Tuesday, February 19, 2019

Tears of Tamils (Photo exhibition of Amarathaas)



''Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones''

ஈழத்தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில், 2018-12-16 அன்று சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி நடைபெற்றது ('Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones').



இறுதி யுத்த காலத்தில், சுயாதீன ஊடகராக இருந்து பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார்.

சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலர் இந்த ஒளிப்படக் காட்சி  நிகழ்வில் கலந்துகொண்டனர்.







Genocide on Tamils - தமிழர்கள் மீதான இனப்படுகொலை


தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில், சில நிகழ்வுகள் நேற்று (2018-12-16) நடைபெற்றன. மனித உரிமைகள் சார் செயற்பாடுகளிலும் கலைச் செயற்பாடுகளிலும் ஊடகச் செயற்பாடுகளிலும் ஈடுபடும் சிலரது கூட்டு முயற்சிகளால், நிகழ்வுகள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே மண்டபத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றன.

மண்டபத்தின் ஒரு பகுதியில், சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி நடைபெற்றது ('Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones'). இன்னொரு புறத்தில் தமிழக ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியக் காட்சி நடைபெற்றது. 





'Sri Lanka's Killing Fields' என்ற ஆவணப்படமும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தொகுக்கப்பட்டிருந்த ஆவணக்காட்சிகளும் வேறு சில ஆவணக்காட்சிகளும் திரையிடப்பட்டன.

இறுதி யுத்த காலத்தில், சுயாதீன ஊடகராக இருந்து பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான 'பொவி' என்பவர், இலங்கை நிலவரங்கள் தொடர்பிலான தனது பார்வைகளை உரை மூலம் வெளிப்படுத்தினார். இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்த சிலர், சாட்சிய உரைகளை நிகழ்த்தினர். 







தமிழர்களின் பிரச்சினைகளை சுவிஸ் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் நிகழ்வுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தேவையான இடங்களில், ஜெர்மன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து நிகழ்வுகளிலும் தமிழர்கள் உட்பட சுவிஸ் நாட்டவர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூடியிருந்து உரையாடி இரவு உணவை அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.






2018-12-17

Wednesday, February 13, 2019

போர்க்குற்றம் + இனப்படுகொலை




ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகங்களின் மத்தியில், மனித உரிமை சார் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஒருவரை, 'தனிப்பட்ட முறையில்' அண்மையில் சந்திக்க நேர்ந்தது. (ஒரு மொழிபெயர்ப்பாளரின் துணையுடன்) சிறிலங்கா அரசினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிகோரி நிற்கும் ஈழத் தமிழினத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு முக்கியமான நிகழ்வு. உரையாடலின் பெரும் பகுதி, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றியதாக இருந்தது. 'போர்க்குற்றங்கள்' (war crimes) என்ற பதத்தினையே அவர் தொடர்ந்து உபயோகித்தார். உண்மையில் இலங்கையில் நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இலங்கையில், பல போர்க்குற்றங்களை உள்ளடக்கிய இனப்படுகொலைக் குற்றங்களும் நடந்திருக்கின்றமையினை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தேன். ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலை முன்னெடுப்புக்கள், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காலத்தில் மட்டும் நடக்கவில்லையென்றும் அத்தகைய முன்னெடுப்புக்களுக்கு, பல்பரிமாணத்தன்மை கொண்ட நீண்டகால வரலாறு உள்ளது பற்றியும் குறிப்பிட்டேன். (இனப்படுகொலை பற்றிய விடயத்தில், இனப்படுகொலைக்கான உள் நோக்கம் -motivation- மிகவும் முக்கியமானதாக சர்வதேச ரீதியில் நம்பப்படுகிறது. தவிரவும், வெறும் கொலைகள் மட்டும் இனப்படுகொலை என்னும் அம்சத்துக்குள் அவதானிக்கப்படுவதில்லை.) தனிப்பட்ட முறையில், தன்னால் அதைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினார். பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கமையவும் 'உள் நோக்கங்களோடும்' இயங்கும் ஐ.நா போன்ற சர்வதேச சமூகங்களின் மத்தியில் இத்தகைய 'புரிதலை' ஏற்படுத்துவதில் இருக்கக்கூடிய 'சிக்கல்கள்' சாதாரணமானவையல்ல. அந்த அடிப்படையில் சட்ட ரீதியிலும் புலமைத்துவ ரீதியிலும் ராஜதந்திர ரீதியிலும் ஈழத்தமிழினம் வழங்கவேண்டிய 'கூட்டு உழைப்பு' அதிகமாக இருக்க வேண்டும்.

''சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைக் கூறுகளாக ஐ.நா. வரையறுக்கின்ற அத்தனைக் கூறுகளையும் கொண்டது தமிழினம். அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இனப்படுகொலைக்கான நீதியான பரிகாரமே, இலங்கை இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வுக்கு வழிவகுக்க முடியும். நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய வகையில் கண்மூடித்தனமான மோசமான குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன. போர்க்குற்றங்கள் எனப்படுபவை வேறு, இனப்படுகொலைக் குற்றங்கள் எனப்படுபவை வேறு.'' என்று 2005 ஒக்டோபர் மாதத்தில் நான் நிகழ்த்தியிருந்த 'ஐ.நா. உரையில்' தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

''இலங்கையில் நடந்தவை போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழின அழிப்பும் தான் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான், தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட தனியான இனமென்பதும், இன விடுதலைக்கான நீண்ட கால விடுதலைப் போராட்ட நியாயங்களும், தியாகங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைய முடியும்.'' என்று, மேலும் அதில் குறிப்பிட்டிருக்கிறேன்.

எனது போர்க்காலப் படங்கள் சிலவற்றை அவருக்காகக் காட்சிப்படுத்திவிட்டு, அவருடனான எனது உரையாடலின் ஆரம்பம், பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.

யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, மக்கள் மத்தியிலிருந்து தன்னிச்சையாகவும் தீவிரமாகவும் படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கட்டத்தில், என்னால் எடுக்கப்படும் படங்களால் அப்போது என்ன பயன் என்ற கருத்திலான 'ஆதங்கத்தினை' வேதனையோடு என்முன்னே ஒரு பெண் கொட்டித் தீர்த்தார். அப்போது அவருக்கு ஏதும் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தப் 'பெண்ணின் குரல்' என்னுள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. என் இனத்துச் சனங்களின் வலியின் சாட்சியாக நான் எப்போதும் இருக்க வேண்டும் என்னும் உந்துதல் அப்போது தீவிரமடைந்தது. யாராலும் நிறுத்தப்படாதிருந்த மோசமான யுத்தத்தின் விளைவுகளைப் படங்களாக்கி, சர்வதேச மட்டத்தில் ஈழத் தமிழினம் சார் ஆவணங்களாக நிலைநிறுத்த வேண்டும் என்னும் 'ஓர்மம்' வளர்ந்தது. பல தரப்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும் பல்வேறு வழிகளில் எனது படங்களை வெளியிடத் தொடங்கினேன்.

அவருடனான எனது உரையாடலின் முடிவு, பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.

ஆர்மேனியர்கள் மீதான துருக்கியின் 'இனப்படுகொலை' முன்னெடுப்பு, சர்வதேச அளவில் 'உறுதி' செய்யப்படுவதற்கு இடையில் வீணாக நூறு ஆண்டுகள் வரையில் கடந்துபோயிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலைக் குற்றங்களும் அவற்றுக்கான 'நீதியும்' சர்வதேச அளவில் 'உறுதி' செய்யப்படுவதற்காக, இவ்வளவு நீண்ட காலத்துக்குத் தமிழினம் காத்திருக்க வேண்டுமா? அப்படியானால் சிறிலங்காவின் 'இனப்படுகொலை' அம்சங்களைப் பதிவு செய்து, வாழும் சாட்சியாக இருக்கும் நான், அப்போது நிச்சயமாக உயிரோடு இருக்க மாட்டேன். அப்போதும் எனது இனப்படுகொலை சார் ஆவணங்கள், வலிமையான பயன்வீச்சுக்களை நிகழ்த்தும் அளவிற்கு, நான் இப்போதிருந்தே 'உரிய' இடங்களில், பொதுவெளியில் அவற்றை நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது.

2017-06-15
அமரதாஸ்

Tuesday, October 23, 2018

ஊடக வெளியும் இழிநிலைகளும்



தமிழகத் திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜாவின் அண்மைக்கால இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து நிகழ்ந்திருக்கும் சர்ச்சைகள், இலகுவில் கடந்து செல்லக்கூடியவையல்ல.  

யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில், ஒருவகை மேட்டிமைத்தனத்துடன் 'முறைகேடாக' அவர் நடந்துகொண்டார். அப்போது அவரை, அங்கிருந்த செய்தியாளர்கள் பக்குவமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். அந்த இடத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டிய ஆரோக்கியமான, முறையான எதிர்வினைகள் நிகழவில்லை. பின்னர், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் தொடர்ந்தன. பிரமுகராக நிகழ்வொன்றில் முன்னிறுத்தப்பட்டிருக்கும் ஒருவர், எத்தகைய கேள்விகளையும் பக்குவமாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது. பதில் சொல்ல விரும்பாத (முடியாத) அல்லது சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றுகிற 'சிக்கலான' கேள்விகளை, நாகரிகமாக மறுத்துக் கடந்துவிட முடியும். சமூக வாழ்வில், பொதுவெளியில்  'எழுந்தமானமாக', 'முறைகேடாக' எதையும் யாரும் செய்துவிட முடியாது.

குழப்பத்தில் முடிந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, இரண்டு நபர்களால் பாரதிராஜாவின் 'கால்கள் கழுவப்படுவது' மாதிரியான படமொன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, சர்ச்சைகள் வேறுபோக்கிலே தொடர்ந்தன. எந்த விளக்கமுமின்றி, முன்முடிவுகளுடனும் 'கொச்சையான' கருத்துகளுடனும் பெரும்பாலும் பகிரப்பட்டிருக்கிறது அந்தப் படம். தமிழ்ச் சூழலில்  எதையும் சரியாக ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு அவசரகதியில் கருத்துதிர்க்கும் வழக்கம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல. சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அமைவாக, தனிமனித நடத்தைகள் சார்ந்து 'அவசரகதியில் ' முன்வைக்கப்படும் எதிர்வினைகள், கண்ணியத்துடன் அமைவதில்லை. எங்கு, எப்போது, எச் சந்தர்ப்பத்தில், யாரால், எதற்காக அந்தப் படம் எடுக்கப்பட்டது? யாரால், எப்படி அது விபரங்கள் எதுவுமில்லாமல் வெளிவந்தது? அந்தப் படம் தொடர்பான பின்னணித்தகவல்கள் எதுவும் சரியாக இதுவரை கிடைக்கவில்லை. அந்தப் படமானது, பல வகையில் திரிபுபடுத்திக் காட்டப்படக் கூடியதாக, இருப்பதால் பின்னணித்தகவல்கள் அவசியமாகின்றன. எது எப்படியிருந்தாலும், சமூக மட்டங்களில் நிலவும் மேட்டிமைத்தனங்களையும் கசடுத்தனங்களையும் மத, கலாச்சார, அதிகார, அரசியல்  பின்புலங்கள் வழியாகப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் வெளிப்படுத்த வேண்டும்.   

பாரதிராஜா சம்மந்தப்பட்ட  அந்தப் படத்தில், ஒருவகையான 'மேட்டிமைத்தனம்' தொனிப்பதை அவதானிக்க முடிந்தாலும், பின்னணித்தகவல்கள் பற்றிச் சரியாக அறிந்துகொள்ளாமல் முடிவாக எதையும் கூறிவிட முடியாது.  அப் படமானது, எத்தகைய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று, அதில் இருக்கிற மூவரும் அந்தப் படத்தை எடுத்தவரும் தான் இனி வெளிப்படையாகப் பேச வேண்டும். வயது முதிர்ந்த ஒருவருக்கான 'வைத்திய உதவி' நடந்திருப்பதன் பதிவாகக் கூட அது புரிந்துகொள்ளப்படக் கூடும். பாரதிராஜா வயது முதியவரானாலும், உடல் சார்ந்த காரியங்களை சுயமாகச் செய்துகொள்ள முடியாத அளவிற்குத் தளர்ந்துபோனவரல்ல. கால்களில் வலி இருந்தால் யார் கால்களையும் யாரும் வெந்நீரில் கழுவிடுவதும் மசாஜ் செய்து விடுவதும் சாதாரணம் தான். கால்களைக் கழுவக் கொடுத்த பாரதிராஜாவினதும், கழுவிக் கொடுத்த இரண்டு நபர்களினதும் மனநிலைகள் நுட்பமாக ஆராயப்பட வேண்டியவை.  ஒரு 'பிரமுகராக' இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்த பாரதிராஜாவின் மனநிலையானது, அதிகார துஸ்பிரயோகமாக, மேட்டிமைத்தனமாகத் தொழிற்பட்டிருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது. ஒரு 'மசாஜ்' நிலையத்திலோ அல்லது  வைத்திய நிலையத்திலோ, உடல் சுகத்திற்காக, 'உடன்பாட்டு நிலையில்' நிகழும் காரியங்கள் வேறுவகையானவை. 
   
விசேடமான சூழ்நிலைகளில், பிரத்தியேகமான அல்லது அந்தரங்கமான தருணங்களில் தனி நபர்கள் சார்ந்து தற்செயலாகவோ செய்திமதிப்புடனோ (news value) எடுக்கப்படுகின்ற  ஒளிப்படங்கள், ஊடக வெளிகளில் 'தவறான  முறைகளில்' பிரயோகிக்கப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பதிவாகியுள்ள ஒளிப்படமானது, ஒருவரது தனிப்பட்ட 'இயல்பை' அல்லது ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்துவிடுவதும் உண்டு. எது எப்படியிருந்தாலும், நம்பகத்தன்மையுடன் கூடிய பின்னணித்தகவல்கள் எதுவும் கொண்டிராத ஒரு ஒளிப்படமானது, தவறான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் வகையில், ஊடகவெளிகளில் பிரயோகிக்கப்படுவது அறமாகாது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தோ தனிப்பட்ட நடத்தை குறித்தோ யாரும் எழுந்தமானமாகவோ அவதூறாகவோ கருத்துக்கள் முன்வைப்பது ஏற்புடையதல்ல. எது எப்படியிருந்தாலும், ஊடக ரீதியான அத்துமீறல்களும் தனிமனித அத்துமீறல்களும்  இனங்காணப்பட வேண்டியவை. தனிமனித சுதந்திரம் குறித்த தெளிவான நிலைப்பாடு எல்லோருக்கும் அவசியமானது. தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தும் ஓர்மமும் சுயசிந்தனையும் கொண்ட மனிதர்களே, அதிகார மையங்கள் சார்ந்த 'அரூப கரங்களின்' குரூரத்தை அம்பலப்படுத்தக் கூடியவர்கள்.

கால் கழுவுதல், முதுகு சொறிதல், காலில் விழுதல், காக்கா பிடித்தல் (கால் கை பிடித்தல்), அடிவருடுதல் (அடிவருடி), மண்டியிடுதல், போன்ற சொற்தொடர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கப்படுகிற சந்தர்ப்பங்கள் நுட்பமாக அவதானிக்கப்பட  வேண்டியவை. அவை, அதிகாரத்திற்கு முன் இணங்கிப் போவதை 'இழிவாக' எடுத்துரைக்கும் வகையிலே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. சாதி, மதம், அரசியல் போன்ற அதிகார மூலங்களின் இடுக்குகளில் இத்தகைய சமூக இழிவுகள் போசிக்கப்படுகின்றன.   

மரியாதை நிமித்தமாகவும் அன்பின் நிமித்தமாகவும் செய்யப்படுகிற 'மதிப்பளிப்பு' சார்ந்த உடல்மொழிதல்கள் புரிந்துகொள்ளக்கூடியவை. அவை, தனிமனித மற்றும் சமூகப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகப் பார்க்கப்படக் கூடும். அதிகாரத்தினாலோ அல்லது மேட்டிமைத்தனத்தினாலோ அடிமை மனோபாவத்தினாலோ செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிற காரியங்கள் இனங்காணப்பட வேண்டியவை. காலில் விழுதல், அதிகாரத்தின் முன் மண்டியிடுதல், தனிமனித வழிபாடு போன்ற சமூக இழிவுகள் கண்டிக்கப்பட வேண்டியதுடன் களையப்பட வேண்டியதுமாகும். 

பாரதிராஜாவின் முதலாவது வன்னி வருகையின் போது, அவரைச் சந்தித்திருக்கிறேன். 'ஆணிவேர்' என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருந்தார். அந்தத் திரைப்பட உருவாக்கத்தில் எனது தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்பு, ஒளிப்படத் துறை சார்ந்ததாக இருந்தது. பாரதிராஜாவின் திரைப்படங்கள் மீதான 'மிகை மதிப்பீடுகள்' எதுவும் என்னிடமில்லை. எனினும், தமிழ் சினமாவில் அவரது பங்களிப்பு குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. அவர் நிதானமாக இருந்து, தனது ஆரோக்கியத்தைப் பேணிக்கொண்டு தொடர்ந்து இயங்குவது நல்லது. திரு. சீமான் போல, பாரதிராஜாவும் பொதுவெளியில் சர்ச்சைகளுக்குரிய வகையில் அடிப்படைவாத நிலைப்பாடுகளையும், அதிகாரத் தோரணைகளையும் வெளிப்படுத்தி வருவதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இத்தகையவர்களின் உளவியலும் உடல்மொழியும் நடத்தைக் கோலங்களும் ஆழமாக அணுகிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.  

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன், வன்னியில் பாரதிராஜாவைச் சந்தித்தபோது, ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இயக்குமாறு கேட்டிருந்தார். பிரபாகரனிடம் சில விடயங்களைச் சொல்லி 'நழுவிவிட்டார்' பாரதிராஜா. ஈழப் பிரச்சினைகள் பற்றி அடிக்கடிப் பேசும் பாரதிராஜாவால் ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இதுவரை இயக்க முடியவில்லை. ஈழப் பிரச்சினைகளை அவற்றின் சகல பரிமாணங்களோடும் உள்வாங்கி, ஒரு நல்ல ஈழத் திரைப்படத்தை இயக்கி, சர்வதேச அளவில் அவரால் கொண்டுசெல்ல முடியும் என்று தோன்றவில்லை. (உண்மையான அக்கறைகளுடன் முயன்றால் அது சாத்தியமாகக் கூடும்.) இலங்கைக்கு அவர் இப்போது பயணம் செய்திருப்பதன் நோக்கம் சரியாகத் தெரியவில்லை.   

பாரதிராஜாவையோ அவரை இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றவர்களையோ தொடர்புகொள்ளக்கூடிய நிலையில் உள்ள யாராவது, அவர்களோடு உரையாடி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். பாரதிராஜாவின் கால்கள் 'கழுவப்படுவது போன்ற' படம் தொடர்பிலும், யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதான பாரதிராஜாவின் 'முறைகேடான' நடத்தை தொடர்பிலும் ஊடகவியல் நெறிமுறைகளுக்கு அமைவான உரையாடல் சாத்தியமாக வேண்டும்.

2018-10-23
அமரதாஸ்

Wednesday, October 3, 2018

காதலின் ரகசிய அழைப்பு




பாத்திரங்களின் உளவியலை அல்லது மன நிலைகளை இசையிலும் காட்சிகளிலும்  இயல்பாக, அழகியலாக வெளிப்படுத்த முயன்ற திரை இசைப் பாடல்களில், 'சின்னப் பொண்ணு சேலை...' என்னும் பாடல் குறிப்பிடத் தகுந்தது. 'மலையூர் மம்பட்டியான்' என்ற  திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. 

பாடலின் காட்சியமைப்புகளில் பாத்திரங்களாக வரும் தியாகராஜனும் சரிதாவும் வாயசைத்துப் பாடவில்லை, ஆடவுமில்லை. அவற்றுக்கான அவசியமிருக்கவில்லை. ஒரு பாடலை எப்படிப் பொருத்தமாகக் காட்சிப்படுத்தித் திரைப்படத்துடன் ஒட்டவைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பாடலைப் பரிந்துரைக்கலாம். இது ஒரு வகை உதாரணப் பரிந்துரை மட்டுமே.

மரத்தை அணைத்திருந்து பாதி முகம் காட்டி, காதலை ஒற்றைக் கண்ணில் கடத்த முயலும் சரிதாவின் நடிப்பும், அதை நெருக்கமாக அணுகி நகரும் கமெராவின் நுட்பமும்  அழகியலாகப் பதிவாகியுள்ளன. இசைப் படிமங்கள் காட்சிப் படிமங்களுடன் இயைந்து  சங்கமிக்கின்றன. வரிகளிலும் காட்சியமைப்புகளிலும் தொனிக்கும் சில செயற்கைத்தனங்கள் பெரிய உறுத்தலாகத் தோன்றவில்லை. இளையராஜாவின் எளிமையான இசையும் இயல்பான காட்சியமைப்புகளும் காதலின் பசுமையாக விரிகின்றன. 

இரண்டாவது சரணத்தின் இறுதியில், 'அருகே நீ வா...' என்னும் வரிகளை ரகசியத் தொனியில் ஜானகி பாடுவதை, பாடல் முடிகையில் வெளிப்படும் அவரது 'சிணுங்கலான அழைப்பை' நுட்பமாக உற்று ரசிக்க முடியும்.

தெளிவான காட்சி மற்றும் நல்ல ஒலித்தரத்தில் இந்தப் பாடல் கிடைக்கவில்லை.

அமரதாஸ் 
2018-10-03

Saturday, September 15, 2018

தமிழர் அழுத கண்ணீர் வீணானதா?



ஓவியர், ஊடகர், கவிஞர், எழுத்தாளர், ஒளிப்படக் கலைஞர் எனப் பன்முகப் பாரம்பரியம் கொண்ட அமரதாஸினால் இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் கண்காட்சி அண்மையில் சுவிஸ் நாட்டின் வர்த்தகத் தலைநகரான சூரிச் மாநகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. “தமிழர்களின் கண்ணீர்’ என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட இந்தக் கண்காட்சியை பல்கலைக் கழக மாணவர்களும், ஆர்வலர்களும் பார்வையிட்டிருந்தனர்.

ஓவியங்களே அமரதாஸின் விருப்புக்குரிய துறையாக இருந்த போதிலும், காலச் சூழல் அவரை ஒரு ஒளிப்படக் கலைஞனாக மாற்றியிருந்தது. தனது மனச்சாட்சியை ஏமாற்றாமல் முடிந்த அளவில் தனது பணியை, சமூக அக்கறையோடு அவர் நிறைவேற்றி உள்ளார் என்பதை அவரது ஒளிப்படங்களைப் பார்வையிடும் அனைவரும் புரிந்து கொள்வர்.

ஒரு ஊடகவியலாளனைப் பொறுத்தவரை அவன் எடுக்கின்ற ஒளிப்படங்களைப் பிரசுரம் செய்வதோடு அவனது பணி நிறைவுக்கு வந்து விடுகின்றது. அதையும் தாண்டி தன்னால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி, அவை தொடர்பான ஒரு பரப்புரையை மேற்கொள்ளும் போது அவனது பாத்திரம் ஊடகவியலாளன் என்பதற்கும் அப்பால் பரந்து விரிந்து பயணிக்கத் தொடங்குகின்றது. ஊடகங்களில் காட்சிப் படுத்தப்பட்ட ஒளிப்படங்கள் சொல்லிய சேதியை விடவும் ஒளிப்படக் கண்காட்சிகள் சொல்லுகின்ற சேதிகள் ஆழமானவை, அகலமானவை.

அந்த வகையில், “தமிழரின் கண்ணீர்’ தனது பணியைச் செவ்வனே செய்திருக்கின்றது எனத் துணிந்து கூறலாம்.

ஈழத் தமிழரின் கண்ணீர் பல கதைகளைக் கூறும் வகையினது. பல சரித்திரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐரோப்பிய ஜனநாயகக் கூறுகளை மாத்திரம் அளவீடாகக் கொண்டு நோக்குபவர்களால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாதது. “பாவத்தின் சம்பளம் மரணம்’ எனப் பழங்கதை பேசுபவர்களின் பட்டியலில் அடங்காதது. “போரில் மனித இழப்பு தவிர்க்க முடியாதது’ என வரட்டுத் தத்துவம் பேசுபவர்களால் அறிந்து கொள்ள முடியாதது. இரத்தமும், சதையும், கண்ணீரும் என வாழ்ந்து, போரின் துயர்களுக்கு முகங் கொடுத்து, “பறிகொடுக்கக் கூடாத’ அத்தனையையும் பறிகொடுத்து, உயிர் தப்பி, நடைப் பிணங்கள் போன்று வாழ்ந்து கொண்டு, “எங்களை இரட்சிக்க மேய்ப்பன் ஒருவர் வர மாட்டாரா?’ என ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களால் மாத்திரமே ஈழத் தமிழரின் கண்ணீரை முழுவதுமாக விளங்கிக் கொள்ளவும், புரிந்து கொள்ளம் முடியும்.

அத்தகைய ஒரு விளக்கத்தை, புரிதலை ஏனையோரிடத்தில் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சியை நோக்க வேண்டும். அமரதாஸ் குறிப்பிடுவதைப் போன்று ஒளிப்படங்கள் மிகவும் காத்திரமான ஊடகங்கள். அவற்றில் பொய்மை இருக்க முடியாது. உள்ளதை உள்ள படியே பதிவு செய்யும் அவை கறுப்பு வெள்ளை நிறங்களில் காட்சிப் படுத்தப்படும் போது, தாம் கொண்டிருக்கும் கருத்தை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. அவரது கருத்தை ஒட்டியே, அவர் காட்சிப் படுத்திய ஒளிப்படங்கள் யாவும் கறுப்பு வெள்ளையிலேயே வைக்கப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது.

இது மே மாதம். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த மாதம். தமிழர்களின் வீரத்தையும், வேதனைகளையும் நினைவு கூர்வதற்கான மாதம். இழப்புக்களின் நினைவு கூரலில் எதிர்கால செயற்பாடுகளுக்கு வழிகோலும் தருணம். இந்தக் காலகட்டத்தில் குறிப்பறிந்து இந்த ஒளிப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது அதிலும் சுவிஸ் நாட்டவர்களை இலக்கு வைத்துச் செய்யப் பட்டிருப்பது சாலப் பொருத்தமானது.

வெறுமனே துயரங்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போரின் வடுக்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போர்க் காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் சம்பவங்களையும் காட்சிப் படுத்தியதன் ஊடாக, தான் ஒரு பரப்புரையாளன் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்பதை அமரதாஸ் நிரூபித்து நிற்கிறார்.
அது மாத்திரமன்றி, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள் தாயகத்திலே பெரிதாக எதுவும் சாதித்து விடாமல், புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்த பின்னரே புகழைத் தேடிக் கொண்டார்கள் என “அப்பாவித் தனமாக(?)’ நினைக்கும் ஒருசிலரின் எண்ணங்களையும் அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சி உடைத்திருக்கிறது.

இத்தகைய கண்காட்சியை அமரதாஸ் அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடாத்தி இருக்கிறார். தற்போது சூரிச் மாநகரில் நடைபெறும் கண்காட்சியைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற கண்காட்சியைத் தொடர இருக்கிறார். அது மாத்திரமன்றி, ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைச் சபையிலும் நேரில் தோன்றி சாட்சியம் வழங்கி இருக்கிறார்.

ஒரு ஊடகவியலாளனாய், போர்க் காலத்திலே பணியாற்றிய ஒருவனாய் தனது பணியை அவர் தொடர்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமான ஒரு செய்தி அல்ல. ஊடகவியலாளர்களாகப் புலம்பெயர்ந்த பின்னர் “பொதுமக்களாகிப்’ போன தமிழ் ஊடகர்களுக்குமான அழுத்தமான செய்தியே.

“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்’ என்பது தமிழில் உள்ள ஒரு சொல்வகை. அதன் அர்த்தம் ஏழையின் கண்ணீரில் இருந்து உருவாகும் செயற்பாடு ஒரு மாற்றத்தை, புரட்சியை நோக்கிச் செல்லும் என்பதே. தமிழர்கள் சிந்திய கண்ணீருக்கு அளவே இல்லை. கடந்த காலத்தில் மட்டுமன்றி நிகழ்காலத்தில் கூட தினம் தினம் தமிழர்கள் கண்ணீர் சிந்திய வண்ணமே உள்ளார்கள். ஆனால், அந்தக் கண்ணீர் ” மழுங்கிய கத்திகளாகவே’ வீணாகிப் போகின்றன.

இத்தகைய அவல நிலைக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஈழத் தமிழர் அரசியலை நகர்த்திச் சென்றவர்கள். இன்றும் நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். பதில் சொல்வார்களா?

சுவிசில் இருந்து சண் தவராஜா
நன்றி-தினக்குரல் 2018-05-21
http://thinakkural.lk/article/10283

Thursday, September 6, 2018

Destroyed cage.




துயர் பெருக்கும் இறுதிப் போர்க்காலம்... தமிழ் மக்கள் குடியிருப்புகளின் மேல், சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்துகொண்டிருந்தன.

நீண்ட தூரம் இடம் பெயர்ந்து அலைந்தவர்கள் செறிவாகத் தங்கியிருந்த இரணைப்பாலை என்ற இடத்திலே, தற்காலிகக் கொட்டகை ஒன்றின் மேலேயே எறிகணை ஒன்று விழுந்து வெடித்தது. அந்த இடத்தில், தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடக்கக் கூடும் என்று அஞ்சிய பலரும் ஆங்காங்கே ஓடிப் பதுங்கிக்கொண்டார்கள்.

அயலவர் சிலருடன், எறிகணை வெடித்த திசையினை நோக்கி உடனடியாகவே விரைந்தேன். (பல தடவைகள் நான் இடம்பெயர்ந்து, இரணைப்பாலை என்ற இடத்தை அடைந்திருந்தேன். அங்கு நான் தற்காலிகமாக வசித்த கொட்டகைக்கு மிக அருகில், கிட்டத்தட்ட 50 மீற்றர் தூரத்திலேயே அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.)

புழுதியும், புகையும், மரண நெடியும் படிந்த சிதிலங்களிடையே அதிர்ச்சியில் உறைந்து எதையோ தேடிக்கொண்டிருந்தார் அவர். மகனும் மனைவியும் பெரு வெடிப்பில் உருக்குலைந்து போயிருந்த விபரீதத்தை அப்போது தான் உணரத்தொடங்கியிருந்தார். ஒரு குடும்பத்தைக் கொண்டிருந்த அவர் மட்டுமே மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தார் அப்போது. அந்த விபரீத நிலையில், அவர் என்ன நினைத்தாரோ...? யாரை நினைத்தாரோ...? அவரே, சிதைந்த உடல்களின் பாகங்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தார். இதயத்தின் குமுறலை, விரல்களில் தாங்கிக்கொண்டிருந்தவரின் தோற்றம், என்னை வியப்பிலும் வேதனையிலும் ஆழ்த்திக்கொண்டிருந்தது. அயலவர் சிலரும் அவருடன் இணைந்து, இரண்டு சடலங்களின் சிதைவுகளையும் தேடிக்கொண்டிருந்தார்கள்.

கொல்லப்பட்டிருந்தவர்களின் உருவப்படங்களைக் கண்டெடுத்தேன். அந்தப் பதின்பருவத்துப் பையனின் முகத்தை, இனி எப்போதும் அவனால் பயன்படுத்த முடியாத 'பயண அனுமதி அட்டை' ஒன்றிலே அப்போது தான் பார்த்தேன். (அந்தப் 'பயண அனுமதி அட்டை', 'தமிழீழம்' என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டமைத்திருந்த 'நிழல் அரசாங்க' அடையாளங்களில் ஒன்று.)

உருக்குலைந்து சிதறிக் கிடந்த சடலங்களின் பாகங்கள், இரண்டு பொதிகளில் அடுக்கப்பட்டன. அருகில் இருந்த ஒரு பற்றைக்கிடையில் புதைப்பதற்காக, அவற்றை எடுத்துச் சென்றார்கள் அயலவர்கள்.

அவர் கடைசியாக நடந்தார். 'நடைப்பிணம்' என்னும் மொழிவழக்கின் காட்சிப்படிமம் என் கண்களின் முன்னே... கடைசியாக அவர் நடந்தார். அவரை நான் பின்தொடர்ந்தேன்.

பயண வழியில், கிளைகளை இழந்திருந்த ஒரு அடிமரத்தின் விளிம்பில், தனித்திருந்து விசும்பிக்கொண்டிருந்தது சிறு குருவி.

ஒரே குழியில், மகனையும் மனைவியையும் இரண்டு பொதிகளாய் இறக்கிவைத்தார். பிறகு, தன் தீனக்குரலை உருவியிழுத்துக் கைகளில் ஏந்தி என்னவோ சொன்னார். அப்போது என்னவோ சொன்னார்....என்ன சொன்னாரோ...?

அவர் இனி என்ன செய்வார்...? எங்கு செல்வார்...? தன்னிச்சையாகத் தோன்றிக்கொண்டேயிருந்தன கேள்விகள். யுத்தத்தில் கொல்லப்பட்டோரினதும் காணாமல் ஆக்கப்பட்டோரினதும் உறவினர்கள் பெறும் பெருவலியை, எழுத்தில் இறக்கிவிட முடியுமா...? சுயாதீன ஊடகராயிருந்து, என் சனங்களின் அவலங்களைப் பதிவாக்கிய அனுபவங்கள் அதீதமானவை.

அன்றைய காலையின் ஒளியிலே படர்ந்த அவலத்தின் கோடுகள், என் கமெராவில் பதிவாகிக்கொண்டிருந்தன. கலங்கிக்கொண்டிருந்த என் கண்களால் குவியப்படுத்தலை (focus) மேற்கொள்ளச் சிரமாயிருந்தது.

அவலத்தில் விடிந்த அந்த நாளின் பின்னர், அவரை எங்கும் நான் காணவேயில்லை. போர் முடிந்த பிறகு, மீள்குடியேறி, மனநோயில் உழன்று, அவரும் அநாதரவாக இறந்து போனாராம். ஆக, அந்தக் குடும்பத்தில் யாருமே இன்றில்லை.

என் படங்களின் கோடுகளில் படர்ந்துகொண்டேயிருக்கின்றன, சந்ததியின்றி அழிந்துபோய்விட்ட அந்தக் குடும்பத்தின் நினைவுகள்.

2018-09-06
அமரதாஸ்