Tuesday, May 21, 2013

கோபுரங்கள் சாய்வதில்லை


 இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் திரைக்கதை,வசனம் அமைத்து இயக்கியிருந்ததாலும், இயக்குநரும் நடிகருமான சுஹாசினி நடித்திருந்ததாலும்  கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை, தனியார் தொலைக்காட்சி ஒன்றில், பொறுமையுடன் இருந்து அண்மையில் பார்த்து முடித்தேன்.  அறிமுகப் பாடகர் கிருஸ்ணச்சந்தரும் ஜானகியும்  பாடிய,  நல்ல இசை கொண்டிருந்ததால் நீண்டகாலத்துக்கு முன்னரேயே  எனக்குப் பிடித்திருந்த, பூவாடைக் காற்று...என்று தொடங்கும் பாடலையும் (படத்தில் இப் பாடல் நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கவில்லை.) சுஹாசினியின் அப்பாவித்தனமான நடிப்பையும் தவிர, படத்தில் வேறெதுவும் குறிப்பிடும் படியாகத் தோன்றவில்லை. நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற படத்தின் மூலமாக, இயக்குநர் மகேந்திரனால் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல நடிகையாக அறியப்பட்டவர் சுஹாசினி



இயக்குநரும் நடிகருமான  மணிவண்ணனுடன்
      தமிழகத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு, இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனைச் சந்தித்த போது மிகவும் தளர்ந்து போயிருந்தார். (விபத்து ஒன்றில் சிக்கி சரியாக நடக்கமுடியாமலிருந்தார்.) நீண்ட நேரம் உரையாடினார். ஈழத்தில் ஒரு படம் இயக்கவென முயற்சி செய்திருந்தார். (அதற்காக வன்னி மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார்.) அந்த முயற்சி கைகூடாமல் போனமைக்காக மிகவும் வருந்தினார். இப்போது ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். நல்ல படம் வருதோ இல்லையோ... ஒரு நல்ல மனிதர் இயங்கிக்கொண்டிருக்கிறார் என்பது சந்தோசம்.

இயக்குநரும் நடிகருமான சுஹாசினியுடன்
 

ஒளிப்பதிவாளர் செழியன், ஓவியர் மருது



    பரதேசி என்ற திரைப்படத்தினை அண்மையில் திரையரங்கினில் பார்த்தேன். தமிழ் சினமாவின் வழக்கமான  நோய்க் கூறுகள் குறைந்த படம். பல இடங்களில் செயற்கைத்தனம் தலை தூக்குகிறது. படத்தின் பலமான அம்சங்களிலொன்று செழியனின் ஒளிப்பதிவு. அதிகார வர்க்கத்தினதும் அடக்குமுறையினதும் தொடர்ச்சியை அழுத்தமாகப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர் பாலா. பரதேசி பற்றிய விரிவான விமர்சனம் எழுத விருப்பமிருந்தாலும் இப்போது அவகாசமில்லை.
    

    பரதேசி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்த போது, சென்னையில்  இயக்குநர் பாலாவின் அலுவலகத்தில் ஒளிப்பதிவாளர் செழியனை சந்திக்க நேர்ந்தது. ஓவியரும் சினமா துறை வல்லுநரும் கலை இயக்குநரும்  நீண்ட கால நண்பருமான மருது வுடன் அவரது வீட்டில் உரையாடிக்கொண்டிருந்த போது, செழியனைப் பற்றிய பேச்சு வந்தது. செழியனின் நெருங்கிய நண்பராக இருப்பவர் மருது. செழியனிடம் என்னை அனுப்பி வைத்தார். இயக்குநரும்  நீண்ட கால நண்பருமான பிரசன்ன விதானகே யின் நண்பராகவும் இருப்பவர் செழியன். 
  

    செழியன் ஒளிப்பதிவு செய்த தென்மேற்குப் பருவக்காற்று தமிழின் குறிப்பிடத் தகுந்த திரைப்படம். உலகத் திரைப்படங்கள் பற்றிய அறிமுகப்படுத்தல்களை தமிழில் மேற்கொள்பவர் செழியன். உலக சினிமா-பாகம் ஒன்று  தவிர அவர் எழுதிய எல்லா நூல்களும் என்னிடமிருந்தன. இல்லாதிருந்த நூலை ஆனந்த விகடன் பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ள உதவினார்.  தமிழில் நல்ல சினமா அனுபவம் கிடைக்கச் செய்யும் நண்பர் செழியனுக்கும் நண்பர் மருதுவிற்கும் நன்றியையும் அன்பையும் பதிவு செய்கிறேன்.


கலை இயக்குநரும் ஓவியருமான மருதுவுடன்

எழுத்தாளரும் ஒளிப்பதிவாளருமான செழியனுடன்