Monday, April 1, 2019

நண்பர் தி.தவபாலன் குறித்து...


ஊடகத் துறையில் அதிகமதிகம் இயங்கி, ஊடகராக அறியப்பட்ட  திரு.தவபாலன் எனது நெருங்கிய நண்பர். சிறந்த ஒளிப்படக்கலைஞர். காட்சிக் கலைகளில் அதிக ஈடுபாடுகள் கொண்டவர். வன்னிப்பகுதியில் சினமா, ஒளிப்படம் தொடர்பிலான எனது  பல்வேறு முயற்சிகளுக்கு ஊக்கசக்தியாக இருந்தவர்.

ஒளிப்படங்களுக்கான இணையத்தளம் ஒன்றை உருவாக்க விரும்பினோம். அதை உருவாக்கி, அவரும் நானும் இணைந்து செயற்படுவது பற்றிப் பலமுறை உரையாடியிருக்கிறோம். போர்க்காலத்துக்கேயான பல சிரமங்களுக்கு மத்தியிலும், 'ஈழ விசன்' என்ற பெயரிலே ஒளிப்படங்களுக்கான இணையத்தளம் தொடங்கப்பட்டு, ‘இறுதி யுத்த காலத்துக்கு’ முன்னர் காத்திரமாக இயக்கப்பட்டது. அதில், அவருடன் சேர்ந்து இயங்கியிருக்கிறேன். அதில், பிலிம் கமெராக்களால் உருவாக்கப்பட்ட எனது ஒளிப்படங்கள் பலவும் வெளியாகின. பிற்காலத்தில், அது முடக்கப்பட்டுவிட்டது. 

நண்பர் பாலகணேசனுடன் இணைந்து, எனது  விரிவான நேர்காணலைப் பதிவு செய்திருக்கிறார். அது, இறுதி யுத்தகாலத்துக்கு முன்னர், 'எரிமலை' என்னும் இதழில் வெளியாகியிருந்தது. தவபாலன், தனது விமர்சனங்களையும் கருத்துக்களையும் தயக்கமில்லாமல் நண்பர்கள் மத்தியில் முன்வைக்கக் கூடியவர். அறிவியல் சார் விடயங்களில் அதீத தேடல் கொண்டவர். எதையும் அறிவியல் ரீதியில் அணுகும் இயல்பைக் கொண்டிருந்தாலும், எளிதில் உணர்ச்சிவசப்படக்  கூடியவராகவும் இருந்தார்.


அரசியல் மற்றும் கலை இலக்கிய ரீதியிலான  சில கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும், மிக நீண்டகாலமாக நட்பில் தொடர்ந்தவர். 'முள்ளிவாய்க்கால்' வரை தொடர்பில் இருந்தவர். 'புலிகளின் குரல்' வானொலியின் செயற்பாடுகளோடு முடங்கிக்கிடக்கவேண்டியிருப்பதால், தன்னால் ஒளிப்படங்களை எடுக்கமுடியாதிருப்பதாகவும் என்னை ஒளிப்படங்களை எடுத்துத்தருமாறும் சொல்லிக்கொண்டிருந்தார். எனது, இறுதிப் போர்க்கால ஒளிப்படங்கள் பலவற்றை உடனுக்குடன்  வெளியுலகுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். போர் சார்ந்த 'அவலங்களை' கமெராவில் பதிவு செய்வதில், தனிப்பட்ட  முறையில் அவருக்கு அதிகம் உடன்பாடு இருந்ததில்லை. இருந்தாலும், போர்க்காலத்தில்  அவசியமாயிருந்த  அத்தகைய எனது பதிவுகள் பலவற்றையும் 'தேவை' கருதிப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். இறுதிப் போர்க்காலத்தில், இணைய வசதிகளைப் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்த மிகச் சிலரில் தவபாலனும்  ஒருவர்.



எதையும் அறிவியல் ரீதியில் ஆராயும் ‘பக்குவம்’ கொண்டிருந்தாலும், 'சில விடயங்களில்' உணர்ச்சிவசப்பட்ட நிலையில் முடிவெடுத்துவிடுவார். இதுபற்றிப் பலமுறை அவருக்கே சொல்லியிருக்கிறேன். இறுதி யுத்தகாலத்தில், விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ‘பொதுவெளியில்’ நியாயப்படுத்துபவராக, பிரச்சாரப்படுத்துபவராக  இருந்தார். தனிப்பட்ட முறையில் அதுபற்றிய விவாதங்கள் நமக்குள் நடந்திருக்கின்றன.   

இறுதி யுத்த காலத்தில், தவபாலன் போன்ற நண்பர்கள் பலரை இழக்க நேர்ந்துவிட்டது. அவர்களையெல்லாம் நினைக்கும் போது, துயரம் மேலிடுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை. 'நினைவுகளை' இலகுவில் கடந்து போய்விட முடியாது.



அவரும் நானும் இணைந்து  இயங்கிய கணங்களும் சேர்ந்து திரிந்த நாட்களும் பெறுமதியானவை, நினைவில் நிலைத்திருப்பவை. ஒரு காலத்தில் அடிக்கடி என்னை சந்திக்கிறவராக இருந்தார். வீட்டுக்கு வந்து அதிகநேரம் உரையாடும் சில நண்பர்களில் அவர் முக்கியமானவர். அவரது ஊடகப் பங்களிப்புகள் விமர்சனபூர்வமாக, உரிய முறையில் பதிவுசெய்யப்பட வேண்டும். வாழும் காலம் முழுதும் மறக்க முடியாத நண்பர்களில் ஒருவர் தவபாலன்.

அமரதாஸ்  2016-05-05

Friday, March 15, 2019

தமிழ்ச் சமூகத்தில், ஒரு பேரிழப்பு...


தமிழ்ச் சமூகத்தில், ஒரு பேரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து, 'தமிழ் தகவல் நடுவம்' (Tamil Information Centre - TIC) என்ற அமைப்பின் சார்பில் செயற்பட்டு வந்த வரதகுமார் அவர்கள், நேற்று (2019-03-13) மறைந்துவிட்ட செய்தியை, இன்று அதிகாலையில் அறிய நேர்ந்தது. பெருந்துயர்... கலை, இலக்கியம், அரசியல், ஊடகம் போன்ற செயற்பாட்டுத் தளங்களில், பல்வேறு நிலைகளில் அரிதாகக் கிடைத்த உறவுகளை இழக்க நேர்வது பெரும் துயரம்...

நீண்டகாலமாக, ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த அக்கறைகளோடு செயற்பட்டு வந்த வரதகுமார் அவர்களுடன் அவ்வப்போது பேசி வந்திருக்கிறேன். இன்னமும் விரிவாகப் பேசுவதற்கான தேவைகள் அதிகம் இருந்தன. அவருடன் இணைந்து, தமிழ்ச் சமூக நலன்சார்ந்த சில பணிகளில் ஈடுபடவேண்டியிருந்தது.

பல்வேறு திட்டங்களை முன்வைத்து, தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். அதிக வேலைகள் இருக்கும் போது, தனது செயலகத்திலேயே அவர் தங்கிவிடுவாரென்று, அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடன் உரையாடும்போது சொல்லியிருந்தார்.

தனது, அடுத்த கட்ட வேலைத்திட்ட வரைபை அண்மையில் எனக்கு அனுப்பியிருந்தார். முதுமைக் காலத்திலும் அயராத அவரது பணிகளை அறிந்து ஆச்சரியப்பட்டேன். என்னை அவர் இங்கிலாந்து நாட்டிற்கு வருமாறு அழைத்திருந்தார். இங்கிலாந்து நாட்டில், எனது போர்க்கால ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அண்மைக்காலத்தில், அவருடன் பேச நினைத்துக்கொண்டிருந்தேன். பல்வேறு காரணங்களால், பேசமுடியாமலே போய்விட்டது.

அவரது செயற்பாடுகள், தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து கவனிக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டியவை. மிக நீண்ட காலமாக, தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். வெறுமனே அவரைப் புகழ்ந்து பேசிவிட்டுக் கடந்துசென்றுவிடாமல், அவரை அறிந்தவர்களும் அவரது நண்பர்களும் அவரது நற்காரியங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதுவே அவருக்கான மதிப்பார்ந்த அஞ்சலியாக அமையும்.

வரதகுமார் அவர்கள், என்னைப் பற்றி அறிந்த காலத்தில், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதையும், அதற்கான எனது பதில் மின்னஞ்சலையும் இன்று தேடி எடுத்துப் பார்த்தேன். அவற்றை, அவரது நினைவுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன். அவரை அறிந்திராதவர்கள், அவற்றிலிருந்து அவரைக் கொஞ்சமாவது அறிந்துகொள்ள முடியும்.

// அன்புள்ள அமரதாஸ் அறிவது,
நேற்று உங்களுடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ் தேசியம் பற்றிய உணர்வும், உங்கள் உறுதிப்பாடு மற்றும் ஆர்வமும் மிகவும் பாராட்டத்தக்கது.
முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை அமைத்து, நீங்கள் செய்துவரும் பணி ஒரு முக்கியமானது.
2019 மே மாதம், 10 வது ஆண்டு நிறைவையொட்டி முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் வகையில், மே 18இல் இருந்து 24ஆம் திகதிவரை இலங்கைத் தமிழர் அடையாளம், அவர்கள் வரலாறு, மேலும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார போராட்டங்கள், இழப்புகள் போன்றவற்றினை வெளிக்கொணர்வும் வகையில் ஒரு பரந்த கண்காட்சியை லண்டன் தலைநகரில் மக்களை முன்வைத்து, சர்வதேச மனித உரிமைகள் சமுதாயத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். .
இதில் முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பிலான புகைப்பட கண்காட்சி ஒரு முக்கிய கூறாக அமையும்.
இதை அமைப்பதில், எமது நேரகாலங்களைச் செலுத்தாமல் தற்போது உங்களால் மிகத்திறமையான வழியில், சரியான பொருளடக்கத்துடன் அமைந்துள்ள புகைப்படக் கண்காட்சியை பயன்படுத்துவது மிகவும் பொருத்தம் என்பது எமது விருப்பமும் நோக்கமும் ஆகும். இது பற்றிய உங்கள் முடிவை விரைவில் அறிய ஆவலாக உள்ளோம்.
இத்துடன், எங்கள் திட்டத்தின் தகவல்களை இணைத்துள்ளேன். இவற்றினை, தயவுசெய்து இப்போதைக்கு உங்கள் பார்வைக்கு மட்டும் பயன்படுத்தவும். இது பற்றிய உங்கள் கருத்தினை அறியத்தரவும்.
மேலும், எங்களால் பிரசுரிக்கப்பட்ட இனப்படுகொலை அறிக்கையை மற்றுமொரு மின்னஞ்சல் ஊடாக உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்
நன்றி
இப்படிக்கு
வரதகுமார் //

// அன்புள்ள வரதகுமார் அவர்களுக்கு,
மிக்க நன்றி. உங்களுடன் உரையாடியது மகிழ்ச்சிக்குரியது.
நல்ல நோக்கமும் புரிந்துணர்வும் கொண்டவர்களின் ஆதரவுடன் கலை, இலக்கிய, ஊடகவியல் நடவடிக்கைகளை ஈழத்தமிழர் நலன்கள் சார்ந்து இயன்றவரை சுயாதீனமாக மேற்கொண்டு வருகிறேன். உங்கள் தொடர்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. உங்களின் ஆதரவுடன் லண்டனில் ஒளிப்படக் காட்சியினை சிறப்பாக நடத்தமுடியும் என்று நம்புகிறேன். வேண்டிய ஒளிப்படங்கள் தாராளமாக இருக்கின்றன. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை, அவல நிலையை ஒளிப்படங்கள் வாயிலாக சர்வதேச சமூகங்களின் கவனத்திற்கு உணர்வுபூர்வத் தாக்கத்துடன் கொண்டுசெல்ல முடியும். லண்டனில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு ஒளிப்படக் காட்சியினை முன்னெடுப்பது தொடர்பாக, நாம் தொடர்ந்து பேசுவோம். லண்டனிலும் வேறு சில இடங்களிலும் தொடர்ந்து ஒளிப்படக் காட்சிகளை நடத்துவதற்கு வேறு சில நண்பர்கள் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆதரவுடன் வேறு திகதிகளில் வேறு ஒளிப்படக் காட்சிகளை நடத்தலாம் என்று நினைக்கிறேன். என்னைத் தேடிக் கண்டுபிடித்து, தொடர்புகொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
அமரதாஸ் //

2019-03-14
அமரதாஸ்

கலைஞர் கருணா - வரையப்படுகிற நினைவுகள்


ஓவிய நண்பர் கருணா (Karuna Vincent) அவர்களின் சடுதியான மறைவு, தமிழ்ச் சூழலில் கனத்த வெற்றிடத்தையும் துயரலைகளையும் தோற்றுவித்திருக்கிறது.

ஓவியக் கலையில் மட்டுமல்லாமல், ஒளிப்படக் கலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கலைஞர் திரு. கருணா, கனடாவில் நீண்டகாலமாக வசித்துவந்தவர். பல்வேறு கலைச்செயற்பாடுகளில் தனது காத்திரமான பங்களிப்பினை வழங்கிவந்தவர். உலகெங்கிலும், இனிய  நண்பர்கள் பலரைப் பெற்றிருந்தவர். 

ஓவியம் சார்ந்த அவரது விரிந்த தேடல்களை, அவருடனான உரையாடல்களிலும் படைப்புகளிலும் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. ஓவியத்துறையில் அவர் வீச்சுடன் இயங்கத் தொடங்கியிருந்த காலத்தில், அவரது இழப்பு சடுதியாக நிகழ்ந்துவிட்டது. உண்மையில், தமிழ்க் கலைச்சூழலில் அது ஒரு பேரிழப்பாகும். வயதில் மூத்தவராக இருந்தாலும், நிதானமாகவும் வெளிப்படையாகவும் மதிப்பார்ந்து என்னுடன் உரையாடக்கூடிய நல்ல நண்பராக இருந்தார். அவரை இழந்த பெருந்துயரைக் கடந்துசெல்வது, எனக்கு இலகுவானதாக இருக்காது. 

அவர் கனடாவிலும் நான் சுவிஸிலும் வசிக்கும் காலத்தில், பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவ்வப்போது உரையாடிவந்திருக்கிறோம். மிக அண்மையில், அவர் இறப்பதற்குச் சில நாட்கள் முன்னதாக, என்னுடன் நீண்ட நேரம் உரையாடியிருந்தார். ஓவியம் மற்றும் ஒளிப்படம் போன்ற காட்சிக்கலைகள் மீது அவருக்கும் எனக்கும் இருந்த தீராக்காதல் தான், நம்மை நெருக்கமாக்கியிருந்தன. 

வெவ்வேறு காலங்களில் ஓவியர் அ. மாற்கு அவர்களின் ஓவிய மாணவர்களாகப் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் கருணா மிகவும் முக்கியமானவர், வித்தியாசமானவர். ஓவியர் மாற்குவுடன் கருணாவும் நானும் வெவ்வேறு காலங்களில் நெருங்கிப் பழகியிருக்கிறோம். எனது பதின்பருவ காலத்தில், ஓவியர் மாற்குவை அடிக்கடி அவரது வீட்டிலேயே சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அவரது ஓவிய மற்றும் சிற்பக் கலைச்செயற்பாடுகளையெல்லாம் அருகிலேயே இருந்து அவதானிக்கவும், அவரிடமிருந்து கலை நுட்பங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், வன்னியில் அலைக்கழிந்து பல்வேறு துன்பங்களை அவர் அனுபவிக்க நேர்ந்த காலப்பகுதியில், கனடாவிற்குப் புலம்பெயர்ந்திருந்த கருணாவுடன் கடிதத்தொடர்பில் இருந்திருக்கிறார். யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு முன்னர், நீண்ட வெண்தாடியுடன் அவர் இருந்த முதுமைக்காலத்தில், அவருடன் நெருங்கியிருந்த நினைவுகள் மறக்க முடியாதவை. ஓவியர் மாற்குவின் மூலம் கருணாவும் நானும் பெற்றுக்கொண்ட அரிதான அனுபவங்களை, அவ்வப்போது பகிர்ந்துகொள்வதுண்டு.
 
தாயகத்திலிருந்து கருணா புலம்பெயர்ந்த பின்னர், ஓவியத்துறை சார்ந்த நவீன தொழில் நுட்ப மாற்றங்களை உள்வாங்கித் தனது ஓவிய ஆளுமையை விருத்திசெய்துகொண்டேயிருந்தார். மாற்குவின் மாணவர்களாக இருந்த திரு. க. கிருஸ்ணராஜா, திருமதி. அருந்ததி போன்றவர்கள், புலம்பெயர் சூழல்களில் தொடர்ந்து ஓவியர்களாக இயங்கியவர்கள்.

ஓவிய நண்பரான மருது அவர்கள், டிஜிற்றல் ஓவிய நுட்பமுறைமைகள் தமிழ்ச் சூழலில் அதிகமதிகம் செல்வாக்குப் பெறக் காரணமாக இருந்தவர். அவரது தனித்துவம் மிக்க ஓவியங்கள் குறித்தும் அவருடன் நமக்கிருந்த நட்புக் குறித்தும், கருணாவும் நானும் பலமுறை உரையாடியிருக்கிறோம். ஓவியர் மாற்குவின் தாக்கமும் ஓவியர் மருதுவின் தாக்கமும் கருணாவின் ஓவியங்கள் சிலவற்றில் வெளிப்படுவதை அவதானிக்க முடிந்திருக்கிறது. பிற்காலத்தில், டிஜிற்றல் தொழில்நுட்பத்துடன் கூடிய, அசைவியக்கம் கொண்ட எளிய கோடுகளால், தமிழர் வாழ்வியலைத் தனித்துவமாகப் பதிவுசெய்ய முயன்றுகொண்டிருந்தார். மாற்குவின் ஓவியங்களில் மாற்குவின் பெயர் வரையப்பட்டிருக்கும் சாயலில், கருணாவின் ஓவியங்களில் கருணாவின் பெயர் வரையப்பட்டிருக்கும். (அதுபோலவே கிருஸ்ணராஜாவின் ஓவியங்களில் அவரது பெயர் வரையப்பட்டிருக்கும்.) 2017 ஆம் ஆண்டில், கருணாவின் ஓவியங்கள் கனடாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கருணாவின் கலைப்பயணத்தில் அது மிகவும் முக்கிய நிகழ்வாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது படைப்புகள், நூல் வடிவில் இனி வெளிக்கொண்டுவரப்படவேண்டியது அவசியமாகும்.

பல்வேறு கலைஞர்களின் கூட்டு முயற்சியில், 'இற்றைத் திங்கள் இந்நிலவில்' என்னும் அரங்க நிகழ்வு, கனடாவில் சாத்தியமாகியிருந்தது. பல்வேறு நிலைகளில் முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்வு அது. அதன் வீடியோ இணைப்பினை, கருணா எனக்கு அனுப்பியிருந்தார். அந்த அரங்க நிகழ்வின் ஒளியமைப்பினை அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனது ஒளியமைப்புப் பணி தொடர்பிலான எனது கருத்தை அறியும் ஆவலை வெளிப்படுத்தியிருந்தார். ஈடுபாடுள்ள துறைகள் சார்ந்து, மேலதிகமாகக் கற்றுக்கொள்வதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். பல்வேறு  தளங்களில் அவரது அறிதலும் இயக்கமும் தொடர்ந்திருக்கின்றன.

தனது கலை சார் பணிகள் குறித்துத் தனது நண்பர்களுடன் கலந்துரையாடிக்கொண்டேயிருந்தார். தன்னைச் சுய மதிப்பீட்டிற்கு உள்ளாக்கிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. 2018-05-18 அன்று (சென்ற வருடம்) மிக நீண்டநேரம் அவரும் நானும் உரையாடியிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் பற்றி, எனது போர்க்கால ஒளிப்படங்கள் பற்றி, கியூபெக் பற்றி, ஓவியர் மாற்கு பற்றி, ஓவியர் வாசுகியின் ஓவியக்காட்சி பற்றி, ஓவியரும் நண்பருமான மருது பற்றி, நண்பர் கங்காதரன் பற்றி, இன்னும் பல்வேறு விடயங்கள் பற்றியெல்லாம் அன்று உரையாடினோம். ஓவியர் மாற்கு, எழுதி அனுப்பியிருந்த 'உருக்கமான' இறுதிக் கடிதம் பற்றிய தகவல்களையும் அன்று பகிர்ந்துகொண்டார்.

கனடாவில் தொடர்ந்து வெளிவரும் 'தாய்வீடு' பத்திரிகையில் கருணாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மிக அண்மையில், அவர் இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர், அவருடன் விரிவாகப் பேசவேண்டியிருந்தது. 'தாய்வீடு' சார்ந்து, என்னுடன் ஒரு 'நேர்காணல்' பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தார். சில கேள்விகளையும் என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தார். 2019 ஆம் ஆண்டில் வருகிற 'முள்ளிவாய்க்கால் நினைவுக்காலத்தை' முன்னிட்டு, எனது போர்க்கால ஒளிப்படங்களுடன் சிறப்பிதழாகத் 'தாய்வீடு' வெளிவரவேண்டும் என்று விரும்பியிருந்தார். எனது போர்க்கால ஒளிப்படங்கள் பலவும், 'தாய்வீடு' பத்திரிகையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளமையினை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இவை குறித்து, 'தாய்வீடு' சார்ந்த நெருங்கிய நண்பர்களான திரு. கங்காதரன், திரு. திலீப்குமார் ஆகியோரோடு இறப்பதற்கு முன்னர் உரையாடியிருக்கிறார். கருணா இறந்த பின்னர், இழப்புத்துயரையும் சில நினைவுகளையும் அந்த நண்பர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். கருணா என்னும் கலைஞனது இழப்பின் கனத்தை, சமூக வலைத்தளங்களிலெங்கும் சமநேரத்தில், காணக்கூடியதாக இருந்தது. கருணா என்னும் இனிய நண்பரை இழந்த பெருந்துயரைக் கடந்துசெல்வது, எனக்கு இலகுவான காரியமேயல்ல.  

2019-02-27
அமரதாஸ்



நன்றி - 'தாய்வீடு' (2019 march)

Thursday, February 21, 2019

விசேட கவனத்துடன் வரவேற்கப்படவேண்டிய முயற்சி


தமிழின் குறிப்பிடத்தகுந்த ஒளிப்பதிவாளராகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தவர் திரு. செழியன். 'பரதேசி' என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த காலத்தில், அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அப்போதே, திரு. பிரசன்ன விதானகே போன்ற இயக்குநர்களுடன் தொடர்பில் இருந்தவர். சினமா சார்ந்த அவரது கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். தமிழின் மிக முக்கியமான சினமா ஆளுமையாக வருவார் என்று அப்போதே நினைத்திருந்தேன். இப்போது To Let என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தமிழின் மிக முக்கியமான திரைப்படமாக அது இருக்கும் என்று தோன்றுகிறது. அதைப் பார்த்துவிட்டுத்தான் அதுபற்றி எழுதவேண்டும்.

உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, பல விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ள To Let திரைப்படமானது, பொதுப்பார்வைக்காகத் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. தமிழ்ச் சூழலில், இத்தகைய முயற்சிகள் விசேட கவனத்துடன் வரவேற்கப்படவேண்டியவை. இரண்டு நாட்கள் செழியனின் பல்வேறு புதிய நேர்காணல்கள், பதிவுகள் போன்றவற்றைப் பார்த்தேன். என்ன செய்ய வேண்டும் என்பதில், செழியன் மிகுந்த தெளிவுடன் இருக்கிறார். தீர்க்கமாகவும் நிதானமாகவும் உரையாடுகிறார்.

திரு. மகேந்திரன், திரு.பாலுமகேந்திரா போன்ற தமிழ் சினமாவின் மிக முக்கியமான ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகவும் நேரில் கலந்துரையாடவும் முடிந்திருக்கிறது. அத்தகையவர்களின் மனக்குமுறல்களையும் போதாமைகளையும் அறிந்திருக்கிறேன். அத்தகைய சினமா ஆளுமைகளால், அடைய முடியாமற் போய்விட்ட சிகரங்களை நோக்கி, செழியன் போன்றவர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். To Let திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

2019-02-21
அமரதாஸ்

''Fire zone of Srilanka: Tears of Tamils'' - Photo exhibition of Amarathaas (Goa)


இந்தியாவின் கோவா மாநிலத்தில், கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி, 2017-12-14 முதல் தொடர்ச்சியாக ஒரு வார காலம் நிகழ்த்தப்பட்டது (''Fire zone of Srilanka: Tears of Tamils -
Photo exhibition of Amarathaas'').

'Serendipity arts festival' என்னும் கலைசார் பெரு நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஒளிப்படக் காட்சி நிகழ்வு அமைந்திருந்தது. இதில், இலங்கையின் இறுதிப் போர்க்காலத்திலும் (last war period) போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் (post war period) பதிவாகியிருந்த ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியாவின் பிரபலமான கலைஞர்கள் மற்றும் அரசியல் வாதிகள் உட்படப்  பலரும் கலந்துகொண்டு ஒளிப்படங்களைப் பார்வையிட்டு, அவை தொடர்பில் கலந்துரையாடினர்.

சுவிற்சர்லாந்து  நாட்டில் இருந்து கோவா சென்றிருந்த அமரதாஸ், ஒளிப்படக் காட்சி நிகழ்வினை நேரடியாக நெறிப்படுத்தியிருந்தார். பல மட்டங்களிலான சந்திப்புகளை நிகழ்த்தியிருந்தார். கோவா வில் இருந்து கேரளா மாநிலத்திற்கும் பின்னர் தமிழகத்திற்கும் பயணித்து, நெருக்கடிகள் நிறைந்த ஈழத்தமிழரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு, சுவிஸ் திரும்பியிருந்தார்.









Wednesday, February 20, 2019

''Tears of Tamils - A journey through war zones of Sri Lanka''- Photo Exhibition in Switzerland (University of Zurich) - Photographs by Amarathaas



''Tears of Tamils - A journey through war zones of Sri Lanka''
Photo Exhibition in Switzerland (University of Zurich)
Photographs by Amarathaas (Amarathaas Artist)

07.05.2018 - 18.05.2018 Lichthof Zentrum Universität Zürich (Atrium Center University of Zurich)

21.05.2018 - 31.05.2018 Lichthof Irchel Universität Zürich (Atrium Irchel University of Zurich)

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் (இறுதி யுத்த காலம்), கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களால் பதிவாக்கப்பட்டிருந்த ஒளிப்படங்களின் காட்சிப்படுத்தல், சுவிஸ் நாட்டிலுள்ள சூரிச் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. (''Tears of Tamils - A journey through war zones of Sri Lanka'')

07.05.2018 முதல் 31.05.2018 வரை (தொடர்ச்சியாக 4 வார காலம்), சூரிச் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஒளிப்படக் காட்சி நிகழ்வில், சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
















Tuesday, February 19, 2019

Tears of Tamils (Photo exhibition of Amarathaas)



''Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones''

ஈழத்தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில், 2018-12-16 அன்று சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி நடைபெற்றது ('Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones').



இறுதி யுத்த காலத்தில், சுயாதீன ஊடகராக இருந்து பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார்.

சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலர் இந்த ஒளிப்படக் காட்சி  நிகழ்வில் கலந்துகொண்டனர்.