Friday, June 1, 2018

ராஜ்குமாரும் நானும் அல்லது சென்னையும் சினிமாவும்.

ராஜ்குமார் & அமரதாஸ் (WOODLANDS SYMPHONY திரையரங்கு)

சினிமாவில் தீவிர ஈடுபாடு கொண்டவன் ராஜ்குமார். சென்னையில், திரைத்துறையில் இயங்கும் நண்பன் சோமிதரன் வீட்டில் அவன் தங்கியிருந்தபோதுதான் அவனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது சென்னையில் திரைப்பட விழா நடைபெற்றது. தினமும் அவனோடு சென்று பல மொழிகள் சார்ந்த பல்வேறு திரைப்படங்கள் பார்த்தேன்.

சினிமா பற்றி அதிகம் பேசுவான், கேட்பான். அவனுக்கு, வளர்ந்துவரும் HDSLR Film Making பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், காசநோய் விழிப்புணர்வு குறித்த ஒரு குறும் திரைப்படப் போட்டிக்கு அனுப்பவென ஒரு குறும் திரைப்படம் உருவாக்குவோமென்றும், அதற்கு நான்தான் என்னிடமிருந்த Canon HDSLR கமெராவினால் ஒளிப்பதிவு செய்யவேண்டுமென்றும் சொன்னான். அவனது தீவிரம் எனக்கு விளையாட்டுத்தனமாகவே ஆரம்பத்தில் தெரிந்தது. தவிரவும், கலை ரீதியில் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இல்லை. அவனது வற்புறுத்தலால் அவனோடு இணைந்து சென்னையில் பல இடங்களுக்கும் சென்று படப்பிடிப்புக்களை மேற்கொண்டேன்.
கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவே படப்பிடிப்பு நிகழ்ந்தது. பரீட்சார்த்த முயற்சியாகவும் இருந்தது. பல காட்சிகளைத் உள்ளடக்கம் சார்ந்து, திட்டமிட்டே Out Of Focus நிலையில் எடுத்தேன். கமெரா அசைவுகள், கமெரா கோணங்கள், ஒளியமைப்பு எல்லாவற்றையும் வித்தியாசப்படுத்தியும் எடுத்தேன். என்னைக் கூட வைத்துக்கொண்டு ஒரு பரிசோதனை முயற்சியைத்தான் அவன் செய்துகொண்டிருந்தான். அடிக்கடி திட்டங்களை மாற்றிக்கொண்டிருந்தான். அதிகம் திட்டமிடல் இல்லாமல் இயங்கினான். சிலசமயம் எனக்கு சலிப்பாகவுமிருந்தது, என்னை வைத்துக் ‘கொமெடி’ பண்ணுவது போலவும் இருந்தது.
ஒரு நாள், ஒருவர் இருமுவதுபோல ஒரு காட்சி எடுக்கவேண்டியிருந்தது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ஒரு இடத்தில் நின்று கொண்டு, பலரை வந்து கமெரா முன்னால் இருமச் சொன்னோம். எல்லோரும் மறுத்து நழுவி விட்டனர்.(காசநோய் பற்றிய படம் எடுக்கிறோம் என்று தெரிந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ?) கடைசியில் கமெராவை 'செற்' பண்ணித்தந்துவிட்டு நீங்களே போய் இருமுங்கள் என்று வற்புறுத்தினான். வேறு வழியில்லாமல் நானே கமெரா முன்னால் இரும வேண்டியிருந்தது. அந்த மோசமான இருமலைப் படத்தொகுப்பில் சேர்க்காதே என்று அப்போதே சொன்னேன். அவன் வேறு வழியில்லாமல் அதையே கோர்த்துவிட்டிருந்தான்.
படப்பிடிப்பை வேகமாக ஒரு வாரத்தில் முடித்துவிட்டு வேறு இடம் சென்றுவிட்டேன். நீண்டகாலம் அவனை நேரில் சந்திக்கவில்லை. நான் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் அவசரகதியில் படத்தொகுப்பு செய்யப்பட்டு அவனால் போட்டிக்கு அனுப்பப்பட்டது. போட்டி விதிமுறைகளுக்கு சரியாகப் பொருந்தியிருக்கவில்லையென்றும், பொதுவாக நன்றாக வந்திருப்பதாகவும் அங்கு தேர்வாளர்களாக இருந்த நடிகர் சூர்யா வும், இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனனும் சொல்லி அந்தப் படத்தைச் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்தார்களென்று பிறிதொரு நாளில் ராஜ்குமார் சொன்னான். படத்தொகுப்பின் பின் அது ஒரு பரீட்சார்த்த நிலையிலான Documentary ஆகிவிட்டிருந்தது.
சென்னையில் உள்ள L.V.Prasad Film & TV Academy க்கு ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றேன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்குநர் பிரிவுகளில் இணைந்து திரைத்துறை அனுபவங்களை விரிவுபடுத்தும் நோக்கில், அதன் இயக்குநராக இருந்த ஹரிஹரன் அவர்களைச் சந்தித்தேன். ராஜ்குமார், அங்கு எனது கமெராவினால் சில ஒளிப்படங்களும் எடுத்தான். அங்கிருந்த கமல்ஹாசனின் படத்துக்கு அருகே நான் எதிர்பாராத விதமாக ஒரு படத்தை எடுத்துவிட்டு என்னவோ காரணத்துக்காக அது தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னான். எனக்கு, அது கொஞ்சம் செயற்கைத்தனமாகத் தோன்றுவதால் பிடிக்கவில்லை என்று சொன்னேன்.
L.V.Prasad Film & TV Academy யில் இருந்து திரும்பி வந்ததும், இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனின் Mindscreen Film Institute சென்று இயக்குநர் பிரிவில் இணைந்துகொள்ளவிருந்த திட்டத்தைக் கைவிட்டு L.V.Prasad Film & TV Academy யில் இயக்குநர் பிரிவில் இணைந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னான். பிறகு அப்படியே இணைந்து கொண்டான். நல்ல இயக்குநராகி விடுவான் என்று நினைத்திருந்தேன்.
நீண்ட காலம் அவனோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மிக அண்மையில், திரைத்துறையில் இயங்கும் நண்பன் அரவிந்த் மூலம் ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டான் என்ற தகவலை அறிந்தேன். துயரமும் அவனோடு சென்னையில் திரிந்த நினைவுகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன.
ராஜ்குமார்..... உனக்கு என்னடா ஆச்சு? என்னென்னவோ எல்லாம் செய்யவேணுமென்று சொல்லிக்கொண்டிருந்தாயே....

திரு.ஹரிஹரன் & அமரதாஸ் - ராஜ்குமார் எடுத்த படம்.

ராஜ்குமார் எடுத்த படம்.


ராஜ்குமார் எடுத்த படம். (L.V. Prasad Film & TV Academy)

ராஜ்குமார் எடுத்த படம். (L.V. Prasad Film & TV Academy)



சோமிதரன் வீட்டில், சோமிதரனின் அம்மா  மற்றும் ராஜ்குமார்.

அமரதாஸ் 2015-12-20