ஓவிய நண்பர் கருணா (Karuna Vincent) அவர்களின் சடுதியான மறைவு, தமிழ்ச் சூழலில் கனத்த வெற்றிடத்தையும் துயரலைகளையும் தோற்றுவித்திருக்கிறது.
ஓவியக் கலையில் மட்டுமல்லாமல், ஒளிப்படக் கலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கலைஞர் திரு. கருணா, கனடாவில் நீண்டகாலமாக வசித்துவந்தவர். பல்வேறு கலைச்செயற்பாடுகளில் தனது காத்திரமான பங்களிப்பினை வழங்கிவந்தவர். உலகெங்கிலும், இனிய நண்பர்கள் பலரைப் பெற்றிருந்தவர்.
ஓவியம் சார்ந்த அவரது விரிந்த தேடல்களை, அவருடனான உரையாடல்களிலும் படைப்புகளிலும் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. ஓவியத்துறையில் அவர் வீச்சுடன் இயங்கத் தொடங்கியிருந்த காலத்தில், அவரது இழப்பு சடுதியாக நிகழ்ந்துவிட்டது. உண்மையில், தமிழ்க் கலைச்சூழலில் அது ஒரு பேரிழப்பாகும். வயதில் மூத்தவராக இருந்தாலும், நிதானமாகவும் வெளிப்படையாகவும் மதிப்பார்ந்து என்னுடன் உரையாடக்கூடிய நல்ல நண்பராக இருந்தார். அவரை இழந்த பெருந்துயரைக் கடந்துசெல்வது, எனக்கு இலகுவானதாக இருக்காது.
அவர் கனடாவிலும் நான் சுவிஸிலும் வசிக்கும் காலத்தில், பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவ்வப்போது உரையாடிவந்திருக்கிறோம். மிக அண்மையில், அவர் இறப்பதற்குச் சில நாட்கள் முன்னதாக, என்னுடன் நீண்ட நேரம் உரையாடியிருந்தார். ஓவியம் மற்றும் ஒளிப்படம் போன்ற காட்சிக்கலைகள் மீது அவருக்கும் எனக்கும் இருந்த தீராக்காதல் தான், நம்மை நெருக்கமாக்கியிருந்தன.
வெவ்வேறு காலங்களில் ஓவியர் அ. மாற்கு அவர்களின் ஓவிய மாணவர்களாகப் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் கருணா மிகவும் முக்கியமானவர், வித்தியாசமானவர். ஓவியர் மாற்குவுடன் கருணாவும் நானும் வெவ்வேறு காலங்களில் நெருங்கிப் பழகியிருக்கிறோம். எனது பதின்பருவ காலத்தில், ஓவியர் மாற்குவை அடிக்கடி அவரது வீட்டிலேயே சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அவரது ஓவிய மற்றும் சிற்பக் கலைச்செயற்பாடுகளையெல்லாம் அருகிலேயே இருந்து அவதானிக்கவும், அவரிடமிருந்து கலை நுட்பங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், வன்னியில் அலைக்கழிந்து பல்வேறு துன்பங்களை அவர் அனுபவிக்க நேர்ந்த காலப்பகுதியில், கனடாவிற்குப் புலம்பெயர்ந்திருந்த கருணாவுடன் கடிதத்தொடர்பில் இருந்திருக்கிறார். யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு முன்னர், நீண்ட வெண்தாடியுடன் அவர் இருந்த முதுமைக்காலத்தில், அவருடன் நெருங்கியிருந்த நினைவுகள் மறக்க முடியாதவை. ஓவியர் மாற்குவின் மூலம் கருணாவும் நானும் பெற்றுக்கொண்ட அரிதான அனுபவங்களை, அவ்வப்போது பகிர்ந்துகொள்வதுண்டு.
தாயகத்திலிருந்து கருணா புலம்பெயர்ந்த பின்னர், ஓவியத்துறை சார்ந்த நவீன தொழில் நுட்ப மாற்றங்களை உள்வாங்கித் தனது ஓவிய ஆளுமையை விருத்திசெய்துகொண்டேயிருந்தார் . மாற்குவின் மாணவர்களாக இருந்த திரு. க. கிருஸ்ணராஜா, திருமதி. அருந்ததி போன்றவர்கள், புலம்பெயர் சூழல்களில் தொடர்ந்து ஓவியர்களாக இயங்கியவர்கள்.
ஓவிய நண்பரான மருது அவர்கள், டிஜிற்றல் ஓவிய நுட்பமுறைமைகள் தமிழ்ச் சூழலில் அதிகமதிகம் செல்வாக்குப் பெறக் காரணமாக இருந்தவர். அவரது தனித்துவம் மிக்க ஓவியங்கள் குறித்தும் அவருடன் நமக்கிருந்த நட்புக் குறித்தும், கருணாவும் நானும் பலமுறை உரையாடியிருக்கிறோம். ஓவியர் மாற்குவின் தாக்கமும் ஓவியர் மருதுவின் தாக்கமும் கருணாவின் ஓவியங்கள் சிலவற்றில் வெளிப்படுவதை அவதானிக்க முடிந்திருக்கிறது. பிற்காலத்தில், டிஜிற்றல் தொழில்நுட்பத்துடன் கூடிய, அசைவியக்கம் கொண்ட எளிய கோடுகளால், தமிழர் வாழ்வியலைத் தனித்துவமாகப் பதிவுசெய்ய முயன்றுகொண்டிருந்தார். மாற்குவின் ஓவியங்களில் மாற்குவின் பெயர் வரையப்பட்டிருக்கும் சாயலில், கருணாவின் ஓவியங்களில் கருணாவின் பெயர் வரையப்பட்டிருக்கும். (அதுபோலவே கிருஸ்ணராஜாவின் ஓவியங்களில் அவரது பெயர் வரையப்பட்டிருக்கும்.) 2017 ஆம் ஆண்டில், கருணாவின் ஓவியங்கள் கனடாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கருணாவின் கலைப்பயணத்தில் அது மிகவும் முக்கிய நிகழ்வாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது படைப்புகள், நூல் வடிவில் இனி வெளிக்கொண்டுவரப்படவேண்டியது அவசியமாகும்.
பல்வேறு கலைஞர்களின் கூட்டு முயற்சியில், 'இற்றைத் திங்கள் இந்நிலவில்' என்னும் அரங்க நிகழ்வு, கனடாவில் சாத்தியமாகியிருந்தது. பல்வேறு நிலைகளில் முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்வு அது. அதன் வீடியோ இணைப்பினை, கருணா எனக்கு அனுப்பியிருந்தார். அந்த அரங்க நிகழ்வின் ஒளியமைப்பினை அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனது ஒளியமைப்புப் பணி தொடர்பிலான எனது கருத்தை அறியும் ஆவலை வெளிப்படுத்தியிருந்தார். ஈடுபாடுள்ள துறைகள் சார்ந்து, மேலதிகமாகக் கற்றுக்கொள்வதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். பல்வேறு தளங்களில் அவரது அறிதலும் இயக்கமும் தொடர்ந்திருக்கின்றன.
தனது கலை சார் பணிகள் குறித்துத் தனது நண்பர்களுடன் கலந்துரையாடிக்கொண்டேயிருந்தார் . தன்னைச் சுய மதிப்பீட்டிற்கு உள்ளாக்கிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. 2018-05-18 அன்று (சென்ற வருடம்) மிக நீண்டநேரம் அவரும் நானும் உரையாடியிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் பற்றி, எனது போர்க்கால ஒளிப்படங்கள் பற்றி, கியூபெக் பற்றி, ஓவியர் மாற்கு பற்றி, ஓவியர் வாசுகியின் ஓவியக்காட்சி பற்றி, ஓவியரும் நண்பருமான மருது பற்றி, நண்பர் கங்காதரன் பற்றி, இன்னும் பல்வேறு விடயங்கள் பற்றியெல்லாம் அன்று உரையாடினோம். ஓவியர் மாற்கு, எழுதி அனுப்பியிருந்த 'உருக்கமான' இறுதிக் கடிதம் பற்றிய தகவல்களையும் அன்று பகிர்ந்துகொண்டார்.
கனடாவில் தொடர்ந்து வெளிவரும் 'தாய்வீடு' பத்திரிகையில் கருணாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மிக அண்மையில், அவர் இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர், அவருடன் விரிவாகப் பேசவேண்டியிருந்தது. 'தாய்வீடு' சார்ந்து, என்னுடன் ஒரு 'நேர்காணல்' பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தார். சில கேள்விகளையும் என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தார். 2019 ஆம் ஆண்டில் வருகிற 'முள்ளிவாய்க்கால் நினைவுக்காலத்தை' முன்னிட்டு, எனது போர்க்கால ஒளிப்படங்களுடன் சிறப்பிதழாகத் 'தாய்வீடு' வெளிவரவேண்டும் என்று விரும்பியிருந்தார். எனது போர்க்கால ஒளிப்படங்கள் பலவும், 'தாய்வீடு' பத்திரிகையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளமையினை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இவை குறித்து, 'தாய்வீடு' சார்ந்த நெருங்கிய நண்பர்களான திரு. கங்காதரன், திரு. திலீப்குமார் ஆகியோரோடு இறப்பதற்கு முன்னர் உரையாடியிருக்கிறார். கருணா இறந் த பின்னர், இழப்புத்துயரையும் சில நினைவுகளையும் அந்த நண்பர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். கருணா என்னும் கலைஞனது இழப்பின் கனத்தை, சமூக வலைத்தளங்களிலெங்கும் சமநேரத்தில், காணக்கூடியதாக இருந்தது. கருணா என்னும் இனிய நண்பரை இழந்த பெருந்துயரைக் கடந்துசெல்வது, எனக்கு இலகுவான காரியமேயல்ல.
No comments:
Post a Comment