Saturday, May 12, 2018

நீதி கோரலை வீரியமாக்குதல்.


இந்தக் கட்டுரைக்குப் பயன்படுகிற ஒளிப்படம் பற்றிய சிறு அறிமுகம் - இந்த ஒளிப்படமானது, சர்வதேச மட்டத்திலான பல்வேறு ஒளிப்படக் காட்சிப்படுத்தல்களிலும் பல ஊடகங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. ஜேர்மன் நாட்டில் 2013 இறுதியில், சர்வதேச மனித உரிமை வாதிகளால் 'Permanent Peoples Tribunal' (நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்) என்னும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழினப் படுகொலையை உறுதி செய்யும் விதமாக அது அமைந்திருந்தது. அதைச் சார்ந்து வெளியிடப்பட்ட 'Permanent Peoples Tribunal - Peoples Tribunal on Sri Lanka' என்னும் நூலின் அட்டைப்படமாகவும் இந்த ஒளிப்படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது, சுவிற்சர்லாந்து நாட்டிலுள்ள சூரிச் நகரில் அமைந்திருக்கும் பல்கலைக் கழகத்தில் 'Tears of Tamils - A journey through war zones of Sri Lanka' என்னும் மகுடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒளிப்படக் காட்சியில் இந்த ஒளிப்படம் இடம்பெற்றிருக்கிறது. சுயாதீன ஊடகராகவும் கலைஞராகவும் அறியப்படுகிற அமரதாஸ் என்பவரால், 'இறுதி யுத்த காலத்தின்' நெருக்கடியான ஒரு தருணத்தில் இந்த ஒளிப்படம் எடுக்கப்பட்டது.



நீதி கோரலை வீரியமாக்குதல்.

முள்ளிவாய்க்கால் வரை நீண்ட 'இறுதி யுத்தம்', பெரும் அவலங்களைத் தமிழினத்தின் மேல் திணித்திருக்கிறது. பேரினவாதச் சிங்கள அரசை அம்பலப்படுத்தி, நியாயமான நிரந்தரத் தீர்வைச் சாத்தியப்படுத்தக் கூடிய போராட்ட அரசியல் நடவடிக்கைகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியம் தமிழினத்திற்கு உள்ளது. இறுதி யுத்தத்தின் எதிர்மறை அம்சங்களில் இருந்து சாதகமான 'உள்ளுடன்கள்' கண்டறியப்பட முடியும். அவற்றைத் தெளிவான முறையில் இனம் கண்டு,'புதிய முறையிலான' போராட்ட அரசியலை வீரியமாகத் 'தமிழர் தரப்புகள்' முன்னெடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட 'இனப்படுகொலை' என்னும் அரசியல் அவலத்தை 'அரசியல் மயப்படுத்தும்' வகையிலான நகர்வுகள், சர்வதேச மட்டங்களில் நிகழ வேண்டியிருக்கிறது. இனப்படுகொலையின் 'சாட்சியங்களை' இனம் கண்டு, அவற்றைத் தேவைப்படுகிற இடங்களில் 'உரிய முறைகளில்' வெளிப்படுத்தக் கூடிய வகையிலான போராட்ட அரசியல் முன்னெடுப்புகளே இப்போதைய அவசியத் தேவைகளாகும்.

சிங்களப் பேரினவாத அரசின் பாரிய போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை சர்வதேச சமூகங்களின் மத்தியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் 'நிரூபிப்பது' இலகுவில் நடந்துவிடக் கூடியதல்ல. வல்லாதிக்க சிந்தனைகளிலும் பொருளாதார அரசியல் நலன்களிலும் மட்டுமே பெரும்பாலும் ஊறிப்போயிருக்கும் சர்வதேச அரசுகளின் நடவடிக்கைகள் மற்றும் சிங்களப் பேரினவாத அரசின் தந்திரமான ராஜதந்திர நடவடிக்கைகள் மத்தியில் தமிழர் நலன் சார் 'முன்னெடுப்புகள்' எப்போதும் சிக்கலானவை, ஆபத்தானவை. மதிநுட்பத்துடன் கூடிய ராஜதந்திர அடிப்படையில் தமிழர் நலன் சார் முன்னெடுப்புகள் விரிவாக்கம் பெற வேண்டிய அவசியம் தமிழ்த் தரப்புகளால் சமகாலத்தில் உணரப்பட வேண்டியிருக்கிறது.

விரும்பியோ விரும்பாமலோ 'அரசியல் பின்னணியில்' இறந்தவர்களை நினைவுகூரலும், இறந்தவர்கள் சார்ந்த எத்தகைய நடவடிக்கைகளும், எஞ்சி இருப்பவர்களது கண்ணியமான பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவும் வகையிலும் இறந்தவர்களது கண்ணியம் பேணப்படும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். 'தலைமைகளுக்கு' மட்டுமேயான 'வெற்று விசுவாச' நடவடிக்கைகளாகவோ அல்லது 'பிழைப்புவாத' நடவடிக்கைகளாகவோ இல்லாமல், முற்போக்கான செயலாக்கக் கருத்தியல்களில் ஊட்டம் பெற்றவையாகவே எத்தகைய போராட்ட அரசியல் நடவடிக்கைகளும் அமைந்திருக்க வேண்டும்.

கண்ணியமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வின் பெயரால் முன்னெடுக்கப்படுகிற போராட்ட அரசியல் நடவடிக்கைகளை ஆற்றுப்படுத்தக் கூடியதாக, 'சுதந்திர தேசியவாதம்' என்னும் புதிய 'விடுதலைக் கருத்தியல்' செயலாக்கம் பெற வேண்டும். 'சுதந்திர தேசியவாதம்' எனப்படுவது ஜனநாயகப் பண்புகளை, மனிதாபிமானத்தை அத்திவார உட்கட்டுமானங்களாகக் கொண்ட முற்போக்குக் கருத்தியலாகும். அது, 'குறுந் தேசியவாதம்' என்று அறியப்படுகிற கருத்தியலுக்கு மாற்றான நடைமுறைக் கருத்தியலாக அமைந்திருக்கும்.

இலங்கையின் சமகால அரசியல் மற்றும் இன விகிதாசார அடிப்படைகளில் நோக்கும் போது, கட்சி அரசியல் அல்லது ஓட்டு அரசியல் வழிமுறைகளில், குறிப்பிட்ட அளவிற்கு மேல் தமிழர்களால் நகரமுடியாது என்று தோன்றுகிறது. எனவே, மக்கள் மயப்படுத்தப்பட்ட மாற்று அரசியல் செயற்பாடுகளின் தேவைகள் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்கள் மத்தியில் உணரப்பட வேண்டும். கட்சி அரசியல் வழிமுறைகளுக்கு அப்பால், மக்கள் ஆதரவுடன் கூடிய 'இயக்க அரசியல்' வழிமுறைகள் இனி அவசியப்படுகின்றன. சர்வதேச அரசியல் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, தெளிவான நிலைப்பாடுகளுடனும் ராஜதந்திர அடிப்படைகளிலும் தம்மைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தமிழர் தரப்புகளுக்கு இருக்கிறது.

தமிழ்த் தரப்புகளின் கடந்தகாலத் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் அரசியல் சாதக நிலைமைகள் போன்றவற்றில் இருந்தும் கடந்தகாலத் தவறுகளில் இருந்தும் படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு புதிய முறையில் முன்னெடுக்கப்படும் போராட்ட அரசியல் முயற்சிகளே ஆக்கபூர்வமானவை, தமிழ்ச் சமூகத்தினால் வரவேற்கப்பட வேண்டியவை. அத்தகைய படிப்பினைகளின் அடிப்படையிலான போராட்ட அரசியல் முன்னெடுப்புகளே, தமிழர் தரப்புகளுக்கான தார்மீகத் தகுதியையும் ஆக்கபூர்வ வளர்ச்சியையும் வழங்குவதாக இருக்கும். அத்தகைய முன்னெடுப்புகள், இலங்கையில் மாத்திரமல்ல, முக்கியமாக தமிழர் வாழும் சர்வதேச நாடுகளெங்கும் பரவலாக்கம் பெற வேண்டும். தமிழர்கள், உலகெங்கும் பரந்து வாழ்வதில் இருக்கக் கூடிய சாதக மற்றும் பாதக நிலைமைகள் ஆராயப்பட்டு, நிதானமாகவும் ராஜதந்திர வழிமுறைகளோடும் தமிழர்களுக்கான போராட்ட அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தரப்புகள், தமக்குள் பொதுக் கருத்தியலின் அடிப்படையிலும் பொது இலக்கின் அடிப்படையிலும் இயன்றவரையில் 'ஒன்றுபடுவதே' ஆரோக்கியமானது. தமிழர்களின் இன ரீதியிலான விடுதலை சார் நகர்வானது, உலகின் ஏனைய இனங்களினதும் நாடுகளினதும் பாதுகாப்புக்கோ 'நலன்களுக்கோ' இடையூறானதில்லை என்பது, சர்வதேச அரங்கில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க நிலையில் முன்வைக்கப்பட வேண்டும். தமிழர்கள், 'விடுதலைக்குத் தகுதியான' கண்ணியமான இனத்தின் மக்கள் என்பது 'காட்சிப்படுத்தப்பட' வேண்டும்.

இறுதி யுத்தமானது 'முள்ளிவாய்க்கால்' என்னும் இடத்தில் பேரவலங்களுடன் முடிவடைந்தது. தமிழர்களுக்கான பல படிப்பினைகளையும் கசப்பான உண்மைகளையும் 'முள்ளிவாய்க்கால் யதார்த்தம்' கொண்டிருக்கிறது. இனப்படுகொலைச் செயல் முறையின் (genocide process) உச்சக் கட்டமாக, அரசியல் அர்த்த பரிமாணங்களோடு, சர்வதேச அரங்கில் 'முள்ளிவாய்க்கால் யதார்த்தம்' நிலைநிறுத்தப்பட வேண்டும். இது, இலகுவான காரியமல்ல. ஆனால், இதை விட இப்போதைய நிலையில் தமிழர்கள் வலுவாகப் பற்றிக்கொள்ளக்கூடிய 'ஏதுநிலை' எதுவுமேயில்லை.

இனப்படுகொலைக்கான உள்நோக்கமும் அதன் வரலாறும் ஆதாரங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அது சர்வதேச அரங்கில் பரிசீலனைக்கு உள்ளாகும் நிலை தோன்றும். (இது தொடர்பில் நிகழக் கூடிய வல்லாதிக்க சக்திகளின் தலையீடுகளை ராஜதந்திர வழியில் எதிர்கொள்ளும் திறன்களைத் தமிழ்த் தரப்புகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.) முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் அல்லது இறுதி யுத்த காலத்தில் மட்டும் இனப்படுகொலை நிகழவில்லை. பல்வேறு இனக்கலவரங்கள் மற்றும் பலவகைப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகள் நீண்டகாலமாக நடந்துவந்திருக்கின்றன. முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தை மையப்படுத்தி, அண்மைக்காலத்தில் பாரிய அளவில் இனப்படுகொலை நடந்திருக்கிறது. இத்தகைய உண்மைகள், உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டப்பட வேண்டியவைகளாகும்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காகவே இறுதி யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்னும் தோற்றப்பாட்டையே சிறிலங்கா அரசு ஏற்படுத்தியது. ஆனால், இறுதி யுத்தமானது, ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை யுத்தமாகியது எப்படியென்று மிகவும் நுட்பமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன்னறிவித்து விடுதலைப் புலிகளை அழிப்பது, அத்தோடு 'முன்னறிவிக்கப்படாத' இனப்படுகொலையை 'மறைமுகமாக' நிறைவேற்றுவது, ஆகிய இரண்டு வகையான நோக்கங்கள் சிறிலங்கா அரசுக்கு இருந்திருக்கின்றன.

நீண்ட காலமாக விடுதலைப் போராட்டத்தைப் பலவகையிலும் முன்னெடுத்த தமிழ் இனத்தின் மனச் சாட்சியும் தியாக வரலாறுகளும் கூட்டு அனுபவங்களும் இன நலன் சார்ந்து, ஆரோக்கியமான வகையிலே பயன்பட வேண்டும். தமிழனத்தின் கூட்டு மன நிலையில் சாதி, மத, இன ரீதியிலான அடிப்படைவாதக் கசடுத்தனங்கள் நீங்கி, விசாலமான மனப்பாங்கும் உண்மையான விடுதலை உணர்வும் வாய்க்க வேண்டும்.

தமிழர்களின் அரசியல் ரீதியான நகர்வுகள், 'முள்ளிவாய்க்காலில்' இருந்து இனப்படுகொலைக்கான நீதி கோரலாக வீரியம் பெற்றிருக்க வேண்டுமென்று பல இடங்களிலும் நேர்காணல்களிலும் சொல்லிவந்திருக்கிறேன். அதை இன்னமும் அறிவியல் பூர்வமாக, வீரியமாக 'தமிழ்த்தரப்புகள்' முன்னெடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய உண்மையாகும். இன்னும் காலம் ஆறிவிடவில்லை. உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் விழிப்படைந்து, 'ஒன்றுபட்டுச்' சிந்திக்கவும் செயற்படவும் வேண்டியது அவசியமாகும். 'முள்ளிவாய்க்கால்' என்னும் குறியீட்டு அவலத்தினை அதன் பரிமாணங்களுடன் புரிந்துகொண்டு, இனப்படுகொலைக்கான நீதி கோரலை மையப்படுத்திய போராட்ட அரசியல் நகர்வுகளை சர்வதேச அளவில் விரிவுபடுத்தி வீரியமாக்க வேண்டும்.
அமரதாஸ்
2018-05-09