Monday, April 30, 2018

அவலச் சாவுகளும் கேள்விகள் சிலவும்.



விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 'முன்னாள் போராளிகள்' சிலர், புற்றுநோயினாலும் வேறு சில காரணங்களாலும் சாவடைவதாக அவ்வப்போது அறியப்படுகிறது. மிக அண்மையிலும் அத்தகைய ஒருவர் புற்றுநோயினால் சாவடைந்திருப்பதாகத் தெரியவருகிறது. இத்தகைய சாவுகளும் அவை தொடர்பிலான செய்திகளும் தமிழ்ச் சமுகத்தின் மத்தியில் அவலங்களையும் அச்சங்களையும் விதைத்து வருகின்றன. தமிழ் அரசியலாளர்கள் உட்பட யாருமே அத்தகைய சாவுகளுக்கான காரணங்களை, மருத்துவ விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து 'உண்மைகளை' வெளிப்படுத்த முன்வருகிறார்களில்லை என்பது தமிழினத் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் பின்னடைவே.


புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த பலரும் சிறிலங்கா அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு 'மெல்லக் கொல்லும்' விச மருந்து ஏற்றப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் பரவலாகி வருகிறது. புலிகள் இயக்கத்தவர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடயங்களில் சிறிலங்கா அரசு மோசமாக நடந்துவந்திருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியக் கூடிய நிலையில், தமிழ் தேசிய அரசியலாளர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களால் ஆரோக்கியமான எதிர்வினைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது எதனால்? தமிழ் தேசிய அரசியல் எனப்படுவது பதவிகளை அடையப் பயன்படுகிற ஏணி போன்ற ஒரு பொருளா?

சிறீலங்கா அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 'முன்னாள் போராளிகள்' அனைவருமே முன்னாள் அரசியல் கைதிகளாகப் பார்க்கப்பட வேண்டியவர்களே. அவர்களது வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் சிறிலங்கா அரசு போதிய அளவிலான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை. யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் 'நீதி' உறுதிசெய்யப்படவில்லை. முன்னாள் அரசியல் கைதிகள் பற்றிய விடயங்களில், 'புனர்வாழ்வு' என்ற பொருத்தமற்ற பிரயோகத்தை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். 'புனர்வாழ்வு அளிக்கப்பட்ட...' அல்லது 'புனர்வாழ்வின் பின்னர்...' போன்ற மொழிப் பிரயோகங்கள், கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியில் தவறானவை.

'தீவிர தமிழ் தேசிய வாதிகளும்' விடுதலைப் புலிகளின் 'தீவிர ஆதரவாளர்களும்' முன்னாள் அரசியல் கைதிகளின் சாவுகள் தொடர்பில் சிறிலங்கா அரசைக் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய்த்தாக்கம் இருப்பதாக அறியப்படவில்லை என்றாலும், அத்தகையவர்களுக்கு இனி எதுவும் நடந்துவிடாது என்பதற்கான உத்தரவாதமில்லை. நோய்த்தாக்கத்தினால் அவ்வப்போது நிகழும் அவலச் சாவுகளில் சிறிலங்கா அரசின் நேரடியான, மறைமுகமான காரணங்கள் மட்டுமில்லாமல், வேறு சில காரணங்களும் இருக்கக் கூடும். எதையும் முறையாக ஆய்வு செய்தால் தானே எதையும் உறுதிப்படுத்த முடியும். இந்த விவகாரமானது முன்னாள் அரசியல் கைதிகள் மத்தியில் மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியிலும் அச்சங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வலுவாக சந்தேகிக்கப்படுகிற எதுவும் உறுதிப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும் வெறுமனே 'வதந்தி' ஆக்கப்படுவதும் ஊழல் அரசியலாகும்.

இலங்கையில் தற்போது நிகழும் தமிழ் அரசியலானது மிகவும் பலவீனமானது. தமிழ் தேசிய இனத்தின் பாதுகாப்பை, கண்ணியத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான 'போராட்ட வழிமுறையாக', தேசியக் கவசமாகத் தமிழ் அரசியல் அமைந்திருக்க வேண்டும். கட்சி அரசியல் அல்லது ஓட்டு அரசியல் வழிமுறைகளுக்கு வெளியே, ஜனநாயக வழிமுறைகளுடன் கூடிய 'இயக்க' அரசியலாகத் தமிழ் தேசிய அரசியலை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கக் கூடிய அர்ப்பணிப்புணர்வு மிக்க 'தமிழ் தேசிய அரசியல் போராளிகள்' உருவாக வேண்டும்.

பின் இணைப்பு - முன்னாள் அரசியல் கைதியாக இருந்தவரும், தற்போது புற்று நோய்ப் பாதிப்பில் சாவடைந்து விட்டவருமான இந்த இளைஞரின் படம் என்னைப் பலவகையில் பாதித்தது. உண்மையில், எனது இந்தப் பதிவுடன் இந்தப் படத்தைப் பயன்படுத்துவதற்கு விரும்பியிருக்கவில்லை. முதலில், பலமுறை பல கோணத்தில் யோசித்தேன். பிறகு, இதுவே பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதனை இணைத்துக்கொண்டேன். இந்தப் படத்தில் தொனிக்கும் 'பார்வையும்' உடல்மொழியும் தீவிரமானவை, தீராக் கேள்விகளைக் கிளர்த்துபவை.

2018-04-30
அமரதாஸ்



Tuesday, April 10, 2018

ஈழம் சினமா - அனுபவ விமர்சனக் குறிப்புகள்.


 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காட்சியூடகப் பிரிவாகிய நிதர்சனம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் இருந்து முக்கிய பங்காற்றியவர் திரு.ஞானரதன் (சச்சி). அவரது சினமா முயற்சிகள், 'ஈழம் சினமா' என்னும் கருத்தியல் (Ideology) மற்றும் நடைமுறைத் தளத்தின் ஆரோக்கியமான தொடக்கமாக அடையாளம் காணப்படக்கூடியதாக இருந்தன.

ஒரு காலத்தில், திரு. பாலுமகேந்திரா போன்ற கலைஞர்களுடன் அவர் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பும் இலக்கிய ஈடுபாடுகளும் அவரது ஈழ சினமா முயற்சிகளுக்கு வலுச்சேர்த்திருக்கின்றன. ஆனால் அவரது முயற்சிகளுக்குப் போதிய வளங்களும், வரவேற்பும், ஊக்குவிப்பும் போதிய அளவு கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அவரது மறைவுக்குப் பின்னரும் அவரது படைப்புகள் பெரிதாகக் 'கண்டுகொள்ளப்படவில்லை' என்றே கருதுகிறேன்.

அவரது 'முகங்கள்', 'காற்றுவெளி' ஆகிய திரைப்படங்களும் 'நேற்று' போன்ற குறுந்திரைப்படங்களும் சில புனைவுசாராத் திரைப்படங்களும் ஆரோக்கியமான ஈழ சினமா முயற்சிகளாக இனங்காணப்படக் கூடியவை. ('கரும்புலிகள்' தொடர்பான அவரது திரைப்படமொன்று, அநாவசியமான 'தலையீடுகளால்' சிதைவடைந்து போனது வேறு கதை.)

ஞானரதன் இப்போது இல்லை. அவருக்கு முன்னரே திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டவர் திரு. கேசவராஜன். அந்த வகையில் ஈழ சினமாவிலே கேசவராஜனின் வகிபாகம் குறிப்பிடத்தகுந்தது. (ஞானரதன், கேசவராஜன் ஆகிய இருவருடனும் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன்.)

ஞானரதனின் மறைவுக்குப் பின்னர், வன்னிப் பகுதியில் வெளியாகிய 'வெளிச்சம்' இதழில், அவரைப் பற்றியும் அவருடனான எனது அனுபவங்கள் பற்றியுமான கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தேன். அக் காலத்தில், கிளிநொச்சியில் 'அழகியல் கலா மன்றம்' இயங்கியது. அங்கு, ஞானரதன் இயக்கிய திரைப்படங்களை சுயாதீன முயற்சியில் காட்சிப்படுத்தி, ஈழ சினமாவை ஆரோக்கியமாக முன்னெடுப்பது பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்தியிருக்கிறேன். அழகியல் கலா மன்ற அனுசரணையுடன், 'Wide Vision Studio' என்ற பெயரில் நான் சுயாதீனமாக உருவாக்கியிருந்த அமைப்பின் சார்பிலே உலகத் திரைப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்திக் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கிறேன்.

ஈழத்தில், குறிப்பாக வன்னிப் பகுதியில் தமிழகக் கலைஞர்களும் ஈழக் கலைஞர்களும் விடுதலைப் புலிகள் இயக்கமும் இணைந்து மேற்கொண்ட 'மிகப் பெரிய' சினமா முயற்சிகள் இரண்டு. ஒன்று 'ஆணிவேர்'. மற்றையது 'எல்லாளன்'. இரண்டிலும் எனது நேரடியான 'பங்களிப்புகளை' வழங்கியிருக்கிறேன். (நிறுவன ரீதியான அழைப்பின் நிமித்தம், அத்தகைய ஈழ சினமா சார் பணிகளிலே ஈடுபடநேர்ந்திருக்கிறது.) 'ஆணிவேர்', 'எல்லாளன்' ஆகிய இரண்டுமே 'குறைப் பிரசவங்களாக' அல்லது குறைபாடுகளுடன் கூடிய முயற்சிகளாகப் போனமைக்குப் பல காரணங்கள் உள்ளன. இடையிலே பல 'குளறுபடிகள்' நடந்திருக்கின்றன. அவை பற்றிப் பேசுவதால், இனிப் பெரிதாக எந்தப் பயனுமில்லை. ஆனால், ஈழ சினமா முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையிலே சில வரலாற்று உண்மைகளை, விமர்சனபூர்வமாகப் பதிவு செய்வதும் பேசுவதும் அவசியங்களாகும்.

அந்த இரண்டு முயற்சிகளிலும் உள்வாங்கப்பட்டிருந்த தமிழகக் கலைஞர்களின் தெரிவிலும் அவர்கள் கையாளப்பட்ட முறையிலும் 'போதிய கவனம்' செலுத்தப்படவில்லை என்பது பிரதானமான குறைபாடாகும். நிதர்சனம் நிறுவனத்தின் பணியாளர்களாகவும் ஒப்பீட்டளவில் சாதகமான ஈழ சினமா முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிலையிலும் இருந்த சிலர், சரியான முறையில் இனங்காணப்பட்டு, போதிய கவனத்துடன் வளர்த்தெடுக்கப்படவில்லை. தமிழகக் கலைஞர்கள் தொடர்பான அணுகுமுறைகளில் அநாவசியமான 'மயக்கம்' மற்றும் அவர்களது ஆளுமைகள் தொடர்பிலான மிகைமதிப்பீடு போன்றவற்றால் அருகில் இருந்த ஆளுமையாளர்கள் போதிய மதிப்பீடுகளுடன் கையாளப்படவில்லை. போராளிகள், பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் மத்தியில் ஆளுமையுடன் வளர்ந்து வந்தவர்கள் அதிகம் 'கவனிக்கப்படவில்லை'.

நிறுவன ரீதியான பெரும்பாலான முயற்சிகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பரப்புரைத் தேவைகளுக்கானவையாகவே மேற்கொள்ளப்பட்டன. எனினும், தென்னிந்திய தமிழ் சினமாவிற்கு மாற்றாகத் தனித்துவமான சினமா முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்னும் அக்கறை, விடுதலைப் புலிகள் இயக்க மட்டத்தில் குறிப்பாக அதன் தலைவர் திரு.பிரபாகரனின் மனதில் இருந்தது. வன்னியிலே விடுதலைப் புலிகளின் நிழல் அரசு இயங்கிய காலத்தில் காட்சியூடகங்கள் சார்ந்த பிரிவுகளுக்காக, பெருமளவிலான பொருளாதார வளங்கள் பிரயோகிக்கப்பட்டன. பல நவீன உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. நிதர்சனம் நிறுவனமானது, சில காரணங்களால் இரண்டு பிரிவுகள் ஆனது. தொலைக்காட்சிப் பிரிவு ('தமிழீழ தேசியத் தொலைக்காட்சி') தனியாகவும் 'திரைப்பட உருவாக்கப்பிரிவு' தனியாகவும் இயக்கப்பட்டு, பல்வேறு 'திட்டங்கள்' முன்னெடுக்கப்பட்டன. அப்போது, ஏற்கெனவே இயங்கிவந்த திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவின் (ரதன் கலையகம்) பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இன்னொரு பக்கமாக, இங்கிலாந்தைச் சேர்ந்த 'ஸ்கிரிப்ற் நெற்' என்ற நிறுவனத்தின் சுயாதீனமான சினமா சார் 'கற்பித்தல்' முயற்சிகள், ஈழ சினமா தளத்திற்கு வலுச்சேர்த்தன என்றே சொல்ல வேண்டும். 'ஸ்கிரிப்ற் நெற்' செயற்பாடுகளுக்கு, குறிப்பிட்ட அளவில் நிதர்சனம் நிறுவனத்தின் அனுசரணை வழங்கப்பட்டிருந்தது என்பது இவ்விடத்தில் பதிவுசெய்யப்பட வேண்டியது.

திரு. தங்கர் பச்சான், திரு. அறிவுமதி, திரு. பாரதிராஜா, திரு. புகழேந்தி தங்கராஜ், திரு. மணிவண்ணன், திரு. மகேந்திரன், திரு. சீமான் உட்படத் தமிழகத்தைச் சேர்ந்த சினமா சார் கலைஞர்கள் பலர் பல்வேறு நோக்கங்களுக்காக வன்னிக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். (சினமா சாராத வேறு சிலரும் வேறு நோக்கங்களுக்காக அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள்.) அவர்களிற் பலரும், ஈழ சினமா சார்ந்து 'போதிய விளக்கத்துடன்' அல்லது 'நியாயமான முறையில்' கையாளப்படவில்லை. அத்தகையவர்களுடனான தொடர்புகள், நியாயமான முறையிலே தொடர்ச்சியாகப் பேணப்படவில்லை. ஆனாலும், ஒப்பீட்டளவிலே நியாயமான முறையில் வன்னியிலே பயன்பட்டவர் இயக்குநர் திரு. மகேந்திரன். போராளிகள் மற்றும் கலைஞர்கள் சிலருக்கு, சினமா சார்ந்த 'பயிற்சிகளை' அவர் வழங்கியிருக்கிறார். 'நடிப்பு என்பது' என்ற நூலை, அங்கிருந்து தான் அவர் எழுதினார்.

சீமான், தனது வன்னிப் பயணத்தின் பெறுபேறுகளைத் தனக்கான 'சுயநல அரசியல்' சார்ந்து, 'கேலிக்குரிய' முறையில் பயன்படுத்தியிருக்கிறார் என்பது வருத்தத்திற்குரியதும் கண்டிக்கப்படவேண்டியதுமாகும். ஈழ விடயங்கள் சார்ந்த, மிகை புனைவுடனும் மிகையுணர்ச்சியுடனும் கூடிய அவரது பேச்சுகள், 'உண்மைகளை' அறிந்தவர்கள் மத்தியில் 'எடுபடுவது' இல்லை.

சீமான், வன்னிக்கு வந்திருந்த போது சந்தித்திருக்கிறேன். அப்போது அவரது பிரதான அடையாளம் திரைப்பட இயக்குநர் என்பதாகவே இருந்தது. அப்போது 'நாம் தமிழர்' கட்சி இருக்கவில்லை. 'எல்லாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். அதன் பிறகு அவருக்கும் அத் திரைப்படத்திற்கும் சம்மந்தம் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலர் அதில் பணியாற்றினர். அந்தத் திரைப்பட உருவாக்கத்தின் ஒளிப்படக்கலை சார் பணிகள், உத்தியோக பூர்வமாக என்னுடையதாகவே இறுதிவரை இருந்தன. மிகவும் நெருக்கடியான போர்ச் சூழல்களுக்கு மத்தியில் நடைபெற்ற ஒரு தீவிரமான முயற்சி அது.


நிதர்சனம் நிறுவனத்திற்கு, எழுதப்படாத இறுக்கமான 'தணிக்கை முறைகளும்' விடுதலைப் புலிகள் இயக்க நலன் சார்ந்த 'பிரத்தியேகத் தேவைகளும்' இருந்தன. ஆரோக்கியமான சினமா முயற்சிகளில் ஈடுபடக் கூடிய சிலர், பல்வேறு நெருக்கடிகள் மற்றும் போதாமைகள் மத்தியில் நீண்ட காலமாக அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறார்கள். நிதர்சனம் நிறுவனத்துடனான எனது உறவு நிலையானது, எப்போதும் சுமுகமானதாகவோ தொடர்ச்சியானதாகவோ இருந்ததில்லை. 'விமர்சனபூர்வமான' எனது அணுகுமுறை அதற்குக் காரணமாக இருக்கக்கூடும். பொதுவாக, விடுதலைப் புலிகள் சார்ந்த ஊடகவியல் நிறுவனங்களின் போதாமைகளுக்கு, 'உள் முரண்பாடுகள்', வசதியீனங்கள், கட்டுப்பாடுகள் அல்லது தணிக்கை முறைகள் போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தன. எது எப்படியிருந்தாலும், நிதர்சனம் நிறுவனத்தின் சமூக மற்றும் அரசியல் ரீதியான பங்களிப்புகள் குறைவானவையல்ல. ஈழ சினமா சார்ந்த அதன் முயற்சிகள், ஆக்கபூர்வமான விமர்சன நோக்கில் (constructive criticism) அணுகப்பட வேண்டியவை. அவை, விரிவாக ஆராயப்பட்டு உண்மைத்தன்மையோடு ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. 

2018-04-10
அமரதாஸ் 

Monday, April 9, 2018

இசையும் தமிழ் சினமாவும் - விரிவான ஆய்விற்கான முன் குறிப்புகள்.




நீண்ட காலமாக, தமிழ் சினமாவானது குறிப்பிடத்தகுந்த நல்ல இசைவெளிப்பாடுகளைத் தந்துகொண்டிருக்கிறது. அத்தகையவற்றைத்  தமிழ்த் திரைப்படங்கள்   நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது மிகவும் அரிது. பெரும்பாலும்,  தமிழ்த்  திரைப்படங்களில் பாடல்களின் வரிகளும் காட்சிப்படுத்தல்களும் தரமானவையாகவோ பொருத்தமானவையாகவோ அமைவதில்லை. தமிழ் சினமாவானது அதிகம்  நல்ல திரைப்படங்களைத் தந்ததில்லை. ஆனால், அது தமிழ்ச்  சூழலுக்கு வழங்கியிருக்கும் இசைவெளிப்பாடுகள் அல்லது இசைப் பாடல்கள்   கணிசமானவை, கவனிக்கப்பட வேண்டியவை.  அவை குறித்த ஆய்வுகள் பன்முகத் தன்மையோடு முன்னெடுக்கப்பட வேண்டியவை.

திரைப்படங்களில் இடம்பெற்ற இசைப்பாடல்களை, மோசமான காட்சிப்படுத்தல்களில் இருந்தும் வரிகளில் இருந்தும்  பிரித்துத் தனி  இசையாகவே அணுகும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது, சுவாரசியமானது. திரைப்படங்களில் பொருத்தமில்லாமல் இடம்பெறும் பாடல்களை, அந்த இடங்களில்  நான் விரும்புவதில்லை. அத்தகைய பல பாடல்களை, வீடியோப்பாடல்களாகவோ ஓடியோப் பாடல்களாகவோ (இசைக் கோப்பு-Music Album) இசை நிகழ்ச்சிகளிலோ  அணுகுவதையே அதிகம் விரும்புகிறேன்.

சினமா என்ற கலையினைப் போல, இசைக் கலையினையும் நான்  தீவிரமாக நேசிப்பவன். இசையோடு வரிகளோ காட்சிகளோ இணையும் போது, உண்மையில் அந்த இணைவானது புதிய சாத்தியங்களை நிகழ்த்துவதாக, பல்பரிமாணத் தன்மை கொண்டதாக  அமைய வேண்டும். பல திரை இசைப் பாடல்களை, இசையின் ரசனைக்காக  நான் 'கரோக்கி' வடிவில் கேட்பதுண்டு. (‘ஓரளவு’ பாடுவேன் என்பதால் 'கரோக்கி' யோடு பாடுவதுமுண்டு) மோசமான காட்சிகளின் மற்றும்   வரிகளின் நீக்கமானது, இசையை நேரடியாக அணுகவும் நெருக்கமாக ரசிக்கவும்  சுவாரசியமாகத்  துணை புரிகிறது. இசை என்பது, உண்மையில் தனித்துவமான வெளிப்பாட்டுச் சாத்தியங்கள் கொண்ட  கலைச் சாதனம்  தானே.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உட்பட  மிகவும் சாதாரணமான நிலையில்  இருந்து தமிழ் சினமாவிற்குள் வந்தவர்கள் பலர். அத்தகையவர்களின் இசை முயற்சிகள், தமிழ்ச் சூழலில் பல்வேறு வகையிலான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

சினமாவில் வியக்கத்தக்க இசை வெளிப்பாடுகளை நிகழ்த்தியிருக்கும்  இசையாளர்கள் சிலர், சினமாவைத் தாண்டிய ஆரோக்கியமான இசை முயற்சிகளில் இறங்காமல் சினமா இசையாளர்களாக மட்டுமே மட்டுப்பட்டிருப்பது விரும்பத்தக்கதல்ல. மட்டுமல்ல, அத்தகையவர்களின் இசைப் பங்களிப்புகளைத் தமிழ் சினமாவானது பல சந்தர்ப்பங்களில் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது ஆரோக்கியமானதல்ல.

2015-11-22
அமரதாஸ்


Tuesday, April 3, 2018

புலம்பெயர் வாழ்வியலில் ஒரு ஓவியர்.


ஒரு கலை முயற்சியானது, அதில் ஈடுபடுகிறவரின் ஆளுமை விருத்தியில் ஆரோக்கியமான 'வினைத்திறன்' ஆற்றக்கூடியதாகும். ஆளுமை விருத்தி மற்றும் சமூகப்பயன்பாடு சார்ந்து, கலை முயற்சிகள் ஆற்றும் வினைத்திறன்கள் எப்போதும் 'மதிப்பீடு' செய்யப்பட வேண்டியவை. நெருக்கடிகள் பலவும் நிறைந்திருக்கும் புலம்பெயர் வாழ்வியலில், கலைசார் முயற்சிகள் எப்போதும் அவசியமானவை.   

தன்னார்வத்தில், தன்னிச்சையாக பெருமளவுக்கு ஒரு 'பிரதிமை' (Portrait) ஓவியராகத் தன்னை உருவாக்கிக் கொண்டு சுவிற்சர்லாந்து நாட்டில் வசித்துவரும் திரு. பாலேந்திரன் பரமேஸ்வரன் என்பவரைப் பற்றிய இந்தக் காட்சிப்பதிவானது, தமிழ்ச் சூழலில் முக்கியமாக புலம்பெயர் தமிழ்ச் சூழலில் கவனப்படுத்தப்பட வேண்டியது. இவரைப் போன்ற பல ஓவியர்களை நான் பல்வேறு இடங்களில் சந்தித்திருக்கிறேன். இத்தகையவர்களின் 'ஓவியத் திறன்' குறித்த மதிப்பீடுகள் எனக்குச் சுயமாக இருந்தாலும், இத்தகையவர்களது முயற்சிகளில் 'கலையாக்கம்' எந்த வகையில் பரிணமிக்கிறது என்ற தேடலை நிகழ்த்தி வந்திருக்கிறேன்.

ஒரு படத்தை அல்லது காட்சியைப் பார்த்து அப்படியே 'பிரதிசெய்வது' அல்லது 'அதேமாதிரியே' வரைவது நல்ல கலையாகுமா? அத்தகைய முயற்சிகள், எக் காலத்திலும் அல்லது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவசியம் தானா? ஒளிப்படக் கமெராக்களின் வருகைக்குப் பின்னர், 'பிரதிமை' ஓவியங்களின் இருப்பு அல்லது தேவை எப்படியாக இருக்க முடியும்? கலையின் சமூக மற்றும் தனிமனிதப் பயன்பாடுகள் எப்படிப்பட்டவை?...இது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு, தமிழ்ச் சூழலில் ஆரோக்கியமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஓவியர் ரவிவர்மா போன்றவர்களது தாக்கம், இந்தியா முழுதும் இலங்கையிலும் இன்றுவரை உணரப்படுகிறது. மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் 'பிரதிமை' ஓவிய முயற்சிகள் பல்வேறு வகைகளில் நடந்திருக்கின்றன. அவற்றுக்கான தேவைகள் பலவகைப்பட்டவையாக இருந்து வருகின்றன. பிரக்ஞை குன்றிய நிலையில் அல்லது 'இயந்திரத்தனமாக' முன்னெடுக்கப்படும் கணனி அல்லது 'மென்பொருள் ஓவிய' முயற்சிகள், பிரதிமை ஓவிய முயற்சியாளர்களுக்குச் சவாலாகவே தொடர்ந்து வருவது நிகழ்கால யதார்த்தமாகும்.

தனிப்பட்ட வேலைப்பழுக்கள் உள்ளிட்ட நெருக்கடிகள் நிறைந்திருக்கும் புலம்பெயர் வாழ்வியலில், சுய வளர்ச்சி சார்ந்தோ ஆளுமை விருத்தி சார்ந்தோ சமூக முன்னேற்றம் சார்ந்தோ இயங்குவது சவாலானதாவே உள்ள நிலையில், ஆரோக்கியமான கலை முயற்சிகள் இனங்காணப்படவும் வரவேற்கப்படவும் பரவலாக்கப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டியவையாகின்றன.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் நெருக்கடிகளுக்குப் பின்னர் புங்குடுதீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து, பிறகு சுவிற்சர்லாந்து நாட்டிற்குப் புலம்பெயர்ந்து இப்போது சூரிச் நகர்ப்பகுதியில் வசித்து வரும் பாலேந்திரன் பரமேஸ்வரன் என்னும் ஓவியரை அறிமுகப்படுத்தும் வகையில், இந்தக் காட்சி ஆவணத்தை மிகவும் குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள திரு.ஜெயந்தன் நடராஜா வின் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சிகள் தொடர்பாகவும் பல்வேறு கலை, இலக்கிய முயற்சிகள் தொடர்பாகவும் என்னுடன் அடிக்கடி உரையாடுகிறவர் நண்பர் ஜெயந்தன். இன்னும் கொஞ்சம் நேரத்தை அதிகப்படுத்தி, 'மேலதிக நுணுக்கங்களுடன்' அவர் இதை உருவாக்கியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

அமரதாஸ்
2018-04-03

Sunday, April 1, 2018

தமிழ் மொழியின் பிரயோகத் திரிபு.



'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகம், தமிழ்ச் சூழலில் இப்போது பரவலாகியிருக்கிறது. அது, இலங்கையில் திரு.மைத்திரிபால சிறிசேன வின் அரசாங்க ஆட்சியைக் குறிக்கும் விதத்திலேயே பயன்பாட்டிலுள்ளது. பல்வேறு இடங்களிலும் இத்தகைய மொழிப் பிரயோகங்களைப் பார்க்க முடிகிறது. இத்தகைய மொழிப் பிரயோகங்கள், பொருள் வெளிப்பாட்டின் அடிப்படையில் பொருத்தமற்றவை. மட்டுமல்ல, 'பக்கச் சார்பான' அல்லது 'உண்மைக்கு' எதிரான தன்மையினை வெளிப்படுத்தக் கூடியவை.

'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகமானது, ஒருவகை உளவியல் திணிப்பை நாசூக்காக மேற்கொள்ளக் கூடியது. 'உடன்பாடான' உளவியல் நிலைப்பாட்டை ஏற்படுத்தி, அதை நிலைநிறுத்தும் உள் நோக்கத்துடன் அப் பிரயோகம் உருவாக்கப்பட்டிருக்கக் கூடும். ஒரு அரசாங்கத்தின் ஆட்சியானது உண்மையிலேயே நல்ல ஆட்சியாக அமைந்திருக்கும் தருணத்தில், அல்லது ஒரு அரசாங்கத்தின் ஆட்சியை நல்ல ஆட்சியாக ஒருவர் கருதுவதாக இருந்தால் மட்டுமே 'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகத்தினை மேற்கொள்ள முடியும். (அல்லது, 'நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகிற...' என்பது போன்ற மொழிக் கையாள்கையே நியாயமானதாக இருக்கும். ஆங்கிலத்தில் இத்தகைய 'புறவயப்பட்ட பிரயோகத்திற்கான' தேவை ஏற்படும் போது, ‘so called’ என்ற பிரயோகம் கையாளப்படுவது கவனிக்கப்படவேண்டியது.)

உண்மையில், இப்போது இலங்கையில் 'நல்லாட்சி' நடக்கவில்லை என்பதும், யுத்தத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர் நலன்களில் உண்மையான கரிசனம் கொண்ட அரசாங்கமாக மைத்திரியின் அரசாங்கம் இல்லை என்பதும் எனது தனிப்பட்ட அவதானிப்பாகும். மைத்திரி அரசாங்கத்தை அர்த்தப்படுத்தும் வகையில், 'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகத்தினை யாராவது தொடர்ந்தும் இனிக் கையாண்டால், அவர் மைத்திரி அரசாங்கத்தை நல்லாட்சி செய்யும் நல்ல அரசாங்கமாக நம்பியிருக்கிறார் என்றோ, மைத்திரி அரசின் சார்பாளர் என்றோ புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது.

'இறுதிப் போருக்குப்' பின்னர், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களை 'சிறைப்படுத்தி' வைத்திருந்த இடங்களை, 'புனர்வாழ்வு முகாம்' என்று சிறீலங்கா அரசு பொதுவெளியில் அடையாளப்படுத்தியிருந்ததும், அதையே பல்வேறு ஊடகங்கள் பிரயோகித்து வந்ததும் இவ்விடத்தில் பதிவுசெய்யக் கூடியது. சிறீலங்கா இராணுவத்தினரால் மோசமாக நிர்வகிக்கப்பட்டு, திறந்த வெளிச் சிறைச்சாலைகளாகக் காணப்பட்ட தமிழ் அகதிகள் முகாம்களை, 'நலன்புரி நிலையம்' என்ற பெயரில் சிறீலங்கா அரசு அடையாளப்படுத்தியிருந்தது
குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சூழலில் பல சொற்பதங்கள், பொருத்தமற்ற பிரயோகங்களால் கருத்துத் திரிபை அல்லது அர்த்தத் திரிபை அடைந்திருக்கின்றன.

கலைஞர் என்ற சொல்லானது பொதுவாகக் கலைத்துறை சார்ந்தவர்களுக்கானது. அது, தனக்கெனப் பிரத்தியேகமான அர்த்த பரிமாணத்தையும் நீண்டகால இருப்பையும் கொண்டது. கலைஞர் என்ற பொதுச் சொல்லானது, கருணாநிதியின் தனியுடமையாகக் கட்டமைவது தான் கேள்விக்குரியது. கருணாநிதி என்னும் பெயரை மறைத்து, 'கலைஞர்' என்ற சொல்லை மட்டும் பெயருக்குப் பதிலாகப் பிரயோகிப்பது நியாயமாகுமா? அவரை விடவும் காத்திரமாகக் கலைப்பணியாற்றிய பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பெயர் குறிப்பிட்டு அழைக்காமல், 'கலைஞர்' என்று பொதுவாக அழைத்தால் எப்படியிருக்கும்?

அம்மா, பெரியார், மகாத்மா, கற்பு, கற்பழிப்பு, மாவீரர், வீரச்சாவு, வீரவணக்கம், நாட்டுப்பற்றாளர், மாமனிதர், உணர்வாளர், தோழர், விமர்சனம், துரோகம், துரோகி, போராளி, கூத்தாடி, இனவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம்... இப்படியான பல சொற்களின் பயன்பாடுகளும் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட வேண்டும். வெறுமனே சம்பிரதாயபூர்வமாகவோ 'பாசாங்குத்தனமாகவோ' பல சொற்கள் பிரயோகிக்கப்படுவதும் இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டியது. (உ+ம் - உண்மை, அன்பு, நன்றி, நீதி, ஜனநாயகம்...)

ஒரு காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 'செல்வாக்கினால்' சில சொற்களின், சொற்றொடர்களின் 'நடைமுறை அர்த்தம்' திரிபடைந்திருக்கிறது. இன்றுவரை அத்தகைய 'திரிபார்ந்த' சொற்களின், சொற்றொடர்களின் பிரயோகம் நடைமுறையில் உள்ளது. சில புதிய சொற்களினதும் சொற்றொடர்களினதும் பிரயோகம் நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடப்பட வேண்டியது.

நீண்டகாலமாக நிலவிவந்த சில சொற்களின் 'கசடுத்தனங்கள்' கண்டறியப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மாற்றுச் சொற்களின் பயன்பாடு தொடரப்படுவது அவதானிப்பிற்குரியது, வரவேற்புக்குரியது. (உ+ம் - கற்பழிப்பு > பாலியல் வல்லுறவு...)

பொதுப் புழக்கத்தில் நிலைபெற்றுவிட்ட சொற்களை அல்லது சொற்றொடர்களை, திட்டவட்டமான காரணங்களுக்காக வரையறைப்படுத்தியோ 'புனிதப்படுத்தியோ' அல்லது 'இழிவுபடுத்தியோ' பயன்படுத்தும் போது, காலப்போக்கில் பல குழப்பங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஒரு மொழியின் 'திரிபை', மொழிசார் சமூக வாழ்வியலின் சரிவை இத்தகைய போக்குகள் குறிகாட்டுவன. இடையில் நேர்கிற 'திரிபார்ந்த' பிரயோகத்தின் தாக்கத்தினால், சில சொற்களையோ சொற்றொடர்களையோ அவற்றின் காலாதிகால உணர்த்து பொருளின் அடிப்படையில் தொடர்ந்தும் பிரயோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

பொது வழக்கில் இருக்கும் பல நல்ல தமிழ்ச் சொற்கள் முறையற்ற பிரயோகங்களால் 'திரிபு' அடைவது, தமிழுக்கும் தமிழ்ச் சூழலுக்கும் ஆரோக்கியமானதல்ல. சொற்களின் பொருளறிந்து, அவற்றை நிதானமாகவும் செம்மையாகவும் விழிப்புணர்வோடும் பிரயோகிக்க வேண்டும்.

ஒரு மொழியின் 'போதாமை' உணரப்படுகிற போது, புதிய சொற்களும் புதிய சொற்றொடர்களும் உருவாக்கப்படலாம். அது அவசியமானது, வளர்ச்சிக்குரியது. ஒருவர் எதையும் சொல்ல முற்படும் போது, கருத்தியல் மற்றும் உணர்வு வெளிப்பாட்டிற்கு உரிய முறையிலும் மரபார்ந்த வளத்தின் செழுமை குன்றாமலும் மொழியைக் கையாள வேண்டியது அவசியமாகும். வளர்ச்சியடைந்த மொழியானது, அடிப்படையில் பெருமளவுக்கு விஞ்ஞான பூர்வமானதாகவே இருக்கும். மரபிலே குமைந்த 'கசடுத்தனங்கள்', மயக்கங்கள் நீங்கிச் செழுமையடைவதாகவும் ஒரு மொழி இருக்க வேண்டும்.


அமரதாஸ்
2018-03-28