ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகங்களின் மத்தியில், மனித உரிமை சார் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஒருவரை, 'தனிப்பட்ட முறையில்' அண்மையில் சந்திக்க நேர்ந்தது. (ஒரு மொழிபெயர்ப்பாளரின் துணையுடன்) சிறிலங்கா அரசினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிகோரி நிற்கும் ஈழத் தமிழினத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு முக்கியமான நிகழ்வு. உரையாடலின் பெரும் பகுதி, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றியதாக இருந்தது. 'போர்க்குற்றங்கள்' (war crimes) என்ற பதத்தினையே அவர் தொடர்ந்து உபயோகித்தார். உண்மையில் இலங்கையில் நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இலங்கையில், பல போர்க்குற்றங்களை உள்ளடக்கிய இனப்படுகொலைக் குற்றங்களும் நடந்திருக்கின்றமையினை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தேன். ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலை முன்னெடுப்புக்கள், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காலத்தில் மட்டும் நடக்கவில்லையென்றும் அத்தகைய முன்னெடுப்புக்களுக்கு, பல்பரிமாணத்தன்மை கொண்ட நீண்டகால வரலாறு உள்ளது பற்றியும் குறிப்பிட்டேன். (இனப்படுகொலை பற்றிய விடயத்தில், இனப்படுகொலைக்கான உள் நோக்கம் -motivation- மிகவும் முக்கியமானதாக சர்வதேச ரீதியில் நம்பப்படுகிறது. தவிரவும், வெறும் கொலைகள் மட்டும் இனப்படுகொலை என்னும் அம்சத்துக்குள் அவதானிக்கப்படுவதில்லை.) தனிப்பட்ட முறையில், தன்னால் அதைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினார். பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கமையவும் 'உள் நோக்கங்களோடும்' இயங்கும் ஐ.நா போன்ற சர்வதேச சமூகங்களின் மத்தியில் இத்தகைய 'புரிதலை' ஏற்படுத்துவதில் இருக்கக்கூடிய 'சிக்கல்கள்' சாதாரணமானவையல்ல. அந்த அடிப்படையில் சட்ட ரீதியிலும் புலமைத்துவ ரீதியிலும் ராஜதந்திர ரீதியிலும் ஈழத்தமிழினம் வழங்கவேண்டிய 'கூட்டு உழைப்பு' அதிகமாக இருக்க வேண்டும்.
''சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைக் கூறுகளாக ஐ.நா. வரையறுக்கின்ற அத்தனைக் கூறுகளையும் கொண்டது தமிழினம். அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இனப்படுகொலைக்கான நீதியான பரிகாரமே, இலங்கை இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வுக்கு வழிவகுக்க முடியும். நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய வகையில் கண்மூடித்தனமான மோசமான குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன. போர்க்குற்றங்கள் எனப்படுபவை வேறு, இனப்படுகொலைக் குற்றங்கள் எனப்படுபவை வேறு.'' என்று 2005 ஒக்டோபர் மாதத்தில் நான் நிகழ்த்தியிருந்த 'ஐ.நா. உரையில்' தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
''இலங்கையில் நடந்தவை போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழின அழிப்பும் தான் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான், தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட தனியான இனமென்பதும், இன விடுதலைக்கான நீண்ட கால விடுதலைப் போராட்ட நியாயங்களும், தியாகங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைய முடியும்.'' என்று, மேலும் அதில் குறிப்பிட்டிருக்கிறேன்.
எனது போர்க்காலப் படங்கள் சிலவற்றை அவருக்காகக் காட்சிப்படுத்திவிட்டு, அவருடனான எனது உரையாடலின் ஆரம்பம், பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.
யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, மக்கள் மத்தியிலிருந்து தன்னிச்சையாகவும் தீவிரமாகவும் படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கட்டத்தில், என்னால் எடுக்கப்படும் படங்களால் அப்போது என்ன பயன் என்ற கருத்திலான 'ஆதங்கத்தினை' வேதனையோடு என்முன்னே ஒரு பெண் கொட்டித் தீர்த்தார். அப்போது அவருக்கு ஏதும் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தப் 'பெண்ணின் குரல்' என்னுள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. என் இனத்துச் சனங்களின் வலியின் சாட்சியாக நான் எப்போதும் இருக்க வேண்டும் என்னும் உந்துதல் அப்போது தீவிரமடைந்தது. யாராலும் நிறுத்தப்படாதிருந்த மோசமான யுத்தத்தின் விளைவுகளைப் படங்களாக்கி, சர்வதேச மட்டத்தில் ஈழத் தமிழினம் சார் ஆவணங்களாக நிலைநிறுத்த வேண்டும் என்னும் 'ஓர்மம்' வளர்ந்தது. பல தரப்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும் பல்வேறு வழிகளில் எனது படங்களை வெளியிடத் தொடங்கினேன்.
அவருடனான எனது உரையாடலின் முடிவு, பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.
ஆர்மேனியர்கள் மீதான துருக்கியின் 'இனப்படுகொலை' முன்னெடுப்பு, சர்வதேச அளவில் 'உறுதி' செய்யப்படுவதற்கு இடையில் வீணாக நூறு ஆண்டுகள் வரையில் கடந்துபோயிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலைக் குற்றங்களும் அவற்றுக்கான 'நீதியும்' சர்வதேச அளவில் 'உறுதி' செய்யப்படுவதற்காக, இவ்வளவு நீண்ட காலத்துக்குத் தமிழினம் காத்திருக்க வேண்டுமா? அப்படியானால் சிறிலங்காவின் 'இனப்படுகொலை' அம்சங்களைப் பதிவு செய்து, வாழும் சாட்சியாக இருக்கும் நான், அப்போது நிச்சயமாக உயிரோடு இருக்க மாட்டேன். அப்போதும் எனது இனப்படுகொலை சார் ஆவணங்கள், வலிமையான பயன்வீச்சுக்களை நிகழ்த்தும் அளவிற்கு, நான் இப்போதிருந்தே 'உரிய' இடங்களில், பொதுவெளியில் அவற்றை நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது.
2017-06-15
அமரதாஸ்