Tuesday, September 4, 2018

பேரைச் சொல்லவா...அது நியாயமாகுமா...?



முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி பற்றிய பதிவுகள், அவரது மறைவைத் தொடர்ந்து சமூக  வலைத்தளங்களில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. கருணாநிதியின் பெயருக்குப் பதிலாக, 'கலைஞர்' என்ற பொதுவான வார்த்தை தான், பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பிரயோகிக்கப்படுகிறது. அதுவே அவரை மதிப்புடன் அழைப்பதற்கான 'பட்டப்பெயர்' என்று கருதப்படுகிறது. (அது, அவரது 'புனைபெயர்' அல்லது 'மாற்றுப் பெயர்' அல்ல என்பது கவனத்துக்குரியது.) 

கருணாநிதி பற்றிய நிகழ்வொன்றில், அவரது பெயரைக் குறிப்பிட்டு ஊடகர் திரு. சமஸ் உரையாற்றிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இடையில் சிலர் எழுந்து “கருணாநிதி என்று சொல்லாதே, கலைஞர் என்று சொல்” என்று கத்தியிருக்கிறார்கள். அந்த சர்ச்சை குறித்து, சமஸ் தனது முகநூலில் எழுதியிருந்தார். இத்தகைய சர்ச்சைகள் குறித்த எனது நிலைப்பாடு தொடர்பாக ஏற்கெனவே பலருடன் பலமுறை பேசியும், அவ்வப்போது எழுதியும் வந்திருக்கிறேன். 

கலைஞர் என்ற சொல்லானது பொதுவாகக் கலைத்துறை சார்ந்தவர்களுக்கானது. அது, தனக்கெனப் பிரத்தியேகமான அர்த்த பரிமாணத்தையும் நீண்டகாலப் பாரம்பரியத்தையும் கொண்டது. கருணாநிதி என்னும் பெயரை மறைத்து, 'கலைஞர்' என்ற சொல்லை மட்டும் பெயருக்குப் பதிலாகப் பிரயோகிப்பது நியாயமாகுமா? அவரை விடவும் காத்திரமாகக் கலைப்பணியாற்றிய பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பெயர் குறிப்பிட்டு அழைக்காமல், 'கலைஞர்' என்று பொதுவாக அழைத்தால் எப்படியிருக்கும்?       

ஒருமுறை எழுத்தாளர் திரு. ஜெயகாந்தனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட  கருணாநிதி, 'கலைஞர் பேசுகிறேன்' என்று முதலில் சொன்னாராம். 'நானும் கலைஞர் தான், சொல்லுங்க' என்று பதிலுக்குச் சொன்னாராம் ஜெயகாந்தன். இதை அறிந்தபோது குபீரென்று சிரிப்பு வந்தது. கூடவே, நடிகர் திரு. வடிவேலு திரைப்படத்தில் பேசிப் பிரபலமான 'நானும் ரவுடி தான்' என்ற வசனம் நினைவுக்கு வந்தது. ஒருவகை  அறச்செருக்குடன், எள்ளலுடன் ஜெயகாந்தன் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். அடிப்படையில் அவரும் 'கலைஞர்' தான். கலைத்துறை சார்ந்து இயங்கிய கருணாநிதியை, 'கலைஞர் கருணாநிதி' என்று  'அழைப்பது' பொருத்தமாக இருக்கலாம். 'கலைஞர்' என்ற பொதுச் சொல்லானது, கருணாநிதியின் தனியுடமையாகக் கட்டமைவது தான் கேள்விக்குரியது.

யாருக்காக, எங்கு, எத்தகைய பட்டப்பெயரை ஒருவர் பிரயோகிக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. இருந்தாலும், அது சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் கவனிக்கப்படவேண்டியவை. தனிநபர் துதிபாடல், வழிபாட்டு மனோபாவம், அதீத அபிமானம், அதீத விசுவாசம் போன்ற பின்னணிகளில் இருந்து ஒருவர் மீதான பட்டப்பெயர் கட்டமைக்கப்படுகிறது. இதுபோலவே, ஒருவரை இழிவாகச் சித்தரிக்கும் வகையிலான பட்டப்பெயர்களும் கட்டமைக்கப்படுகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியது. ஒருவரை நேசிக்கவும் புகழவும் அல்லது வெறுக்கவும் இகழவும், பட்டப்பெயர் மட்டுமே உண்மையான காரணியாக அமைந்துவிடுவதில்லை. இருந்தாலும், பட்டப்பெயர்கள் சமூகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. கலாச்சாரம், அதிகாரம் மற்றும் அரசியல் போன்ற காரணிகள், பட்டப்பெயர்களின் உருவாக்கத்தில் அதிகமதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன. பட்டப்பெயராக வழங்கப்படுகிற பல சொற்கள், பெரும்பாலும் 'துஸ்பிரயோகம்' ஆவது நடைமுறை யதார்த்தமாகத் தொடர்கிறது. அதிகாரத்தின் பிரயோகமாக, பொருத்தமில்லாத நடைமுறையாக, வழிபாட்டின் விம்பமாக  ஒரு  பட்டப்பெயர் மாறும்போது பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.   

'பட்டப்பெயரை' ஒருவரின் 'மரியாதைக்குரிய' அடையாளப் பெயராக ஆக்கிவிடுவது மொழியியல், சமூகவியல் நோக்கில்  ஆரோக்கியமானதல்ல. பெரியார் என்று ஈ.வே.ராமசாமியையும் மகாத்மா என்று காந்தியையும் கலைஞர் என்று கருணாநிதியையும் அம்மா என்று ஜெயலலிதாவையும்  அழைப்பது எல்லோருக்கும் உவப்பானதாக இருக்குமா? மக்கள் அபிமானம் பெற்று சமூக முக்கியஸ்தர்களாகக் கருதப்படுகிறவர்களின்  அசலான பெயர்களை, ஜனநாயக வெளிகளிலும் ஊடகங்களிலும் புழக்கத்தில் கொண்டுவருவது தான் ஆரோக்கியமானது.

சினமாவிலும் இலக்கியத்திலும் நன்கு அறியப்பட்டிருந்த ஒருவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழைப்பில் தமிழகத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்திருந்தார். ஒரு நாள், அவருடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நடிகர் திரு.விஜய் நடித்த ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தை அங்கிருந்த சிறிய திரையரங்கிலே காண முடிந்தது. அதில் 'இளைய தளபதி விஜய்' என்று எழுதப்பட்டிருந்தது. ''எத்தனையோ உண்மையான தளபதிகள் இருக்கும் இந்த இடத்தில், ஒரு நடிகரின் பெயருடன் 'தளபதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே...'' என்று அந்தத் தமிழக நண்பர் அப்போது சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.    

தமிழைப் பொறுத்தவரையில் எழுத்தில்  மதிப்புடன் ஒருவர் பெயரை அடிக்கடி  பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆரம்பத்தில் மட்டும்  'திரு', 'அவர்கள்' போன்ற  ஏதாவது ஒரு சொல்லைப் பயன்படுத்துவதே போதுமானது. 'திரு', 'அவர்கள்', 'மேதகு'  போன்ற மதிப்புக்குரிய சொற்களை, ஒரு பெயரின் முன்னும் பின்னுமாக அடுக்க வேண்டிய அவசியமேயில்லை. பெயர்களை மறைத்துவிட்டு, தலைவர், கலைஞர், தேசியத் தலைவர், அம்மா, தளபதி, பண்டிதர், பெரியார், மகாத்மா, கவிப்பேரரசு, சுப்பர் ஸ்டார், உலக நாயகன் என்றெல்லாம் பதவி நிலைகளாலும் பட்டங்களாலும் மனிதர்கள் முன்னிறுத்தப்படுவது ஆரோக்கியமானதா? இத்தகைய வழக்கமானது, சார்புநிலைப்பட்டதாகவும் வழிபாட்டு மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் தமிழ்ச் சமூகத்தில் தொடர்வதைத்தான் அவதானிக்க முடிகிறது.

ஒரு தரப்பினரால் 'தலைவராக' ஏற்றுக்கொள்ளப்படுகிறவர், 'மாற்றுத் தரப்பினர்' எல்லோரினதும் 'தலைவர்' ஆகிவிட  முடியுமா? ஒரு 'கலைஞர்' தான் இருக்க முடியுமா? ஒரு 'கவிப்பேரரசு' தான் இருக்க முடியுமா? ஒரு 'தேசியத் தலைவர்' தான் இருக்க முடியுமா? ஒரு 'பெரியார்' தான் இருக்க முடியுமா? ஒரு 'மகாத்மா' தான் இருக்க முடியுமா? இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுப் பார்ப்பது நல்லது.

ஒருவரைப் பற்றிய பதிவொன்றில், அவரது பெயரும் தனித்துவமான அடையாளங்களும் விபரங்களும் மதிப்பீடுகளும் தான் முக்கியமே தவிர, 'பட்டப்பெயர்' அல்ல. ஒரு பதிவின் பல்வேறு இடங்களில் ஒருவரது பெயர் பாவிக்கப்பட நேர்கையில், மரியாதையினை வெளிப்படுத்தும் 'திரு' போன்ற முன்னொட்டுக்களையோ 'அவர்கள்' போன்ற பின்னொட்டுக்களையோ எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டியதில்லை. தொடக்கத்தில், ஒரு இடத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதும். சர்வதேச அளவில் பிரபலமான ஊடகங்களில், கட்டுரை அல்லது செய்தி போன்றவற்றில், முக்கிய பிரமுகர்களினது பெயர்கள் கையாளப்படும் 'ஊடக முறைமை' கவனிக்கப்பட  வேண்டியது. (தமிழில் சில விடயங்கள் சிக்கலானவையாகவே தொடர்கின்றன.) 

மொழி என்பது அடிப்படையில் விஞ்ஞான பூர்வமானது. அதனால் தான் மொழி சார் இலக்கணங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. மொழியின் இருப்புத் தொடரவும் வளர்ச்சியடையவும் விஞ்ஞான பூர்வ அடித்தளமே  வழிவகுக்கிறது. மொழியானது, அதன் பிரயோக நிலையிலே தான் உணர்வுபூர்வ பரிமாணங்களை அடைகிறது. உண்மையில், தமிழை நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழ் மொழியின் இனிமை, அறிவியல் போன்ற பின்னணிகள் தொடர்பிலான தேடலைப் படைப்பாக்க வழிமுறைகளில் தொடர்கிறேன். மொழியின் மரபில் தொடரும் கசடுத்தனங்களை அறியவும் விலகி நடக்கவும் விழைகிறேன். ஒரு எழுத்தாளர் மற்றும் ஊடகர் என்ற முறையில், இயன்றவரையிலும் தெரிந்தவரையிலும் தமிழை நான் செம்மையாகவே பிரயோகிக்க முனைவேன்.

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தவர் திரு. பிரபாகரன். அவரைப் பற்றி எங்காவது நான் குறிப்பிட நேர்ந்தால், அவரது பெயரைக் குறிப்பிடுவது வழமை. (ஊடகவியல் மரபின் அடிப்படையிலான எனது சுயாதீன நடைமுறை அது.) இதனால், பிரபாகரனின் தீவிர விசுவாசிகளாகக் காட்டிக்கொள்கிற, ஊடகவியல் மொழியின் சாத்தியப்பாடுகளைப் புரிந்துகொள்ளாத சிலர், தமது 'எதிர்ப்புகளை' வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்களது 'அறியாமை', 'தீவிர விசுவாசம்' போன்றவற்றின் எதிர் வெளிப்பாடுகளை என்னால் 'புரிந்துகொள்ள' முடிந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாது. இயன்றவரை, எனது நிலைப்பாட்டினை எழுத்திலும் நேரிலும் சிலருக்கு விளக்கியிருக்கிறேன். எது எப்படியிருந்தாலும், யாரைப் பற்றியாவது எழுத நேரும் போது, அவர் எத்தகைய பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும், ஊடகவியல் பண்புகளின் அடிப்படையில் அவரது பெயரைக் குறிப்பிட்டே எழுதுவேன். அதனால், அந்தப் பெயருக்குரியவருக்கு எந்த மரியாதைக் குறைவும் ஏற்பட்டு விடாது.   

'பேரைச் சொல்லவா...அது நியாயமாகுமா...?' என்ற திரை இசைப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பெயரைச் சொன்னால் என்ன தான் குறைந்துவிடப் போகிறது..? பெயரில் என்ன இருக்கிறது? ஒருவரை நினைவுபடுத்த, அழைக்க உதவும் அடையாள வார்த்தையாகவே பெயர் அமைந்திருக்கிறது. கணவன் பெயரை மனைவி சொல்வது, மரியாதைக் குறைவாகும் என்று நம்பக்கூடிய  தமிழ்ச் சமூகத்தின் 'நுட்பமான' ஆதிக்க மனோபாவத்தையும் மொழியோடு வன்புணரும் கலாச்சாரக் கசடுத்தனங்களையும் உற்றுக் கவனிக்க வேண்டும். பரஸ்பரம் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில் சுயமரியாதை, தோழமை பேணப்பட முடியும். சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், குடும்ப அமைப்பிற்குள் பரஸ்பரம் பெயர் சொல்லியே பெரும்பாலும் அழைத்துக்கொள்வார்கள்.   

சமூகப் பிரபலங்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்பும் 'அதிகாரிகள்' முன்பும்  எழுந்து நிற்றல், காலில் விழுந்து வணங்குதல் போன்ற செயல்கள் மூலம் உண்மையிலேயே 'மரியாதை' வெளிப்பட்டு விடுகிறதா? அதிகார இருப்பிற்கான அங்கிகாரமாக, கீழ்படிதலின் அல்லது தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடாக, வெறும் சம்பிரதாய நடைமுறையாக அத்தகைய செயல்கள் பெரும்பாலும் அமைந்து விடுகின்றன.

படைப்பாளிகள் மற்றும்  போராளிகள் பலருடன், விடுதலைப் புலிகளின்  தலைவர் பிரபாகரன் கலந்துகொண்ட ஒரு பிரத்தியேக நிகழ்வில், ஒரு படைப்பாளியாக நானும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. திரு. பொட்டு மற்றும் திரு. தமிழ்ச்செல்வன் போன்றவர்களுடன் மேடைப் பகுதியில்  இருந்த பிரபாகரன், ஒரு தேவைக்காக எழுந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து எழுந்து நின்றுவிட்டார்கள். அந்த இடத்தில், எல்லோரும் எழுந்து நிற்க வேண்டிய 'அவசியம்' இருக்கவில்லை. அந்த இடத்தில் பிரபாகரன் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இது பற்றி, அப்போது சில நண்பர்களுடன் பேசியிருக்கிறேன். 'சுவாரசியமான' அந்த அனுபவத்தையும், அந்த நிகழ்வில் பிரபாகரனிடம் இருந்து  அவதானிக்க முடிந்த சில நற்பண்புகளையும் தனியாகப் பிறகு ஒரு தருணத்தில் பதிவுசெய்யலாம் என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சில நண்பர்கள் இன்னமும் வாழ்கிறார்கள். 

2018-09-04
அமரதாஸ்

கமல் - BIGG BOSS - காலில் விழுதல்



மனித உணர்வுகளுடன் 'விளையாடும்' தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவே பெரும்பாலும் 'பிக்பாஸ்' காட்சியளிக்கிறது. இது பொதுவாகவும் சுருக்கமாகவும் சொல்லக்கூடிய கருத்து. இது விரிவான விவாதத்திற்குரியது. அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு ஊடக நிகழ்ச்சி என்ற வகையில், அது பற்றிய தெளிவான 'புரிதல்' அவசியமாகும். (ஆய்வு நோக்கில் மட்டுமே, அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.) 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என்றுபிரத்தியேகமான வணிக நோக்கங்களே முதன்மையானவையாக உள்ளன. அதனை, அதன்போக்கில் யார் வந்து நடத்தினாலும் இப்படித்தான் இருக்கும். என்றாலும், கமல் நடத்தும் போது, அது அவருக்கான நிகழ்ச்சியாகவும் ஆகிவிடுகிறது. அவர் அப்படியாக ஆக்கிவிடக் கூடியவர். சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடிகர் திரு. கமல்ஹாசன் வந்து செல்லும் நிகழ்ச்சிப் பகுதிகளில், சில 'நல்ல விடயங்கள்' நடந்திருக்கின்றன.

இன்றைய நிகழ்ச்சியில், திரு. டானியல் வெளியேறும் படலத்தில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சம்பவம் அடங்கியிருந்தது. கமலின் காலில் விழ முயன்ற டேனியை நிறுத்தி, ''அதுக்கு இன்னொரு வழி இருக்கு'' என்று சொல்லிக்கொண்டே கட்டிப்பிடித்துக்கொண்டார் கமல்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கமல். அவரை எனக்குப் பிடிப்பதற்கான காரணங்களில் ஒன்று அது. ஆனால், 'ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்' என்று அவரைப் பிறர் சொல்லும்போது, 'ஆமோதிப்பது போல' அவர் நடந்துகொள்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நேற்று, திரு.பாலாஜி அப்படிச் சொல்லும்போது 'அமைதியாக' இருந்துவிட்டார் கமல். அவருக்குள் ஒருவித 'மேட்டிமைத்தனம்' தொழிற்படுகிறதோ என்னவோ?

எதற்காகவும் காலில் விழுவது தவிர்க்கப்பட வேண்டியதே. கட்டி அணைத்தல், கைகுலுக்குதல் போன்ற நடத்தைகளில், பரஸ்பர அன்பும் மதிப்பளித்தலும் பேணப்பட முடியும். பொதுவாக மனித நடத்தைகளில், பரஸ்பர சுயமரியாதை பேணப்பட வேண்டியது அவசியமாகும்.

2018-09-02
அமரதாஸ்