Thursday, February 21, 2019
''Fire zone of Srilanka: Tears of Tamils'' - Photo exhibition of Amarathaas (Goa)
இந்தியாவின் கோவா மாநிலத்தில், கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி, 2017-12-14 முதல் தொடர்ச்சியாக ஒரு வார காலம் நிகழ்த்தப்பட்டது (''Fire zone of Srilanka: Tears of Tamils -
Photo exhibition of Amarathaas'').
'Serendipity arts festival' என்னும் கலைசார் பெரு நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஒளிப்படக் காட்சி நிகழ்வு அமைந்திருந்தது. இதில், இலங்கையின் இறுதிப் போர்க்காலத்திலும் (last war period) போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் (post war period) பதிவாகியிருந்த ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியாவின் பிரபலமான கலைஞர்கள் மற்றும் அரசியல் வாதிகள் உட்படப் பலரும் கலந்துகொண்டு ஒளிப்படங்களைப் பார்வையிட்டு, அவை தொடர்பில் கலந்துரையாடினர்.
சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து கோவா சென்றிருந்த அமரதாஸ், ஒளிப்படக் காட்சி நிகழ்வினை நேரடியாக நெறிப்படுத்தியிருந்தார். பல மட்டங்களிலான சந்திப்புகளை நிகழ்த்தியிருந்தார். கோவா வில் இருந்து கேரளா மாநிலத்திற்கும் பின்னர் தமிழகத்திற்கும் பயணித்து, நெருக்கடிகள் நிறைந்த ஈழத்தமிழரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு, சுவிஸ் திரும்பியிருந்தார்.
Wednesday, February 20, 2019
''Tears of Tamils - A journey through war zones of Sri Lanka''- Photo Exhibition in Switzerland (University of Zurich) - Photographs by Amarathaas
''Tears of Tamils - A journey through war zones of Sri Lanka''
Photo Exhibition in Switzerland (University of Zurich)
Photographs by Amarathaas (Amarathaas Artist)
07.05.2018 - 18.05.2018 Lichthof Zentrum Universität Zürich (Atrium Center University of Zurich)
21.05.2018 - 31.05.2018 Lichthof Irchel Universität Zürich (Atrium Irchel University of Zurich)
இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் (இறுதி யுத்த காலம்), கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களால் பதிவாக்கப்பட்டிருந்த ஒளிப்படங்களின் காட்சிப்படுத்தல், சுவிஸ் நாட்டிலுள்ள சூரிச் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. (''Tears of Tamils - A journey through war zones of Sri Lanka'')
07.05.2018 முதல் 31.05.2018 வரை (தொடர்ச்சியாக 4 வார காலம்), சூரிச் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஒளிப்படக் காட்சி நிகழ்வில், சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
Tuesday, February 19, 2019
Tears of Tamils (Photo exhibition of Amarathaas)
''Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones''
ஈழத்தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில், 2018-12-16 அன்று சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி நடைபெற்றது ('Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones').
இறுதி யுத்த காலத்தில், சுயாதீன ஊடகராக இருந்து பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார்.
சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலர் இந்த ஒளிப்படக் காட்சி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Genocide on Tamils - தமிழர்கள் மீதான இனப்படுகொலை
தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில், சில நிகழ்வுகள் நேற்று (2018-12-16) நடைபெற்றன. மனித உரிமைகள் சார் செயற்பாடுகளிலும் கலைச் செயற்பாடுகளிலும் ஊடகச் செயற்பாடுகளிலும் ஈடுபடும் சிலரது கூட்டு முயற்சிகளால், நிகழ்வுகள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே மண்டபத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றன.
மண்டபத்தின் ஒரு பகுதியில், சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி நடைபெற்றது ('Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones'). இன்னொரு புறத்தில் தமிழக ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியக் காட்சி நடைபெற்றது.
'Sri Lanka's Killing Fields' என்ற ஆவணப்படமும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தொகுக்கப்பட்டிருந்த ஆவணக்காட்சிகளும் வேறு சில ஆவணக்காட்சிகளும் திரையிடப்பட்டன.
இறுதி யுத்த காலத்தில், சுயாதீன ஊடகராக இருந்து பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான 'பொவி' என்பவர், இலங்கை நிலவரங்கள் தொடர்பிலான தனது பார்வைகளை உரை மூலம் வெளிப்படுத்தினார். இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்த சிலர், சாட்சிய உரைகளை நிகழ்த்தினர்.
தமிழர்களின் பிரச்சினைகளை சுவிஸ் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் நிகழ்வுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தேவையான இடங்களில், ஜெர்மன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து நிகழ்வுகளிலும் தமிழர்கள் உட்பட சுவிஸ் நாட்டவர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூடியிருந்து உரையாடி இரவு உணவை அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.
2018-12-17
Wednesday, February 13, 2019
போர்க்குற்றம் + இனப்படுகொலை
ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகங்களின் மத்தியில், மனித உரிமை சார் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஒருவரை, 'தனிப்பட்ட முறையில்' அண்மையில் சந்திக்க நேர்ந்தது. (ஒரு மொழிபெயர்ப்பாளரின் துணையுடன்) சிறிலங்கா அரசினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிகோரி நிற்கும் ஈழத் தமிழினத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு முக்கியமான நிகழ்வு. உரையாடலின் பெரும் பகுதி, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றியதாக இருந்தது. 'போர்க்குற்றங்கள்' (war crimes) என்ற பதத்தினையே அவர் தொடர்ந்து உபயோகித்தார். உண்மையில் இலங்கையில் நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இலங்கையில், பல போர்க்குற்றங்களை உள்ளடக்கிய இனப்படுகொலைக் குற்றங்களும் நடந்திருக்கின்றமையினை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தேன். ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலை முன்னெடுப்புக்கள், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காலத்தில் மட்டும் நடக்கவில்லையென்றும் அத்தகைய முன்னெடுப்புக்களுக்கு, பல்பரிமாணத்தன்மை கொண்ட நீண்டகால வரலாறு உள்ளது பற்றியும் குறிப்பிட்டேன். (இனப்படுகொலை பற்றிய விடயத்தில், இனப்படுகொலைக்கான உள் நோக்கம் -motivation- மிகவும் முக்கியமானதாக சர்வதேச ரீதியில் நம்பப்படுகிறது. தவிரவும், வெறும் கொலைகள் மட்டும் இனப்படுகொலை என்னும் அம்சத்துக்குள் அவதானிக்கப்படுவதில்லை.) தனிப்பட்ட முறையில், தன்னால் அதைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினார். பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கமையவும் 'உள் நோக்கங்களோடும்' இயங்கும் ஐ.நா போன்ற சர்வதேச சமூகங்களின் மத்தியில் இத்தகைய 'புரிதலை' ஏற்படுத்துவதில் இருக்கக்கூடிய 'சிக்கல்கள்' சாதாரணமானவையல்ல. அந்த அடிப்படையில் சட்ட ரீதியிலும் புலமைத்துவ ரீதியிலும் ராஜதந்திர ரீதியிலும் ஈழத்தமிழினம் வழங்கவேண்டிய 'கூட்டு உழைப்பு' அதிகமாக இருக்க வேண்டும்.
''சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைக் கூறுகளாக ஐ.நா. வரையறுக்கின்ற அத்தனைக் கூறுகளையும் கொண்டது தமிழினம். அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இனப்படுகொலைக்கான நீதியான பரிகாரமே, இலங்கை இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வுக்கு வழிவகுக்க முடியும். நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய வகையில் கண்மூடித்தனமான மோசமான குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன. போர்க்குற்றங்கள் எனப்படுபவை வேறு, இனப்படுகொலைக் குற்றங்கள் எனப்படுபவை வேறு.'' என்று 2005 ஒக்டோபர் மாதத்தில் நான் நிகழ்த்தியிருந்த 'ஐ.நா. உரையில்' தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
''இலங்கையில் நடந்தவை போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழின அழிப்பும் தான் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான், தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட தனியான இனமென்பதும், இன விடுதலைக்கான நீண்ட கால விடுதலைப் போராட்ட நியாயங்களும், தியாகங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைய முடியும்.'' என்று, மேலும் அதில் குறிப்பிட்டிருக்கிறேன்.
எனது போர்க்காலப் படங்கள் சிலவற்றை அவருக்காகக் காட்சிப்படுத்திவிட்டு, அவருடனான எனது உரையாடலின் ஆரம்பம், பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.
யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, மக்கள் மத்தியிலிருந்து தன்னிச்சையாகவும் தீவிரமாகவும் படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கட்டத்தில், என்னால் எடுக்கப்படும் படங்களால் அப்போது என்ன பயன் என்ற கருத்திலான 'ஆதங்கத்தினை' வேதனையோடு என்முன்னே ஒரு பெண் கொட்டித் தீர்த்தார். அப்போது அவருக்கு ஏதும் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தப் 'பெண்ணின் குரல்' என்னுள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. என் இனத்துச் சனங்களின் வலியின் சாட்சியாக நான் எப்போதும் இருக்க வேண்டும் என்னும் உந்துதல் அப்போது தீவிரமடைந்தது. யாராலும் நிறுத்தப்படாதிருந்த மோசமான யுத்தத்தின் விளைவுகளைப் படங்களாக்கி, சர்வதேச மட்டத்தில் ஈழத் தமிழினம் சார் ஆவணங்களாக நிலைநிறுத்த வேண்டும் என்னும் 'ஓர்மம்' வளர்ந்தது. பல தரப்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும் பல்வேறு வழிகளில் எனது படங்களை வெளியிடத் தொடங்கினேன்.
அவருடனான எனது உரையாடலின் முடிவு, பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.
ஆர்மேனியர்கள் மீதான துருக்கியின் 'இனப்படுகொலை' முன்னெடுப்பு, சர்வதேச அளவில் 'உறுதி' செய்யப்படுவதற்கு இடையில் வீணாக நூறு ஆண்டுகள் வரையில் கடந்துபோயிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலைக் குற்றங்களும் அவற்றுக்கான 'நீதியும்' சர்வதேச அளவில் 'உறுதி' செய்யப்படுவதற்காக, இவ்வளவு நீண்ட காலத்துக்குத் தமிழினம் காத்திருக்க வேண்டுமா? அப்படியானால் சிறிலங்காவின் 'இனப்படுகொலை' அம்சங்களைப் பதிவு செய்து, வாழும் சாட்சியாக இருக்கும் நான், அப்போது நிச்சயமாக உயிரோடு இருக்க மாட்டேன். அப்போதும் எனது இனப்படுகொலை சார் ஆவணங்கள், வலிமையான பயன்வீச்சுக்களை நிகழ்த்தும் அளவிற்கு, நான் இப்போதிருந்தே 'உரிய' இடங்களில், பொதுவெளியில் அவற்றை நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது.
2017-06-15
அமரதாஸ்
Tuesday, October 23, 2018
ஊடக வெளியும் இழிநிலைகளும்
தமிழகத் திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜாவின் அண்மைக்கால இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து நிகழ்ந்திருக்கும் சர்ச்சைகள், இலகுவில் கடந்து செல்லக்கூடியவையல்ல.
யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா கலந்துகொண்ட செய்தியா ளர்கள் சந்திப்பில், ஒருவகை மேட்டிமைத்தனத்துடன் 'முறைகேடாக' அவர் நடந்துகொண்டார். அப்போது அவரை, அங்கிருந்த செய்தியாளர்கள் பக் குவமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். அந்த இடத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டிய ஆரோக்கியமான, முறையான எதிர்வினைகள் நிகழவில்லை. பின்னர், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் தொடர்ந்தன. பிரமுகராக நிகழ்வொன்றில் முன்னிறுத்தப்பட்டிருக்கும் ஒருவர், எத்தகைய கேள்விகளையும் பக்குவமாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது. பதில் சொல்ல விரும்பாத (முடியாத) அல்லது சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றுகிற 'சிக்கலான' கேள்விகளை, நாகரிகமாக மறுத்துக் கடந்துவிட முடியும். சமூக வாழ்வில், பொதுவெளியில் 'எழுந்தமானமாக', 'முறைகேடாக' எதையும் யாரும் செய்துவிட முடியாது.
குழப்பத்தில் முடிந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, இரண்டு நபர்களால் பாரதிராஜாவின் 'கால்கள் கழுவப்படுவது' மாதிரியான படமொன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, சர்ச்சைகள் வேறுபோக்கிலே தொடர்ந்தன. எந்த விளக்கமுமின்றி, முன்முடிவுகளுடனும் 'கொச்சையான' கருத்துகளுடனும் பெரும்பாலும் பகிரப்பட்டிருக்கிறது அந்தப் படம். தமிழ்ச் சூழலில் எதையும் சரியாக ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு அவசரகதியில் கருத்துதிர்க்கும் வழக்கம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல. சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அமைவாக, தனிமனித நடத்தைகள் சார்ந்து 'அவசரகதியில் ' முன்வைக்கப்படும் எதிர்வினைகள், கண்ணியத்துடன் அமைவதில்லை. எங்கு, எப்போது, எச் சந்தர்ப்பத்தில், யாரால், எதற்காக அந்தப் படம் எடுக்கப்பட்டது? யாரால், எப்படி அது விபரங்கள் எதுவுமில்லாமல் வெளிவந்தது? அந்தப் படம் தொடர்பான பின்னணித்தகவல்கள் எதுவும் சரியாக இதுவரை கிடைக்கவில்லை. அந்தப் படமானது, பல வகையில் திரிபுபடுத்திக் காட்டப்படக் கூடியதாக, இருப்பதால் பின்னணித்தகவல்கள் அவசியமாகின்றன. எது எப்படியிருந்தாலும், சமூக மட்டங்களில் நிலவும் மேட்டிமைத்தனங்களையும் கசடுத்தனங்களையும் மத, கலாச்சார, அதிகார, அரசியல் பின்புலங்கள் வழியாகப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் வெளிப்படுத்த வேண்டும்.
பாரதிராஜா சம்மந்தப்பட்ட அந்தப் படத்தில், ஒருவகையான 'மேட்டிமைத்தனம்' தொனிப்பதை அவதானிக்க முடிந்தாலும், பின்னணித்தகவல்கள் பற்றிச் சரியாக அறிந்துகொள்ளாமல் முடிவாக எதையும் கூறிவிட முடியாது. அப் படமானது, எத்தகைய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று, அதில் இருக்கிற மூவரும் அந்தப் படத்தை எடுத்தவரும் தான் இனி வெளிப்படையாகப் பேச வேண்டும். வயது முதிர்ந்த ஒருவருக்கான 'வைத்திய உதவி' நடந்திருப்பதன் பதிவாகக் கூட அது புரிந்துகொள்ளப்படக் கூடும். பாரதிராஜா வயது முதியவரானாலும், உடல் சார்ந்த காரியங்களை சுயமாகச் செய்துகொள்ள முடியாத அளவிற்குத் தளர்ந்துபோனவரல்ல. கால்களில் வலி இருந்தால் யார் கால்களையும் யாரும் வெந்நீரில் கழுவிடுவதும் மசாஜ் செய்து விடுவதும் சாதாரணம் தான். கால்களைக் கழுவக் கொடுத்த பாரதிராஜாவினதும், கழுவிக் கொடுத்த இரண்டு நபர்களினதும் மனநிலைகள் நுட்பமாக ஆராயப்பட வேண்டியவை. ஒரு 'பிரமுகராக' இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்த பாரதிராஜாவின் மனநிலையானது, அதிகார துஸ்பிரயோகமாக, மேட்டிமைத்தனமாகத் தொழிற்பட்டிருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது. ஒரு 'மசாஜ்' நிலையத்திலோ அல்லது வைத்திய நிலையத்திலோ, உடல் சுகத்திற்காக, 'உடன்பாட்டு நிலையில்' நிகழும் காரியங்கள் வேறுவகையானவை.
விசேடமான சூழ்நிலைகளில், பிரத்தியேகமான அல்லது அந்தரங்கமான தருணங்களில் தனி நபர்கள் சார்ந்து தற்செயலாகவோ செய்திமதிப்புடனோ (news value) எடுக்கப்படுகின்ற ஒளிப்படங்கள், ஊடக வெளிகளில் 'தவறான முறைகளில்' பிரயோகிக்கப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பதிவாகியுள்ள ஒளிப்படமானது, ஒருவரது தனிப்பட்ட 'இயல்பை' அல்லது ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்துவிடுவதும் உண்டு. எது எப்படியிருந்தாலும், நம்பகத்தன்மையுடன் கூடிய பின்னணித்தகவல்கள் எதுவும் கொண்டிராத ஒரு ஒளிப்படமானது, தவறான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் வகையில், ஊடகவெளிகளில் பிரயோகிக்கப்படுவது அறமாகாது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தோ தனிப்பட்ட நடத்தை குறித்தோ யாரும் எழுந்தமானமாகவோ அவதூறாகவோ கருத்துக்கள் முன்வைப்பது ஏற்புடையதல்ல. எது எப்படியிருந்தாலும், ஊடக ரீதியான அத்துமீறல்களும் தனிமனித அத்துமீறல்களும் இனங்காணப்பட வேண்டியவை. தனிமனித சுதந்திரம் குறித்த தெளிவான நிலைப்பாடு எல்லோருக்கும் அவசியமானது. தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தும் ஓர்மமும் சுயசிந்தனையும் கொண்ட மனிதர்களே, அதிகார மையங்கள் சார்ந்த 'அரூப கரங்களின்' குரூரத்தை அம்பலப்படுத்தக் கூடியவர்கள்.
கால் கழுவுதல், முதுகு சொறிதல், காலில் விழுதல், காக்கா பிடித்தல் (கால் கை பிடித்தல்), அடிவருடுதல் (அடிவருடி), மண்டியிடுதல், போன்ற சொற்தொடர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கப்படுகிற சந்தர்ப்பங்கள் நுட்பமாக அவதானிக்கப்பட வேண்டியவை. அவை, அதிகாரத்திற்கு முன் இணங்கிப் போவதை 'இழிவாக' எடுத்துரைக்கும் வகையிலே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. சாதி, மதம், அரசியல் போன்ற அதிகார மூலங்களின் இடுக்குகளில் இத்தகைய சமூக இழிவுகள் போசிக்கப்படுகின்றன.
மரியாதை நிமித்தமாகவும் அன்பின் நிமித்தமாகவும் செய்யப்படுகிற 'மதிப்பளிப்பு' சார்ந்த உடல்மொழிதல்கள் புரிந்துகொள்ளக்கூடியவை. அவை, தனிமனித மற்றும் சமூகப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகப் பார்க்கப்படக் கூடும். அதிகாரத்தினாலோ அல்லது மேட்டிமைத்தனத்தினாலோ அடிமை மனோபாவத்தினாலோ செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிற காரியங்கள் இனங்காணப்பட வேண்டியவை. காலில் விழுதல், அதிகாரத்தின் முன் மண்டியிடுதல், தனிமனித வழிபாடு போன்ற சமூக இழிவுகள் கண்டிக்கப்பட வேண்டியதுடன் களையப்பட வேண்டியதுமாகும்.
பாரதிராஜாவின் முதலாவது வன்னி வருகையின் போது, அவரைச் சந்தித்திருக்கிறேன். 'ஆணிவேர்' என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருந்தார். அந்தத் திரைப்பட உருவாக்கத்தில் எனது தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்பு, ஒளிப்படத் துறை சார்ந்ததாக இருந்தது. பாரதிராஜாவின் திரைப்படங்கள் மீதான 'மிகை மதிப்பீடுகள்' எதுவும் என்னிடமில்லை. எனினும், தமிழ் சினமாவில் அவரது பங்களிப்பு குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. அவர் நிதானமாக இருந்து, தனது ஆரோக்கியத்தைப் பேணிக்கொண்டு தொடர்ந்து இயங்குவது நல்லது. திரு. சீமான் போல, பாரதிராஜாவும் பொதுவெளியில் சர்ச்சைகளுக்குரிய வகையில் அடிப்படைவாத நிலைப்பாடுகளையும், அதிகாரத் தோரணைகளையும் வெளிப்படுத்தி வருவதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இத்தகையவர்களின் உளவியலும் உடல்மொழியும் நடத்தைக் கோலங்களும் ஆழமாக அணுகிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன், வன்னியில் பாரதிராஜாவைச் சந்தித்தபோது, ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இயக்குமாறு கேட்டிருந்தார். பிரபாகரனிடம் சில விடயங்களைச் சொல்லி 'நழுவிவிட்டார்' பாரதிராஜா. ஈழப் பிரச்சினைகள் பற்றி அடிக்கடிப் பேசும் பாரதிராஜாவால் ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இதுவரை இயக்க முடியவில்லை. ஈழப் பிரச்சினைகளை அவற்றின் சகல பரிமாணங்களோடும் உள்வாங்கி, ஒரு நல்ல ஈழத் திரைப்படத்தை இயக்கி, சர்வதேச அளவில் அவரால் கொண்டுசெல்ல முடியும் என்று தோன்றவில்லை. (உண்மையான அக்கறைகளுடன் முயன்றால் அது சாத்தியமாகக் கூடும்.) இலங்கைக்கு அவர் இப்போது பயணம் செய்திருப்பதன் நோக்கம் சரியாகத் தெரியவில்லை.
பாரதிராஜாவையோ அவரை இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றவர்களையோ தொடர்புகொள்ளக்கூடிய நிலையில் உள்ள யாராவது, அவர்களோடு உரையாடி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். பாரதிராஜாவின் கால்கள் 'கழுவப்படுவது போன்ற' படம் தொடர்பிலும், யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதான பாரதிராஜாவின் 'முறைகேடான' நடத்தை தொடர்பிலும் ஊடகவியல் நெறிமுறைகளுக்கு அமைவான உரையாடல் சாத்தியமாக வேண்டும்.
2018-10-23
அமரதாஸ்
Wednesday, October 3, 2018
காதலின் ரகசிய அழைப்பு
பாத்திரங்களின் உளவியலை அல்லது மன நிலைகளை இசையிலும் காட்சிகளிலும் இயல்பாக, அழகியலாக வெளிப்படுத்த முயன்ற திரை இசைப் பாடல்களில், 'சின்னப் பொண்ணு சேலை...' என்னும் பாடல் குறிப்பிடத் தகுந்தது. 'மலையூர் மம்பட்டியான்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.
பாடலின் காட்சியமைப்புகளில் பாத்திரங்களாக வரும் தியாகராஜனும் சரிதாவும் வாயசைத்துப் பாடவில்லை, ஆடவுமில்லை. அவற்றுக்கான அவசியமிருக்கவில்லை. ஒரு பாடலை எப்படிப் பொருத்தமாகக் காட்சிப்படுத்தித் திரைப்படத்துடன் ஒட்டவைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பாடலைப் பரிந்துரைக்கலாம். இது ஒரு வகை உதாரணப் பரிந்துரை மட்டுமே.
மரத்தை அணைத்திருந்து பாதி முகம் காட்டி, காதலை ஒற்றைக் கண்ணில் கடத்த முயலும் சரிதாவின் நடிப்பும், அதை நெருக்கமாக அணுகி நகரும் கமெராவின் நுட்பமும் அழகியலாகப் பதிவாகியுள்ளன. இசைப் படிமங்கள் காட்சிப் படிமங்களுடன் இயைந்து சங்கமிக்கின்றன. வரிகளிலும் காட்சியமைப்புகளிலும் தொனிக்கும் சில செயற்கைத்தனங்கள் பெரிய உறுத்தலாகத் தோன்றவில்லை. இளையராஜாவின் எளிமையான இசையும் இயல்பான காட்சியமைப்புகளும் காதலின் பசுமையாக விரிகின்றன.
இரண்டாவது சரணத்தின் இறுதியில், 'அருகே நீ வா...' என்னும் வரிகளை ரகசியத் தொனியில் ஜானகி பாடுவதை, பாடல் முடிகையில் வெளிப்படும் அவரது 'சிணுங்கலான அழைப்பை' நுட்பமாக உற்று ரசிக்க முடியும்.
தெளிவான காட்சி மற்றும் நல்ல ஒலித்தரத்தில் இந்தப் பாடல் கிடைக்கவில்லை.
அமரதாஸ்
2018-10-03
Subscribe to:
Posts (Atom)














































