Tuesday, April 10, 2018

ஈழம் சினமா - அனுபவ விமர்சனக் குறிப்புகள்.


 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காட்சியூடகப் பிரிவாகிய நிதர்சனம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் இருந்து முக்கிய பங்காற்றியவர் திரு.ஞானரதன் (சச்சி). அவரது சினமா முயற்சிகள், 'ஈழம் சினமா' என்னும் கருத்தியல் (Ideology) மற்றும் நடைமுறைத் தளத்தின் ஆரோக்கியமான தொடக்கமாக அடையாளம் காணப்படக்கூடியதாக இருந்தன.

ஒரு காலத்தில், திரு. பாலுமகேந்திரா போன்ற கலைஞர்களுடன் அவர் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பும் இலக்கிய ஈடுபாடுகளும் அவரது ஈழ சினமா முயற்சிகளுக்கு வலுச்சேர்த்திருக்கின்றன. ஆனால் அவரது முயற்சிகளுக்குப் போதிய வளங்களும், வரவேற்பும், ஊக்குவிப்பும் போதிய அளவு கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அவரது மறைவுக்குப் பின்னரும் அவரது படைப்புகள் பெரிதாகக் 'கண்டுகொள்ளப்படவில்லை' என்றே கருதுகிறேன்.

அவரது 'முகங்கள்', 'காற்றுவெளி' ஆகிய திரைப்படங்களும் 'நேற்று' போன்ற குறுந்திரைப்படங்களும் சில புனைவுசாராத் திரைப்படங்களும் ஆரோக்கியமான ஈழ சினமா முயற்சிகளாக இனங்காணப்படக் கூடியவை. ('கரும்புலிகள்' தொடர்பான அவரது திரைப்படமொன்று, அநாவசியமான 'தலையீடுகளால்' சிதைவடைந்து போனது வேறு கதை.)

ஞானரதன் இப்போது இல்லை. அவருக்கு முன்னரே திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டவர் திரு. கேசவராஜன். அந்த வகையில் ஈழ சினமாவிலே கேசவராஜனின் வகிபாகம் குறிப்பிடத்தகுந்தது. (ஞானரதன், கேசவராஜன் ஆகிய இருவருடனும் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன்.)

ஞானரதனின் மறைவுக்குப் பின்னர், வன்னிப் பகுதியில் வெளியாகிய 'வெளிச்சம்' இதழில், அவரைப் பற்றியும் அவருடனான எனது அனுபவங்கள் பற்றியுமான கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தேன். அக் காலத்தில், கிளிநொச்சியில் 'அழகியல் கலா மன்றம்' இயங்கியது. அங்கு, ஞானரதன் இயக்கிய திரைப்படங்களை சுயாதீன முயற்சியில் காட்சிப்படுத்தி, ஈழ சினமாவை ஆரோக்கியமாக முன்னெடுப்பது பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்தியிருக்கிறேன். அழகியல் கலா மன்ற அனுசரணையுடன், 'Wide Vision Studio' என்ற பெயரில் நான் சுயாதீனமாக உருவாக்கியிருந்த அமைப்பின் சார்பிலே உலகத் திரைப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்திக் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கிறேன்.

ஈழத்தில், குறிப்பாக வன்னிப் பகுதியில் தமிழகக் கலைஞர்களும் ஈழக் கலைஞர்களும் விடுதலைப் புலிகள் இயக்கமும் இணைந்து மேற்கொண்ட 'மிகப் பெரிய' சினமா முயற்சிகள் இரண்டு. ஒன்று 'ஆணிவேர்'. மற்றையது 'எல்லாளன்'. இரண்டிலும் எனது நேரடியான 'பங்களிப்புகளை' வழங்கியிருக்கிறேன். (நிறுவன ரீதியான அழைப்பின் நிமித்தம், அத்தகைய ஈழ சினமா சார் பணிகளிலே ஈடுபடநேர்ந்திருக்கிறது.) 'ஆணிவேர்', 'எல்லாளன்' ஆகிய இரண்டுமே 'குறைப் பிரசவங்களாக' அல்லது குறைபாடுகளுடன் கூடிய முயற்சிகளாகப் போனமைக்குப் பல காரணங்கள் உள்ளன. இடையிலே பல 'குளறுபடிகள்' நடந்திருக்கின்றன. அவை பற்றிப் பேசுவதால், இனிப் பெரிதாக எந்தப் பயனுமில்லை. ஆனால், ஈழ சினமா முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையிலே சில வரலாற்று உண்மைகளை, விமர்சனபூர்வமாகப் பதிவு செய்வதும் பேசுவதும் அவசியங்களாகும்.

அந்த இரண்டு முயற்சிகளிலும் உள்வாங்கப்பட்டிருந்த தமிழகக் கலைஞர்களின் தெரிவிலும் அவர்கள் கையாளப்பட்ட முறையிலும் 'போதிய கவனம்' செலுத்தப்படவில்லை என்பது பிரதானமான குறைபாடாகும். நிதர்சனம் நிறுவனத்தின் பணியாளர்களாகவும் ஒப்பீட்டளவில் சாதகமான ஈழ சினமா முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிலையிலும் இருந்த சிலர், சரியான முறையில் இனங்காணப்பட்டு, போதிய கவனத்துடன் வளர்த்தெடுக்கப்படவில்லை. தமிழகக் கலைஞர்கள் தொடர்பான அணுகுமுறைகளில் அநாவசியமான 'மயக்கம்' மற்றும் அவர்களது ஆளுமைகள் தொடர்பிலான மிகைமதிப்பீடு போன்றவற்றால் அருகில் இருந்த ஆளுமையாளர்கள் போதிய மதிப்பீடுகளுடன் கையாளப்படவில்லை. போராளிகள், பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் மத்தியில் ஆளுமையுடன் வளர்ந்து வந்தவர்கள் அதிகம் 'கவனிக்கப்படவில்லை'.

நிறுவன ரீதியான பெரும்பாலான முயற்சிகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பரப்புரைத் தேவைகளுக்கானவையாகவே மேற்கொள்ளப்பட்டன. எனினும், தென்னிந்திய தமிழ் சினமாவிற்கு மாற்றாகத் தனித்துவமான சினமா முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்னும் அக்கறை, விடுதலைப் புலிகள் இயக்க மட்டத்தில் குறிப்பாக அதன் தலைவர் திரு.பிரபாகரனின் மனதில் இருந்தது. வன்னியிலே விடுதலைப் புலிகளின் நிழல் அரசு இயங்கிய காலத்தில் காட்சியூடகங்கள் சார்ந்த பிரிவுகளுக்காக, பெருமளவிலான பொருளாதார வளங்கள் பிரயோகிக்கப்பட்டன. பல நவீன உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. நிதர்சனம் நிறுவனமானது, சில காரணங்களால் இரண்டு பிரிவுகள் ஆனது. தொலைக்காட்சிப் பிரிவு ('தமிழீழ தேசியத் தொலைக்காட்சி') தனியாகவும் 'திரைப்பட உருவாக்கப்பிரிவு' தனியாகவும் இயக்கப்பட்டு, பல்வேறு 'திட்டங்கள்' முன்னெடுக்கப்பட்டன. அப்போது, ஏற்கெனவே இயங்கிவந்த திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவின் (ரதன் கலையகம்) பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இன்னொரு பக்கமாக, இங்கிலாந்தைச் சேர்ந்த 'ஸ்கிரிப்ற் நெற்' என்ற நிறுவனத்தின் சுயாதீனமான சினமா சார் 'கற்பித்தல்' முயற்சிகள், ஈழ சினமா தளத்திற்கு வலுச்சேர்த்தன என்றே சொல்ல வேண்டும். 'ஸ்கிரிப்ற் நெற்' செயற்பாடுகளுக்கு, குறிப்பிட்ட அளவில் நிதர்சனம் நிறுவனத்தின் அனுசரணை வழங்கப்பட்டிருந்தது என்பது இவ்விடத்தில் பதிவுசெய்யப்பட வேண்டியது.

திரு. தங்கர் பச்சான், திரு. அறிவுமதி, திரு. பாரதிராஜா, திரு. புகழேந்தி தங்கராஜ், திரு. மணிவண்ணன், திரு. மகேந்திரன், திரு. சீமான் உட்படத் தமிழகத்தைச் சேர்ந்த சினமா சார் கலைஞர்கள் பலர் பல்வேறு நோக்கங்களுக்காக வன்னிக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். (சினமா சாராத வேறு சிலரும் வேறு நோக்கங்களுக்காக அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள்.) அவர்களிற் பலரும், ஈழ சினமா சார்ந்து 'போதிய விளக்கத்துடன்' அல்லது 'நியாயமான முறையில்' கையாளப்படவில்லை. அத்தகையவர்களுடனான தொடர்புகள், நியாயமான முறையிலே தொடர்ச்சியாகப் பேணப்படவில்லை. ஆனாலும், ஒப்பீட்டளவிலே நியாயமான முறையில் வன்னியிலே பயன்பட்டவர் இயக்குநர் திரு. மகேந்திரன். போராளிகள் மற்றும் கலைஞர்கள் சிலருக்கு, சினமா சார்ந்த 'பயிற்சிகளை' அவர் வழங்கியிருக்கிறார். 'நடிப்பு என்பது' என்ற நூலை, அங்கிருந்து தான் அவர் எழுதினார்.

சீமான், தனது வன்னிப் பயணத்தின் பெறுபேறுகளைத் தனக்கான 'சுயநல அரசியல்' சார்ந்து, 'கேலிக்குரிய' முறையில் பயன்படுத்தியிருக்கிறார் என்பது வருத்தத்திற்குரியதும் கண்டிக்கப்படவேண்டியதுமாகும். ஈழ விடயங்கள் சார்ந்த, மிகை புனைவுடனும் மிகையுணர்ச்சியுடனும் கூடிய அவரது பேச்சுகள், 'உண்மைகளை' அறிந்தவர்கள் மத்தியில் 'எடுபடுவது' இல்லை.

சீமான், வன்னிக்கு வந்திருந்த போது சந்தித்திருக்கிறேன். அப்போது அவரது பிரதான அடையாளம் திரைப்பட இயக்குநர் என்பதாகவே இருந்தது. அப்போது 'நாம் தமிழர்' கட்சி இருக்கவில்லை. 'எல்லாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். அதன் பிறகு அவருக்கும் அத் திரைப்படத்திற்கும் சம்மந்தம் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலர் அதில் பணியாற்றினர். அந்தத் திரைப்பட உருவாக்கத்தின் ஒளிப்படக்கலை சார் பணிகள், உத்தியோக பூர்வமாக என்னுடையதாகவே இறுதிவரை இருந்தன. மிகவும் நெருக்கடியான போர்ச் சூழல்களுக்கு மத்தியில் நடைபெற்ற ஒரு தீவிரமான முயற்சி அது.


நிதர்சனம் நிறுவனத்திற்கு, எழுதப்படாத இறுக்கமான 'தணிக்கை முறைகளும்' விடுதலைப் புலிகள் இயக்க நலன் சார்ந்த 'பிரத்தியேகத் தேவைகளும்' இருந்தன. ஆரோக்கியமான சினமா முயற்சிகளில் ஈடுபடக் கூடிய சிலர், பல்வேறு நெருக்கடிகள் மற்றும் போதாமைகள் மத்தியில் நீண்ட காலமாக அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறார்கள். நிதர்சனம் நிறுவனத்துடனான எனது உறவு நிலையானது, எப்போதும் சுமுகமானதாகவோ தொடர்ச்சியானதாகவோ இருந்ததில்லை. 'விமர்சனபூர்வமான' எனது அணுகுமுறை அதற்குக் காரணமாக இருக்கக்கூடும். பொதுவாக, விடுதலைப் புலிகள் சார்ந்த ஊடகவியல் நிறுவனங்களின் போதாமைகளுக்கு, 'உள் முரண்பாடுகள்', வசதியீனங்கள், கட்டுப்பாடுகள் அல்லது தணிக்கை முறைகள் போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தன. எது எப்படியிருந்தாலும், நிதர்சனம் நிறுவனத்தின் சமூக மற்றும் அரசியல் ரீதியான பங்களிப்புகள் குறைவானவையல்ல. ஈழ சினமா சார்ந்த அதன் முயற்சிகள், ஆக்கபூர்வமான விமர்சன நோக்கில் (constructive criticism) அணுகப்பட வேண்டியவை. அவை, விரிவாக ஆராயப்பட்டு உண்மைத்தன்மையோடு ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. 

2018-04-10
அமரதாஸ்