Tuesday, October 23, 2018

ஊடக வெளியும் இழிநிலைகளும்



தமிழகத் திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜாவின் அண்மைக்கால இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து நிகழ்ந்திருக்கும் சர்ச்சைகள், இலகுவில் கடந்து செல்லக்கூடியவையல்ல.  

யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில், ஒருவகை மேட்டிமைத்தனத்துடன் 'முறைகேடாக' அவர் நடந்துகொண்டார். அப்போது அவரை, அங்கிருந்த செய்தியாளர்கள் பக்குவமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். அந்த இடத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டிய ஆரோக்கியமான, முறையான எதிர்வினைகள் நிகழவில்லை. பின்னர், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் தொடர்ந்தன. பிரமுகராக நிகழ்வொன்றில் முன்னிறுத்தப்பட்டிருக்கும் ஒருவர், எத்தகைய கேள்விகளையும் பக்குவமாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது. பதில் சொல்ல விரும்பாத (முடியாத) அல்லது சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றுகிற 'சிக்கலான' கேள்விகளை, நாகரிகமாக மறுத்துக் கடந்துவிட முடியும். சமூக வாழ்வில், பொதுவெளியில்  'எழுந்தமானமாக', 'முறைகேடாக' எதையும் யாரும் செய்துவிட முடியாது.

குழப்பத்தில் முடிந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, இரண்டு நபர்களால் பாரதிராஜாவின் 'கால்கள் கழுவப்படுவது' மாதிரியான படமொன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, சர்ச்சைகள் வேறுபோக்கிலே தொடர்ந்தன. எந்த விளக்கமுமின்றி, முன்முடிவுகளுடனும் 'கொச்சையான' கருத்துகளுடனும் பெரும்பாலும் பகிரப்பட்டிருக்கிறது அந்தப் படம். தமிழ்ச் சூழலில்  எதையும் சரியாக ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு அவசரகதியில் கருத்துதிர்க்கும் வழக்கம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல. சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அமைவாக, தனிமனித நடத்தைகள் சார்ந்து 'அவசரகதியில் ' முன்வைக்கப்படும் எதிர்வினைகள், கண்ணியத்துடன் அமைவதில்லை. எங்கு, எப்போது, எச் சந்தர்ப்பத்தில், யாரால், எதற்காக அந்தப் படம் எடுக்கப்பட்டது? யாரால், எப்படி அது விபரங்கள் எதுவுமில்லாமல் வெளிவந்தது? அந்தப் படம் தொடர்பான பின்னணித்தகவல்கள் எதுவும் சரியாக இதுவரை கிடைக்கவில்லை. அந்தப் படமானது, பல வகையில் திரிபுபடுத்திக் காட்டப்படக் கூடியதாக, இருப்பதால் பின்னணித்தகவல்கள் அவசியமாகின்றன. எது எப்படியிருந்தாலும், சமூக மட்டங்களில் நிலவும் மேட்டிமைத்தனங்களையும் கசடுத்தனங்களையும் மத, கலாச்சார, அதிகார, அரசியல்  பின்புலங்கள் வழியாகப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் வெளிப்படுத்த வேண்டும்.   

பாரதிராஜா சம்மந்தப்பட்ட  அந்தப் படத்தில், ஒருவகையான 'மேட்டிமைத்தனம்' தொனிப்பதை அவதானிக்க முடிந்தாலும், பின்னணித்தகவல்கள் பற்றிச் சரியாக அறிந்துகொள்ளாமல் முடிவாக எதையும் கூறிவிட முடியாது.  அப் படமானது, எத்தகைய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று, அதில் இருக்கிற மூவரும் அந்தப் படத்தை எடுத்தவரும் தான் இனி வெளிப்படையாகப் பேச வேண்டும். வயது முதிர்ந்த ஒருவருக்கான 'வைத்திய உதவி' நடந்திருப்பதன் பதிவாகக் கூட அது புரிந்துகொள்ளப்படக் கூடும். பாரதிராஜா வயது முதியவரானாலும், உடல் சார்ந்த காரியங்களை சுயமாகச் செய்துகொள்ள முடியாத அளவிற்குத் தளர்ந்துபோனவரல்ல. கால்களில் வலி இருந்தால் யார் கால்களையும் யாரும் வெந்நீரில் கழுவிடுவதும் மசாஜ் செய்து விடுவதும் சாதாரணம் தான். கால்களைக் கழுவக் கொடுத்த பாரதிராஜாவினதும், கழுவிக் கொடுத்த இரண்டு நபர்களினதும் மனநிலைகள் நுட்பமாக ஆராயப்பட வேண்டியவை.  ஒரு 'பிரமுகராக' இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்த பாரதிராஜாவின் மனநிலையானது, அதிகார துஸ்பிரயோகமாக, மேட்டிமைத்தனமாகத் தொழிற்பட்டிருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது. ஒரு 'மசாஜ்' நிலையத்திலோ அல்லது  வைத்திய நிலையத்திலோ, உடல் சுகத்திற்காக, 'உடன்பாட்டு நிலையில்' நிகழும் காரியங்கள் வேறுவகையானவை. 
   
விசேடமான சூழ்நிலைகளில், பிரத்தியேகமான அல்லது அந்தரங்கமான தருணங்களில் தனி நபர்கள் சார்ந்து தற்செயலாகவோ செய்திமதிப்புடனோ (news value) எடுக்கப்படுகின்ற  ஒளிப்படங்கள், ஊடக வெளிகளில் 'தவறான  முறைகளில்' பிரயோகிக்கப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பதிவாகியுள்ள ஒளிப்படமானது, ஒருவரது தனிப்பட்ட 'இயல்பை' அல்லது ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்துவிடுவதும் உண்டு. எது எப்படியிருந்தாலும், நம்பகத்தன்மையுடன் கூடிய பின்னணித்தகவல்கள் எதுவும் கொண்டிராத ஒரு ஒளிப்படமானது, தவறான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் வகையில், ஊடகவெளிகளில் பிரயோகிக்கப்படுவது அறமாகாது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தோ தனிப்பட்ட நடத்தை குறித்தோ யாரும் எழுந்தமானமாகவோ அவதூறாகவோ கருத்துக்கள் முன்வைப்பது ஏற்புடையதல்ல. எது எப்படியிருந்தாலும், ஊடக ரீதியான அத்துமீறல்களும் தனிமனித அத்துமீறல்களும்  இனங்காணப்பட வேண்டியவை. தனிமனித சுதந்திரம் குறித்த தெளிவான நிலைப்பாடு எல்லோருக்கும் அவசியமானது. தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தும் ஓர்மமும் சுயசிந்தனையும் கொண்ட மனிதர்களே, அதிகார மையங்கள் சார்ந்த 'அரூப கரங்களின்' குரூரத்தை அம்பலப்படுத்தக் கூடியவர்கள்.

கால் கழுவுதல், முதுகு சொறிதல், காலில் விழுதல், காக்கா பிடித்தல் (கால் கை பிடித்தல்), அடிவருடுதல் (அடிவருடி), மண்டியிடுதல், போன்ற சொற்தொடர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கப்படுகிற சந்தர்ப்பங்கள் நுட்பமாக அவதானிக்கப்பட  வேண்டியவை. அவை, அதிகாரத்திற்கு முன் இணங்கிப் போவதை 'இழிவாக' எடுத்துரைக்கும் வகையிலே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. சாதி, மதம், அரசியல் போன்ற அதிகார மூலங்களின் இடுக்குகளில் இத்தகைய சமூக இழிவுகள் போசிக்கப்படுகின்றன.   

மரியாதை நிமித்தமாகவும் அன்பின் நிமித்தமாகவும் செய்யப்படுகிற 'மதிப்பளிப்பு' சார்ந்த உடல்மொழிதல்கள் புரிந்துகொள்ளக்கூடியவை. அவை, தனிமனித மற்றும் சமூகப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகப் பார்க்கப்படக் கூடும். அதிகாரத்தினாலோ அல்லது மேட்டிமைத்தனத்தினாலோ அடிமை மனோபாவத்தினாலோ செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிற காரியங்கள் இனங்காணப்பட வேண்டியவை. காலில் விழுதல், அதிகாரத்தின் முன் மண்டியிடுதல், தனிமனித வழிபாடு போன்ற சமூக இழிவுகள் கண்டிக்கப்பட வேண்டியதுடன் களையப்பட வேண்டியதுமாகும். 

பாரதிராஜாவின் முதலாவது வன்னி வருகையின் போது, அவரைச் சந்தித்திருக்கிறேன். 'ஆணிவேர்' என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருந்தார். அந்தத் திரைப்பட உருவாக்கத்தில் எனது தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்பு, ஒளிப்படத் துறை சார்ந்ததாக இருந்தது. பாரதிராஜாவின் திரைப்படங்கள் மீதான 'மிகை மதிப்பீடுகள்' எதுவும் என்னிடமில்லை. எனினும், தமிழ் சினமாவில் அவரது பங்களிப்பு குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. அவர் நிதானமாக இருந்து, தனது ஆரோக்கியத்தைப் பேணிக்கொண்டு தொடர்ந்து இயங்குவது நல்லது. திரு. சீமான் போல, பாரதிராஜாவும் பொதுவெளியில் சர்ச்சைகளுக்குரிய வகையில் அடிப்படைவாத நிலைப்பாடுகளையும், அதிகாரத் தோரணைகளையும் வெளிப்படுத்தி வருவதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இத்தகையவர்களின் உளவியலும் உடல்மொழியும் நடத்தைக் கோலங்களும் ஆழமாக அணுகிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.  

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன், வன்னியில் பாரதிராஜாவைச் சந்தித்தபோது, ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இயக்குமாறு கேட்டிருந்தார். பிரபாகரனிடம் சில விடயங்களைச் சொல்லி 'நழுவிவிட்டார்' பாரதிராஜா. ஈழப் பிரச்சினைகள் பற்றி அடிக்கடிப் பேசும் பாரதிராஜாவால் ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இதுவரை இயக்க முடியவில்லை. ஈழப் பிரச்சினைகளை அவற்றின் சகல பரிமாணங்களோடும் உள்வாங்கி, ஒரு நல்ல ஈழத் திரைப்படத்தை இயக்கி, சர்வதேச அளவில் அவரால் கொண்டுசெல்ல முடியும் என்று தோன்றவில்லை. (உண்மையான அக்கறைகளுடன் முயன்றால் அது சாத்தியமாகக் கூடும்.) இலங்கைக்கு அவர் இப்போது பயணம் செய்திருப்பதன் நோக்கம் சரியாகத் தெரியவில்லை.   

பாரதிராஜாவையோ அவரை இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றவர்களையோ தொடர்புகொள்ளக்கூடிய நிலையில் உள்ள யாராவது, அவர்களோடு உரையாடி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். பாரதிராஜாவின் கால்கள் 'கழுவப்படுவது போன்ற' படம் தொடர்பிலும், யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதான பாரதிராஜாவின் 'முறைகேடான' நடத்தை தொடர்பிலும் ஊடகவியல் நெறிமுறைகளுக்கு அமைவான உரையாடல் சாத்தியமாக வேண்டும்.

2018-10-23
அமரதாஸ்