Friday, June 22, 2018

ஊடக அற மீறல்.



ஒரு அமைப்பின் (PLOTE) ஆரம்பகாலப் பயிற்சிமுகாம்  காட்சிகளை YouTube தளத்தில் மிக அண்மையில் பார்த்திருந்தேன். அதிலிருக்கும் சில பயிற்சிக்  காட்சிகள், IBC தொலைக்காட்சி யின்  நிகழ்ச்சியொன்றில் ('தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! - வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்') பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மூலக் காட்சிகளில் 'Swiss Ranjan PLOTE' என்று பதிக்கப்பட்டிருந்த எழுத்துகள், IBC தொலைக்காட்சி யில் பயன்படுத்தும் போது அழிக்கப்பட்டிருப்பது ஊடக தர்மத்தின் அடிப்படையில் நியாயமானதல்ல. இரண்டையும் YouTube  மூலம்  அண்மையில் நான் அடுத்தடுத்துப் பார்க்க முடிந்தமையால்  இதனைக் கண்டுபிடிக்க முடிந்தது. இப்படியான காரியங்களில் சில 'ஊடகங்கள்' அவ்வப்போது செயற்பட்டு வருவது புதிதல்ல என்றாலும், இப்போது ஆதாரபூர்வமாக  அறிந்த இதனைப் பதிவுசெய்யத் தோன்றியது. ஒருவேளை, சம்மந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற்று எழுத்துகள் அழிக்கப்பட்டிருந்தால், அது ஊடக தர்மத்துக்கு உட்பட்டதாக அமைந்திருக்கக் கூடும்.

சுவிஸ் ரஞ்சன் என்பவரோ  புளொட் அமைப்பினரோ என்னுடன் தொடர்பில் உள்ளவர்களல்ல. IBC தொலைக்காட்சி மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை. ஒரு சுயாதீன ஊடகராக, எனது ஊடகவியல் அனுபவ அறிவின் அடிப்படையில் எனது 'பார்வையினை' இங்கு பதிவுசெய்கிறேன். அவ்வளவு தான். இது, கடந்து போய்விடக்கூடிய 'சிறிய' விடயமாகப் பலருக்கும் தோன்றக் கூடும். ஆனால், இத்தகைய விடயங்களை ஊடக உலகத்தில் 'அனுமதிப்பது' ஆபத்தானதாகும்.   

வரலாற்று ஆதாரங்களை, தகவல்களை, படங்களை  எங்கிருந்தும் யாராலும் பெற முடியும். அவற்றின்  உண்மைத்தன்மையினையோ பின்னணித்தகவல்களையோ மறைக்க முயல்வது ஊடக தர்மத்தின் அடிப்படையில் இழுக்கான காரியமாகும். அது அறமற்றது. ஒருவருக்கு உரித்துடைய ஆவணம் ஒன்று, நல்ல நோக்கத்திற்காக எடுத்தாளப்படும் போது, உரித்துடையவரின் 'பெயர்' திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுவது அறமல்ல. ஒரு இடத்தில்  இருந்து ஒன்றைப் பெறுவது விருப்பமில்லையெனில் அல்லது பெறுவதில் உடன்பாடில்லையெனில், அதைப் பெறாமலேயே இருந்துவிடலாமே... இன்னொருவரினதோ இன்னொரு அமைப்பினதோ ஆவணத்தின் உண்மைத்தன்மையை  மறைக்க முயல்வது மோசமான  ஊடக ஊழலாகும். தயவுசெய்து  இத்தகைய ஊழலை ஊடகங்களும் தனிமனிதர்களும் இனியாவது செய்யாமலிருக்க வேண்டும்.



விடுதலைப் புலிகளுக்கும் இந்திய  இராணுவத்தினருக்கும் இடையிலான  மோதல் இடம்பெற்ற  காலத்தில், விடுதலைப் புலிகள் வளர்த்த சிறுத்தை ஒன்று கைவிடப்பட்டது பற்றி, நேற்று ஒருவர் தனது முகநூலில் பதிவுசெய்திருந்தார். அந்தப் பதிவினை, இன்று இரண்டு நபர்கள் தமது முகநூலில் எழுதியவரின் பெயர் போடாமல் அப்படியே மீள்பதிவு செய்திருந்தார்கள். இத்தகைய பொறுப்பற்ற செயல்களை முகநூலிலும்  அடிக்கடி காண முடிகிறது. முகநூலும் அடிப்படையில் ஒரு ஊடகமாகும். அதனாலேயே அது சமூக வலைத்தளம் என்று சொல்லப்படுகிறது.

2018-06-22

கொலையும் குரூர மனநிலையும்.


இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதில்லை. இந்த உலகமானது, குறிப்பிட்ட இனப் பிரிவினருக்கானதோ நிறப் பிரிவினருக்கானதோ வர்க்கப் பிரிவினருக்கானதோ மதப்பிரிவினருக்கானதோ ஏனைய பிரிவினருக்கானதோ மட்டுமானதில்லை என்பதை எல்லா மனிதர்களும் உணர வேண்டும்.

ஜீவகாருண்ணியம் எனப்படுவது, மனிதர்களிடம் இருக்க வேண்டியதும் மனிதாபிமானத்தை உள்ளடக்கியதுமாகும். ஒரு 'ஆபத்தான உயிரினம்' ஆபத்துக்குரிய தருணத்தில் கொல்லப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கக் கூடும். ஒரு கொலைக்கு, சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கக் கூடும். எது எப்படியிருந்தாலும், ஒரு கொலையினைக் கொண்டாட்ட மனநிலையில் அணுகும் மனித மனநிலை மிகவும் வக்கிரமானது, ஆபத்தானது...

கிளிநொச்சியில் ஒரு சிறுத்தை கொலை செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கொலை, பாதுகாப்புக் காரணத்துக்கானதாக இருக்கலாம். அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். அந்தக் கொலையானது, சட்ட ரீதியில் குற்றமாகக் கூட இருக்கலாம். அந்தக் குற்றத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்தக் கொலை நடைபெற்ற சூழலில் நிலவிய 'கொண்டாட்ட மனநிலை' கண்டிக்கப்பட வேண்டியது. வெற்றிக் களிப்புடன் கூடிய வக்கிர மனநிலை அது. அங்கு பதிவாகியுள்ள ஒளிப்படங்களும் வீடியோ பதிவுகளும் மனிதர்கள் சிலரின் குரூரத்தை வெளிப்படுத்துகின்றன.

'இன விடுதலையின் பெயரால்', சொந்த இனத்திற்குள்ளேயே இயக்கங்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான படுகொலைகளை 'ஆதரிக்கிற' மனநிலை கொண்டவர்கள், இதையும் இலகுவில் கடந்து போய்விடுவார்களா? போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைக் குற்றங்களையும் 'கொண்டாட்ட மனநிலையில்' குரூரமாகச் செய்து முடித்த சிங்கள அரச தரப்பினருடன் இணங்கிப் போகிறவர்கள், எதையும் கடந்து போய்விடுவார்களா? வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்பு ஒன்றினை அடித்துக் கொன்றுவிட்டு, இப்படி யாரும் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்களா?

இந்த 'சிறுத்தை' படுகொலைக்குள்ளானது, இலங்கையில் இனி விசாரிக்கப்படக் கூடும். அத்தகைய விசாரணையை வேண்டுகிறவர்களும் அதற்கு ஆதரவாக இருப்பவர்களும், இறுதி யுத்த காலத்தில் பெருந்தொகையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் போர்க்குற்றங்களுக்குமான விசாரணைகளை வேண்டுவார்களா?

குறிப்பு - சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள இந்த ஒளிப்படத்தினை ஆவண முக்கியத்துவம் கருதிப் பதிவுசெய்கிறேன். ஏனைய படங்கள் மற்றும் வீடியோ எதனையும் பதிவுசெய்ய மனம் வரவில்லை. கொல்லப்பட்ட சிறுத்தையின் தோற்றம் தரும் துயரத்தை விட, சில மனிதர்களின் உடல் மொழியிலும் கூக்குரல்களிலும் தொனிக்கும் 'குரூரம்' தரும் துயரம் அதீதமானது.

2018-06-22

Thursday, June 14, 2018

கேரளப் பயணத்தின் சிறு தடம்.




சில கேரள நண்பர்களுடன் ஒரு வண்டியில் ஒளிப்படங்கள் எடுப்பதற்காகப் பயணித்துக்கொண்டிருந்த போது, கேரளாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில்   கம்பீரமாக நிற்கும் திரு. சே குவேரா வின் பெரிய அளவிலான படத்தைக் கண்டேன். (கேரளாவில், பல இடங்களில் சே குவேரா வின் படங்களைக் கண்டிருக்கிறேன்.) அந்த இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். 

உண்மையான போராளியாக மட்டுமல்ல, கவிஞராகவும் ஒளிப்படக் கலைஞராகவும் சே குவேரா இருந்தார். எல்லோரது பிறப்பும் போல, அவரது பிறப்பும் சாதாரணமானது தான். பிற்காலத்தில், தன் வாழ்வை 'அர்த்தமுள்ளதாக' ஆக்கிக்கொண்டார்.

சேகுவேரா கம்பீரமாக நிற்கும் அந்தப்  படம், சில இடங்களில் கிழிந்திருந்தது. அதுவும் கூட வித்தியாசமான அழகைக் கொடுப்பதாகத் தோன்றியது. சே குவேரா வின் பெரும்பாலான படங்கள், எப்போதும் ஈர்ப்புக்குரியவையாகவே இருக்கும். அந்தப் படத்தின் ஈர்ப்பிற்கான காரணங்கள் பற்றி, அந்த இடத்தில் நின்று யோசித்துக்கொண்டிருந்தேன். கேரளத் திரைத்துறையினர் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்த  விவரணத் திரைப்பட இயக்குநரான நண்பர்  ஒருவர், 'அவரைப் போல, உங்கள் கழுத்திலும் ஒரு கமெரா இருக்கிறது' என்று சொல்லிவிட்டு, சே குவேரா வின் அந்தப் படத்துக்கு அருகில் என்னை  நிற்கவைத்து ஒளிப்படம் எடுத்தார். அந்த இடத்தில், நானும் என்னவோ சொல்லிவிட்டு எல்லோருடனும் சேர்ந்து சிரித்தேன்.

2018-06-14
அமரதாஸ்

Friday, June 1, 2018

ராஜ்குமாரும் நானும் அல்லது சென்னையும் சினிமாவும்.

ராஜ்குமார் & அமரதாஸ் (WOODLANDS SYMPHONY திரையரங்கு)

சினிமாவில் தீவிர ஈடுபாடு கொண்டவன் ராஜ்குமார். சென்னையில், திரைத்துறையில் இயங்கும் நண்பன் சோமிதரன் வீட்டில் அவன் தங்கியிருந்தபோதுதான் அவனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது சென்னையில் திரைப்பட விழா நடைபெற்றது. தினமும் அவனோடு சென்று பல மொழிகள் சார்ந்த பல்வேறு திரைப்படங்கள் பார்த்தேன்.

சினிமா பற்றி அதிகம் பேசுவான், கேட்பான். அவனுக்கு, வளர்ந்துவரும் HDSLR Film Making பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், காசநோய் விழிப்புணர்வு குறித்த ஒரு குறும் திரைப்படப் போட்டிக்கு அனுப்பவென ஒரு குறும் திரைப்படம் உருவாக்குவோமென்றும், அதற்கு நான்தான் என்னிடமிருந்த Canon HDSLR கமெராவினால் ஒளிப்பதிவு செய்யவேண்டுமென்றும் சொன்னான். அவனது தீவிரம் எனக்கு விளையாட்டுத்தனமாகவே ஆரம்பத்தில் தெரிந்தது. தவிரவும், கலை ரீதியில் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இல்லை. அவனது வற்புறுத்தலால் அவனோடு இணைந்து சென்னையில் பல இடங்களுக்கும் சென்று படப்பிடிப்புக்களை மேற்கொண்டேன்.
கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவே படப்பிடிப்பு நிகழ்ந்தது. பரீட்சார்த்த முயற்சியாகவும் இருந்தது. பல காட்சிகளைத் உள்ளடக்கம் சார்ந்து, திட்டமிட்டே Out Of Focus நிலையில் எடுத்தேன். கமெரா அசைவுகள், கமெரா கோணங்கள், ஒளியமைப்பு எல்லாவற்றையும் வித்தியாசப்படுத்தியும் எடுத்தேன். என்னைக் கூட வைத்துக்கொண்டு ஒரு பரிசோதனை முயற்சியைத்தான் அவன் செய்துகொண்டிருந்தான். அடிக்கடி திட்டங்களை மாற்றிக்கொண்டிருந்தான். அதிகம் திட்டமிடல் இல்லாமல் இயங்கினான். சிலசமயம் எனக்கு சலிப்பாகவுமிருந்தது, என்னை வைத்துக் ‘கொமெடி’ பண்ணுவது போலவும் இருந்தது.
ஒரு நாள், ஒருவர் இருமுவதுபோல ஒரு காட்சி எடுக்கவேண்டியிருந்தது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ஒரு இடத்தில் நின்று கொண்டு, பலரை வந்து கமெரா முன்னால் இருமச் சொன்னோம். எல்லோரும் மறுத்து நழுவி விட்டனர்.(காசநோய் பற்றிய படம் எடுக்கிறோம் என்று தெரிந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ?) கடைசியில் கமெராவை 'செற்' பண்ணித்தந்துவிட்டு நீங்களே போய் இருமுங்கள் என்று வற்புறுத்தினான். வேறு வழியில்லாமல் நானே கமெரா முன்னால் இரும வேண்டியிருந்தது. அந்த மோசமான இருமலைப் படத்தொகுப்பில் சேர்க்காதே என்று அப்போதே சொன்னேன். அவன் வேறு வழியில்லாமல் அதையே கோர்த்துவிட்டிருந்தான்.
படப்பிடிப்பை வேகமாக ஒரு வாரத்தில் முடித்துவிட்டு வேறு இடம் சென்றுவிட்டேன். நீண்டகாலம் அவனை நேரில் சந்திக்கவில்லை. நான் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் அவசரகதியில் படத்தொகுப்பு செய்யப்பட்டு அவனால் போட்டிக்கு அனுப்பப்பட்டது. போட்டி விதிமுறைகளுக்கு சரியாகப் பொருந்தியிருக்கவில்லையென்றும், பொதுவாக நன்றாக வந்திருப்பதாகவும் அங்கு தேர்வாளர்களாக இருந்த நடிகர் சூர்யா வும், இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனனும் சொல்லி அந்தப் படத்தைச் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்தார்களென்று பிறிதொரு நாளில் ராஜ்குமார் சொன்னான். படத்தொகுப்பின் பின் அது ஒரு பரீட்சார்த்த நிலையிலான Documentary ஆகிவிட்டிருந்தது.
சென்னையில் உள்ள L.V.Prasad Film & TV Academy க்கு ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றேன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்குநர் பிரிவுகளில் இணைந்து திரைத்துறை அனுபவங்களை விரிவுபடுத்தும் நோக்கில், அதன் இயக்குநராக இருந்த ஹரிஹரன் அவர்களைச் சந்தித்தேன். ராஜ்குமார், அங்கு எனது கமெராவினால் சில ஒளிப்படங்களும் எடுத்தான். அங்கிருந்த கமல்ஹாசனின் படத்துக்கு அருகே நான் எதிர்பாராத விதமாக ஒரு படத்தை எடுத்துவிட்டு என்னவோ காரணத்துக்காக அது தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னான். எனக்கு, அது கொஞ்சம் செயற்கைத்தனமாகத் தோன்றுவதால் பிடிக்கவில்லை என்று சொன்னேன்.
L.V.Prasad Film & TV Academy யில் இருந்து திரும்பி வந்ததும், இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனின் Mindscreen Film Institute சென்று இயக்குநர் பிரிவில் இணைந்துகொள்ளவிருந்த திட்டத்தைக் கைவிட்டு L.V.Prasad Film & TV Academy யில் இயக்குநர் பிரிவில் இணைந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னான். பிறகு அப்படியே இணைந்து கொண்டான். நல்ல இயக்குநராகி விடுவான் என்று நினைத்திருந்தேன்.
நீண்ட காலம் அவனோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மிக அண்மையில், திரைத்துறையில் இயங்கும் நண்பன் அரவிந்த் மூலம் ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டான் என்ற தகவலை அறிந்தேன். துயரமும் அவனோடு சென்னையில் திரிந்த நினைவுகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன.
ராஜ்குமார்..... உனக்கு என்னடா ஆச்சு? என்னென்னவோ எல்லாம் செய்யவேணுமென்று சொல்லிக்கொண்டிருந்தாயே....

திரு.ஹரிஹரன் & அமரதாஸ் - ராஜ்குமார் எடுத்த படம்.

ராஜ்குமார் எடுத்த படம்.


ராஜ்குமார் எடுத்த படம். (L.V. Prasad Film & TV Academy)

ராஜ்குமார் எடுத்த படம். (L.V. Prasad Film & TV Academy)



சோமிதரன் வீட்டில், சோமிதரனின் அம்மா  மற்றும் ராஜ்குமார்.

அமரதாஸ் 2015-12-20