ஒரு நாள், எனது மடிக் கணினியை யாழ்ப்பாணத்தில் உள்ள கடையொன்றில் திருத்தக் கொடுத்துவிட்டு, அதனைத் திரும்பப் பெறுவதற்காகக் காத்திருந்தேன். அப்போது ஒரு இசை, வார்த்தைகள் இல்லாமல் இசையாக மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. பல்வேறு இரைச்சல்களுக்கு மத்தியிலும் அந்த இசை நெஞ்சைக் கவர்வதாக இருந்தது. அது எனக்கு இப்போதும் நல்ல நினைவிருக்கிறது.
அந்த இசை, 'எங்கேயேயும் காதல்' என்றஒரு சாதாரணமான தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெற்ற ''நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ...'' என்ற பாடலுக்கானதென்று நீண்ட காலத்துக்குப் பிறகு அறியமுடிந்தது. அதன் பிறகு இசையின் துல்லியத்தன்மை விளங்கும் வகையில் அந்தப் படத்தின் பாடல்களைத் தனியாக உற்றுக் கேட்டேன். ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருக்கும் பாடல்களுக்கான இசை கவனத்திற்குரியதாகவே இருந்தது. அவர், 'மஜ்னு' என்ற திரைப்படத்தின் பாடல்களுக்கு வழங்கியிருந்த இசையால் என்னைக் கவர்ந்திருந்தார். அதில் இடம்பெற்ற ''முதல் கனவே...'' பாடல் எனக்குப் பிடித்திருந்தது, ஜெயஸ்ரீ மற்றும் ஹாரிஸ் ராகவேந்திரா ஆகியோரின் குரல்களுக்காக மட்டுமல்ல. அவ்வப்போது ஏனைய வாத்தியங்களின் ஒலிப்பையும் மீறி, மிருதங்க நாதம் அதில் தனித்துவமாக இசைந்து வரும்.
அதை விட நுட்பமாக ''நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ...'' பாடலில் மிருதங்க இசை கலந்திருக்கும். பாடலின் ஒட்டு மொத்தமான 'காதலின் மகிழ்வை' அந்த மிருதங்க நாதம் பிரதிபலிக்கும். சுழித்துச் சுழித்து வருகிற மிருதங்க நாதம், இந்தப்பாடலின் தனித்துவத்துக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாகிறது. தமிழின் சிறந்த பாடல் இசை வரிசையில் இது இருக்கிறது. இப் பாடலின் சில வரிகள் காதலில் குழைந்து வரும். ஹாரிஸ் ராகவேந்திரா மற்றும் சின்மயி ஆகியோரின் குரல்களில் அந்த வரிகளுக்கான உணர்வோட்டம் அதீதமாகும். பாடலுக்கான காட்சிப்படுத்தல் பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. அது அவசியமில்லை என்றாலும் கூட, அந்த நாட்டின் சூழல் அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
''கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ...'' என்று திரும்பத் திரும்ப வரும் இடங்களில் ஜெயம் ரவி யும் ஹன்சிகா வும் கைகளை மேல் நோக்கி அசைக்கும் லாவகமானது, பறத்தலின் பரவச அனுபவத்தைப் பார்வையாளரில் நிகழ்த்தக்கூடியது. (பாடல், நடனம் போன்ற தனித்துவமான கலைகள் திரைப்படங்களில் பிரயோகிக்கப்படுதலின் 'பொருத்தப்பாடுகள்' அல்லது 'தேவைகள்' தனியான 'பார்வைக்கு' உரியன. படத்தோடு சம்மந்தமில்லாத, காட்சிப்படுத்தப்பட்ட இசைத் தொகுப்புக்களாக - music video album - பல திரைப்படங்களின் பாடல்கள் இருப்பதனைப் பார்க்க முடியும்.) இந்தப் பாடலுக்கான படத்தொகுப்பு, இன்னமும் கவனமாகக் கையாளப்பட்டிருக்க முடியும். பாடலின் லயத்தோடு படத்தொகுப்பு இயைவதாகத் தோன்றினாலும் ஒருவித செயற்கைத்தனம் அல்லது 'வேண்டாத வேகம்' சில இடங்களில் துருத்தலிடுகிறது. பாடலின் முடிவில், காதலர்களின் பிரிவை மிருதங்க நாதத்துடன் கலங்கலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், (shallow) காதலின் துலக்கமற்ற 'புதிரான' தன்மையைக் கோடி காட்டுவதாகக் கொள்ளவும் முடியும்.
மிருதங்க இசையானது, தமிழ் சினமாப் பாடல்கள் பலவற்றில் நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் ஒன்றுதான் ''மானே தேனே கட்டிப்பிடி...'' என்ற 'சாதாரணமான' பாடலும். அந்தப் பாடலை, நான் மிருதங்க இசைக்காக மட்டுமே பலமுறை கேட்டிருக்கிறேன்.
https://youtu.be/l98b32yBiQg
அமரதாஸ்
2017-07-13
No comments:
Post a Comment