதிப் போர்க்காலத்தில், இணைய வசதிகளைப் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்த மிகச் சிலரில் தவபாலனும்  ஒருவர்.



எதையும் அறிவியல் ரீதியில் ஆராயும் ‘பக்குவம்’ கொண்டிருந்தாலும், 'சில விடயங்களில்' உணர்ச்சிவசப்பட்ட நிலையில் முடிவெடுத்துவிடுவார். இதுபற்றிப் பலமுறை அவருக்கே சொல்லியிருக்கிறேன். இறுதி யுத்தகாலத்தில், விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ‘பொதுவெளியில்’ நியாயப்படுத்துபவராக, பிரச்சாரப்படுத்துபவராக  இருந்தார். தனிப்பட்ட முறையில் அதுபற்றிய விவாதங்கள் நமக்குள் நடந்திருக்கின்றன.   

இறுதி யுத்த காலத்தில், தவபாலன் போன்ற நண்பர்கள் பலரை இழக்க நேர்ந்துவிட்டது. அவர்களையெல்லாம் நினைக்கும் போது, துயரம் மேலிடுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை. 'நினைவுகளை' இலகுவில் கடந்து போய்விட முடியாது.



அவரும் நானும் இணைந்து  இயங்கிய கணங்களும் சேர்ந்து திரிந்த நாட்களும் பெறுமதியானவை, நினைவில் நிலைத்திருப்பவை. ஒரு காலத்தில் அடிக்கடி என்னை சந்திக்கிறவராக இருந்தார். வீட்டுக்கு வந்து அதிகநேரம் உரையாடும் சில நண்பர்களில் அவர் முக்கியமானவர். அவரது ஊடகப் பங்களிப்புகள் விமர்சனபூர்வமாக, உரிய முறையில் பதிவுசெய்யப்பட வேண்டும். வாழும் காலம் முழுதும் மறக்க முடியாத நண்பர்களில் ஒருவர் தவபாலன்.

அமரதாஸ்  2016-05-05